நாகரிகம் என்ற பெயரால் நாம் ஒதுக்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளில் அறிவியல் இருப்பதை விளக்கி “வாழ்வியல் மரபு" என்ற நூலை எழுதியிருக்கிறார். மருத்துவர் காசிப்பிச்சை. நூலை விரிக்கும்போதே அட்டையின் உள் பக்கத்தில், நம் அறியாமையைச் சுட்டும் விதத்தில் “இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும். செயற்கை முறைகளால் புதிய புதிய முறைகளை என்னதான் அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கைத் தன்மைக் கேற்பவே செயல்பட வேண்டும்;;:

       “செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

       இயற்கை அறிந்து செயல்”- குறள் 637-

என்று கூறித் தொடங்குகிறார்.

       22 தலைப்புகளில், அவர்; தமிழ்நாட்டில் நிலவிய பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்கள், உணவு முறைகள், சடங்கு முறைகளில் பொதிந்துள்ள அறிவியல் நுட்பத்தை எழுதியிருக்கிறார்.

இன்று நாம் இயற்கையை அழித்து நோய் நொடியோடு வாழ்வதை இந்நூல் உணர்த்துகிறது. மனிதனாகிய நாம் இயற்கையின் படைப்பே என்றாலும், நம் வசதிக்காக செயற்கையை அதிகம் நாடுகிறோம். அதன் விளைவு நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் நம்மை நாம் அறிந்து கொள்ள இந்நூல் உதவி புரியும்.

       எடுத்துக்காட்டுக்கு நூலில் கூறுப்பட்டுள்ள செய்திகளில் சிலவற்றை இங்குக் காண்போம். நூலில் “நோக்கம்” என்று ஆசிரியர் காசிபிச்சை இவ்வாறு கூறுகிறார்:

       “தமிழ்நாடு என்ற “எல்லை" வறையறுக் கப்பட்ட தனிநாடு போயிற்று: தமிழர்கள் மார்தட்டிச் சொல்லிக் கொள்ளும் சுதந்திரமான “தனி அரசு” போயிற்று. தமிழர்கள் என்று அடையாளம் காட்டும் “ஆடை” போயிற்று; மொழியின் கலப்படமில்லாதத் தனித் தன்மை போயிற்று; தமிழர்களின் உணவு என்று சொல்லத்தக்க “உணவு முறையும்” போயிற்று; இவர்கள் கற்றுத் தேர்ந்திருந்த “தமிழ் மருத்துவமும்” போயிற்று;

“தமிழ்ப் பண்பாடு” என்று சொல்லத்தக்க அளவில் வடித்தெடுத்து, இனத்தின் இயற்கை குணமாக உயர்ந்து. உலகுக்கே வாழ்வியல் நாகரிகமாக வாழ்ந்துகாட்டி மறைந்திட்ட “தென்புலத்தார்”களுக்கு நன்றிகாட்டும் படையல் முறையும் போயிற்று;

       “தேய்ந்து வரும் மனித நேயத்தை, தமிழர்களின் “நிரந்தரங்களை” மீட்டெடுக்கும் முயற்சியில் இச்சிறு நூலின் பங்களிப்பு பயன்படவேண்டும் என்கிற பேராவல்..”

வரம் தரும் மரம்

       “… மண விழா என்கிற மகிழ்ச்சி நாளைத் தொடங்கும் போதே முகூர்த்தக் கால் ஊன்றி, மரம்(போத்து) ஊன்றி பிறகுதான், திருமணக் காரியம் தொடங்கப் பெற்றுள்ளது.

இதே மூகூர்த்தக்கால் பந்தல்காலாக இருந்து, பந்தல் பிரிக்கப்பட்ட பிறகும், வீட்டின் முன் மரமாக நின்று நிழல் கொடுத்து வந்த இயற்கை வாழ்வியல் காலம் அந்தக் காலம்.

       … திருமணத்திற்குப் பிறகு என்றோ பிறக்கப் போகும் குழந்தைக்குத் தேவையான உயிர்க் காற்று உற்பத்திக்குத் திருமணத்தன்றே இரண்டு மரங்கள் நட்டுவைத்த “ சமுதாயக் கவசம்” வேறு எந்த நாட்டில் காணமுடிகிறது?

