தலித் மக்கள் தலைவராக இருக்கக்கூடிய ரிசர்வ் பஞ்சாயத்துகளிலேயே தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது. முடிவெட்ட மறுப்பு, ரேஷன் கடைகளில் பாகுபாடு, பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தத் தடை, இரட்டைக் குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்று பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமையை களஆய்வு நடத்தி, வெளிப்படுத்தியுள்ளது ‘எவிடென்ஸ்’ அமைப்பு. அதன் அறிக்கையிலிருந்து......
தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்த 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 32) 11 பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை உறுதி செய்துள்ளனர். 20 கிராம பஞ்சாயத்துகளில் 09 கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. சாதிய இந்துக்களுக்கு தனிக்குவளை, தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று 13 கிராமங்களில் கோவில், வழிபாடு ரீதியான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவில் என்பது பொது இடம். பொது பங்கேற்புக்கான நிறுவனம் என்கிற உண்மை கூட தெரியாமல் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இக்கோவில்கள் கருதப்படுவது எமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெரும்பாலான கிராமங்களில் உள்ள கோவில்கள் சாதியின் கட்டுமானத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
தலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுப்பு என்கிற பாகுபாடு 6 பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. இழவுச் செய்தி சொல்வதற்கும், இழவு சடங்குகளில் ஈடுபடுவதற்கும், தப்பு அடிப்பதற்கும் 20 பஞ்சாயத்துகளில் தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 02 பஞ்சாயத்துகளில் தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கியப் பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
தலித்துகளை சாதிய ரீதியாக இழிவாகப் பேசுகிற நிலை 13 பஞ்சாயத்துகளில் கடைபிடிக்கப்படுகின்றன. தலித்துகள் மீது தொடர் தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்ச்சி, வன்கொடுமைகளும் சில பஞ்சாயத்துகளில் நடந்து கொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மிகுந்த அளவு காணப்பட்டாலும் அவற்றை வெளியே சொல்லாமல் அல்லது வெளியே கொண்டு வரப்பட்டால் சமரசம் செய்து வைப்பது, மிரட்டலுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நிலைமைகள் இப்பகுதியில் உள்ளன.
20 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல், பொருளாதாரம், அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதி இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வு செய்தாலும், ஒவ்வொரு தீண்டாமையின் கொடூரமும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.
தேனி மாவட்டத்திலுள்ள 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளை ஆய்வு செய்த போது, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகள் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கங்கள் சனநாயக பங்களிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால் ‘இல்லை’ என்கிற ஆய்வு முடிவு தான் ‘கண்டறிந்தவைகளாக’ ஆய்வில் கிடைக்கின்றன. பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பினாமியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சாதி இந்துக்களின் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுகிற நிலையும் இப்பகுதியில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக நரியூத்து பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கும் உட் படுத்தப்பட்டு வருகிறார். கொடுவிலார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சின்னவரதன் இன்னமும் தங்கள் பகுதிகளில் இழவுச் செய்தி சொல்லுவது, பிணத்திற்கு குழிவெட்டுவது போன்ற தோட்டி வேலைகளை செய்து வருவது எமது குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்
தமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமீபகாலமாக தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் பெரிய அளவில் இல்லை என்றும் சிலர் இவற்றை மிகைப்படுத்தி வெளியிடுகிறார்கள் என்றும் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. சில பத்திரிகைகளில் தலித்துகளும் சாதி இந்துக்களும் தேனீர் கடைகளில் சமமாக நாற்காலியில் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய புகைப்படம் கடந்த 3 மாத காலமாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தோடு ஒரு செய்தியும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. சமூக நீதிமற்றும் மனித உரிமை போலீசாரின் செயல்பாடுகளால் இத்தகைய சமத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிற ரீதியில் இவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தீண்டாமை இருப்பதை உறுதி செய்வது? அவற்றை எப்படி ஒழிப்பது? என்பதில் செயல் திட்டம் இருக்க வேண்டுமே தவிர உண்மையை மறுப்பதன் மூலம் மறைப்பதன் மூலம் எவ்வித தீர்வும் கண்டுவிட முடியாது.
