'இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா!' எழுபதுகளில் அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த தேவகாந்த் பருவா தந்த முழக்கம் இது. இப்போதெல்லாம் காங்கிரசுக்காரர்கள் தங்கள் கொடியிலிருந்து இராட்டையை அகற்றி விட்டு சோனியா காந்தியின் தலையைப் போட்டுக் கொள்கிறார்கள். சில நேரம் சோனியா + ராகுல் காந்தி தலைகள் இடம் பெறுகின்றன.

மாமியார் இந்திராவை விஞ்சிய மருமகள் சோனியா, கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதில்! ஆனால் ஊழல் நெடுங்கணக்கு இந்திராவுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்திராவின் கணவர் பெரோசு காந்தி நாடாளுமன்றத்தில்  அம்பலப்படுத்திய ‘முந்திரா ஊழல்’ கூட நேரு அரசாங்கத்தின் முதல் ஊழலன்று. சரியாகச் சொன்னால், ‘சுதந்திர’ இந்தியாவோடு சேர்ந்தே ஊழலும் பிறந்து விட்டது. இந்தியா ‘வளர வளர’ ஊழல் வளர்ந்தது. ஊழல் வளர வளர ‘இந்தியா வளர்ந்தது’. பார்க்கப் போனால், எது ‘இந்தியாவின் வளர்ச்சி’ என்று ஆளும் கும்பல் சொல்கிறதோ அது ‘ஊழலின் வளர்ச்சி’ இல்லாமல் நடந்தே இருக்காது என்பதுதான் உண்மை.

இந்திரா காந்தியின் ‘நகர்வாலா ஊழல்’, சனதா கட்சி ஆண்ட போது ‘சீமென்ஸ் ஊழல்’ இவையெல்லாம் வெளியில் தெரிந்த பனிமலை முகடுகள் மட்டுமே.

இராசீவ் காந்தியின் போபர்சு ஊழலும், அதை மூடி மறைக்க அவர் காலத்திலும் அதற்குப் பிறகும் நடந்த குற்றமுறு முயற்சிகளும் விறுவிறுப்பானதொரு நெடுந்தொடருக்கே கருப்பொருளாகக் கூடும். சோனியா காந்தி தன் ஒரு கையால் இலட்சக்கணக்கான கோடிகளைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளார். மறுகையால் காங்கிரசுக் கட்சியையும் இந்திய அரசையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இந்த இரண்டுக்கும் தொடர்புண்டு. அவர் தன் கொள்ளைகளை மூடி மறைக்க மன்மோகன் சிங் என்ற முகப்படாம் அணிந்துள்ளார். கொள்ளைகளை மட்டுமல்ல, தமிழீழத்திலும் தண்டகாரண்யத்திலும் காசுமீரத்திலும் நிகழ்த்தியது, நிகழ்த்தி வருவது போன்ற கொலைகளையும் மறைத்துத் தன்னை அமைதித் தேவதையாகக் காட்டிக் கொள்ள இந்த முகப்படாம் அவருக்குப் பயன்படுகிறது.

நேரு காலத்திய முந்திரா ஊழலின் மதிப்பே ஒன்றேகால் கோடி ரூபாய்தான். இந்திரா காலத்தில் ஊழல்களில் ஒவ்வொன்றும் வெளியில் தெரிந்தவரை பதிற்றுக்கணக்கான கோடிகளில் இருந்தது. போபர்சு பேரத்தில் இராசீவ் காந்தி கையூட்டாகப் பெற்ற தொகை 139 கோடி. நரசிம்மராவு தலைமையமைச்சராக இருந்த காலத்தில் 1992இல் அர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் 5,000 கோடிக்கு மேல்! கோடி ஒன்று, பத்து, நூறு என்று வளர்ந்து கொண்டிருந்த ஊழல் ஆயிரங்கோடிகளை நோக்கிப் பாய்வதற்குப் ‘புதிய’ பொருளியல் ‘கொள்கை’ (அது கொள்கையன்று, அமைப்பு என்பதே சரி) உந்தி விட்டது. உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் என்பதில் சொல்லப்படாத ஒரு 'மயம' உண்டு. அதுவே ஊழல் மயம்.

இதோ புதிய சாதனை! இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முந்நூற்றெழுபத்தொன்பது (1,76,379) கோடி ரூபாய் ஊழல்! இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம் 2ஜி) ஒதுக்கீட்டில்தான் இவ்வளவு பெரிய ஊழல்!