       அதாவது, திருமணம் என்றாலே இரண்டு மரம் நட்டுத் தீர்வது சமுதாயக் கடமை. தமிழர்களின் பண்பாடு! ஓன்று சொந்த வீட்டுக்கு இன்னொன்று ஊரார் நலனுக்கு. இது தமிழர்களின் பண்பாடு. பாவிகள்- சடங்குக்காக, போலித்தனமாக, முளைக்க முடியாத மூங்கில் குச்சியில் வண்ணம் ப+சி, திருமண மண்டபத்தில் வாளியில் நட்டுவைத்து, எடுத்துவைத்துக் கொள்வது இன்றைய நாகரிகச் சடங்கு. திருமண மண்டபம் கட்டிய காலத்திலிருந்து அதே முகூர்த்தக் கால் அனைத்து திருமணங்களுக்கும்;.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

       சுற்றுச் சூழல் என்பது வளிமண்டலப் பாதுகாப்பு, காற்றில் வேடியம் வாயு (நைட்ரஜன்) 78மூ உயிர்வாயு 21மூ, கரியமிலவாயு 0.0134மூ மீதமுள்ளவை இதர வாயுக்கள்.

       கிரகிக்கப்பட்ட கரியமிலவாயு அளவிற்கே உயிர்காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்கிறது மரம் என்பதைக் கண்டோம். மரமே இல்லாது போனால்? காற்றில் உயிர்வாயுவே இல்லாமல் கரியமிலவாயுவே நிரம்பியிருந்தால்? எத்தனை பெரிய உயிர் கொலை? உயிர்கள் எப்படி மூச்சு விடுவது? எப்படி உயிர் வாழ்வது? 

 மரத்தை வெட்டுவது என்பது, நாமே நம் மூச்சை இறுக்கிக் கொண்டு சாதலுக்குச் சமமல்லவா! மிகப்பெரும் உலக அழிப்பு வேலையல்லவா! மூச்சித் திணறி உயிர்விடும் தற்கொலைக் கொட்டிலாக அல்லவோ உலகை மாற்றுகிறோம்!

       மரமே இல்லாத ப+மி நாகரிக நாடாம், அழகாம். நவீன வாழ்க்கையாம்!அரண்மனையைச் சுற்றி காட்டு அரண் அமைத்து வாழ்ந்தவர்கள் முட்டாள்களா? சாலையோர மரங்கள் அமைத்துப் பாதுகாத்த கரிகாற்சோழனும் ராணி மங்கம்மாளும் அசோகச் சக்கரவர்த்தியும் நாகரிகம் தெரியாதவர்களா?

       அண்மையில்-100 ஏக்கர் கொண்ட அரசினர் தோட்டத்தைக் கண்டேன். எல்லாமே பயன்பாடில்லா நெட்டையான அழகு மரங்களும், வாசமில்லா ப+க்கள் கொண்ட சிறு மரங்களும,; இன்ன பிறவுமாக இருந்தன. வேளாண் பட்டதாரிகள் நிறையபேர் இஙகே பணிபுரிந் திருக்கிறார்கள்.

       …பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தானே, நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையான அறம்! பல உயிர்களுக்கும் உணவு படைப்பதுதான் வாழ்வியல் அறம். கிடைக்கும் பழங்களை மனிதனும் சாப்பிட வேண்டும். மற்றவைகளும் சாப்பிட வழிவகை செய்து கொடுக்க வேண்டும். மனிதன் ஏறி பறிப்பதற்குள்ளாக பறந்து சென்று அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பறவைகள் பறந்து திரிந்து கொண்டிருக்கின்றன! பறவைகளிடம் தோற்ற மனிதன், பட்டினி போட்டு சாகடிக்க, பழமரமே இல்லாமல் செய்து விட்டான்! என்ன கொடுமை! இவனுக்கு மன்னிப்பே கிடையாது!

       ஊருக்குள் புகுந்து குரங்குகள், யானைகள், காட்டு எருமைகள் அட்டகாசம் செய்வதாக செய்திப் போடப்படுகின்றன. எருமைகளுக்கும், யானைகளுக்கும் உணவு கிடைக்காமல், காடுகளை அழித்து மனிதர்கள் அட்டகாசம் செய்கிறார்களா? பசியால் இரைதேடி அலையும் மிருகங்கள் அட்டகாசம் செய்கின்றனவா? யார் செய்வது அநியாயம்? அட்டகாசம்?

