தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்த காலம் தொட்டு, முஸ்லிம்களின் விகிதாசார அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பரவலான குற்றசாட்டு முஸ்லிம் சமூகத்தில் உண்டு.

எனவே இச்சட்டம் அமலுக்கு வந்த பின்னால், எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? அவைகளில் எத்தனை முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன? என்ற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் கோரிக்கை வைத்தும் அக்கோரிக்கை கடைசி வரையில் கருணாநிதியால் கண்டு கொள்ளப்படவில்லை.

கருணாநிதி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயங்குவதன் மூலமும், இட ஒதுக்கீட்டு குளறுபடியை சரி செய்ய கண்காணிப்புக் குழு அமைத்ததன் மூலமும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் துரோகம் செய்துள்ளது தெரிகிறது.

இதன் மூலம் முஸ்லிம்களின் இடத்தில் முஸ்லிமல்லாதவர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு தீர்வு என்ன? இதோ ஒரு வழக்கு வழி கட்டுகிறது. நெல்லை மாவட்டம் பாட்டபத்து காந்தி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (வயது 29). இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

“நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். பி.எஸ்.சி முடித்து விட்டு உடற்கல்வியலில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இட ஒதுக்கீட்டின்படி அந்த பணியிடத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த வரைதான் நியமிக்க வேண்டும். இதனால் எனது பெயரை அந்த பணிக்கு பரிந்துரைக்கும்படி நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிக்கு மனு கொடுத்தேன்.

உடற்கல்வியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களில் என்னை தவிர வேறு யாரும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் எனது பெயரை பரிந்துரைக்காமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் பெயரை பரிந்துரைக்க வேலைவாய்ப்பு அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே எனது பெயரை உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்...'' என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.எஸ்.முகமது முகைதீன் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி 4 வாரத்துக்குள் பரிசீலித்து அவரது பெயரை உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

அதாவது அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவருக்குரிய இடத்தை வேறு ஒரு சமூகத்திற்கு வழங்கப் போவதாக அறிந்ததனால் கிருஷ்ணகுமார் வழக்கு தொடுத்து, தனது உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்.

இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்னவெனில், உடனடியாக தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்பின் சதவிகிதத்தை அறிய வேண்டும்.

அதில் 3.5 சதவிகித அளவு முழுமையாக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்குரிய கோட்டாவில் வேறு சமூக மக்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அந்த நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்க வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம்களுக்குரிய பங்கை முழுமையாக பெற முடியுமேயன்றி, "மயிலே மயிலே இறகு போடு என்பதைப்போல் “கருணாநிதியே! வெள்ளை அறிக்கை வெளியிடு'' என்று கேட்டுக் கொண்டிருந்தால், ஒருபோதும் முஸ்லிம்கள் உரிய பிரதிநிதித்துவத்தை எட்ட முடியாது என்பதை உணர வேண்டும்.

கொடுத்து கெடுத்த அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள். மாறாக, சமுதாய நலனில் அக்கறையுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள்தான் செய்ய வேண்டும்!

Pin It