இலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...
பிரளயனுடன் ஒரு நேர்காணல்
VI
சிவா: சமகால இலக்கியம் உங்களை எந்தளவிற்கு பாதிக்குது? உங்கள் மீது தாக்கம் செலுத்துகிறதா?
ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதினேன். பிரசுரத்திற்கு கொஞ்சமாகவே அனுப்புவேன். மக்கள் மத்தியில் போய் கவிதைகளைபடிப்பதுதான் பிரதானமாயிருந்தது. தொடக்கத்தில் என்னுடைய முதன்மையான செயல்பாடு அதுதான். 90ல் என்னொட கவிதைத்தொகுப்பு சந்தேகி வெளியானது. நாடகத்துக்கு வந்த பிறகு கவிதை எழுதுவது குறைந்துபோனது. எழுதுகிற கவிதைகளும் முழுமையடையலேன்னு நான் நினைக்கிறதால டைரி குறிப்புகளா நின்னுருச்சு. இப்ப என்னோட எழுத்துச் செயல்பாடுகள், நாடகத்துக்காக எழுதுவதுதான்.
நிறைய கட்டுரைகள்- Non Fictions ல் ஆர்வமாகி படிக்கத் தொடங்கியதில் புதினங்கள்- கதை எழுத்துகளை படிப்பது குறைந்தது. இப்போ மறுபடி கதை எழுத்துக்களை படிக்கிறேன். குறிப்பா அடிக்கடி கேள்விப்படுகிற- விவாதப்பொருளாயிருக்கிற- சமகால எழுத்துக்களை படிச்சிடறேன். இதிலெல்லாம் inspire ஆகாமலிருக்க முடியாது. ஒரு நாடகம் பண்றவன் நல்ல புத்தகங்களை- இலக்கியங்களை படிக்கணும், நல்ல சினிமாவைப் பார்க்கணும், நல்ல இசையைக் கேட்கணும்.... பொழுதுபோக்கா இல்லாம எங்களை புதுப்பிச்சுக்க இதெல்லாம் அவசியம்.
சோலை சுந்தரபெருமாள் எழுதின செந்நெல் நாவலை வாங்கி மூணுமாசம் கழிச்சுதான் படிச்சேன். அதோட தயாரிப்பு உடனடியா படிக்கணும்னு தூண்டல. அதுவுமில்லாம, நம்ம சோலை சுந்தர பெருமாள்தானே, வெண்மணியப்பத்தி தானே என்பதால கூட இருக்கலாம். இப்ப, வெண்மணி பின்புலத்துல ஒரு நாடகம் பண்றதுக்காக மறுபடியும் படிச்சேன். முதல் வாசிப்பில் தவறவிட்ட பல விசயங்கள் பிரம்மாண்டமா கிடைச்சது. அந்த நாடகத்துக்காக வெண்மணி தொடர்பான பல விசயங்களை படிக்க வேண்டியிருந்தது. இந்திரா பார்த்தசாரதியோட குருதிப்புனல், ஜானகிராமனின் செம்பருத்தி, ராஜம் கிருஷ்ணனுடைய பாதையில் பதிந்த சுவடுகள், விவசாய சங்கம் பற்றி, பி.சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு, முகிலோட ராமையாவின் குடிசை நாடகம்- இப்படி... எல்லாத்தையும் படிச்சதுல செந்நெல் ரொம்ப முக்கியமான பிரதியா பட்டுது. எங்கும் பார்த்திராத நிலப்பகுதியை, வாழ்க்கையை செந்நெல் அப்பட்டமாகவும் அருமையாகவும் சித்தரித்திருந்தது. (அருமைங்கிற வார்த்தைய ரொம்ப எளிமையா பயன்படுத்தறேன். )
