அழகொளிர் காசுமீரத் தேசத்தின் மேனியெங்கும் குருதி பூத்துக் கிடக்கிறது. நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வரும் காசுமீரத்து மக்களின் பேரெழுச்சிக்கு இந்திய அரசும் அதன் முகமையாகிய சம்மு-காசுமீர் மாநில அரசும் துப்பாக்கிக் குண்டுகளாலேயே விடையளித்துள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிறுவர் சிறுமியருமாக இதுவரை கொல்லப்பட்டவர்களின் தொகை 105 என்;பது அரசின் கணக்கு. உண்மைத் தொகை இதைப் போல் பல மடங்கு இருக்கும் என்பதை எளிதில் உய்த்துணரலாம். காயமுற்றவர்களால் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன. ஆயிரக் கணக்கானவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்த அடக்குமுறைக்கும் பணியாது விடுதலைக்காகப் போராடும் காசுமீரத்து மக்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள். அடக்குமுறையால் சிதையுண்டு மீண்டெழுந்து போராடத் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மக்களினத்திற்கும் காசுமீரத்துப் போராட்டம் ஒரு கலங்கரை விளக்கம்.

       அடக்குமுறைக்குப் பணியாத காசுமீரத்து மக்களை ஆசை வார்த்தைகளால் மயக்கும் முயற்சியில் இந்திய வல்லாதிக்கம் இப்போது ஈடுபட்டுள்ளது. காசுமீரத்துக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று சென்றது. இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் திராவிடவாதிகளாகவும் பல்வேறு பெயர்களில் இந்திய வல்லாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்தினர் சிறிநகர் சென்றனர். அவர்களது இந்தியவாதம் எதுவும் காசுமீரிகளிடம் கிஞ்சிற்றும் எடுபடவில்லை. மக்கள் அனைவரும் விடுதலைக் குறிக்கோளில் உறுதியாகவும், இந்திய அரசின் கொலைகார அடக்குமுறை குறித்து சீற்றங்கொண்டும் இருப்பதை அவர்கள் கண்டு திரும்பினர்.

       இந்தக் குழுவினர் இந்திய அரசிடம் அறிக்கையளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசு எட்டுக் கூறுகள் கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முதலாவதாக, காசுமீரிகளிடம் பேச்சு நடத்துவதற்காக ஒரு பிரமுகர் குழு அமைக்கப்படுமாம். இரண்டாவதாக, கடந்த நான்கு மாத காலத்தில் தளைப்படுத்தப்பட்ட இளைஞர்களையும் மாணவர்களையும் விடுதலை செய்யுமாறும், வழக்குகளை விலக்கிக் கொள்ளுமாறும் மாநில அரசை இந்திய அரசு வலியுறுத்துமாம். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தளைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து மறுஆய்வு செய்யப்படுமாம். மைய அரசுப் படைகளைப் பணியில் ஈடுபடுத்துவது, மையக் காவல் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, கலவரப் பகுதி ஆணையை மறுஆய்வு செய்வது ஆகியவை குறித்து மைய அரசு மாநில அரசுடன் பேச்சு நடத்துமாம். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 இலட்சம் வீதம் உதவிநிதி வழங்கப்படுமாம். சம்மு, லடாக் வட்டாரங்களுக்குத் தனித்தனிச் சிறப்புப் பணிக்குழுக்கள் அமைத்து, வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுமாம். மூடப்;பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்படுமாம். கல்வி தொடர்பான அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதல் சிறப்பு உதவியாக மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படுமாம்.

       காசுமீரத்து மக்களைப் பார்த்து இப்படியொரு திட்டத்தைச் சொல்வதற்குத் தில்லி ஆட்சியாளர்கள் ஒன்றும் தெரியாத மூடர்களாகவோ எல்லாம் தெரிந்த ஏமாற்றுப் பேர்வழிகளாகவோதான் இருக்க வேண்டும். ஏனென்றால் காசுமீரத்து மக்கள் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளுக்கோ உடனடிக் கோரிக்கைகளுக்கோ இந்தத் தீர்வுத் திட்டம் விடை சொல்லவே இல்லை. அவற்றை அறவே கண்டுகொள்ள மறுக்கும் அரச அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

       காசுமீரத் தேசத்தில் ஒரு பகுதியை இந்தியாவும், மறு பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றி வைத்துள்ளன. இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதே அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் காசுமீரத்து மக்களின் ஒற்றைக் குறிக்கோள். இதற்காக அவர்கள் எல்லா வகையிலும் எல்லா வடிவத்திலும் போராடியிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசும், அதன் ஊதுகுழல்களும் காசுமீரம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

       இந்தியாவுடன் இருப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனிநாடு என்ற பழைய தகுநிலையை மீட்டுக் கொள்வதா என்ற சிக்கலுக்கு முடிவு காணும் தன்-தீர்வுரிமை காசுமீரத் தேசத்தின் பிறப்புரிமையாகும். காசுமீரம் இந்தியாவுடனேயே இருக்க வேண்டும், அதுதான் நல்லது எனக் கருதுவோர் அதைக் காசுமீர மக்களிடமே எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு எந்தத் தடையுமில்லை. அதை விடுத்துப் படைவலிமையைக் கொண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் காசுமீரத்தைக் கட்டாயப்படுத்திக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது எவ்வகையான சனநாயகம்? காசுமீரத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவையிலும், சிறிநகரத்துச் செஞ்சதுக்கத்தில் பண்டித நேரு ஆற்றிய உரையிலும் அளித்த வாக்குறுதிகள் என்னாயின? 'காசுமீரை இழக்க மாட்டோம், இழக்கவே மாட்டோம்' என்று மன நோயாளிகளைப் போல் வெறிக்கூச்சல் போடுவதால் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்;து விட முடியும் என்று இந்தியவாதிகள் நினைக்கிறார்கள்.

