கீற்றில் தேட...

பாரம்பரியம் மிக்க நகரம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என மதுரைக்கு என்றைக்கும் வரலாற்று பெருமை உண்டு. தென் பகுதியில் உள்ள பல மாவட்டங்களுக்கும் பொதுவான ஒரு பகுதியாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய பகுதியாகவும் மதுரை உள்ளது. சமீபகாலமாக மதுரைக்கு வரும் எந்த ஆட்சியர்களும் இங்கு சரிவர பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால் மதுரையில் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. 1790 ஆம் ஆண்டு முதன்முதலாய் ஒருங்கினைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்ற மெக்லாய்ட் 94 ஆம் ஆண்டு வரையில் 4 ஆண்டுகள் மாவட்ட ஆட்சியராய் பணியாற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போதைய வெறுப்பில் விடுமுறையில் சென்றுள்ள ந.மதிவாணன் மாவட்டத்தின் 202 ஆவது ஆட்சியர். கடந்த 3 ஆண்டுகளில் 8 பேர் பணியாற்றியுள்ளனர்.

madurai_mapகடந்த 25.5.2006 ல் மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற த.உதயசந்திரன் மதுரை மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஆட்சியராக திகழ்ந்தார். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுடக்குடன் சரிசெய்யப்பட்டதுடன் மாவட்டம் முழுதிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. அதேநேரம் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்டகலம் ஆகிய ஊராட்சிகளில் தீண்டாமையின் காரணமாக பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். இதன் மூலம் தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடத்தையும் ஏற்படுத்தியதோடு மதுரை மாவட்டத்தின் மீதிருந்த களங்கத்தைத் துடைத்தார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதயசந்திரனை வெகுவாகப் பாராட்டினார். ஆனால் மதுரை அரசியல் நிர்பந்தம் காரணமாக மதுரை மாவட்ட மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றம் செய்யப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து த.கார்த்திகேயன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு 7 நாட்கள் பணியாற்றிய நிலையில் மாறுதல் பெற்றுச் சென்றார். இவரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சி.இராஜாமணி 6 நாட்கள் பொறுப்பு ஆட்சியராக பணியாற்றினார். அதன்பின் சோ.சு.ஜவஹர் பொறுப்பேற்று 4 மாதங்கள் பணியாற்றிய நிலையில் இடைத் தேர்தல் புகாரின் காரணமாக மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சோ.சந்தரமூர்த்தி பொறுப்பேற்று 24 நாட்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக வேலை பார்த்தார். இடைத் தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் ஜவஹர் மதுரை மாவட்ட ஆட்சியரானார். தொடர்ந்து 17 மாதங்கள் பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் 201 ஆவது மாவட்ட ஆட்சியராக பெ.சீத்தாராமன் 10.11.2008 ல் பொறுப்பேற்று 29.5.2009ல் பிரியாவிடை பெற்று கடலூருக்கு சென்றார்.

அதன்பின் செல்வம் கொழிக்கும் மதுரையில் ஆட்சியர் பொறுப்பை அலங்கரிப்பதற்காக விரும்பிய ந.மதிவாணன் மதுரையிலுள்ள முக்கிய பிரமுகரின் உறவினர் மூலம் சிபாரிசைப் பெற்று விரும்பிய இடத்தை அடைந்தார். வேலை முடிந்த கையோடு ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் முதன்முதலாய் செய்தியாளர்களை சந்தித்தபோது தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை மாவட்ட ஆட்சியராக்கிய முக்கிய பிரமுகருக்கு விசுவாசமாக நடந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

ஆளும்கட்சியினரோடு சுமூகமான உறவைத் தொடர்ந்து வந்தார். இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் அலைபேசியை அணைத்துவிடுவதால் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை, பல நேரங்களில் தொடர்பு எல்லைக்கு அப்பாலுமே இருந்துவந்தார். ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களைத் தவிர மற்றவர்கள் யார் கண்ணிலும் தென்படாத விதம் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களால் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தன் எண்ணம் போல் செவ்வனே பணியாற்றினார். இதனால் ஆட்சியர் அலுவலகம் மந்திரப் படங்களில் வரும் மர்மக் கோட்டையாகத் திகழ்ந்தது. இதனால் பல துறைகளிலும் தனிப்பட்ட சிலரின் கைகள் ஓங்கி இருந்தன. இது குறித்து சில வார இதழ்கள் செய்தி வெளியிட்ட நிலையில் மறுநாளே பத்திரிகையாளர்களின் முன்தோன்றி தான் சுலபமான நபர் என்றும், தன்னைப் பற்றி பலரும் நினைப்பது தவறு என்றும் தன்னிலை விளக்கமளித்ததோடு மீண்டும் மந்திரக் கோட்டைக்குள் அடைக்கலமானார்.