காவிரிப் படுகை கழனி வரப்புல நடக்கறதுக்கு தனிப்பயிற்சி வேணும்.களிமண். வழுக்கும். கட்டைவிரலை மடக்கி குத்தி குத்தி நடக்கணும். இல்லேன்னா வழுக்கியடிச்சு விழுந்திடுவோம். கழனியில் வாழும் அந்த மக்களோட முழுவாழ்க்கையையும் கால வரிசைப்படி - கான்சியஷா பண்ணினாரோ என்னமோ- உழுறதில் ஆரம்பிச்சு நாத்து நடுவது, ஒவ்வொரு கட்டத்திலேயும் இருக்கிற அந்த வழக்கங்களை ரொம்ப ஆழமா பதிவு பண்ணியிருக்கார். பொதுவா மக்களை சித்தரிக்கும்போது இலக்கிய சுத்தம் கருதி சிலதையெல்லாம் தவிர்க்கிறது ஒரு வழக்கமா இருக்கு. உண்மையில் ஒரு வாழ்க்கையை ரத்தமும் சதையுமா சித்தரிக்கும்போது அம்மாதிரியான சுயதணிக்கை எல்லாம் இயலாமப்போயிடும். அதையெல்லாம் மீறி அந்த வாழ்க்கையை ரொம்ப நுட்பமா சித்தரிச்சிருப்பார். தலித் வாழ்க்கையை மட்டுமில்ல, தமிழகத்தின் மிகப்பேரிய கலாச்சார மையமா இருக்கிற தஞ்சாவூரில் பெரும்பகுதி கழனியில் வாழ்கிற உழவர்களின் வாழ்க்கையை யாருமே பதிவு பண்ணல. படிக்கும்போதே நத்தை ஓடுகளின் மணம்... நத்தைகளை எல்லோருமே சாப்பிடுவாங்க. ஆனா அதன் ஓடுகளைக் கொட்டுவது மற்றவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு நினைப்பாங்க. ஏன்னா அழுகிப்போன முட்டைமாதிரி அப்படியொரு நாத்தமடிக்கும். அந்த ஞாபகமெல்லாம் எனக்கு கிளம்புது. அந்த எழுத்துக்கள் முழுக்க அந்த வாசனை. அது ஒரு முக்கியமான நாவலா தெரிஞ்சது. இதுமாதிரி நிறைய படைப்புகள் இருக்கு.
சோளகர் தொட்டியை ஒரு இலக்கியம் கிடையாது வெறும் பதிவுன்னு கூட சொல்றாங்க. ஆனா அந்த பதிவில் இருக்கிற நேர்மை, எளிமை, நம்மை எந்தத் தளத்திற்கோ கொண்டுபோகிறது. கொஞ்சகாலமா தமிழிலக்கியத்துல ரொம்ப நம்பிக்கை வருது. வீரப்பன் கொல்லப்படற சமகாலத்திலேயே அங்கே நடந்த மனிதவுரிமை மீறல்கள், நமக்கு தெரியாத இன்னொருபுறம்... வாழ்க்கையில் நிஜம் என்பது நாடகத்தைவிட தீவிரமானதாகவும் காத்திரமாகவும் இருக்கும்கிறதை உணர்த்துகிற சோளகர் தொட்டியில ரொம்ப பதற்றமான இடம் - விசாரணைக்கைதிகளுக்கு டைலர் வந்து அளவெடுத்துட்டுப் போறானே- அப்ப அந்தக் கதறல்.... எத்தனையோ என்கவுன்டர்களை அதுக்கான அர்த்தம் தெரியாமத்தானே பார்த்துக்கிட்டிருக்கோம்.... சுட்டெரிக்கிற இந்த உண்மைகளை பதிவதைத்தானே இலக்கியம் செய்யமுடியும்? இலக்கியம் எதையெதை வேண்டுமானாலும் செய்யட்டும்... சமகால மனிதர்களின் சொரணையைத்தூண்டி தட்டியெழுப்புற வேலையை அது செய்வது பெரிய விசயம்தானே...
இலங்கையிலிருந்து வாங்கி வந்த புத்தகங்கள்ல ரொம்ப முக்கியமானது சந்திரசேகர்னு ஒருத்தர் எழுதிய ஆங்கில நாடகத்தோட பிரதி. போராளியா இருக்கிற ஒரு பெண்ணோட பார்வையில் சொல்லப்படும் பவர்புல்லான டெக்ஸ்ட். கொழும்பிலும் மற்ற வெளிநாடுகளிலும் நிகழ்த்தப்பட்டுள்ள இந்நாடகம் இலங்கையின் போராளி இயக்கங்கள் மீது கேள்விகளை விமர்சனங்களை- ரொம்ப நேர்மையோட வைக்குது.
