ஹோமியோபதியை நாட்டு மருந்து என்றும், தமிழ் மருந்து என்றும் நிறைய பேர் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் ஹோமியோபதி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஃபிரெட்ரிக் சாமுவேல் ஹானிமன் (1755-1843) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஆங்கில வைத்தியம் என்று சொல்லப்படுகிற அலோபதி டாக்டராக இருந்து பிறகு ஹோமியோபதியை கண்டு பிடித்தார்.
ஹோமியோபதியில் நோய்களுக்காக மருந்துகள் கொடுப்பது இல்லை. நோய்க்கான காரணத்திற்குதான் மருந்து கொடுக்கிறோம்.
ஒருவர் தலைவலி என்று ஆங்கில மருத்து வரிடம் போனால் உடனே வலி நிவாரணியை கொடுப்பார். ஆனால் ஹோமி யோவில் ஏன் தலை வலிக்கிறது என்று பார்க்கிறோம்.
1. முதல் நாள் இரவு அதிகமாக சாப்பிட்டதால் இருக்கலாம்.
2. முதல் நாள் இரவு தூக்கம் இல்லாததால் இருக்கலாம்.
3. முதல் நாள் இரவு மதுபானம் சாப்பிட்டிருக்கலாம்.
4. காலையில் மலம் போகாமல் இருந்திருக்கலாம்.
மேற்சொன்ன நான்கு விஷயங்களாலும் தலை வலிக்கலாம். அனைத்துக்கும் ஒரே மருந்து கொடுக்காமல் எந்த காரணத்தினால் தலைவலி என்று பார்க்கவேண்டும்.
அதேமாதிரிதான் ஆஸ்துமாவும்.
1. சிலருக்கு விடியற்காலை 3 மணிக்கு வரும்.
2. சிலருக்கு தூங்க ஆரம்பித்தால் வரும்.
3. சிலருக்கு தூங்கும்போது வரும்.
4. சிலருக்கு சரியாக பாதி ராத்திரியில் வரும்.
5. சிலருக்கு மலம் போகாமல் இருந்தால் வரும்.
6. சிலருக்கு மாதவிலக்கு வரவில்லை என்றால் வரும்.
7. சிலருக்கு மாதவிலக்கு சமயத்தில் மட்டும் வரும்.
இதேமாதிரி தனித்தனியாக ஒவ்வொரு வரைப் பற்றியும் விசாரித்து அவர்களுக்கு உண்டான மருந்தை தேர்வு செய்வோம். இதனால்தான் ஹோமியோபதியில் நோயை முற்றிலுமாக நீக்க முடிகிறது. இதன் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் மனம்.
மனமாற்றம், வருத்தம், கோபம், இவற்றைத் தான் நாங்கள் முதலில் எடுத்துக்கொள்வோம்.
Who are you to worry about the organs. You have to worry about the patients -என்று எங்கள் மருத்துவ நூல்களிலே சொல்லுவார்கள்.
கை வலி என்றால் கைக்கு மருந்து கொடுப்பது இல்லை. யாருடைய கை திரு. கோபா லுடைய கை. அவருக்கு என்ன தொந்தரவு என்று ஆராய்கிறோம். அவரை குணப்படுத்தும் போது அவருடைய கை தானாக குணமாகி விடுகிறது. மண் நன்றாக இருந்தால் மரம் நன்றாக இருக்கும் என்பதுதான் எங்கள் தத்துவம்.
ஹோமியோபதியில் கால் வலிக்கு ஒரு டாக்டர், தலைவலிக்கு ஒரு டாக்டர் என்று தனித்தனி பிரிவு கள் இல்லை. நாங்கள் கோபால் என்றால் கோபாலை முழுசாகப் பார்க்கிறோம். அவரை கை வேறு கால் வேறாக பிரித்துப் போடுவதில்லை.
ஒரு உதாரணம் சொல்கிறேன். 1993-ம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போது நான் தி.நகர் நியூ பாலாஜி மருத்துவமனையில் ஹோமியோ கன்ஸல்டன்ட்டாக இருந்த நேரம்.
ஒரு பெண்ணை அழைத்து வந்தார்கள். வயது 24. ‘பிறந்தது முதல் வலிப்பு வருகிறது. இன்றுவரை நிற்கவில்லை’ என்றார்கள். தொடர்ந்து அலோபதி மருந்து எடுத்துக் கொண்டதால்தான் கண்ட்ரோலில் இருக்கிறது என்றார்கள்.
நான் உடனே சென்னை விஜயா மருத்துவ மனைக்கு அனுப்பி 6-7-94 அன்று Brain CT scan பண்ணச் சொன்னேன். SUGGESTIVE OF MULTIPLE CHRONIC GRANULAMATOUS LESSIONS. FOR FOLLOWUP. - என்று ரிப்போர்ட் வந்தது. நான் நோயாளியை பரிசோதித்தேன். கேள்விகள் கேட்டேன். அவரைப் பற்றி சொல்லும்படி கேட்டேன்.
என்ன கேள்விகள் கேட்டாலும் ஒரு விஷயத்தை டாக்டர்கள் நினைவில் கொள்ளு வோம். ஒருவர் ஒரு நோயால் தாக்கப்பட்டது தெரிந்தால் அதற்கு முன்பாக அவருக்கு என்ன என்ன நோய்கள் வந்தது, அவருக்கு வாழ்க்கையில் ஏதாவது முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததா என்று கேட்பது வழக்கம்.
