சமூக ஆர்வலர் சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே, 2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர். இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் "நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதிப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்". ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

azad_234 "அரசின் மூன்றாவது கடித்தை ஆசாத் பெற்றதனால் தனது மெய்பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்", மேலும் "ஆசாதின் படுகொலை நமக்கு எல்லாம் பேரிழப்பு, ஏனென்றால் ஆசாத் மாவோயிசுட்டுகளால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்டவர். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது" என்றார் அக்னிவேஷ்.

ஆனால் உள்துறை அமைச்சகமோ வேறொரு பார்வையைக் கொண்டுள்ளது. "இந்தப் படுகொலை அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது. மாவோயிசுட்டுகளிடம் இருந்து அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி எந்த ஒரு சமிஞையும் எங்களுக்கு வரவில்லை" என்கிறார் உள்துறை செயலர் பிள்ளை.

 ஆசாத் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு மாவோயிசுட்டுகள் மத்திய ஆயுதப் பிரிவைச்(CRPF) சேர்ந்த 27 காவலர்களைக் கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் மாவோயிசுட்டுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் எடுத்து கொள்ளலாம்.

“அக்னிவேஷ் மூலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தை மூலம் நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க ஒரு நாள் குறிப்பிடப்படவேண்டும். அப்படி ஒரு நாள் குறிப்பிடாத பட்சத்தில் இரண்டு தரப்புகளும் தங்களது போரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆசாத் படுகொலை செய்யப்பட்டு அதே வாரத்தில் லால்கரில் 5 மாவோயிசுட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிசுட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று க‌ருதப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆதிவாசி பெண்க‌ள் பாதுகாப்பு ப‌டையின‌ரால் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளும் தொட‌ர்ந்து கொண்டு தான் உள்ள‌ன‌. மாவோயிசுட்டுக‌ளும் தாங்க‌ள் கொல்வ‌தை நிறுத்த‌ப் போவ‌தில்லை.

இங்கே ஆசாதின் ம‌ர‌ண‌த்தை நாம் ஏன் இந்த‌ வ‌ன்முறை பிர‌ச்ச‌னையிலிருந்து வில‌க்கிப் பார்க்க‌வேண்டி இருக்கின்ற‌து என்றால் ஆசாத் தான் (மாவோயிசுட்டு)க‌ட்சிக்கு அக்னிவினேசு மூல‌மாக‌ ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌டித‌ங்க‌ளை எடுத்துச் செல்ப‌வ‌ரும், ந‌ம்ப‌த‌குந்த‌வ‌ருமாவார். ஆசாத் க‌ட்சிக்குள்ளே அமைதிப் பேச்சுவார்த்தையின் மேல் ஒரு ந‌ம்பிக்கையைக் கொண்டு வர‌ முய‌ற்சித்த‌வ‌ர். மேலும் க‌ட்சிக்குள்ளே ந‌ல்ல‌ ம‌ரியாதை உள்ள‌வ‌ருமாவார். ஆனால் அவ‌ரைக் கொன்ற‌த‌ன் மூல‌ம் அர‌சு தான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வ‌ர‌ப்போவ‌தே இல்லை என்று தெளிவாக‌ அறிவித்து விட்ட‌து" என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் த‌ண்ட‌கார‌ண்ய‌ ப‌குதியின் செய்தி தொட‌ர்பாள‌ர். உசென்டி.

முதல் இர‌ண்டு க‌டித‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்து விட்ட‌ன‌. ஆனால் மூன்றாவ‌து க‌டித‌ம் இன்னும் இர‌க‌சிய‌மாக‌வே உள்ள‌து. ஆனால் இந்த‌ மூன்றாவ‌து கடித்தைப் ப‌டித்த‌ சில‌ர் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் அமைதிப் பேச்சுவார்த்தை மிக‌ அருகில் வ‌ந்திருந்த‌தாக‌வும், அதுவே ஆசாத் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வும் மாறிவிட்ட‌து. இதில் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையே உள்ள‌ ஆதிவாசிக‌ளின் நிலை தான் மிக‌வும் மோச‌மான‌து. இந்த‌(ஆசாதின்) கொலைக்கு மாவோயிசுட்டுக‌ள் க‌ண்டிப்பாக‌ ப‌ழிவாங்குவார்க‌ள்.” என்கிறார்கள்.