சிவக்குமார்- நேர்மைன்னு குறிப்பிடறீங்க... இலக்கியத்தில நேர்மைங்கறது என்ன?
நேர்மைன்னா மக்கள் சார்ந்த ஒரு நிலைப்பாடு எடுக்கறோம்.. மக்களுக்காக உண்மைகளை சொல்லணுங்கிற நிலைப்பாடு... அதுல பிசகாமல் போகணும்னுதான் நான் நினைக்கிறேன். ஒரு போலீஸ் அதிகாரி காட்டுலபோய் வீரப்பனைப் பிடிக்கறதுக்கு ஆறேழு மாசம் வீட்டையெல்லாம் விட்டுட்டு காட்டுலேயே போயி இருந்துக்கிட்டு படற கஷ்டத்தைப் பற்றிக் கூட எழுதலாம். அவனும் மனிதன்தானே... ஆனா அவன் எதுக்காக வந்தான்... உண்மையிலே வாழ்க்கையை எவன் இழந்து கொண்டிருக்கிறான்.. என்பதை நீங்க பரிசீலனை பண்ணணும்ல... அந்தப் பரிசீலனை பண்றதுதான் நேர்மை. இலக்கிய நேர்மைன்னா என்ன நினைக்கிறாங்க...
ஒரு தொழிற்சாலையில நிர்வாகத்திற்கு எதிரா தொழிற்சங்கம் கேள்வி எழுப்பினா நிர்வாகத்துல Managing Directer இல் இருந்து எத்தனை பேர் கஷ்டப்படறாங்க... தூக்கமிழக்கிறாங்க... அவங்க கஷ்டத்தையும் சேத்து எழுதுங்க என்கிறதல்ல நேர்மை... அதையும் எழுதலாம்.. முழுமையான சித்திரம் கொடுக்கறப்ப எழுதலாம். ஆனா முடிவுல என்ன சொல்ற... யார் பக்கம் நியாயம் இருக்குன்னு சொல்ற...முன்கூட்டியே திட்டமிட்டு இவங்க பக்கம்தான் நியாயமிருக்கும்...ஒரு Nostologicஆ, திட்டமிட்ட முன்முடிவுகளோட நாம அணுகக் கூடாது... எழுதினாலும் கூட எதுக்கு நீங்க அழுத்தம் கொடுக்கணும்... என்பது ரொம்ப முக்கியம். நீங்கதானே தேர்வு செய்யறீங்க... அந்த தேர்வுல ஒரு நேர்மை இருக்கணும். சமூக நேர்மை இருக்கணும்...
ஆதவன்- அப்ப யார் பக்கம் நிற்கிறதென்பது ஒரு அரசியல்தானே?
பிரளயன் - ஆமா
ஆதவன்- ஆனா இன்னிக்கி பெரும்பாலான படைப்பாளிகள் சமூகத்தினுடைய நடப்புகள் மீது ஒரு பார்வையே இல்லாம கடந்து போகிற தன்மை இருக்கு... இந்த அரசியலற்ற தன்மையோடு இருக்கிறப்ப நீங்க சொன்னமாதிரி யார் பார்வையிலிருந்து யாருக்கு ஆதரவாக எழுதுவாங்க என்பது சாத்தியமா?