நாம் பயன்படுத்தும் கைப்பேசிகளைக் கொண்டு பேசுவதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், கணினிகளை இணைப்பதற்கும் பயன்படும் ஒருவகை மின்காந்த அலைதான் அலைக்கற்றை எனப்படுகிறது. இந்த அலைக் கற்றையை இந்திய அரசு (தொலைத் தொடர்புத் துறை) கைப்பேசிக் குழுமங்களுக்கு விற்பனை வழி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதற்கு விலை அல்லது கட்டணமாக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. நாட்டில் கைப்பேசித் தொடர்புகள் வளர வளர இந்த வருமானமும் வளர வேண்டும். 2001ஆம் ஆண்டு குறித்த விலைக்கே 2008ஆம் ஆண்டு அலைக்கற்றை விற்பனை நடைபெற்றால் அதை 'ஊழல்' என்றுதானே சொல்ல முடியும்?

2001ஆம் ஆண்டு கைப்பேசி வைத்திருந்தவர்கள் தொகை வெறும் 30 இலட்சம். 2003ஆம் ஆண்டு 1 கோடியே 30 இலட்சம். 2008ஆம் ஆண்டு 18 கோடி. ஏழாண்டு காலத்தில் 60 மடங்கு பெருக்கம்! ஆனால் 2001இல் விற்ற விலைக்கே 2008இலும் விற்றதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1,76,379 கோடி என்பது இந்தியாவின் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் தந்துள்ள கணக்கு.

இந்த ஊழல் தூண்டிலின் முனைமுள் இந்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா என்பதால் இது 'இராசா ஊழலா'கவே பெயர் பெற்று விட்டது. இந்த முறைகேட்டால் பல இலட்சம் கோடி ஆதாயம் பெற்ற பெருங்குழும முதலாளிகள் பல ஆயிரம் கோடிகளை இலஞ்சப் பணமாகக் கொடுத்திருக்க வேண்டும். அந்தப் பல ஆயிரம் கோடிகளில் சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் முதற்பங்கு போயிருக்க வேண்டும். இரண்டாம் பங்கு கருணாநிதிக்கு வந்திருக்க வேண்டும். இல்லையேல் இராசா இவ்வளவு காலம் துணிச்சலாகத் தூயர் வேடம் கட்டியிருக்க முடியாது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு உசாவலைப் பிடிவாதமாக எதிர்த்து வரும் காங்கிரசு - திமுக கொள்ளைக் கூட்டணி ஏட்டிக்குப் போட்டியாக பாசக ஆட்சிக் கால ஊழல்களை அம்பலப்படுத்துவது நன்றே! ஊழல் கூட்டம் இரண்டுபட்டால் மக்களுக்குக் கொண்டாட்டம்தான்! காங்கிரசு, பாசக, திமுக, அதிமுக… இந்தக் கட்சிகள் எல்லாம் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதை மக்கள் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

குப்பையைக் கிளறக் கிளறப் புதிய புதிய மண்டை ஓடுகள் வெளியே வருகின்றன. இந்திய அரசில் யாருக்கு அமைச்சர் பதவி, எந்த அமைச்சருக்கு என்ன துறை, எந்தத் துறைக்கு என்ன விலை என்பதையெல்லாம் அம்பானி, டாட்டா போன்ற இந்தியப் பெருமுதலாளிகள் எப்படித் தீர்வு செய்கிறார்கள் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும் தொலைபேசி உரையாடல்கள் அம்பலப்பட்டுள்ளன. உரையாடிய யாரும் இதை மறுக்கவில்லை. தயாநிதி மாறன் தன் பாட்டி தயாளு அம்மாளுக்கு 600 கோடி கொடுத்து இந்திய அரசில் துணித் துறை அமைச்சர் பதவியை ‘வாங்கினார்’ என்ற ஒரு செய்தி போதும் கருணாநிதி குடும்பத்தின் வண்டவளாத்தைக் காட்ட! மாவீரன் முத்துக்குமார் தன் இறுதி மடலில் இவரைப் பற்றி எழுதியதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

முதலாளி வர்க்கத்தையும் முதலாளிய அரசையும் கண்ணுக்குத் தெரியாத பல நூறு இழைகள் பிணைப்பதாக பிரெடெரிக் எங்கெல்சு சொல்வார். இவற்றில் மிக முக்கியமானது ஊழல். இப்போது அது அப்பட்டமாகத் தெரியும் இழையாகி விட்டது. முதலாளிய அரசுப் பொறியைச் சரளமாக இயங்கச் செய்யும் மசகு எண்ணெய் என்ற நிலையிலிருந்து ஊழலே அப்பொறியின் எரிபொருளாகி விட்டது. அரசியல்வாதிகள் முதலாளிகளின் கைக்கருவிகளாக இருந்த நிலை போய், தாமே முதலாளிகளாகி விட்டார்கள். முரசொலி மாறன் குடும்பமே இதற்குச் சான்று. அதே போல் முதலாளிகளே நேரடியாக அரசியலில் தலையிடுவதையும் பார்க்க முடிகிறது. அலைக் கற்றை ஊழலில் ஆதாயம் பெற்ற டாடா குழுமத்தின் இரத்தன் டாட்டா எதிர்க்கட்சிகளை ஆவேசமாகச் சாடுகிறார். கர்நாடகத்தில் விசய் மல்லையா மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முன்னாள் (மூன்றாம் அணி) தலைமையமைச்சர் தேவகவுடா மற்றும் புதல்வர் நடத்தும் அரசியல் குழுமத்திடம் விலைக்கு வாங்கிக் கொள்கிறார்.

