அதிகாரம் கைக்கு வரத் தொடங்கியதும் கமால் தேச நடைமுறைகளைச் சீர்திருத்துவதில் பெரும் கவனம் செலுத்தினான். “இடைக்கால அறிவு வளர்ச்சி நிலையிலேயே இருக்க நினைக்கும் தேசங்கள் விரைவில் அழிந்து போகும். துருக்கியர்கள் பன்னாட்டு நாகரிகத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்; நாகரிகமுள்ள பன்னாட்டு ஏற்புப்பெற்ற உடைகளை அணிந்துகொள்வதே நமது தேசியப் பெருமிதத்திற்குப் பொருத்தமாயிருக்கும்” என்று தெரிவித்தான் கமால். மக்களும், அலுவலர்களும், படை வீரர்களும் ஐரோப்பிய முறையில் உடையணியச் செய்யப் பெருமுயற்சி எடுத்தான்.

துருக்கியர்கள் தொப்பி அணியலாமே தவிர குல்லாய் அணியக்கூடாது எனத் தடுத்தான். காவல்துறையினர் தெருமுனையில் நின்றுகொண்டு குல்லாயைக் கட்டாயப்படுத்திப் பறிமுதல் செய்தனர். இதனால் ஏற்பட்ட கலகங்களையெல்லாம் தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கினான்.

மேலும் பெண்கள் முக்காடிட்டுக் கொள்வதையும், முகத்தைத் துணியால் மறைத்துக் கொள்வதையும் கருத்துப் பரப்பல் மூலமும், சட்டத்தின் மூலமும் தடை செய்தான்.

கல்வி, துப்புரவு, மருத்துவ வசதி, அரசியல் உரிமை, வேலைவாய்ப்பு உரிமை என எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குரிய அனைத்து வாய்ப்புகளும் பெண்களுக்கும் கிடைக்க ஆவன செய்தான்.

கமால் துருக்கியின் தேசியப் பெருமிதம் உயர்த்தப்பட ஒவ்வொரு சிறுசெயலிலும் கவனம் செலுத்தினான்.

அங்கோரா தேசியப் பாராளுமன்றக் கட்டடத்தின் முகப்பில் அரபி மொழியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகத்தை எடுத்துவிட்டு,

“அரசு மக்களாலேயே நடைபெறுகின்றது” என்று துருக்கி மொழியில் எழுதி வைத்தான்.

உரையாடலின் போது என்னென்ன விதமான மதிப்புச் சொற்கள் வழங்க வேண்டும், செயலில் பிறருக்கு எந்த எந்த முறையில் மதிப்பளிகக வேண்டும், ஒருவரை மற்றவருக்கு எவ்வாறு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும், விடைபெறும்போது என்ன சொல்ல வேண்டும், பெரியோருக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும், சிறியோர் செய்யும் வணக்கத்தைப் பெரியோர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒவ்வொன்றிலும் ஒழுங்குமுறையை வரையறுத்தான் கமால்.

ஒருநாள் என்பது, துருக்கியில் காலை, பொழுது புலர்வதில் தொடக்கம் பெறும் முறை இருந்தது. இதை மாற்றி ஐரோப்பிய முறையில் இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு நாள் தொடங்குவதாக மாற்றம் செய்தான். வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பது ஞாயிற்றுக்கிழமையாக மாற்றம் பெற்றது.

துருக்கியருக்குள் இருந்த வகுப்புப் பிரிவுப் பெயர்களைத் தடை செய்தான். எல்லோரையும் ‘துருக்கியர்’ என்றே அழைக்க விதி ஏற்படுத்தினான்.

திருமணங்கள் நடைபெற வேண்டுமானால் பெற்றோர் ஒப்புதல் மதகுருமார் ஒப்புதல் மட்டும் போதாது. மருத்துவர் பெண்ணுக்கும் ஆணுக்கும் உடல்நலத் தகுதிச் சான்று வழங்க வேண்டும். இந்தச் சான்று பெறாதவர்கள் திருமணத் தகுதி பெறாதவர் ஆயினர்.

