Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் 2005
இலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...

பிரளயனுடன் ஒரு நேர்காணல்

முந்தைய பகுதி
VII

சம்பு: நாம் இதுவரைக்கும் பேசியவை எல்லாமே பண்பாட்டுத்தளத்தில் நிகழ்பவை தான். பண்பாடு பற்றிய உங்கள் புரிதல் என்ன?

பண்பாடு என்ற சொல்லே தமிழில் 1950களில்தான் அறிமுகமாகிறது. வையாபுரிப்பிள்ளை தான் இந்த சொல்லை உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார். அதற்குமுன் கலாச்சாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது. ‘கலையில் பின்பற்ற வேண்டிய உயர்நெறிகள்’ என்ற பொருளிலே இது இருப்பதால் புதியசொல்லை காணவேண்டியதாயிற்று. ‘‘பண்பெனப்படுவது பாடறிந்து ஓழுகல்’’ என்று பத்தாம் நூற்றாண்டின் பாடல்வரி உண்டு. ‘‘ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் குணத்தார்...’’ என்கிறது தேவாரம். பண்பு என்ற சொல் இருந்தது. பாடு என்ற சொல்லும் தமிழில் இருந்தது. இதை இணைத்துதான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார் வையாபுரிப்பிள்ளை. Nature என்பதிலிருந்து Cultureஐப் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிமனிதன் ஆடையற்று இருந்தான்- இது Nature. ஆடை அணிய ஆரம்பிக்கிறான்-இது Culture. நிலம் என்பது nature. அதை பண்படுத்தி விளைவிப்பது culture. இன்னும்கூட சொல்லப்போனால் ஒரு மக்கள் குழுவை இன்னொரு மக்கள் குழுவிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் காரணி பண்பாடுதான். ஒரு மக்கள்குழுவை இன்னொரு மக்கள் குழுவோடு ஒருமைப்படுத்துகிற காரணியும் பண்பாடுதான்.

Pralayan's drama ஆதவன்: கல்ச்சுரல் ஆக்டிவிசம் பற்றி அடிக்கடி சொல்றீங்க விளக்க முடியுமா?

பிரளயன்: ஒரு தனிமனிதனின் அல்லது ஒரு மக்கள் சமூகத்தின் சொல், செயல், சிந்தை, நடையுடை, பாவனை, பழக்கவழக்கங்கள், உற்பத்தி உறவுகள், மதிப்பீடுகள் இவற்றில் பொதிந்துள்ள கருத்தியல் நிலைபாடுகளை அடையாளம் காண்பதுதான் பண்பாட்டு அரசியல். அந்த பண்பாட்டில் ஒரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்க செயல்படுவதுதான் பண்பாட்டு ஊழியம் (Cultural activism). ஒவ்வொரு பண்பாட்டு செயலிலும் ஒரு கருத்தியல் பொதிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த கருத்தியலை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவும் தாங்கிப்பிடிக்கவும் ஒப்புதலை உருவாக்கவும் பண்பாடு தொழிற்படுகிறது.பண்பாட்டு ஊழியம் என்பது நாம் நம்புகிற ஒரு கருத்தியலுக்கு வாழ்முறைக்கு ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் ஏற்படுத்துகிற அன்றாட நடைமுறை மாற்றங்கள்தான். அந்தக் கருத்தியலைப் புரிந்து கொண்டு செயல்படுவதையும் Cultural activism உள்ளடக்குகிறது.