2004ல் ஆந்திராவில் அர‌சுக்கும் மாவோயிசுட்டுக‌ளுக்கும் இடையே ந‌டுநிலையாள‌ராக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஹ‌ர‌கோபால் கூறுகையில் "இந்தப் பாசிச‌ அர‌சு ம‌க்க‌ளைக் கொல்வ‌த‌ன் மூல‌ம் அமைதி திரும்பி விடும் என்று எண்ணுகிற‌து". இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள் (ஆசாதின் கொலை) இந்த‌ அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன‌‌. ஆந்திராவின் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் ச‌ண்டையில் ஆசாத் கொல்ல‌ப்ப‌ட்ட‌து அர‌சைப் பொறுத்த‌வரை ஒரு சாத‌னை. ஆசாத் மாவோயிசுட்டுக‌ளில் மூன்றாம் இட‌த்தில் இருப்ப‌வ‌ர். க‌ட்சியின் மைய‌க் குழு உறுப்பின‌ர். மேலும் மாவோயிசுட்டுக‌ளின் த‌லைவ‌ர் க‌ண‌ப‌திக்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருந்த‌வ‌ர்.

ஆசாத் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்ட‌த்தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர‌து த‌ந்தை ஒரு உண‌வ‌க‌ முத‌லாளி. வாராங்க‌லில் உள்ள‌ ம‌ண்ட‌ல‌ பொறியிய‌ல் கல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். இர‌ண்டு முதுநி‌லை பொறியிய‌ல்(M.tech) ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் யூனிய‌னை துவ‌க்கிய‌வ‌ர். எம‌ர்ஜென்சி கால‌க‌ட்ட‌த்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அத‌ன் பின்ன‌ர் இவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழ‌ ஆர‌ம்பித்தார். ஆசாத் கொல்லப்பட்டபோது அவருக்கு வ‌ய‌து 55.

ஆதிலாபாத் காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர். பிர‌மோத் குமார் கூறுகையில் "அதிலாபாத் காட்டுப் ப‌குதியில் 25லிருந்து 30 மாவோயிசுட்டுக‌ள் இருப்ப‌தாக‌ உள‌வுத்துறை த‌க‌வ‌ல் வ‌ந்தது. நாங்க‌ள் ஒரு காவ‌ல் துறைப் ப‌டையை மாவோயிசுட்டுக‌ளுக்கு எதிராக‌ ச‌ண்டை போட‌ அனுப்பினோம். எங்க‌ள் ப‌டை அவ‌ர்க‌ளை ச‌ர‌ண‌டைய‌ச் சொன்னார்க‌ள் ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ண்டையை ஆர‌ம்பித்தன‌ர்". காவ‌ல் துறை க‌ண‌க்குப்ப‌டி இந்த‌ மோத‌ல் சூலை 1 இர‌வு 11.30 ம‌ணிக்கு ஆர‌ம்பித்து சூலை 2 காலை 2 ம‌ணி வ‌ரை நீடித்த‌து. மோத‌ல் முடிந்த‌வுட‌ன் ஆசாதுட‌ன் அடையாள‌ம் தெரியாத‌ ஒரு ந‌பரும் மோத‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ காவ‌ல் துறை கூறிய‌து.

ஆனால் இந்த‌ மோத‌லைப் ப‌ற்றி கிடைத்த‌ த‌க‌வ‌ல்க‌ளோ வேறு. மோத‌ல் ந‌டைபெற்ற‌தாக‌க் கூறும் ச‌ர்கிபாலி கிராம‌ ம‌க்க‌ள் சூலை இர‌வு எங்க‌ளுக்கு எந்த‌ ஒரு துப்பாக்கி ச‌ண்டை ச‌த்த‌மும் கேட்க‌வில்லை என்று கூறுகின்ற‌ன‌ர். மாவோயிசுட்டுக‌ளும் இந்த‌ மோத‌ல் போலியான‌‌ ஒன்று என‌ கூறுகின்ற‌ன‌ர். "ஆசாத் சூலை 1 அன்று நாக்பூரில் இருந்தார். அவ‌ர் அதிலாபாத்தில் இல்லை. எங்க‌ள‌து திட்ட‌ப்ப‌டி அவ‌ர் சூலை 1 அன்று எங்க‌ள் ஆள் ஒருவ‌ரை திரைய‌ர‌ங்கில் ச‌ந்திக்க‌ வேண்டும்" என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் செய்தித் தொட‌ர்பாள‌ர். உசென்டி.