பிரளயன்- தமிழ்நாடு மாதிரியே கேரளா, கர்நாடக சமகால கலை இலக்கியத்தோடும் எனக்கு பரிச்சயம் உண்டு. ஒப்பிட்டளவில் பார்த்தா தமிழ்நாட்டோட சமூகம் ரொம்ப அரசியல்மயப்பட்டிருக்கு. அது அரசியல்மயப்பட்ட சமூகம்தான். ஆனா தமிழ் கலைஇலக்கியம் அதுக்கு எதிரான ஒரு தோற்றத்தையே கொடுத்துக்கிட்டு இருக்கு. தீவிர இலக்கியம் பேசுகிறவர்கள் இலக்கியத்தினுடே அரசியல் பேசுகிறவர்களெல்லாம் ஏதோ பிரச்சார நோக்கத்தோட இலக்கியத்தை அணுகரதாசொல்லி ரொம்ப சுலபமா வாயடைத்துவிடுகிறார்கள். இலக்கியம் இலக்கியத்துக்காக என்று இலக்கியத்துடைய புனிதம் பற்றி பேசுவர்களுடைய குரல்தான் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது... ஆனா என்ன ஆச்சு. நிறப்பிரிகை பத்திரிகை எல்லாம் வந்து அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், கட்டவிழ்ப்பது, என்ற முறையில் ஒவ்வொரு எழுத்தாளரையும் உரிக்கிற போது இப்படி பேசுவதின் பின்னனி என்ன... அதனுடைய அரசியல் என்ன என்பது ரொம்ப பட்டவர்த்தனமா தெரியவந்தது. அந்த புதிய சொல்லாடல்கள் வந்ததும் முற்போக்காளர்களும், அல்லது இடதுசாரிகளும் அம்பலப்படுத்த முடியாத விசயத்தையெல்லாம் அல்லது சொல்லிக்கொண்டிருந்த விஷயங்களையெல்லாம் சர்வ சாதாரணமா செய்யற நிலைமை உருவாச்சு. கா.நா.சு வுடைய பொய்த்தேவுலிருந்து, மௌனியிலிருந்து எல்லாரையும் கட்டவிழ்ப்பு செய்து முடித்திருக்காங்க.
இன்னிக்கி மறுபடியும் அரசியலற்ற எழுத்துன்னு பேசறவங்க தன்னோட அரசியலை மூடிமறைப்பதற்காக பேசுறாங்களே தவிற வேறில்லை. அறியாமலும் சில பேர் இருக்கலாம். இன்னிக்கி நடக்கிற சிறுபத்திரிகைகளின் போக்கே மாறியிருக்கு. அவங்க அரசியல் இல்லாமலா இருக்காங்க? அரசியலை தைரியமா, நேர்மையா வைக்க தெரிஞ்சவங்க அல்லது அரசியலை தைரியமா, நேர்மையா வைக்கத்தெரியாதவங்க... இப்படித்தான் பிரிக்கலாமே தவிர அரசியலற்ற எழுத்து என்பதெல்லாம் செல்லாக்காசு. முன்ன சிறுபத்திரிகையில என்ன போக்கு? படைப்புகள் வரும். அதுசார்ந்த விமர்சனங்கள் வரும்... இலக்கிய விசாரங்கள் வரும்... ஒருத்தரைப்பற்றி இன்னொருத்தர் அக்கப்போர்... இவருக்கு அவர் பதில் கதை எழுதுவார்... அவருக்கு இவர் பதில் கதை எழுதுவார். ஒவ்வொரு பத்திரிகையும் நின்றுபோகிற தருணத்தில் தமிழின் சிறந்த பத்து சிறுகதை எனும் லிஸ்டோடு முடிப்பார்கள். அந்த லிஸ்டை எந்த வரையறையில் தேர்வு செய்தார்கள். சொல்லமாட்டாங்க. சொன்னா அவங்களே மாட்டிக்கொள்வார்கள்.
பொதுவா கடிச்சிப் பார்த்துட்டு போடுறமாதிரி ஏதோ எனக்குப் பிடிச்சது என்பார்கள். எந்த அளவுகோலும் இல்லை. திறனாய்வுக்கான எந்த Formateயும் இல்லாம செய்திருப்பாங்க. ஆனா என்ன ஆச்சு நிறப்பிரிகை வந்தபிறகு கதையற்ற எழுத்துக்களும் வந்தது. கதை கதைசார்ந்த சிறுபத்திரிகை சூழலை உடைச்சது நிறப்பிரிகைதான். இலக்கியத்தில் அரசியல் பேசுவது. சமூகவியல் பேசுவது, கதையற்ற எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது. எல்லாம் இடதுசாரிகளின் சிறுபத்திரிகைகளில் நடந்தது.ஆனால் அது பொதுப்போக்காக மாறவில்லை. நிறப்பிரிகைக்கு பிறகுதான் மாறியது. தத்துவம், வரலாறு, சமூகவியல், மானுடவியல் பேசத்துவங்கின. இது சிறுபத்திரிகை போக்கு வேறு தளத்திற்கு போனதற்கு அடையாளம். அப்புறமா வர்ற காலச்சுவடு அந்த டிரண்டை பிடிச்சிக்கிச்சி. இப்போ வர்ற சிறுபத்திரிகை எல்லாமே யார் நடத்தினாலும் அந்த Formateல்தான் நடத்த வேண்டியிருக்கு.
