கீற்றில் தேட...

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது திருமணம் என்பார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால்தான் இப்படி கூறுவதுண்டு. முதிர்ச்சிப்பருவம் என்கிற வாலிபம் தாண்டிய பருவத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது திருமண பொருத்தம். இன்றைய வாழ்வின் லட்சியங்கள் என்பது - படிப்பது - வேலை செய்வது - திருமணம் செய்துகொள்வது - இருப்பிடத்தை அமைத்துக்கொள்வது என சுருங்கிவிட்டது. சாதனைகள் படைக்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சமாகவே மாறிவிட்டது. காரணம் என்னவெனில் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதி லேயே நாம் காலத்தை அதிகமாக செலவிட்டு விடுகிறோம். திருணம் இணக்கமானதாக அமையாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகிவிடும். இது கலாச்சாரம் - பண்பாடு ஆகியவற்றால் மாறு படுகிறது. விவாகரத்து செய்து கொண்ட பெண், நமது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவராக கருதப்படுகிறார். ஆனால் சமோவா தீவினர்களில் இது ஒரு உயர்நிலை தன்மையாகவே கருதப் பட்டு வருகிறது.

காவியக்காதல், உறவு முறை காதல், பாலு ணர்வு தூண்டல்களின் புனித மார்க்கம் இவையனைத்தும் இணைந்த ஒன்றே திருமணம். நட்பு, கூட்டுணர்வு, பாலியல் கவர்ச்சி ஆகிய வற்றின் இணைப்பே திருமணம். மாற்றுப் பாலருடன் கொண்ட நெருக்கமான நட்பின் விளைவாக மலர்ந்திடும் காதலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒருவருடன் கொள்ளும் உறவே திருமணம். திருமணமானவர்களே, திருமணமாகாதவர் களைவிட அதிக மகிழ்ச்சி உடையவர்களாக இருக்கின்றனர். மணமான நிலை, தனித்திருப்பதை விடஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்க செய்கிறது.

இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து கொள்ளவே விரும்புகின்றனர். பெண்கள் வேலைக்குச் செல்வதைவிட திருமணம் செய்து கொள்ளவே பொதுவாக விரும்புகின்றனர். முதியவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை நாட்களையே - மனைவி யோடு அல்லது கண வோடு வாழ்ந்த நாட்க ளையே மகிழ்ச்சியான காலமாகக் கருதுகின்றனர். திருமணத்தில் வெற்றி கண்டவருக்கும், திருமணத்தில் கசப் பினை அனுபவித்தவர் களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உளவியல் சோதனைகள் மூலம் அறிந்தோம். நட்பிற்கு தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங் கள், நோக்கங்கள் ஆகிய வை திருமண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங்கு கின்றன. மேலும் இவர் கள் பொழுதுபோக்க, மதநம்பிக்கை, பழக்க வழக்கங்கள் பழமையை பேணுவது, வாழ்வின் தத்துவங்கள், நண்பர்கள், குழந்தைகளை பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து-இணக்கம் உடையவர் களாக இருப்பதை காண்கிறோம்.

மகிழ்வற்ற மணவாழ்க்கை கொண்டவர் களிடம் மிகுந்த வேற்றுமைகள் காணப்படுகின்றன. பெண்களிடம் உள்ள ஆர்வங்கள், பாலின்பம் பெறுவது பற்றிய எண்ணங்கள், ஆசைகள் வேறுபட்டிருப்பதே குடும்பம் முரண்பட்டிருக்க காரணங்களாக உள்ளன.

பொருளாதார நோக்கங்கள்

மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகமான பங்கு பெறுவதில்லை என்றும் கடன்பட்ட நிலையிலும், வேலையில்லாத திண்டாட்ட வேளையிலுமே இவைகள் மணவாழ்வில் சிக்கல்களை மிகுதிப்படுத்துகின்றன. வருவாயை எவ்வாறு செலவிடுவது என்பதில் ஒத்தநோக்கு இல்லாததால் பொருளாதாரப் போராட்டங்கள் மணவாழ்வில் தோன்றுகின்றன. ஒத்த நோக்கு இருக்கும் நிலையில் அவை ஏற்படுவது அரிது. பொருளாதார அளவு நிலையைக் காட்டிலும் ஒழுங்கான நீடித்த அலுவலின் மூலம் வரும் பாதுகாப்பும் நிலைத்த பொருளாதாரத் தன்மையுமே மணவாழ்வின் மகிழ்விற்கு அடிப்படையாக அமைகின்றன.

சொந்த பண்புகள் ஒத்திருக்குமா?