நாடகமே இன்று ஒரு ஆக்டிவிசம்தான். ரவிவர்மாவும் நானும் தொழிலாக நினைக்கலாம். ஆனால் வாழமுடியுதா? அப்போ ஆக்டிவிசத்தாலத்தான் நாம் ஒரு குழுவா இருக்கமுடியுது. தியேட்டர் ஆக்டிவிசம், கல்ச்சுரல் ஆக்டிவிசத்தோட ஒரு பகுதியா இருக்கிறபோது அதைப்பற்றிய புரிதல் அவசியம். நமக்கொரு பண்பாடு இருக்கில்லையா அது ரொம்ப ஜனநாயகமா இருக்கணும். நம் பழக்கவழக்கத்தில் நிறைய Unlearning செய்யவேண்டியிருக்கு. Unlearning என்பது கற்றதை மறப்பது. (கற்ற அரசியல் தத்துவத்தை மறக்கிறதில்லை.) அதாவது சமூகத்தில் கற்ற சாதி முத்திரையை, சாதி, மத, பாலின குரோதத்தை மறக்கவேண்டியிருக்கிறது. ‘நல்ல ஜாதி டீயா போடுப்பா’, ‘நல்ல ஜாதி மாம்பழமா கொடுப்பா’ அப்படின்னு இந்த சொற்களையெல்லாம் திரும்பத்திரும்ப நாம் ஏன் ஒலியேத்திக்கிட்டிருக்கோம்? ஏன் Reinforce பண்றோம்? அப்போ மாம்பழத்துல சாதி இருக்கலாம்னா மனுசன்ல ஏன் இருக்கக்கூடாதுன்னுதானே அர்த்தம்? இந்த மாதிரி நம்முடைய பழக்கவழக்கங்களில் சூழ்நிலையில் வாழ்க்கையில் நாம் பழகின பெருமிதங்கள் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கு. மறக்கவேண்டியிருக்கு. இந்த Unlearning பண்பாட்டு ஊழியனுக்கு ரொம்ப முக்கியம். ‘ஆதாயமில்லாம செட்டி ஆத்துல இறங்குவானா’, ‘சோழிய‎ன் குடுமி சும்மா ஆடாது’ என்றெல்லாம் நாம் பழமொழி சொல்லமுடியாது. ‏ ‏இதெல்லாம் cultural streaotypes. ஒரு சாதியினரை குறிப்பிட்ட குணாம்சத்துக்குள் அடக்குவது ‘குலத்தளவே ஆகும் குணம்’ எ‎னும் பழமொழியை வலியுறுத்துவதுபோலத்தா‎ன்.

ஆதவன்: நீங்க நாடகத்துல பெயர் வைப்பது உட்பட ரொம்ப கவனமாகச் செயல்படுறீங்க. சமூகத்தில் இருக்கக்கூடிய ஜாதி இந்தமாதிரியான விஷயங்களில் பெயர்களுக்கு உள்ளிருக்கும் கூறுகளை நாடகத்துக்குள்ள கொண்டுவரணும்னு செய்யறீங்க இல்ல, அப்ப ஒரு நாடக ஆசிரியன்-இயக்குனன் பொலிட்டிக்கல் அலர்ட்டா இருக்கணுமா?

பிரளயன்: அது பொலிட்டிக்கல் அலர்ட்னஸ் மட்டும் இல்ல. அது கல்சுரல் அவேர்னஸ்தான். மனிதன்னா அவனுக்கு ஒரு முகம் இருக்கு, பேர் இருக்கு, பேருக்கு பின்னால சாதி இருக்கு. ஒரு அவார்னஸ்தான். நாம் வாழும் காலத்தைப்பற்றிய பிரக்ஞை இருக்கனும். தவறு செய்யக்கூடாது. இன்னிக்கி இருக்கிற அடிப்படையான பிரச்சினை என்னன்னா மக்களுக்கு எதிராக இருக்கிற மக்களுடைய பொதுப்புத்திதான். மக்களுடைய காமன்சென்ஸ் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கு. சில தளங்களில் சாதகமாகவும் இருக்கலாம். பல சமயங்களில் எதிரான மதிப்பீடுகளை கொண்டதாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலான மக்கள் ஆதிக்க சக்திகளுக்கான சாதகமான மதிப்பீடுகளைத்தான் வைச்சிருக்காங்க. இது எல்லா சமூகத்திலும் மக்கள் மத்தியிலிருக்கும் முக்கியமான பண்பாக இருக்கிறது. அப்ப மக்களோட பொதுப்புத்திக்கும், மக்கள் நலனுக்கும் இருக்கிற முரண்பாட்டை அடையாளப்படுத்தறது, இரண்டுக்கும் இருக்கிற முரண்பாட்டை கண்டுபிடிச்சி உடைத்தெறிவதுதான் பண்பாட்டு வேலை.

அப்ப Common sense-யோட contest செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் எது எது முடியுமோ அதையெல்லாம் செய்யலாம். பெயிண்டிங், கதை,கவிதை எழுதுவது, டாக்குமெண்டரி எடுப்பதென எதோவென்றில் செய்யலாம். பண்பாட்டு செயல்பாடு வெறும் கலை இலக்கிய உற்பத்திகளோட நின்னுடறதில்ல. அதையும் தாண்டி நடைமுறையிலும் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறது. கலை இலக்கியம் ஒரு பெரிய பூசணிக்காயில் ஒரு ‘பத்தை’ அவ்வளவுதான். கல்வி இருக்குது, சுகாதாரம் இருக்குது, பஞ்சாயத்து இருக்குது. வாழ்க்கை முறைகள் இருக்கு , பண்டிகைகள், விவசாயம் மற்றும் பலது இருக்கு.