புனித இலக்கியம் பேசறவங்களும் கூட வேறு எதாச்சும் ஒண்ணை பேசவேண்டியிருக்கு. இதுதான் டிரண்ட். இயக்கம் சார்ந்த படைப்பாளின்னா ஏதோ குஷ்டரோகம் வந்தமாதிரி பாப்பாங்க. அந்த சத்தமெல்லாம் ஓய்ந்து போனதாத்தான் நினைக்கிறேன். படைப்பு, அது ஏற்படுத்துகிற விளைவுகளை மதிப்பீடு செய்துதான் ஒருத்தரை பார்க்கவேண்டும். ஆனா நாடகத்துல அரசியலற்ற தனம் விதந்து ஆதரிக்கப்படுது. இங்கிலாந்து, நாற்காலிக்காரர், சுவரொட்டி மாதிரி முத்துசாமி பல அரசியல் நாடகங்கள் எழுதியிருக்கிறார். Political Theatre ஆக இதை பண்ணினாலும் கூட அது ஒரு போக்கா இருக்கு. எதைப்பத்தியும் பேசாத பிரதி, நிகழ்வு, நாடகப்பிரதி, நிகழ்வாக்கம்- அதுல இருக்கிற அரசியலை யாருமே அதிகமா பேசுவதில்லை. பிரதியாக்கத்திற்கான உத்தியில் யதார்த்தவாதத்தை புறக்கணிக்கிறாங்க-அது காலாவாதி ஆயிடுச்சுன்னு. ஆனால் யதார்த்தவாதம் தமிழ்நாடகத்தில் நடக்கவே இல்லை. வந்தப்பிறகுதானே அதை மீறி அடுத்த இடத்துக்கு போகணும். ஆனா தாண்டி குதிச்சி நம்ம நேரா வேறெங்கேயோ வந்துட்டோம்.
யதார்த்தவாதத்தை படித்து, என்ன அரசியல் இருக்கு அல்லது இல்லைன்னு நீங்க மதிப்பீடு செய்யலாம். ஆனா இவங்க நாடகத்தை படித்து, உங்களால் மதிப்பீடு செய்ய முடியாது. நிகழ்வை பார்த்தும்கூட ஒரு கணிப்புக்கு வரமுடியாது. அவங்கவங்க ஒண்ணொண்ணு சொல்லிக்கிளாம். அது ஒரு பெரிய பிரச்சினைதான். அரசு, மங்கை, மு.ராமசாமி, அ.ராமசாமி, கே.ஏ.குணசேகரன், எம்.டி. முத்துக்குமாரசாமி, அஸ்வகோஸ் மாதிரி நாடகத்தின் அரசியலை புரிந்து எழுதறவங்க கொஞ்சபேர் இருக்காங்க. இவங்கெல்லாம் நாடகத்தின் அரங்கின் அரசியலைப்பற்றிய புரிதலை மேம்படுத்தற மாதிரி எழுதிட்டு வர்றாங்க. நாடகம் செய்து கொண்டிரப்பவர்கள்ளுக்கு உள்ள பெரிய டிரண்ட் என்னன்னா அந்த அரசியல் பத்தி பிரக்ஞை இல்லாததுதான். என்னுடைய நெருங்கிய நண்பன் வேலுசரவணனின் கடல்பூதம் நாடகத்தில் கடலில் போய் மீன் பிடிக்கிறமாதிரி காட்சி வரும்.