லேசான தலைவலிக்கு உள்ளான இவருக்கு இதனைத் தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தொடர துவங்கியுள்ளன. ஒரு கட்டத்தில் எந்த அதிகாரியோ, அரசியல்வாதிகளோ யார் எந்த பணிக்கு சென்றாலும் ஒரே வார்த்தையில் முக்கிய பிரமுகரை பாருங்கள் உங்கள் வேலை உடனடியாக நடைபெறும் என்று குறி சொல்ல ஆரம்பித்தார். இப்படி செய்ததன் மூலம் முக்கிய பிரமுகருக்கு எந்த வழிகளிலெல்லாம் தனது விசுவாசத்தைக் காட்ட முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் காட்டி மிகுந்த அன்பைப் பெற்று வந்தார். இப்படி இருந்து வந்தவருக்கு இடி விழுந்த கதையாய் அமைந்தது கனிமவளத்துறையின் ஒப்பந்தங்கள்.

மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, கல்லுப்பட்டி என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனிமவளத் துறையினரின் கட்டுபாட்டில் உள்ள கல்குவாரிகளை ஏலம் எடுப்பதில் ஆளும்கட்சியினரிடையே கடும் போட்டி உருவானது. மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் பலருக்குமிடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் பேசி முடிக்கப்பட்டு தனித் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆட்சியர் என்றும் பாராமல் கீழிருந்து மேல் வரையில் பலரும் பலவாறு ஆட்சியரிடம் வசைபாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த ஏல நாளுக்கு முன்னதாக மனமுடைந்து தான் தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் திடீர் விடுப்பில் செல்லத் தொடங்கினார். இதனால் மனமுடைந்து காணப்பட்டவர் பல நேரங்களில் பூட்டப்பட்ட அறைக்குள் கோப்பையும் கையுமாக வலம்வந்துள்ளார். இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் இந்த பணிகளையும் சேர்த்து பார்த்து வந்தார். இதன்மூலம் அவ்வப்போது ஆளும்கட்சியினரின் தொடர்பு எல்லையிலிருந்தும் வெளியே செல்லத் தொடங்கினார். ஆனாலும் மத்திய அமைச்சரின் நிகழ்ச்சிகளில் மட்டும் முகத்தை வெளியுலகிற்கு காட்டி வந்தார்.

Udayachandranஅப்போது மதுரை ஒத்தக்கடையில் உள்ள யானைமலை ஒற்றைப்பாறையினை குடைந்து பல கோடி செலவில் சிற்பக் கலைநகரம் அமைக்கும் திட்டம் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விசயம் வெளியில் கசிவதற்கு ஆட்சியர் தான் காரணம் என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே அலுவலகத்தில் கோப்புகள் பலவும் மலையாய் குவியத் துவங்கின. மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாசம் வழுக்க ஆரம்பித்த நிலையில் முக்கியப் பிரமுகர் ஒருவர் கை நீட்டியுள்ளார். இதனால் தனக்கு பணிமாற்றம் வேண்டும் என தலைமைச் செயலகத்திற்கு சென்ற நிலையில் அங்கு கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. இவர் தட்டிய கதவுகள் அனைத்தும் ஒரே பதிலைக் கூறி அடைத்துள்ளன. இதனால் மனம் நொந்து கண்கலங்கிய நிலையில் விரக்தியின் விளிம்பிற்கே சென்றவர் ஜனவரி 14 ம்தேதி விடுப்பில் சென்றவர் தான். அவர்களாகவே மாற்றட்டும் என்று தொடர்ந்து தனது விடுப்பை நீட்டித்துக் கொண்டே உள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ஆட்சியராக பணியாற்றி வந்தாலும் அவரால் எல்லா பணிகளையும் அதிகாரத்தோடு மேற்கொள்ள முடியாது என்பதால் பல பணிகளும் தடை பட்டு நிற்கின்றன. வளர்ச்சி பணிகள் என்றால் என்ன சில அதிகாரிகள் கேட்கும் நிலை உருவாகியுள்ளன. இதை சாக்கிட்ட சில உயர்மட்டத்திலுள்ள ஊழியர்கள் பலரும் தங்களை ஆட்சியர் அளவிற்கு உயர பார்த்து சிற்சில பணிகளையாற்றி வருகின்றனர். கோப்புகளும் குடோன், குடோனாக குவியத்துவங்கியுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பலர் புலம்பி வருகின்றனர்.

மதிவாணன் பணிமாறுதல் கிடைக்காமல் தவித்துவரும் நிலையில் இங்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும்படி பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்து ஒதுங்கத் தொடங்கியுள்ளனர். யாரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில் தாய், தந்தை இல்லாத அனாதைப் பிள்ளைகளைப் போல மதுரை மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது பொறுப்பு ஆட்சியராக பணியாற்றிவரும் மாவட்ட வருவாய் அலுவலர் இளைஞராக இருப்பதனால் பல வளர்ச்சிப் பணிகளில் கவனமும், ஆர்வமும் செலுத்திவருகிறார். ஆட்சியருக்கு உள்ள அதிகாரம் இவருக்கு இல்லாததால் எந்த பணியையும் இவரால் மேற்கொள்ள முடியவில்லை. எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தமிழக முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்தி மதுரையின் வரலாற்றை காப்பாற்றிடும் விதமாகவும், மதுரை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்திடும் விதமாக எந்த சார்பு தன்மைகளும் அற்ற உதயசந்திரனைப் போன்றதொரு சிறப்பானதொரு மாவட்ட ஆட்சியரை உடனடியாக மதுரைக்கு வழங்கி மீண்டும் மதுரைக்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- ஜனசக்தியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)