குளத்துக்கும் சமூகத்துக்கும், ஏரிக்கும், ஆற்றுக்கும் இருக்கிற உறவு கூட பண்பாட்டுக்குள்ளத்தான் வருது. பண்பாட்டுக்கு பொருளாதார மதிப்பும் உண்டு. எல்லாத்தையுமே பண்பாட்டுல பாக்குறோம்னு நினைக்க வேண்டாம். பண்பாடுன்னா பொருளாதாரத்திலிருந்து - சுகாதாரம் வரைக்கும் எல்லாம்தான். கேரளாவைச் சேர்ந்தவங்க நாம பாமாயில் கடலையெண்ணை, நல்லெண்ணை உபயோகப்படுத்தற மாதிரி அவங்க தேங்காய் எண்ணையத்தான் சமையலுக்கு பயன்படுத்தறாங்க. அவங்க தேங்காய் எண்ணையை சாப்பிடலைன்னா அதுக்கு மார்க்கெட்டே இல்லாமப் போயிடும்.

உணவு பழக்கங்களில் எவ்வளவு சுலபமாக தமிழன் மாறிவிட்டான். கர்நாடகாக்காரன் இன்னும் களி சாப்பிடறதை விடல. அதுக்காக அவன் பழையகாலத்துல இருக்கான்னு சொல்லக்கூடாது. எதையுமே உள்ள விடாம இருக்கான்னும் கிடையாது. கேரளாவில் பாமாயில் இறக்குமதி பண்றபோது பெரிய போராட்டம் நடத்துனாங்க.... கிடங்குகளில் போய் லாரியில் இருந்த பாமாயில் கேன்களை கொளுத்தினாங்க. கர்நாடகாவில் பதநீரை alcoholic based என்று அரசாங்கம் அறிவித்தது அதை மென்பானம் (soft drink) இல்லேன்னு சொன்னாங்க. இது எப்படி நடந்துதுன்னா
அங்க இருக்கிற ஒரு சிலர் பதநீரில் ஆர்.எஸ் பவுடரை கலந்து விற்றார்கள் என்பதை காரணம் காட்டி மதுபான தயாரிப்பாளர்களெல்லாம் பதநீரை தடை செய்யச் சொல்லி அரசை நெருக்கினார்கள். அரசும் பதநீரை தடை செய்தது. அதை எதிர்த்து நடந்த போராட்டத்துல மூணு நாலு பேரு துப்பாக்கி சூடுபட்டு இறந்தாங்க. பதநீர் ஆல்கஹால் டிரிங் அல்ல, சாப்ட் டிரிங்தான் என்பதை முன்னிட்டு நடந்த உயிர்வாழ்வதற்கான போராட்டம் அது. உடனே அரசாங்கம் பதநீர் சாப்ட்டிரிங்தான்னு அறிவிச்சிடிச்சி.

பார்த்திபராஜா: பண்பாட்டில் இருக்கும் விஷயங்களை தமிழன் நிறைய இழந்திருக்கான்னு சொன்னீங்க இல்லையா? அதை மீட்டுருவாக்கம் பண்ணலாம் என்கிற இடத்திலிருந்து யோசிக்கலாம் இல்லையா?

பிரளயன்: மீட்டுருவாக்கம் என்பதுவேறு, எதிர்ப்புணர்வு இல்லாமல் போய்விடுவதென்பது வேறு. காலனியாதிக்கம் பல பின்விளைவுகளை ஏற்படுத்தினாலும் உலகம் பற்றிய பார்வையை ஏற்படுத்தியது அதுதான். ஆப்பிரிக்க சிந்தனையாளர் அமில்கர் கப்ரால் என்ன சொல்றார்னா ‘காலனியம் உன்னுடைய சமூகம் தாண்டி பலவிதமான மக்கள் சமூகங்கள் இருக்கு என்ற பார்வையை ஏற்படுத்தியது.’ கேள்வி முறையே இல்லாம எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதென்பது பலவீனமானது. தமிழ் சமூகத்துக்கு மற்றவர்களைவிட வரலாற்று ஓர்மை உண்டு. ஆனால் ஆங்கிலேயன் உங்களுக்கு வரலாற்று உணர்வே கிடையாதென்று தாழ்வாக மதித்தான். இயல்பாகவே தமிழனுக்கு நீண்ட பாதை பற்றிய வரலாற்று உணர்வு எப்பவும் இருந்துகிட்டே இருக்கு. ஆனாலும் நுகர்வு சமூகமா அதிக அளவில் மாறியிருப்பது தமிழர்கள்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் பெரிய நுகர்வோர் சந்தை. நமக்கு எதிர்ப்புணர்வு வேணும். எல்லோரும் பழமையில் நல்லா இருந்தோம் இப்பத்தான் கெட்டுப்போயிட்டோம் என்கிற பார்வையும் தவறானாது. நமக்கு ஜனநாயகம்தான் புதுசு. ஜனநாயகம் மேற்கத்திய இறக்குமதியா? இல்லை அதனுடைய மூலக்கூறுகள் சோழர் காலத்தில் இருக்கா? கிரேக்க ரோமானிய மரபுகளின் மூல மாதிரிகளில் அதன் கூறுகள் இருக்கிறதா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. ஆனால் பிரஞ்சுப்புரட்சி ஏற்படுத்திய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.... என்ற கோட்பாடு நமது புராதனகாலத்தில் இருந்தது என்று பெருமைப்பட முடியாது. எந்த இந்திய புராதன சமூகத்தில் அது இருந்திருக்கு?