தீண்டாமை பாகுபாடுகள் என்பது சனநாயக விரோதப் போக்காகும் - சமூகத்தின் உச்ச கட்ட மனித உரிமை மீறலாகும். மனித சமூகத்தை பாகுபாட்டுடன் வைத்திருக்கக்கூடிய வடிவம்தான் தீண்டாமை. இவற்றை கண்டுபிடிப்பது, அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய காரணிகள் என்ன, அவற்றை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் ஒரு முழுமையான தீண்டாமை ஒழிப்பு பணியினை கொண்டு செல்ல முடியுமே தவிர, தீண்டாமை இல்லை, பாகுபாடுகள் இல்லை என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவதன் மூலம் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. இந்த தீண்டாமை மெல்ல மெல்ல கனன்று பெரிய வன்முறைக்கும் இன மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.
ஆகவே தான் இது போன்ற வன்முறையை தடுக்க வேண்டும், கலவரங்கள் வந்துவிடக் கூடாது என்கிற சமூக அக்கறையின் முன்னெடுப்புதான் இது போன்ற ஆய்வுகளே தவிர, வேறு எந்த நோக்கமும் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு, சனநாயகவாதிகளுக்கு இருக்க முடியாது.
பொருளாதார வளர்ச்சியை முடக்கும் சாதி அமைப்பு
சாதி வர்க்கம் பற்றிய விவாதங்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. இடதுசாரி அமைப்புகள் ஒரு காலத்தில் வர்க்கப் பிரச்சினையை மட்டுமே முன்னிறுத்தின. பெரியாரின் திராவிடர் இயக்கம் வர்க்கத்தைவிட ஆழமான வர்ணபேதத்தினால் கட்டி எழுப்பப்பட்ட சாதி அமைப்பே அடித்தளத்தில் வலிமையாக நிற்பதை முன் வைத்தது. வர்க்கப் பார்வையை முன் வைத்தவர்கள் பொருளாதாரம், நிலம் போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை தந்தனர்.
ஒரு காலத்தில் சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே சாதியவாதம் என்று நிராகரித்த இடதுசாரி அமைப்புகள் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தொழிற் சங்கங்களில்கூட சாதிப் பிளவுகள் தோன்றின. தாழ்த்தப்பட்டோர் தனியாக தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டார்கள். மண்டல் குழுவின் அறிக்கையில் ஒரு பகுதியை மட்டும் அமுல்படுத்த வி.பி.சிங் முன் வந்தபோது, பார்ப்பன உயர்சாதிப் பிரிவினரும் பார்ப்பன ஊடகங்களும் ஒரே அணியாக திரண்டு எதிர்த்தன. சாதி தீண்டாமை அடிப்படையிலான மோதல்கள் நாடு முழுதும் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த சமூக எதார்த்தம் இடதுசாரிகளின் பார்வையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது என்று கூறலாம். வர்க்கப் பிரச்சினையைத் தீர்த்தால்தான் சாதிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று கூறி வந்தவர்கள், சாதிப் பிரச்சினையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். புறக்கணிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார்கள். இன்னும் சில அமைப்புகள் வர்க்கமும், சாதியும் ஒன்றாகத்தான் இருக்கின்றன என்ற கருத்தை முன் வைத்தன. உண்மையில் இந்தியாவின் சமூக அமைப்பு எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? இந்தக் கேள்விக்கு பதிலாக அண்மையில் வெளி வந்துள்ள ஒரு முக்கிய ஆய்வை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
‘இந்தியாவின் மனித ஆற்றல் வளர்ச்சி; சமூக மாற்றத்திற்கான சவால்கள்’ என்ற தலைப்பில் 2004-2005 ஆம் ஆண்டில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுதும் 1503 கிராமங்களில் 977 நகர்ப்புறப் பகுதிகளில், 41,554 குடும்பத்தினரிடம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வின் முடிவுகளை ஆர்க்கிதர் என்பவர் ‘இந்து’ ஏட்டில் (மார்ச் 28) வெளியிட் டுள்ளார். இதன்படி - கல்வி, மருத்துவம், நிலம், வாழ்க்கைத் தரம், உணவு போன்ற வாழ்நிலைகளில் தலித் மக்களும், பூர்வ குடியினரும், சமூகத்தின் கீழ் மட்டத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், இடை நிலையிலும், முன்னேறிய சாதியினரும், உயர்சாதி மைனாரிட்டிப் பிரிவினரும் - முதல் நிலையிலும் இருந்து வருகிறார்கள். பல நூற்றாண்டு காலமாக சாதி அடிப்படையில் திணிக்கப்பட்டு, பாகுபாடுகள், ஒடுக்குமுறைகளை அகற்றுவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்பதை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.