       மனிதர்களுடைய உடல் வெப்பம் 36 ; சென்டிகிரேடு. ஒரு காலத்தில் 20 வருடங்கள் முன்பு வரை தட்டவெப்ப நிலை 24-26. பின்னர் 26-28. தொடர்ந்து 32, 34, 36 என்று வளர்ந்து 44-46 ; சென்டிகிரேடைத் தொட்டுவிட்டது!

       மனித உடலிருந்து வெப்பம் வெளியேறி, காற்றில் கரைந்து, உடல் குளிர்ச்சி அடைய வேண்டும் என்பது பொது விதி. அதாவது மனித உடலை விட வளிமண்டல வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் நம் மூச்சு, தோல் அதற்கேற்றாற் போலத்தான் அமையப் பெற்றிருக்கிறது. அதாவது, உலகம் தோன்றிய நாள் முதல், உடல் வெப்ப அளவை விட வளிமண்டல வெப்பம் குறைவாகவே இருந்த நிலைமை அண்மைக்கால ஐந்து, பத்து வருடங்களில் நேர்எதிர்மாறாக மாற்றிவிட்டோம் என்று பொருள். உலக உயிரினங்கள் இந்த செயற்கை மாற்றத்தை எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றன?

       சுற்றுச்சூழல் பாதுகாக்கும் சமுதாயப் பண்பாடு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டு கிராமங்கள் அனைத்திலும், அறம் காக்கும் தொண்டுக் குழுக்கள் சமுதாய நலன்களைக் கட்டிக்காத்து வந்தமைக்குச் சிலப்பதிகாரத்திலிருந்து சான்று காட்டும் ஆசிரியர் ஐவகை மன்றங்கள் இருந்ததையும் விரிவாகப் பேசுகிறார்.

       … ஒரு நாடு என்பது எப்படி இருக்க வேண்டும்?

 

       நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல

 நாட வளந்தரும் நாடு (குறள் 739)

'பிறநாட்டை நாடாமல், பொருள் வளமெல்லாம் தானே உற்பத்தி செய்து கொள்வதே நாடு என்று சொல்லப்படும். அப்படி இல்லாமல் பிறநாட்டு பொருட்களை நாடிப் பெற்று அதனால் வளம் பெறுவதை நாடு எனக் கருதுவதற்கில்லை. எத்தனை ஆணித்தரமான வரையறை!

பைத்தியம் தெளிய பசு வளர்ப்பு

       'மண் புழுக்கள் நிலம் முழுவதும் நிரம்பியிருந்த காலத்தில் அதன் கழிவு நீர் நிலம் முழுவதும் பரவி, விளைபயிர்கள் அதை உறிஞ்சி வளர்ந்த காலத்தில்,அதை உண்டு வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு இந்த அளவு பைத்தியம் பிடிக்கவில்லை. இயற்கை உரம் இட்டுப் பயிர் வளர்த்த காலத்தில் 5000 பேருக்கு ஒருவர் மட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் இருந்தார்.

       இயற்கை உயிர் வேலியும், (கற்றாழை, ஆடு தொடா செடி) இயற்கை உரமும் (மண்புழு எரு) போன பிறகு பைத்தியங்கள் பெருகத் தொடங்கி விட்டன. 1000 பேருக்கு நால்வர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இப்போது கணக்கு காட்டுகிறது. இது இன்றைய மனித சமுதாயத்திற்கு விடப்பட்ட சவால். சமூக ஆர்வலர்கள் கவலையோடு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று, இல்லையா?

 இன்றும் கூட கிராமங்களில் பைத்தியத்திற்கான மருந்து ஒன்று உண்டு. மண் புழுக்களை இருபது முப்பது பிடித்து, கால் லிட்டர் ஊற்றிய விளக்கெண்ணெய்யில் இட்டு காய்ச்சி, மண்புழுவின் கழிவு நீர் இறங்கி சுண்டியதும், ஆற வைத்து தினமும் இரவில் உள்ளங்கையில் 1 ரூபாய் அளவுவிட்டு நக்கி சாப்பிட்டு வருவது பைத்தியங்களுக்கான சிகிச்சை" என்று கூறியுள்ள ஆசிரியர் காசிபிச்சை அகத்தியர் கூறியுள்ள மருத்துவம் ஒன்றையும் விரிவாகக் எழுதியுள்ளார். மேலும் அதை கட்டுரையில்…