அதே சமயத்தில் உலகமயமாக்கம் எல்லா மக்கள் சமூகத்தையும் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் போது அதற்குள் போகாமல் இருப்பதற்கு நமது பழமை இடங்கொடுத்தால் அதில் தவறே கிடையாது. அதற்கு நம் பழம்பெருமை வாய்ப்பளிக்குமானால் தாராளமாக பின்பற்றலாம்.

பார்த்திபராஜா- ஒரு கல்ச்சுரல் ஆக்டிவிஸ்டா நீங்க எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சாதி முக்கியமானதா இருக்கு உங்க நாடகங்களில் இந்தப் பிரச்சினையை எப்படி வெளிப்படுத்திறீங்க சாதிக்கான வேரை தேடிப்போகும்போது பார்ப்பனியத்தை அடையாளம் காண்கிறோம். பார்ப்பனியம் ரெண்டு விஷயங்களை கொண்டிருக்கு. ஒண்ணு சாதிய ஒடுக்கு முறை, ரெண்டு தேசிய ஒடுக்குமுறை. இந்தியாவில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் தேசிய ஒடுக்குமுறை பற்றிய விசயங்களைத் தீவிரமாக பேசலையோ... அப்படி பேசியிருந்தால் மரபுக்கலைகளை நேரடியாக போய் தொடுவதற்கான வாய்ப்புகள் வந்திருக்கும் இல்லையா... இல்லைன்னா இன்று பெரியாரை இடதுசாரி இயக்கங்கள் எடுத்துக்கொள்வது விடுபட்ட தேசிய இன முரண்பாட்டை, பிரச்சனைகளை கூர்மையாக பார்க்க தவறியதை சரிபடுத்திக் கொள்வதாக இருக்குமா? அஜெண்டாவிலேயே தேசிய இனப்பிரச்சினைகளை தவறாக பார்த்த விசயமோ அல்லது சரியாக பார்க்காத விசயமோ அது கலைத்துறையிலும் கூட நீடித்திருப்பதாக சொல்லலாமா? கலகக்காரர் தோழர் பெரியார் நாடகம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு அதனாலதான் கேட்டாங்க. இன பேரினவாதத்திற்கு எதிராக புலிகளின் செயல்பாடும் இங்கயிருக்கற தேசிய ஒடுக்குமுறையை புறந்தள்ளிவிட்டு முற்றுமுழுதாக சாதிங்கற விசயத்தை பேசிடமுடியுமா?

பிரளயன்- இடதுசாரி இயக்கம் குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கம்தான் இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு என்று ஒப்புக்கொண்ட இயக்கம்... இந்தியாவில் பல்வேறு தேசியஇனங்களை பண்பாட்டு ரீதியாக அடையாளம் கண்டு ஒப்புக்கொண்டதும் கம்யூனிஸ்ட் இயக்கம்தான். வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல. தேசிய இனக் கோரிக்கையின் அடிப்படையில் மொழிவாரி மாநிலத்திற்காக முதல் கோரிக்கை வைத்ததும் போராடியதும் இடதுசாரி இயக்கங்கள்தான். தேசிய இன கோரிக்கைகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். தேசிய இனக் கோரிக்கைகளே இன்று மாநிலங்களின் அதிக அதிகாரத்திற்கான கோரிக்கைகளாக மாறியிருக்கின்றன. மாநிலங்களுக்கான - மாநில கட்சிகளுக்கான முக்கியத்துவம் இந்திய அரசியலில் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு. இது தேசிய இனங்கள் வலுப்பெறுவதாகத்தான் பார்க்க முடியும். . ஒரு தேசிய இனத்துக்கு சரியான இடம் கொடுக்காம போயிருக்கலாம். அதமாதிரியான பிரச்சினைகள் இருந்தாக்கூட பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய தன்மையில்தான் இருக்கும். தேசிய இனத்தோட சுயநிர்ணய உரிமைக்கான கேள்வி இன்று இந்தியச் சூழலில் நீங்க நினைப்பதுபோல வெளிப்படவில்லை. அப்படியே வெளிப்பட்டாலும் அதை கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதன் மூலம் விடைகாண முடியும் என நான் நம்புகிறேன்.