ஏராளமான செல்வங்களை முடக்கி வைத்துக் கொண்டு, மக்களின் மூடநம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வந்த எல்லா மத நிறுவனங்களையும் கமால் தடை செய்தான். இவற்றின் சொத்துகளையெல்லாம் பறிமுதல் செய்தான். மதகுருமார்களால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுக் கல்வித்துறை நிறுவனங்களாக மாற்றியமைத்தான்.

“துருக்கி துருக்கியர்களுக்கே” என்பது கமாலின் உயிர் ஆதாரக் கொள்கை. துருக்கியர் அல்லாத கிறித்துவப் பாதிரிமார் நடத்தி வந்த பள்ளிகளுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டான்.

தொடக்கக்கல்வி துருக்கியப் பள்ளிகளில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தினான். அயலார் நடத்தும் பள்ளிகளில் “மதபோதனை கூடாது” என்று சட்டம் செய்தான். அவர்களின் பளளிகள் துருக்கி மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்றும், துருக்கி இனத்தவரை பெரும்பான்மை விழுக்காட்டில் ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்றும் கட்டாய விதிகளைக் கொண்டு வந்தான்.

வணிகக் குழுமங்களில் துருக்கியரின் முதலீடு அதிகமாக இருக்க வேண்டும் எனவும், இயக்குநர்கள் பணியாளர்கள் முதலியவர்களாகவும் துருக்கியர் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் எனவும் சட்டம் செய்தான்.

அனைத்துக் குழுமங்களின் மடல் தொடர்புகள், கணக்கு வைப்புகள் யாவும் துருக்கிய மொழியில்தான் மேற்கொள்ள வேண்டும் எனக் கட்டாய விதி செய்தான் கமால்.

வழக்கறிஞர் தொழில், மருத்துவத் தொழில் போன்ற குறிப்பிட்ட தொழில்களில் அயலவர்க்கு அங்கு இடமே இல்லை.

துருக்கியக் கைத்தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டன. இறக்குமதிப் பொருள்களுக்கு அதிகத் தீர்வை விதிக்கப்பட்டது. துருக்கியப் பொருள்களையே வாங்குமாறு மக்களுக்கு அறிவுத்தப்பட்டது.

நீதித்துறையில் குர் ஆன் அடிப்படைச் சட்டமே நடைமுறையில் இருந்தது. கமால் பொது ஞாயங்களின் அடிப்படையில் ஐரோப்பிய முறையில் சட்ட நெறிமுறைகளை வகுத்து நீதிச் செயல்முறையை மாற்றியமைத்தான். ஏழை மக்கள் அதிகப் பணச் செலவில்லாமல் நீதிமன்றங்களை அணுக வழி ஏற்படுத்தினான்.

கல்வித் துறையின் முன்னேற்றத்தில் கமால் தனிக்கவனம் செலுத்தினான். ஒரு தேசம் அதிகார வலிமைபெறக் கல்வியே தேவை என்பது இவன் கருத்து. நூற்றுக்குப் பத்துப்பேர் கூட எழுதத் தெரியாதவர்களாய் இருந்த சமுதாயத்திற்கு எழுத்தறிவு புகட்ட எளிய வழி யாது எனச் சிந்தித்தான். வலப்பக்கமிருந்து இடப்பக்கமாக எழுதும் அரபி எழுத்து முறையைக் கைவிட்டு இலத்தீன் எழுத்து வடிவத்தைத் துருக்கி மொழிக்குக் கொடுத்தால் கற்பித்தல் எளிமைப்படும் என்று கமால் எண்ணினான். அதற்காகத் திட்டமிட்டு 1928 நவம்பர் 3ஆம் நாளில் தேசியப் பாராளுமன்றத்தில் வரி வடிவ மாற்றுச் சட்டத்தை நிறைவேற்றினான். எதிர்த்தவர்கள் காவல்துறையால் அடக்கப்பட்டனர்.