'ஊழல் இந்தியா'வில் மைய அரசு மாநில அரசு என்ற வேறுபாடில்லை. மதவாதக் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்ற வேறுபாடில்லை. வலதுசாரி - இடதுசாரி என்ற வேறுபாடில்லை. முதற் பங்காளிகள் - இடைப் பங்காளிகள் - கடைப் பங்காளிகள் என்ற வேறுபாடு உண்டு. இப்போதே ஊழல் செய்ய வாய்ப்புப் பெற்றவர்கள் - எதிர்கால வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்ற வேறுபாடு உண்டு. மற்றபடி எல்லாம் ஒன்று.

காலவட்ட முறையிலான தேர்தல் முறை தான் இந்திய சனநாயகத்தின் பேரடையாளமாகக் காட்டப்படுகிறது. அதே தேர்தல் முறை ஊழல் என்னும் நச்சு மரம் ஓங்கி வளர உரமாவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் பேர்வழிகளைத் தேர்தலில் தோற்கடிப்பது என்பது நெய்யூற்றித் தீயணைக்கும் முயற்சியே தவிர வேறன்று. ஏனென்றால் ஊழல் செய்யாமல் தேர்தலில் வெற்றி என்பது முயற்கொம்பே.

மக்கள் விழிப்புற்றெழுந்து ஊழல் பேர்வழிகளைத் துரத்தித் துரத்தி அடிக்கும் படியான புரட்சி நடைபெற வேண்டும். ஓடப்பர் உதையரப் பராகாமல் ஊழலப்பர் ஒழியப்பர் ஆக மாட்டார்.

 ஊரையடித்து உலையில் போடும் ஊழல்காரன் எவனாயினும் ஃ எவளாயினும் அவனைஃஅவளை வெறுத்து ஒதுக்கும் மனநிலையை மக்களிடம் வளர்ப்பது சனநாயக ஆற்றல்களின் கடமையாகும்.

இராசா தலித்து என்பதால் அவர் ஊழல் செய்தால் கண்டு கொள்ளக் கூடாது, கருணாநிதி 'தமிழினத் தலைவர்' என்பதால் அவரது குடும்பக் கொள்ளையை மறந்து விட வேண்டும் என்று ஒரு சிலர் கிளம்பியுள்ளனர். குற்றவாளிகளில் பார்ப்பனன், சூத்திரன் என்று பாகுபடுத்திப் பார்க்கும் மனுதர்ம ஒறுத்தலியலின் மறுபதிப்பே இந்தப் பார்வை! இவர்களும் பார்ப்பன எதிர்ப்புப் போர்த்திய பார்ப்பனியர்களே!

இராசா தலித்துதான்! கருணாநிதி சூத்திரர்தான்! ஆனால் இந்தத் தலித்தும் இந்தச் சூத்திரரும் பல்லக்கில் தூக்கி வரும் நேரு குடும்பம் ஆரியப் பார்ப்பனக் குடும்பம் அல்லவா? சோனியா காந்தி ஆரியச் சிறுக்கி அல்லவா? முசோலினி வழிவந்த இத்தாலியக் கொலைகாரி அல்லவா? தலித்துக்கும் சூத்திரருக்கும் வக்காலத்து வாங்கப் போய் ஆரியப் பார்ப்பன நேரு குடும்பத்துக்கும் தமிழினத்தைக் கொன்று குவித்த வஞ்சகிக்கும் அல்லவா அரண் அமைத்துக் கொடுக்கிறீர்கள்?

சென்னையில் தமிழ் ஊடகப் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி “இது ஆ.இராசா பிரச்சினை அல்ல, ஆரியர்-திராவிடர் பிரச்னை” என்கிறார். ஆ.இராசாவையும் அவருடைய தலைவர் கருணாநிதியையும் திராவிடர்களாக அவர் கருதுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சோனியா யார்? திராவிடரா, ஆரியரா? ஆரிய சோனியாவின் ஊழலை அம்பலமாக்கும்படி திராவிட இராசாவையும் திராவிடக் கருணாநிதியையும் வீரமணி கேட்பாரா? இது கிடக்கட்டும். செயலலிதா ஊழல் முறைகேடுகளில் சிக்கியபோது இதே ஆரிய திராவிட முரணை வீரமணியார் சுட்டியதுண்டா?