சொந்த பண்புகள் அனைத்தும் ஒருங்கே ஒத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை. தம்பதியினரின் வயது வேறுபாட்டால் மணவாழ்வு பாதிக்கப்படுவதில்லை. அன்றியும் மணவாழ்வு மகிழ்சசியாக இருக்க கணவனின் வயது மனைவியின் வயதைக் காட்டிலும் அதிகமாக இருக்கவேண்டும் என்று கூற ஆதார மில்லை. மணவாழ்வுப் பொருத்தப்பாட்டிற்கு குணநலன்கள் ஒத்திருத்தலே மிக அவசியமாகும்.

பொதுவாக 20 வயதுக்கு முன் மணம் செய்பவர் மணவாழ்வு வெற்றி பெறுதல் அரிது. அதே போல் 30 வயதிற்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதிற்கு மேல் மணம் புரியும் ஆண்களும் நீடித்து மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்ற மணமுறிவு பற்றிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே, மணவாழ்வின் வெற்றிக்கு ஒர் குறிப் பிட்ட வயது சிறப்பாக கருதப்படுகிறது. அதற்கு மனவெழுச்சி முதிர்ச் சியே அடிப்படையாக அமைகிறது. விரும்பத் தகாத பண்புகளைப் பெற்ற நிலையிலும் மணவாழ்வு வெற்றி கரமாக விளங்குவ துண்டு. இதற்குத் தம்ப தியினர் இருவருமே அத்தகைய பண்புகளைப் பெற்றிருத்தலே அடிப்படைக் காரணம் ஆகும்.

மகிழ்ச்சிக்கு வேண்டிய குடும்பப் பின்னணி :

மண வாழ்க்கையில் வெற்றி தோல்வி இவைகளுக்கு அடிப்படையாக மகிழ்ச்சி நிலை அமைகிறது. மணவாழ்வில் வெற்றி காண்போரின் பெற்றோரும் மணவாழ்வில் மகிழ்வானவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களிடம் தங்கள் பெற்றோரிடம் அதிக ஒட்டுதல் காணப்படுகின்றது. இவர்களுக்கும் பெற்றோர்க்கும் இடையே சிக்கல்கள் காணப்படுவதில்லை. மேலும், தனது தந்தையைப் போன்று தன் கணவன் உடற்கவர்ச்சி யற்று இருப்பதாக கருதும் மனைவியும், தனது மனைவி தன் தாயினைப் போல் உடல்வாகு பெற்றிருக்கவில்லை என்று எண்ணும் கணவனும் மணவாழ்வில அவ்வளவாக மகிழ்ச்சி பெற்று இருப்பதில்லை. இதற்கு மாறாகக் கணவன், மனைவியின் தந்தையைப் போல இருக்கும் இல்லங்களிலும், மனைவி கணவனின் தாயைப் போல இருக்கும் இல்லங்களிலும், மணவாழ்வின் மகிழ்ச்சி நிறைவாகவே விளங்குகிறது. நூறு மணமான ஆண்களையும், 100 மணமான பெண்களையும் பேட்டி கண்டதில் மணவாழ்வில் மகிழ்ச்சியாக விளங்கும் கணவர்கள் தங்கள் தாயிடம் போதிய அளவு அன்பு கொண்டவர் களாக இருப்பதையும், மகிழ்வான மனைவியர் தங்கள் தந்தையிடம் அன்பு கொண்டவர்களாக இருப்பதையும் கண்டுள் ளோம்.

குழந்தைகள் நிறைந்த குடும்பங்களில் பிறந்தவர்கள் மணவாழ்வில் நல்ல இணக்கமான பொருத்தப்பாடு கொண்டிருக்கின்றனர். பெற்றோர்களது மணவாழ்வின் அமைப்பினை ஒட்டியே பிள்ளைகளின் மணவாழ்வின் அமைப்பு பெரும்பாலும் அமைகிறது. மாற்றுப்பால் பெற்றோருடன் ஒருவர் கொள்ளும் உறவு பிற்காலங்களில் காதலில் ஈடுபடுவோரது காதலரைத் தீர்மானிக்கிறது. பெற்றோரது கவனத்தைப் பெறாது மணமுறிவுற்ற குழந்தை மட்டுமே பின்வாழ்வில் தன் பெற்றோரினும் முற்றிலும் மாறுபட்ட வரைக் காதலிக்கிறது. ஒருவர் தன் பெற்றோரு டன் கொண்ட உறவு மட்டும் மணமக்களது வாழ்வை பாதிப்பதில்லை ஒருவர் தன் மாமனார், மாமியார் பற்றிக் கொண்டுள்ள மனப் பான்மைகளும், கருத்துக் களும் ஒருவரது மணவாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது. மண உறவு கொள்ளும் இரு குடும்பங்களும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்ட நிலையிலும் மணவாழ்வு மகிழ்ச்சியாக அமைகிறது.