ஆய்வு வெளிப்படுத்தியுள்ள இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட வேண்டும். வாழ்வாதாரங்கள் மக்களுக்குச் சென்றடைவதில் சமத்துவமில்லாத பாகுபாடுகள் பெருமளவில் திகழ்கின்றன. நிரந்தரமான ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யக் கூடியவர்கள், ஒப்பீட்டளவில் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். இப்படி ஊதியம் பெற்று வேலை செய்யக்கூடியவர்கள் பொதுவாக உயர்சாதியினரும், முன்னேறியப் பிரிவைச் சார்ந்த மைனாரிட்டியினருமாகவே இருக்கிறார்கள். கிராமங்களில் வாழக்கூடிய, நிரந்தர ஊதிய வேலைகளுக்கான கல்வித் தகுதியில்லாதவர்களாக இருப்பவர்கள் தலித் மற்றும் முஸ்லீம்களாக உள்ளனர். அதாவது, முன்னேறிய சாதிப் பிரிவிலும், முன்னேறிய மைனாரிட்டிப் பிரிவினரிலும் (உயர்சாதி கிறிஸ்தவர் போன்றவர்கள்) 10 இல் 3 பேருக்கு அதிகமாக நிரந்தர ஊதியத்தோடு வேலை செய்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் சமூகத்தில் 10 இல் இரண்டு பேர் மட்டுமே நிரந்தர ஊதியத்தோடு வேலை செய்கிறவர்களாக உள்ளனர். கிராமத்தில் உழலும் தலித், ஆதிவாசி மக்கள் விவசாயக் கூலிகளாகவே இருக்கிறார்கள். நிரந்தர மாத ஊதியம் பெறுவோராக இல்லை.
இப்படி முன்னேறிய சாதியினருக்கும், பின்தங்கிப்போன சாதியினருக்குமிடையே அவர்கள் பிறந்த சாதியின் அடிப்படையிலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் கிடைப்பதற்கே சாதிதான் அடிப்படையாக இருக்கிறது என்பதே ஆய்வு வெளிப்படுத்தும் முக்கியமான அம்சமாகும். தலித் மக்கள் நிலமற்றவர்களாக இருப்பதும், அவர்கள் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இப்படி இந்த சமத்துவமற்ற வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்தால் எதிர்காலம் மிகவும் பாதிப்புக்குள்ளதாகவே இருக்கும் என்பது ஆய்வு முன் வைக்கும் மற்றொரு முக்கிய கருத்தாகும்.