hem_chandra_pandeyஅடையாள‌ம் தெரியாத‌ அந்த‌ இர‌ண்டாவ‌து உட‌லே இது போலி மோத‌ல் என‌ உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை கொடுக்கின்ற‌து. இவ‌ரின் புகைப்ப‌ட‌ங்க‌ள் ஆந்திர‌ நாளித‌ழ்க‌ளில் வ‌ந்த‌ பின்ன‌ர் இவ‌ர் மாவோயிசுட்டு இல்லை ஒரு ஊட‌க‌விய‌ல‌ர் என்று உத்த‌ர்க‌ண்டில் உள்ள‌ இவ‌ர‌து குடும்ப‌ம் கூறிய‌து. இவ‌ர‌து பெய‌ர் ஹேம்ச‌ந்திர‌ பாண்டே. 2007லிருந்து அவ‌ர் டெல்லியில் வ‌சித்து வ‌ந்த‌வ‌ர். "என‌து க‌ண‌வ‌ர் சூன் 30 அன்று டெல்லியிலிருந்து நாக்பூருக்கு அலுவ‌ல் கார‌ண‌மாக‌ சென்று சூலை 2 அன்று டெல்லி திரும்ப‌ வேண்டிய‌வ‌ர்" என்கிறார் பாண்டேவின் ம‌னைவி. அவ‌ர‌து குடும்ப‌த்தார் கூறுகையில் பாண்டே "நை துனியா, இராசிட்ரிய‌ ச‌காரா, டெய்னிக் ஜ‌க்ர‌ன்" போன்ற‌ தின‌ச‌ரிக‌ளில் வேலை செய்தார் . ஆனால் இந்த‌ தினச‌ரிக‌ளின் ஆசிரிய‌ர்க‌ளோ அவ‌ர் இங்கு வேலை பார்க்க‌வில்லை என்று கூறினாலும் அவ‌ர‌து பெய‌ரில் மேற்கூறிய‌ தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்துள்ள‌ ப‌திவுக‌ள் தெக‌ல்காவிட‌ம் (வார‌ இத‌ழ்) உள்ள‌ன‌.

2010லிருந்து அவ‌ர் சேத்னா என்ற‌ இத‌ழில் வேலை செய்து வ‌ந்துள்ளார். இது டெல்லி அசாம் இருப்பு பாதை அலுவ‌ல‌க‌த்திற்குச் (Delhi Assam Railway corporation ltd) சொந்த‌மான‌து. அவ‌ருட‌ன் சேத்னா அலுவ‌லக‌த்தில் வேலை செய்து வ‌ரும் ம‌ற்ற ந‌ண்ப‌ர்க‌ளோ, பாண்டே ஒரு அமைதியான‌, உத‌வும் எண்ண‌ம் கொண்ட‌ ந‌ண்ப‌ர் என‌ கூறுகின்ற‌ன‌ர். இதில் ஒரு விசித்திர‌ம் என்ன‌வென்றால் ஆதிலாபாத்தில் அவ‌ர் கொல்ல‌ப‌ட்ட‌தாக‌ காவ‌ல்துறை கூறும் சூலை 1 அவ‌ர் அலுவ‌ல‌க‌ம் வ‌ந்த‌தாக‌வும் கூறுகின்ர‌ன‌ர். "சேத்னா இத‌ழ் அலுவ‌ல‌க‌ நிர்வாகியான‌ அபிசேக் கூறுகையில் பாண்டே சூலை 1 அன்று ம‌திய‌ம் வ‌ரை அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்து விட்டு பின்ன‌ர் அரை நாள் விடுப்பு கேட்டுள்ளார். பாண்டேவின் மேலாள‌ர் அவ‌ர‌து கைபேசியில் உள்ள‌ பாண்டேவின் குறுஞ்செய்தியையும் ந‌ம‌க்கு காட்டினார் " அதாவ‌து சூலை 1 அன்று தாம் அரை நாள் ம‌ட்டும் அலுவ‌ல‌க‌த்தில் இருப்ப‌தாக‌வும், பின்ன‌ர் விடுப்பு எடுப்ப‌தாக‌வும் கூறியுள்ளார்.

ஆனால் பாண்டேவின் குடும்ப‌த்தார் பாண்டே சூன் 30 அன்று டெல்லியை விட்டு தொடர்வ‌ண்டியில் சென்ற‌தாக‌வே கூறுகின்ற‌ன‌ர். டெல்லியில் ம‌திய‌ம் 2 ம‌ணி வ‌ரை இருந்து விட்டு அதே நாள் இர‌வு ஆந்திராவின் தொலைதூர காட்டுப் ப‌குதியில் கொரில்லா போரில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ந‌ம்ப‌த்த‌குந்த‌த‌ல்ல‌.