       'பஞ்சகவ்யா தயாரிப்பவர்கள் முதலில் நாட்டுப் பசு என்று சொல்லி, பிறகு காளை மாட்டு சாணமும் சேர்த்து, பிறகு எருமை சாணமும் சேர்த்து, ஆட்டின் புழுக்கையும் சேர்த்து வளர்த்துக் கொள்ளப்பட்டு விட்டன. அடிப்படை உண்மை என்னவென்றால் அசைபோடும் பிராணிகளின் வயிற்றில் நார் பொருளைச் செரிமானிக்கும் அமீபா கூட்டம் தான் மருந்துக்கும் மருத்துவ குணம் உள்ள சாண உற்பத்திக்கும் அடிப்படை! அவ்வளவுதான். உலக உயிரினங்களின் நேரழயான மூதாதையர்கள் இந்த பாக்டீரியாக்கள்!"

       'மனிதர்களைப் பாதுகாக்க பசுக்கள் (கால் நடைகள்) எப்படியெல்லாம் பயன்பட்டு வருகின்றன. இதனை அறியாமல் கால்நடைகளை அழித்துவிட்டு வேளாண்மை செய்ய எண்ணியதும் அதற்கு “பசுமை புரட்சி” என்று பெயரிட்டதும், ஒட்டுமொத்தக் காளைகளையே அழித்து விட்டு பால் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்நியப் பசுக்களை, காளைகளை இறக்குமதி செய்தும் அதற்கு “வெண்மை புரட்சி” என்று பெயர் சுட்டி மகிழ்ந்ததும் எவ்வளவு இயற்கைக்கு மாறான செயல்!"

மீண்டும் திரும்பப் போகிறோமா?

       'சொறி, படை கையில் இருந்தவர் பஞ்சகவ்யா தயாரிப்பில் ஈடுபட்ட பொது கைவைத்து சாணம், நெய்யைப் பிசைந்து கலக்கிய பிறகு சொறி, படை இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

       கண்ணாடி போட்டு கட்டுரை எழுதி “தாய் மண்ணிற்கு வணக்கம்” சொல்லி வந்தவர், பஞ்சகவ்யா உட்கொண்ட பிறகு கண்ணாடியைக் கழற்றிவிட்டு, தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண் நுட்பங்களைப் பரப்புரை செய்கிறார். (ஆசிரியர், ஐயா நம்மாழ்வாரைக் குறிப்பிடுகிறார்.)

       வயோதிகர்களுக்கு இளமை திரும்புகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. வந்த நோயைப் போக்குகிறது; வருகிற நோயைத் தடுக்கிறது. வேறு என்ன வேண்டும்?

       இதனைப் புரிந்துதான் பண்டைய காலத்தில் கோவிலிலே பிரசாதமாக பஞ்சகவ்யா வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், இது முழுக்க முழுக்க தமிழ் மக்கள் கண்டுபிடித்து, தமிழ்நாட்டில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த மாபெரும் “அமுதம்.”

       இறப்புக்கு அடுத்த நாள் எட்டு செய்வது நம் மரபு. அதாவது எரிக்கப்பட்ட உடலின் வெந்துபோன எலும்புகளை பொறுக்கி எடுத்து மண்பாணையில் இட்டு ஆற்று நீரில் கரைத்து விடுவது நம் மரபு. “அங்கம் பொறுக்குதல், பால் தெளித்தல்” என்று சொல்வார்கள்.

 எரித்த இடத்தில் எலும்புகளைப் பொறுக்கி எடுத்து விட்டு குவியலாக்கி, சாம்பலைக் கிளறிவிட்டு பால், தயிர், கோமியம், கருப்பஞ்சாறு, பழச்சாறு, நாட்டு வெல்லம், இவைகளைத் தெளித்து, அதில் நவதானியம் தெளித்து திரும்புவார்கள்.

       இந்தக் கலவைதானே பஞ்சகவ்யத்தின் மூலப்பொருள் சுடுகாட்டில் புரட்டிப் போட்ட அடிமண்ணை உயிர் மண்ணாக மாற்ற பஞ்சகவ்யர் உயிர் உண்டாக்கி நவதான்யம் தெளித்து விட்டால், முளைத்து வளர்ந்து மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளுக்குத் தீவனம். இதனை ஒவ்வொரு இறப்புக்கும் கட்டாயம் செய்து தீரவேண்டிய அறிவியல் சடங்காகத் தமிழர்கள் பழக்கத்திற்கு கொண்டு வந்திருந்தார்களே!