முன்னேறிய சாதிக்கும், தலித், பிற்படுத்தப்பட்ட சாதி, முஸ்லீம்களுக்கும் இடையே தரமான கல்வி கிடைப்பதிலும் உயர் கல்வி கிடைப்பதிலும் உள்ள வேறுபாடுகள் தொடருவதற்கு காரணம், சமூகத்திலுள்ள சாதிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் தான். தொடக்கக் கல்வி பெறும்போதே தொடங்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கான அரசின் செயல் திட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது மட்டுமல்ல, மிக மிகக் குறைவான முயற்சிகளே அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பள்ளிப் படிப்பு இறுதி வரை பாகுபாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
இது தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள ஒரு நூலைக் குறிப்பிட வேண்டும். நவீன இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அதற்கு சாதித் தடையாக இருப்பதையும் ஆய்வு செய்கிறது இந்த நூல். நூலின் பெயர் “Economic Discrimination in Modern India” (2010, ஆக்ஸ்போர்டு பல்கலை அச்சகம் வெளியீடு) பிரபல பொருளாதார ஆய்வாளரும், பல்கலைக்கழக நிதிஉதவிக் குழுவின் தலைவருமான சுதாதியோ தோரட் மற்றும் சமூக ஆய்வாளர் கேத்தரின் எஸ்.நியுமேன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நூலாகும். பொருளாதார பாகுபாடுகளுக்கும் பல்வேறு திட்டங்களின் நலன்கள் கிடைக்கப் பெறாமைக்கும் சாதிக்கும் உள்ள தொடர்புகளை இந்த நூல் விரிவாக ஆராய்கிறது. சமூக நிறுவனங்களே சாதி, இனம் என்ற அடையாளங்களின் கீழ் சில குழுக்களை ஒதுக்கி வைக்கின்றன. சாதி தீண்டாமை அடிப்படையில் ஒரு சமூகக் குழுவே புறக்கணிக்கப்படும்போது, அக்குழுவைச் சார்ந்த சில தனி மனிதர்களேகூட அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பொருளாதார, சமூக, அரசியல் தளங்களில் முழுமையான பங்கேற்புக்கு அவை தடைகளாகி விடுகின்றன.
சாதி அமைப்பு சமூகத்துக்குள் இயங்கும் பொருளாதார நிறுவனங்களிலும் சாதியே எதிரொலிக்கிறது. பொருளாதார நிறுவனங்களே சாதியால் பிளவுபட்டு நிற்கிறது. சாதியமைப்புக்குள் உள்ள தனி நபர்கள் மீது தாக்கத்தை உருவாக்குகிறது. எந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்பது பிறப்புக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. தொழில்கள் பரம்பரை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. பொருளாதார உரிமையும், சமூக உரிமையும் சமமாக்கப்படாத நிலையில், சாதியால் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய பொருளாதார நலன்களும் கீழ் நிலைக்கே தள்ளப்படுகின்றன. (Economic and Social Rights are unequally assigned.... the entitlement to rights diminishes as one moves down the caste ladder) எனவே பல்வேறு அரசின் நலத் திட்டங்கள் சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குப் போய்சேருவதில் சாதியே பெரும் தடையாக இருக்கிறது.
சுகாதார மேம்பாடு திட்டங்களின் பயன்பாடும், தீண்டப்படாத மக்களுக்கு போய்ச் சேராததை விரிவாக ஆராய்கிறது இந்த நூல். பள்ளிகளில் காட்டப்படும் பாகுபாடுகளால் கணிசமான தலித் குழந்தைகள், குறிப்பாக தலித் பெண் குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியிலே விட்டுவிடுகிறார்கள். பொருளாதாரப் பயன்கள் அரசு திட்டங்களின் பலன்கள் சாதி அமைப்பு சமூகத்தில் சமமாகப் பங்கீடு செய்யப்படாமல், சாதியால் புறக்கணிக்கப் பட்டவர்களை சென்றடைவதில் மிக மோசமான நிலையே தொடர்கிறது என்பதையும் விரிவாக ஆராய்கிறது இந்த நூல். எனவே, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களினால் சாதியமைப்பு தகர்ந்துவிட்டது என்பதும் பொருளாதாரத் திட்டங்கள் அதன் நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கே சாதி தீண்டாமைக்கு எதிரான இயக்கம் நடத்தப்பட்டு - அதன், செல்வாக்கு தகர்க்கப்பட வேண்டும் என்பதும் இந்தக் கணக்கெடுப்புகளும் ஆய்வுகளும் தெளிவாகப் படம் பிடிக்கின்றன.
(பெரியார் முழக்கம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)