பார்வையாளர்களை பங்கெடுக்க வைப்பதற்காக துடுப்பை அசைக்கிற போது பார்வையாளர்களை சப்தமிட சொல்லுவார். சப்தமிடுவாங்க. திடீரென பார்வையாளர்களுக்குள் குதித்து அவர்களை மீனாக கருதி சில வசனங்கள் பேசுவார். பெண்கள் பக்கம்போயி கருப்பாவோ குண்டாவோ இருக்கிற பெண்ணைப்பார்த்து இது குண்டுமீன் வேணாம், கருப்பு மீன் வேணாம்.. ஆம் இது சிவப்பு மீன்..(சிவப்பா இருக்கிற பெண்ணிடம் போய்) இதை எடுத்துக்கலாம் அப்படியென்பார். பார்வையாளர்கள் மத்தியில் கேலியும் குதூகலமும், கைத்தட்டலும் வரும். ஆனால் யாரை குண்டு மீன் அல்லது கருப்பு மீன் என சொன்னாரோ அந்த பெண்கள் கூனி குறுகி போய்விடுவார்கள். இது நடந்தது. நான் நேர்லயே பார்த்தேன். பார்வையாளர்களுடைய அனுமதி இல்லாம அவங்களுடைய Integrityயில் புகுந்து அவங்களை சிறுமைப்படுத்தற விஷயமா முடியுது. பார்வையாளர்கள் மீது நடத்துகிற அராஜகம் இது.
இன்னொரிடத்தில் குழந்தைகளை பங்கேற்க வைக்கிறதாக நினைச்சி திடீரென பார்வையாளர்களிடமிருந்து ஒரு குழந்தையை தூக்கிகிட்டு மேடைக்கு வருவார். அந்த குழந்தை லபோதிபோனு கத்தும். மத்த குழந்தைகளெல்லாம் சிரிக்கும். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதைமட்டுமே வைத்து வேலுசரவணனை மதிப்பிடக்கூடாது. இதைப்பற்றி வேலுசரவணனிடம் பேசியிருக்கிறேன்... நாடகத்துக்கும் நிகழ்த்துபவனுக்கும் பார்வையாளனுக்கும் உள்ள உறவு, அங்கே உள்ள அதிகாரம் பற்றிய பிரக்ஞையோடு தொடர்புடையது. வீதி நாடகத்தில் இப்பிரச்சினையை பதினைந்து வருடத்திற்கு முன்னாடியே விவாதித்திருக்கிறோம். ஆரம்ப கால வீதிநாடகத்தில் இது நடந்திருக்கு. பார்வையாளர்கள் நாடகம் பாத்துக்கிட்டு இருப்பாங்க. அவங்கள்ல ஒருத்தரை திடீரென பிடிச்சி கேரக்டரா மாத்தி நிறுத்திடுவாங்க... அவன் அப்படியே மிரண்டுபோய்விடுவான். இது அவன் சம்மதமில்லாம நடக்குது. அவனுடைய Integrityயில் குறுக்கிட்டு அவனுடைய ஆளுமையை சிதைக்கிறீங்க. அதிகாரம் செலுத்திறீங்க. அப்புறம் இதையெல்லாம் வீதிநாடகம் விட்டுத் தாண்டிடிச்சி.
போலந்தில் உள்ள Polish Theatre Laboratory ல, குரோட்டோவ்ஸ்கி நாடகம் செய்வார். அதுக்கு பார்வையாளர்கள் வருவாங்க. Mastrubate பண்ணி பார்வையாளர்கள் மேல் Ejaculate செய்வார். Theatre Laboratoryக்கு போனா எதுவேணும்னாலும் நடக்கும்னு அதுக்கு தயாரா வர்றவன்தான் அங்க பார்வையாளன். அவன்தான் உள்ளே வருவான். குரோட்டோவ்ஸ்கி நாடகத்தில் இதுமாதிரியெல்லாம் செய்யலாம். இதுபற்றிய பிரக்ஞையோட இதிலிருக்கிற பிரச்சினையை புரிந்து வேலுசரவணன் செய்தாரான்னு தெரியல. நாம் யார் வந்திருக்கிறவங்க மேல அட்வாண்ட்டேஜ் எடுக்கறதுக்கு? இதுதானே இன்று சமூகத்தில் நடக்கிற வன்முறை. பார்வையாளர்கள் மேல் நிகழ்த்துபவன் அதிகம் சுதந்திரம் கொள்வது அராஜகம் வன்முறை. நிகழ்வில் உள்ள அரசியல், பார்வையாளரின் அரசியல், பற்றியெல்லாம் தீவிர விவாதங்கள் நாடகத்துறையில் அதிகமா நடக்கல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|