துருக்கியின் கல்வி முறை தேச நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உடற்பயிற்சிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளையாட்டில் சமவாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. மதக்கல்வி பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. அரபியும் பாரசீகமும் கற்றுத் தரப்பட்டு வந்த நிலை அகற்றப்பட்டது.

புத்தக சாலைகளும, வாசக சாலைகளும் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டன. அறிவு வளர்ச்சிக்காகப் பொருட்காட்சிக் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. தொன்மை வாய்ந்த செயின் சோபியா மசூதி ஓவியக் கலைகள் நிரம்பிய ஒரு பொருட்காட்சியாக மாற்றப்பட்டது. மொழி, இலக்கியம், கலைத் துறைகளில் பெரும் கவனம் செலுத்தப்பட்டது. துருக்கி மொழியில் ஏராளமான அரபிச் சொற்கள் கலந்து இருந்தன. அந்த அரபிச் சொற்களை அகற்றிவிட்டு, பழங்காலத்தில் வழங்கிய தூய இலக்கியத் துருக்கிச் சொற்களே பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. ஊர்ப் பெயர்களும், ஆட்பெயர்களும் துருக்கி மொழியிலேயே மாற்றியமைக்கப்பட்டன.

மதச் சடங்குகளும் தொழுகையும் துருக்கி மொழியில்தான் நடைபெற வேண்டும் என விதி செய்தான் கமால். குர்ஆனைத் துருக்கி மொழியிலேயே மக்கள் படிப்பதற்கு ஏற்பச் சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு ஏற்பாடு செய்தான். ஆட்சித் தலைவனாய் இருந்த கமால் பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று கல்விப் பணியை நேராகக் கண்காணித்து வந்தான்.

சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தான். நல்ல நூல்கள் வெளிவர ஆக்கமும் ஊக்கமும் நல்கினான். மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பேரூக்கமளித்தான்.

சுல்தானின் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு வந்த ஓவியக் கலைக்கும் இசைக் கலைக்கும் புத்துயிர் கொடுத்தான். இதழ்களும் செய்தி ஏடுகளும் சிறப்பாக வெளிவர ஊக்கம் கொடுத்தான்.

விடுதலை பெற்ற துருக்கியில் பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டன. சர்க்கரை, சிமெண்டு, துணி வகைகள், தோல் பொருட்களின் உருவாக்கம் வளர்ச்சியுற்றது. ஆலைகள், இருப்புப் பாதைகள் போடப்பட்டன. வேளாண்மையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. நிலக்கரி, செம்பு, இரும்பு முதலியன தோண்டி எடுக்கும் நிறுவனங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. அஞ்சல், தொலைவரி, தொலைபேசித் துறைகள் மேம்படுத்தப்பட்டன. வான்படை, கடற்படை, தரைப்படை ஆகியவை புதுப்பிக்கப்பட்டன.

செல்வ வளத்தைப் பெருக்குவதற்காகத் துருக்கியை அயலாரிடம் ஒப்படைக்கக் கமால் விரும்பியதில்லை. தொழில் வணிக மேம்பாட்டுக்காக அயலவர்களுக்குச் சலுகைகள் தருவது தேசிய வாழ்வுக்கே பெரும்தீங்காக முடியும் என எண்ணினான் கமால். எனவே ‘துருக்கி துருக்கியருக்கே’ என்ற கருத்தில் ஊன்றி நின்று, கடன் வாங்காமல் துருக்கியின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டான்.

மற்ற நாடுகளின் உரிமைக்குப் பங்கம் ஏற்படக்கூடாதென்பது துருக்கியின் கொள்கை. “நாம் போரை விரும்பவில்லை. நல்லிணக்கத்தையே கோருகிறோம். துருக்கி தன் எல்லைக்குள் முற்ற முழுத் தன்னுரிமையுடன் வாழ வேண்டும் என்பதே நமது விருப்பம்” என்ற தெளிவுபடுத்திய கமால் தனது தேசத்தின் ஆளுமையிலிருந்த மோசூல் நிலப்பரப்பை ஈராக்கிற்கு விட்டுக் கொடுத்துத் துருக்கியின் ஞாய உணர்வை உலகிற்குக் காட்டினான்.