சூலை 1 அன்று ந‌ட‌ந்த‌தற்கு தாமும் ஒரு வ‌கையில் கார‌ண‌மாகி விட்டோமோ என்றும் எண்ணுகிறார் அக்னிவேஷ். மே 6 லிருந்து 8 வ‌ரை அக்னிவேசும் ம‌ற்றும் சில‌ரும் இராய்பூர் ம‌ற்றும் தாண்டிவாடா சென்று ந‌டைபெற்று வ‌ரும் வ‌ன்முறையை நிறுத்த‌க் கோரினார்க‌ள். மே 11 அன்று சித‌ம்ப‌ர‌ம் அர‌சின் நிலையை விள‌க்கிக் கூறி அக்னிவேசிற்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்திக் கொள்ள ஒரு நாளை குறிப்பிடச் சொல்லியிருந்தார். "நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்தி விடுவார்க‌ள் என்று இருந்தோம்" மேலும் சித‌ம்ப‌ர‌ம் "நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் இருந்து 72 ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு மாவோயிசுட்டுக‌ள் எந்த‌ ஒரு வ‌ன்முறையிலாவ‌து ஈடுப‌டுகின்றார்க‌ளா என்று கூர்ந்து க‌வ‌னிப்போம். மேலும் இந்த‌ 72 ம‌ணி நேர‌த்தில் அர‌ச‌ ப‌டைக‌ளும் எந்த‌ ஒரு ச‌ண்டையிலும் ஈடுப‌டாது. அந்த‌ நேர‌த்தில் நாம் அமைதிப் பேச்சுவார்த்தையை தொட‌ங்க‌லாம்” என்றும் கூறியிருந்தார்.

swami_agniveshஇந்த‌ க‌டித‌ம் மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும் ஏனென்றால் இதில் தான் அர‌சு முத‌ன்முறையாக‌ மாவோயிசுட்டுக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்த‌ ச‌ம்ம‌தித்துள்ள‌து. இத‌ற்குப் ப‌தில் த‌ரும் வ‌கையில் மே 31 அன்று ஆசாத் ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் "எங்க‌ள‌து க‌ட்சி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புத‌ல் தெரிவித்துள்ள‌து. இத‌னை மிக‌ மோச‌மாக‌ பாதிக்க‌ப்ப‌டும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஆதிவாசிக‌ளை க‌ருத்தில் கொண்டே நாங்க‌ள் எடுத்துள்ளோம்.அமைதிப் பேச்சுவார்த்தையில் அர‌சு மிக‌ ஆர்வ‌மாக‌ உள்ள‌தென்றால் அர‌சு நீண்ட‌ கால ச‌ண்டை நிறுத்த‌த்திற்கு ஒப்புக் கொள்ள‌ வேண்டும். 72 ம‌ணி நேர‌ ச‌ண்டை நிறுத்த‌ம் என்ப‌து ந‌கைச்சுவையாக‌ உள்ள‌து. மேலும் இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் கைது செய்யப்ப‌ட்டு சிறையில் இருக்கும் எங்க‌ள் இய‌க்க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளை விடுவிக்க‌வும், எங்க‌ள் மீதுள்ள‌ த‌டையையும் அர‌சு நீக்க‌ வேண்டும். மேலும் அர‌சு த‌ற்போது ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ள‌ ப‌டையை திருப்பி பெற‌ வேண்டும்" என்றும் ஆசாத் கூறியுள்ளார்.

 அக்னிவேஷ் இந்த‌ க‌டிதத்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்திட‌ம் சேர்த்துள்ளார். மேலும் மாவோயிசுட்டுக‌ள் எழுப்பியுள்ள‌ கேள்விக‌ளுக்கு விடை கூறும் வ‌கையில் மூன்றாவ‌து க‌டித‌த்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்தை ச‌ந்தித்த‌ பின்ன‌ர் ஆசாதிற்க்கு அனுப்பி உள்ளார். அதில் ச‌ண்டை நிறுத்த‌ம் வெறும் 3 நாட்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ அது நீண்ட‌ கால‌ நோக்கிலே இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த‌ மூன்றாவ‌து க‌டிதத்திற்கு மாவோயிசுட்டுகளின் த‌ர‌ப்பில் இருந்து ச‌ண்டை நிறுத்த‌த்‌தை அறிவிக்கும் அந்த‌ நாளை குறிப்பிட‌ வேண்டும். இந்த‌ நிலையில் தான் ஆசாத் போலி மோத‌லில் அர‌சினால் கொல்ல‌ப்ப‌ட்டார்.

"இந்திய அரசின் அமைதிப் பேச்சுவார்த்தையின் கோர‌முக‌ம் இவ்வாறு இருக்கின்ற‌து. இதைவிட‌ இன்னொரு கொடுமை என்ன‌வென்றால் இந்திய‌ப் பிர‌த‌ம‌ரே ஒப்புக்கொண்ட‌ ஆதிவாசிக‌ளின் தற்போதைய நிலை ப‌ற்றியும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் ப‌ஞ்சாய‌த் இராஜ் அமைச்ச‌க‌த்தால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்ட ஆய்வ‌றிக்கை இதே அர‌சால் குப்பைத் தொட்டியில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ப‌ற்றிய‌ மொழிபெய‌ர்ப்பை விரைவில் நீங்க‌ள் எதிர்பார்க்க‌லாம்"

ஆங்கில மூலம்: துஷா மிட்டல்

மூலப்பதிவு.... http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne170710thirdletter.asp

 ந‌ன்றி--- தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

- ப.நற்ற‌மிழ‌ன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It