மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவை! மனித உயிர்களை மூலதனமாக்கி மருத்துவத்தை வியாபாரமாக்கும் வித்தையைத்தான் நம்முடைய அரசுகளும் பல மருத்துவர்களும் செய்துவருகிறார்கள். அதனால்தான் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான தொழுநோய் பற்றி கண்டுகொள்ளாமல், வெறுமனே 864 பேரை மட்டுமே பாதிக்கும் (உயிரிழப்பு அல்ல!)

       போலியோவுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள். மத்திய பட்ஜெட்டில் எய்ட்ஸ், போலியோ போன்ற நோய்களை கட்டுப்படுத்த சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 53 லட்சத்திலிருந்து 25 லட்சத்திற்கு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் பட்சத்தில் எதற்காக சென்ற ஆண்டைவிட அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்? அரசு தந்திருக்கும் கணக்கின்படி பார்த்தாலும் எப்படி ஒரு வருடத்தில் லட்சக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்? அத்தனை பேரும் இறந்திருக்க வேண்டும் அல்லது தவறான புள்ளிவிவரம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

       போலியோவில் நடந்தது போல் தான் எய்ட்ஸிலும், எய்ட்ஸ் தடுப்புக்காக பரிந்துரைக்கப்படும் சிரிஞ்ச், காண்டம், இரத்தப் பரிசோதனை போன்றவற்றால் பயனடையும் மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மீதும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள் மீதும் அரசுகளுக்கு உள்ள கரிசனமே அதிக நிதி ஒதுக்கீட்டுக் காரணம்.

       நீதிமன்றங்களும் கூட இதே வழியில் சிந்திக்கிறது. தைராய்டு வருவதாக சொல்லி, அயோடின் கலக்காத சாதாரண உப்பை தடை செய்ய உத்தரவு போடுகிறது நீதிமன்றம். கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோயை உண்டாக்கும் பீடி, சிகரெட், மதுபானங்களை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் உத்தரவு போடுவதில்லை-?

       மது, சிகரெட் பாக்கெட்டுகளின் மேல் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்பட்டிருப்பதுபோல, அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளின் மீதும் எச்சரிக்கை வாசகம் அச்சடித்து விற்க அனுமதித்திருக்கலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. அயோடின் கலந்த உப்புக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் பலனடைவதைத்தான் அரசு விரும்புகிறது.

       உலகில் சத்துக் குறைவால் பாதிக்கப்படும் நான்கில் மூன்று பெண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரசவத்தின் போது தாயும் குழந்தையும் உயிரிழப்பது அதிகமாக நிகழ்கிறது. இரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களும் இநதியாவில்தான் அதிகம்! இரண்டரை கோடி பெண்கள் கர்ப்பபையில் தோன்றும் ஃபைபிராய்டு கட்டிகளால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் பெண்களுக்கான திட்டங்கள் அரசுகளால் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளன.

       பட்ஜெட்டில் 2 சதவீதத்துக்குள்தான் மருத்துவநிதி ஒதுக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச நிதியான 5 சதவீதத்தைக் கூட எட்டவில்லை.

       வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் வருடந்தோறும் பலியாகிறார்கள். போலியோ உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்க முடியும். மருத்துவ விஞ்ஞானிகள் மூளையை குழப்பி கண்டு பிடித்த வாயில் நுழையாத மருந்துகளால் அல்ல. பாதுகாக்கப்பட்ட தண்ணீரால்!

Pin It