துருக்கி இலக்கியம் சிறந்த உலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்டும் என்பது கமாலின் வேட்கை. இதற்காக அறிவுக் கழகங்களைத் தோற்றுவித்தான். துருக்கி மொழியின் தொன்மை, துருக்கிய வரலாற்றின் பெருமை இவற்றை விளக்கக்கூடிய நூல்களை அறிஞர்களைக் கொண்டு வெளியிடச் செய்தான். இதற்காகத் தன் சொந்தப் பணத்தையும் ஏராளமாகச் செலவழித்தான். தன் இறுதி முறியில், “தனது சொத்தின் ஒரு பாகம் துருக்கி மொழி வரலாற்று சங்கத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும்” என எழுதி வைத்தான்.

கமால் ஒருபோதும் தன் அதிகாரத்தையும் பதவியையும் தன்னலத்திறகாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியே காண வேண்டும் என்பது அவன் கொள்கை. “துருக்கியன் பெருந்தன்மையுள்ளவன்; பெருமிதம் உடையவன்; துருக்கியின் தன்னுரிமை மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்; துருக்கி உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வரை தோல்வியை ஏற்காது” என்று பெருமிதத்தோடு பேசிச் செயல்பட்டவன் கமால்.

1923ஆம் ஆண்டு துருக்கியில் குடியாட்சி ஏற்பட்டபோது கமால் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டான். பின்னர் 1927, 1931, 1935 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும், மக்கள் கமாலையே குடியரசுத் தலைவராக்கினர். நான்காம் முறை கமால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மக்கள் நெகிழ்ந்து போனார்கள். தேச நலனில் அவன் கொண்டிருந்த தூய்மையான ஈடுபாடு ஒன்றுதான் இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு துருக்கியனும் தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினனாகக் கமாலைக் கருதினார்கள்.

கமாலுக்குத் துருக்கி முழுவதும் தன் குடும்பமாயிருந்தது. துருக்கியர் அனைவரையும் இவன் தன் மக்களாகவே கருதினான். தனக்கு மகப்பேறு இல்லாததைப் பற்றி இவன் வருந்தியதில்லை. போரில் வீரமரணம் எய்திய வீரர்களின் குழந்தைகளையெல்லாம் தன் குழந்தைகளாக எடுத்து வளர்த்தான்.

1938இல் கமால் நோய்வாய்ப் பட்டபோது, குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகிக் கொள்ள விரும்புவதாகவும், தகுதியான வேறொருவரைத் தேர்வு செய்து கொள்ளும்படியும் கூறினான். மக்கள் இதற்கு ஒப்பவில்லை. 1938 நவம்பர் 10ஆம் நாள் துருக்கி மக்களெல்லாம் கதறித் துடிக்க, கமால் தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டான்.

“தேச நன்மைக்குத் தேவையானது எது என்பதைக் கவனித்து நாம் கொண்ட இலக்கை நோக்கி நேராக, நேர்மை பிறழாமல் செல்வதில்தான் நமது பெருமை அடங்கியிருக்கிறது.” என்று கூறிய கமால் அவ்வாறே நடந்து தனது பெருமையையும் தனது தேசத்தின் பெருமையையும் நிலைநிறுத்தினான்.

இவனது வரலாறு கூறும் இந்த வரலாற்றிலக்கியம் தமிழ்ச் சமூக நோய்களுக்கான மருந்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவதறியும் அறிவினராயிருந்து இந்த நூலை மறுபதிப்புச் செய்யும் திரு.இராஜாராம் அவர்களின் முயற்சி போற்றுதலுக்குரியது. தமிழகம் விழிப்புறுக!

Pin It