       காசுமீரத்து மக்களில் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பதை நடுநிலை நோக்கர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். காசுமீர மக்களில் பெரும்பான்மையினர் விடுதலை கோருகின்றனர் என்பதை இந்திய அரசாலோ, அதன் இடதுசாரி வலதுசாரிச் சாமரங்களாலோ கூட மறுக்கவியலாது. பெரும்பான்மை மக்கள் விரும்பினாலும் விட்டுவிட முடியாது என்பதே இவர்களின் பிடிவாதமான நிலைப்பாடு. அப்படியானால் 1974-75இல் சிக்கிமை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது சொல்லப்பட்ட நியாயம் காசுமீரத்துக்குப் பொருந்தாதா? அப்போது என்ன சொன்னார்கள்? சோகியால் அரச வம்ச ஆட்சியில் சிக்கிம் தனிநாடாகத் திகழ்ந்தது. மன்னராட்சிக்கு எதிராக மக்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடினார்கள். அங்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாய் இருப்பதைப் பயன்படுத்தி 1974இல் அதனை இந்தியாவின் இணை மாநிலம் ஆக்கினார்கள். அடுத்த ஆண்டே முழு மாநிலம் ஆக்கி விட்டார்கள். சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பியதாகவே வைத்துக் கொள்வோம். அந்த விருப்பத்தின் அடிப்படையில் சிக்கிமை இந்தியாவுடன் இணைத்தது நியாயம் என்றால் அதே மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் காசுமீர் தனிநாடாவதை அனுமதிப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்?

       இந்திய அரசு இந்தியாவின் எந்தப் பகுதியையும் யாருக்கும் எப்போதும் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்றால், தமிழ்த் தேசத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எந்தத் தமிழனிடமும் அனுமதி கேட்காமலேயே சிங்கள அரசுக்கு விட்டுக் கொடுத்தது எப்படி? கொடுத்தது கொடுத்ததுதான், திருப்பிக் கேட்க மாட்டோம் என்று இப்போதும் எஸ்.எம். கிருட்டிணா அறுதியிட்டு உரைக்கிறாரே, இது எப்படி?

       இந்திய விடுதலை குறித்து உரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒரு கட்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் முன்வந்தார்கள். அதிகாரக் கைமாற்றத்திற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஆணையங்கள் அமைக்கவும் செய்தார்கள். இந்தியா தொடர்பாகப் பிரித்தானியர் செய்ததைக் காசுமீரம் தொடர்பாக இந்தியர் செய்தால் என்ன? குடியா முழ்கிப் போகும்? விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே இந்த வீம்பர்களின் நாக்கு அழுகியா போகும்?

       அடிப்படைக் குறிக்கோள் ஒரு புறமிருக்க, காசுமீரத்து மக்களின் உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற அமைதிச் சூழலை ஏற்படுத்தவும் செய்ய வேண்டியது என்ன? இந்தியப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆயுதப் படைகள் தனியதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிகள் சட்டம் போன்ற வெறுப்புக்குரிய கறுப்புச் சட்டங்களை விலக்கி;க் கொள்ள வேண்டும். போராட்டம் தொடர்பாகச் சிறைப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மோதல்' கொலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்த படையினரைத் தளைப்படுத்திக் கூண்டிலேற்றித் தண்டிக்க வேண்டும்.

       இப்படியெல்லாம் செய்யாமல் புற்றுநோய்க்குப் புனுகு தடவுவது போல் எட்டுக் கூறுகள் கொண்ட கூறுகெட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசு, ஏன்? இப்படியொரு பஞ்சுமிட்டாய்த் திட்டத்தைக் கடைக்கோடி காசுமீரி கூட ஏற்க மாட்டார் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். அப்படியானால் இந்தத் திட்டத்திற்கு வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும். “நாங்கள் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பினோம், சமரசத் திட்டம் அறிவித்தோம், எதற்கும் அவர்கள் ஒத்துவரவில்லை” என்று சொல்லி, தனது வன்முறையை மறைத்து, காசுமீர் மக்களை வன்முறையாளர்களாகக் காட்டி, உளவுத் துறையின் மூலம் சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, காசுமீரத்து மக்கள் தலைவர்கள் மீது பழிசுமத்தி, அரச பயங்கரவாத அடக்குமுறையை ஏவுவது, மக்களின் உரிமைப் போராட்டத்தைக் குருதிச் சேற்றில் அமிழ்த்துவது… இதுவே இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டமாக இருக்க வேண்டும் என ஐயுறுகிறோம்.

 இது குறித்து காசுமீரத்து மக்களும் அவர்களுக்கு ஆதரவான சனநாயக ஆற்றல்;களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈழத்தில் நடந்தது போல் இன்னோர் இனப்படுகொலை எங்கும் நிகழ விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 காசுமீரத்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவான இயக்கங்களை எங்கெங்கும் நடத்துவதும் அதற்காக மக்களைத் திரட்டுவதுமே இந்தியாவின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்கப் பயன்படும். வியத்நாமின் போராட்டத்தை நம் போராட்டமாகவே பார்த்தோம். காசுமீரப் போராட்டத்தையும் நம் போராட்டமாகவே பார்க்க வேண்டும். என் பெயர் வியத்நாம், உன் பெயர் வியத்நாம், நம் பெயர் வியத்நாம் என்று முழங்கியதைப் போல், என் பெயர் காசுமீர், உன் பெயர் காசுமீர், நம் பெயர் காசுமீர் என்று முழங்குவோம்.

Pin It