பேராசிரியர் சுப.வீ. கேட்கிறார்: “தொலைத் தொடர்பு திட்டங்கள், கொள்கைகளை யார் வகுப்பது? ஒரு மத்திய அமைச்சரால் மட்டும் வகுத்து விட முடியுமா?... ஏலம் விட வேண்டாம், முதலில் வருபவர்களுக்கு முதல் முன்னுரிமை என்று முடிவெடுத்தனர். இந்தக் கொள்கையை இராசா வகுத்தாரா?... இராசாவுக்கு முன்பிருந்த தயாநிதி மாறன், அருண் ஷோரி, பிரமோத் மகாஜன் எல்லோரையும் கேட்க வேண்டாமா?”

சரியான கேள்வி! இதன் சரியான பொருள்: இராசா மட்டும்தானா ஊழல் செய்தார்? மைய அமைச்சரவையே ஊழல் செய்திருக்கும்போது ஓர் அமைச்சரை மட்டும் குற்றஞ்சாட்டுவது எப்படி? இந்தத் துறையின் முந்தைய அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள். இராசாவும் செய்தார், அவ்வளவுதான்! சரி, சுபவீ அவர்களே, இராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர வேண்டியதுதானே! மற்றத் திருடர்கள் தப்பி விட்டதால் இராசாவையும் தப்பவிடச் சொல்வது என்ன நியாயம்?

இராசா தலித்து என்றால் தன் பதவியைக் கொண்டு தலித்துகளுக்காக என்ன செய்தார்? இந்திய அரசே பார்ப்பன பனியா ஆட்சியாக இருக்கும் போது அவர் மட்டும் என்ன செய்து விட முடியும்? வேறொன்றும் செய்ய முடியாது என்பதால் தன் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஏவியபடி ஊழல் செய்திருக்கிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து அவரது ஊழலுக்குச் சப்பை கட்டுவதுதான் சமூக நீதியா? பெரியாரையும் அம்பேத்கரையும் கரைத்துக் குடித்தவராக, அவர்களின் போராட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசத் தெரிந்தவராக ஒருவர் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் ஊழல் செய்வதை நியாயப்படுத்த வேண்டும் என்பதில்லை.

பார்ப்பன பனியா அரசதிகாரத்துக்கு உட்பட்ட பதவி அரசியலில் மூழ்கி அதனால் திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்ட சீரழிவின் குறியீடே இராசாவின் அலைக்கற்றை ஊழல் எனலாம். தமிழ்த் தேசியத்திலும் சமூக நீதியிலும் உண்மையிலேயே நாட்டம் கொண்ட ஆற்றல்கள் போராட்ட அரசியலில் ஊன்றி நிற்க வேண்டுமே தவிர, பதவி அரசியலில் மயங்கி விடக் கூடாது என்பதற்கு இது ஓர் எச்சரிக்கைப் பாடம்.

“ஓர் ஆளும் வர்க்கம் ஆளப்படும் மக்களிடையிலிருந்து தனிப்பட்ட திறனாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துத் தனக்கான சேவையில் எந்த அளவுக்கு ஈடுபடுத்துகிறதோ அந்த அளவுக்கு வலிமை பெறுகிறது, எனவே அந்த அளவுக்கு ஆபத்தானதாகிறது” என்பார் கார்ல் மார்க்ஸ்.

ஒடுக்கும் அரசு ஒடுக்கப்பட்ட மக்களிடையிலிருந்து ஒரு சிலரை உள்வாங்கித் தனக்கான சேவையில் ஈடுபடுத்துவதை வைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிட்டதாக மயங்குவது, அதையே பெரிய சாதனை என்று போற்றுவது, அப்பட்டமான ஊழல் கொள்ளையை நியாயப்படுத்துமளவிற்குப் போவது… இதற்குப் பெயர்தான் திராவிடர் அரசியலா? தலித் அரசியலா?

இந்தியக் கட்டமைப்புதான் ஊழல் அரசியலுக்கு அடிப்படை என்பதால் இந்தியத் தேசியத்துக்கு எதிரான போராட்டத்தினூடாகத்தான் ஊழலை ஒழிக்க முடியும். தமிழ்த் தேசியக் குடியரசில் முழுமையான மக்களாட்சியும் முழுமையான மக்கள் - விழிப்பும் ஊழல் முளை விடாமல் பார்த்துக் கொள்ளும்.

Pin It