அந்த பெண் பிறந்தது முதல் வலிப்பு வருகிறது என்று சொன்னதால் அந்த பெண் பிறப்பதற்கு முன்பாகவே ஏதோ பிரச்சனை என்று தீர்மானித்தேன். அந்தப் பெண்ணை விடுத்து அவர் அம்மா விடம் கேட்டேன். அப்படி எதுவும் பிரச்சனை இல்லை. இந்தப் பெண்கூட நார்மலாகத்தான் பிறந்தாள் என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் கர்ப்பமாக இருந்தபோது உங்கள் குடும்பத்தில் ஏதாவது அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்ததா என்று கேட்டேன். அவர் சொன்ன விஷயம்தான் நான் அந்தப் பெண்ணை குணப்படுத்த உதவியாக இருந்தது.
இவள் என் வயிற்றில் ஆறுமாத குழந்தை யாக இருந்தபோது திடீரென்று என் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு முன்பாக இரண்டு பெண் குழந்தைகள். ஏழ்மையான குடும்பச் சூழலில் இருந்த நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலைதான் அதிர்ச்சியாக இருந்தது என்றார்.
உண்மையில் அந்த அதிர்ச்சிதான் அந்த அம்மாவின் வயிற்றில் இருந்த குழந்தையைத் தாக்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
உடனே ஹோமியோபதியில் சரியான மருந்தை கொடுத்தேன். மூன்றே மாதத்தில் அந்தப் பெண் நார்மலாகிவிட்டார். அந்த மூன்று மாதத் தில் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அவள் சாப்பிட்டு வந்த பங்ஞ்ழ்ங்ற்ர்ப் மருந்தை (இதை நன்கு அனுபவம் வாய்ந்த டாக்டர்களின் அனுமதி இன்றி குறைத்தால் வலிப்பு மீண்டும் வந்துவிடும்) அவருடைய அலோபதி டாக்டரின் ஆலோசனை யின்படி குறைத்து நிறுத்திவிடச் சொன்னேன். தற்போது இன்றுவரை வலிப்பு வரவில்லை. அவர் திருமணம் ஆகி குழந்தை பிறந்து நன்றாக இருக்கிறார்.
மேற்சொன்ன உண்மை சம்பவத்தில் இருந்து நாங்கள் எப்படி நோயினை அதன் காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கிறோம் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
அதே மாதிரிதான் ஆஸ்துமாவிற்கும். உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். பெரும்பாலான ஆஸ்துமா நோயாளி களுக்கு அவர்கள் சின்னக் குழந்தைகளாக இருந்த போது உடம்பில் வந்த சிரங்கை ஆயிண்ட் மெண்ட் போட்டு குணப் படுத்தியிருப்பார்கள். அது சரியாகி அதன்பிறகு ஒரு வருடமோ இரண்டு வருடமோ கழித்துதான் wheezing ஆரம்பமாகி இருக்கும்.
இதை பொதுவாக அலோபதி டாக்டர்கள் ஒத்துக் கொள்வதில்லை. எதை சொன்னாலும் ஆதாரப்பூர்வமாக சொல்லவேண்டும். இது science என்பதால் ஹேஷ்யங்களுக்கு இடம் இல்லை. சிரங்கு வந்து அதை ஆயிண்ட்மெண்ட் போட்டு suppress பண்ணினதால்தான் wheezing வந்தது என்றால் அதற்கு ஆதாரம் என்ன என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும்.
சிரங்கு வந்து அதன் மூலமாக வெளியேறும் துர்நீரை வெளியேறவிடாமல் ஆஸ்துமா ஏற்பட்டால் அதற்கு Asthma from suppressed eruption எனலாம். அந்த மாதிரி நோயாளிகளுக்கு ஆஸ்துமாவிற்கு சிகிச்சை கொடுத்தால் மீண்டும் அதே மாதிரி சிரங்கு உடம்பில் வருகிறது. அதன் வழியாக கெட்ட நீரெல்லாம் உடம்பில் இருந்து வெளியேறியவுடன் wheezing குறைந்து பிறகு நார்மலாகிவிடும்.
அப்படி உடம்பில் சிரங்கு ஏற்பட்ட உடன் அதை உடனே ஆயிண்ட் மெண்ட் போடாமல் நீரை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். இதற்கு கடுக்காயும், மஞ்சளும் அரைத்துப் போட்டால் போதுமானது. கடுக்காய் நீரை வெளியே எடுக்கும் அதே சமயத்தில் மஞ்சள் கிருமிநாசினியாக செயல்படும். புண்ணை ஆற்றும்.
சிலருக்கு சின்ன வயதில் வந்த சிரங்கு பற்றி நினைவு இருக்காது. நாம் மருந்து கொடுக்க ஆஸ்துமா குறைய, சிரங்கு வந்தவுடன் அடடே டாக்டர் சொன்னது சரிதான். இவனுக்கு ஏழு வயதானபோது இப்படியேதான் சிரங்கு வந்தது என்று ஆச்சர்யப்பட்டவர்கள் பலர். சென்னையை சேர்ந்த ஷேர் புரோக்கர் ஒருவர் விஷயத்தில் அதேமாதிரி ஆகி அவர் குடும்பத்தினர் அனை வரும் என்னிடம் வந்து நன்றி சொல்லிவிட்டுப் போனார்கள்.
கடந்த பல வருடங்களாக நான் முற்றிலும் குணப்படுத்திய நோயாளிகள் அநேகம் பேர் அவர்கள் எனக்கு கொடுத்த கடிதத்தில் ஒரு சிலவற்றை பின்வரும் பக்கங்களில் பார்க்கலாம். எனவே, ஆஸ்துமா என்பது நிச்சயம் குணப்படுத்தக்கூடிய நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.