கணவனும் மனைவியும் ஒத்த கல்வி உடையவர்களாக இருக்கும் நிலையில் மண வாழ்வின் மகிழ்ச்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் நாட்டு வேறுபாடும் மதவேறுபாடுகளும் மிகக் குறைவாக இருந்தால் நல்லது. திருமணத்திற்கு முன்பு கற்பு வழுவாமல் வாழ்ந்தவர்களது மணவாழ்வு மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கண்டிருக்கின் றனர். பாலுணர்வு மிகையாக இருப்பவர்களின் மணவாழ்வு அத்தனை மகிழ்ச்சியாக இருப்ப தில்லை. ஒத்த பாலுணர்வு கொண்ட மண மக்க ளது வாழ்வே மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

கண்டதும் கொண்ட காதல்கள் நீடித்து மகிழ்வான மணவாழ்விற்கு வழி கோலுவதில்லை. நீடித்துத் தொடர்ந்து ஏற்படும் பழக்கங்களால் நீண்டகாலம் தொடரும் தொடர்பே மணவாழ் வினை மகிழ்ச்சிகரமானதாக்குகிறது. விவாதங்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்கச் சமூகப் பணி நிறுவனத்தின் ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகிறது. 9 சதவீதத்தினர் பொறாமையினாலும், 30% ஒழுக்கமின்மையாலும் 41% தூற்றுதலினாலும் தங்கள் மணவாழ்வு முறிந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர். பணம் பற்றிய விஷயங்களை, நாத்தனார், கொழுந்தி, மாமனார், மாமியார், மைத்துனி போன்றோர் பழக்கங்கள் சரியாகக் கவனியாதிருத்தல் கணவரது அல்லது மனைவியின் நண்பர்கள் மற்றும் அவர்களது பழக்க வழக்கங்கள், தரங்கள் போன்றவை தங்கள் மணவாழ்வின் மகிழ்ச்சியை பாதிப்பதாக கூறுவதனை நாம் அவ்வாறே ஏற்பதற்கில்லை. திருமணப் பொருத்தப்பாட்டிற்கு ஏற்ற பக்குவமின் மையையே இவை குறிக்கின்றன என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

நிலையான சூழ்நிலை

விவாகரத்து பொதுவாக ஒவ்வொருவரது பண்பாட்டுப் பின்னணியைப் பொறுத்தே ஏற்படு கிறது. மதச் சடங்குகளுடன் நடைபெற்ற திரும ணங்களில் ஏற்படும் விவாகரத்தைப் போன்று இரு மடங்கு வேறு வகைகளில் நிகழ்ந்த திருமணங் களில் ஏற்படுகிறது. நல்ல முன்மாதிரி யாக விளங் கும் குடும்பத்தினர் வாழும் பகுதிகளில் வாழ்வோ ரது மணவாழ்க்கையே நிலைத்து நீடிப்பதாக அமைகிறது. சிறந்த மண வாழ்க்கைக் கான அடிப் படைக் காரணிகள் பத்து. இவற்றைக் கொண்டே திருமணம் எவ்வாறு அமையும் என தீர்மானிக்கலாம்.

1.     பெற்றோரின் பெருமகிழ்ச்சி.

2.     குழந்தைப் பருவ மகிழ்ச்சி.

3.     தாயுடன் பூசல் இன்மை.

4.     கண்டிப்பான ஆனால் கொடூரமற்ற வீட்டு ஒழுக்கப்பயிற்சி.

5.     தாயுடன் அதிக ஒட்டுதல்.

6.     தந்தையுடன் அதிக ஒட்டுதல்.

7.     தந்தையுடன் பூசல் (இன்மை.

8.     பெற்றோர் பாலியல் பற்றி வெளிப்படையாக இருத்தல்.

9.     குழந்தைப்பருவத்தில் தண்டனைகள் அடிக்கடி அளிக்கப்படாதிருத்தல், தண்டனை      பெறும் நிலையிலும் கடுமையற்ற மென்மையான தண்டனைகளையே பெறுதல்.

10.    திருமணத்திற்கு முன்பு பாலியல் பற்றி வெறுப்போ அருவெருப்போ கொள்ளாத நோக்கினைக் கொண்டிருத்தல் ஆகிய பத்தும் திருமணத்திற்கு மணமூட்டும் மலர்கள்.

- உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர். ஜி.ராஜமோகன்