மண்ணுக்கேற்ற மரபு

       'இங்கிலாந்து நாடு குளிர்நாடு. அவர்களுக்கு வெப்பம் வேண்டும். ஆகவே; வெதுவெதுப்பான வரவேற்பு கொடுப்பது அவர்களின் பண்பாடு. தமிழ்நாடு வெப்பநாடு, நாம் கொடுக்கும் வரவேற்பு குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

       … மாறுபட்ட கோணலான வளர்ச்சிதான் கலப்பின காய்கறிகள், பயிர் வகைகள், கலப்பின கால்நடைகள், கலப்பின புல் வகைகள், திசு வளர்ப்பு முறை, செடிகள், மரங்கள், மரபீனி மாற்று முறை வளர்ப்பு போன்ற அனைத்தும்! இந்த மாற்றம் நமக்குத் தேவையா?"

       “நாம் படக்கூடிய இயற்கைக்கு மாறான பேராசை, பழமையான வழி வந்த மரபுவழி பண்பையும், குடிப் பழக்கத்தையும் ஒருங்கே கெடுத்து, வறுமையுள் வீழ்த்திவிடும்” என்கிற வள்ளுவரின் எச்சரிக்கையை மறந்து விடக்கூடாது.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை (குறள்:1043)."

அறிவினார்க்கு இல்லை அதிரவைக்கும் நோய்

       '… மனிதன் மின்விசிறி காற்றை விட்டு வெளியில் வந்தால், புறக்காற்றை சுவாசிக்க நேர்ந்தால் “டஸ்ட் அலர்ஜி” என்கிறான். மழை நீரில் சற்றுப்பட நேர்ந்தால் நீர் கோவை என்கிறான். பகல் வெய்யிலில் பட நேர்ந்தால் தலைவலி பிளப்பதாகப் புலம்புகிறான். இயற்கையான காற்றும், மழையும், வெய்யிலும் இவனுக்குப் பகையானால் இது இவனின் குற்றமா? இயற்கையின் குற்றமா?

 இயற்கையோடு இணைந்து வாழ்ந்த உடலைப் பெற்றிருந்தவன், செயற்கை உடம்பாக்கிக் கொண்டுவிட்டான். எல்லாவற்றிற்கும் இவனுடைய வாய்தான் காரணம். செயற்கைப் பொருளை விழுங்கி விழுங்கி இயற்கையே ஒத்துக் கொள்ளாத செயற்கை உயிரினமாகிவிட்ட பிறகு, இவனை இன்னும் மனிதன் என்று சொல்லலாமா? என்ன பெயர் வைக்கலாம்?

       “தீதும் நன்றும் பிறர்தரவாரா” என்கிற கணியன் பூங்குன்றனின் கருத்தை சற்றே கவனமுடன் ஆய்ந்து பொறுப்புணர்ந்து வாழ்ந்து வர வேண்டும். நமக்கு ஏற்படும் நல்லதும் கெட்டதும் பிறர் கொடுத்து வருவதன்று. நாமாகத் தேடிக் கொண்டது என்;று தெளிவு பெற வேண்டும்”

       இவ்வாறு பல உண்மைகளை ஆசிரியர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். இது குறள் நெறியை, வள்ளுவர் வழியை நமக்குச் சுட்டுகிறது.

       இந்நூலில் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் களையப்பட்டு, செறிவான சொற்றொடர் அமைப்பு கையாளப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக, படிப்பவர்களுக்கு மிக எளிதாக விளங்கும்.

 

வாழ்வியல் மரபு

ஆசிரியர்: மருத்துவர் காசி பிச்சை

தலைவர் இயற்கை வாழ்வியல் இயக்கம்

நூல் கிடைக்குமிடம்: வெண்ணிலா பதிப்பகம்

மனிதம் இல்லம், 218/3,இராமசாமி நகர். திருமானூர், அரியலூர் மாவட்டம்; 621715.

கைப்பேசி:93450 09288.

விலை ரூ.60

பக்கம்-165

Pin It