ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

madani_360இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார்.  பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார்.  தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். 

 57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது...  இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே  வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு,  இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள்,  குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை,  அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

 பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

 முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு  காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து,  தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும்,  மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான்,  இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்] 

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)