பார்த்திபராஜா- தமிழக பண்பாட்டுத் தளத்தில் கம்யூனிஸ்ட்களின் குறுக்கீடு எப்படி தொடங்கியது?

பிரளயன்- 1948 ல் தெலுங்கானா எழுச்சியையொட்டி தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்படுகிறது. 1952 பொதுத்தேர்தலுக்கு முன்புதான் இந்தத்தடை நீங்குகிறது. தெலுங்கானா எழுச்சிக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் பலத்த கருத்தியல் விவாதங்கள் எழுகின்றன. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் தன்மைகள் குறித்தும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டிய மக்கள் பகுதிகள் குறித்தும் அரசு அதிகாரத்தை கைப்பற்ற தேவையான வழிமுறைகள் குறித்தும் கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றது. அந்தநேரத்தில்தான் பெரியாரின் ராமாயண எரிப்புப் போராட்டம், எம்.ஆர்.ராதாவின் கீமாயணம், ராமாயணத்தை கடுமையாக விமர்சிக்கும் அண்ணாதுரையின் கம்பரசம், கருணாநிதியின் தீ பரவட்டும்- இவையெல்லாம் பெரிய அளவில் தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களை கிளப்புகின்றன. திராவிட இயக்கத்தின் அடித்தளமான பார்யுப‎ன எதிர்ப்பு மற்றும் சமூகநீதி அரசியலின் கருத்தியல் பின்னணியை இவைதான் கட்டியமைக்கின்றன. இந்த பிரச்னையை தமிழகத்திலுள்ள கம்யூனிஸ்ட்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

ஐராவதி கார்வே எழுதிய புத்தகம், அமிர்தலிங்க ஐயர் (இவர் மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.பாலசுப்ரமணியனின் தந்தையாவார்) எழுதிய ஆங்கில புத்தகம், டி.டி. கோசாம்பி பண்டைய இந்திய சமூகம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் ராமாயணத்தின் சமூகவியல் பற்றி சில உண்மைகளை முன்வைக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் உள்வாங்காமலே தோழர் ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் கம்பராமாயணத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். கம்பராமாயணம் தமிழ் இலக்கியத்தின் அரிய படைப்புக்களில் ஒன்று, அதை நிராகரிப்பதும் பழித்துரைப்பதும் ஒரு அராஜகப்போக்கிற்குத தான் இட்டுச் செல்லும் என்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணன் கம்பராமாயணத்தின் சிறப்புகளை விளக்கி ஆறு புத்தகங்களை எழுதினார். ஜீவா கம்பன் கழகக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். அவர் 13வது ஆழ்வார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடைசியில என்ன ஆச்சுன்னா கம்பனையே ஒரு பெரிய சோஷலிஸ்ட்டாக காட்டக்கூடிய அளவுக்கு வேற ஒரு எக்ஸ்ட்ரீக்முக்கு போயிடறாங்க. தாமரை பத்திரிகையின் முத்திரை வாசகம் ‘வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ கம்பராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். தமிழகத்தின் பண்பாட்டுத் தளத்தில் இப்படித்தான் கம்யூனிஸ்ட்கள் தலையிடத் தொடங்குகிறார்கள்.

இந்த தலையீட்டில் உள்ள பிரச்னை என்னன்னா ராமாயணத்தில் வெளிப்படும் சமூகவியல் உண்மைகளுக்கும் சமகாலத்தின் சமூகநீதி அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் காணத் தவறியதுதான்.

ஆதவன்- கம்யூனிஸ்ட்கள் பெரியாரை கையிலெடுக்கணும்னா எதை ஒட்டி எடுக்கலாம்?

பிரளயன்- எதை ஒட்டின்னா, சமூக நீதிக்காக குரல் கொடுக்கவேண்டி இருக்கு... அனைத்துப்பகுதி உழைக்கும் மக்களை வர்க்கரீதியா அணி திரட்டறபோது இந்த கேள்விகள் தானா உதிர்ந்திடும் என்ற பார்வை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அந்தப் பார்வையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில வர்க்கங்கிறது தனித்து உருவாகல... ஏற்கனவே இருக்கும் சாதி அமைப்புகளிலிருந்துதான் வர்க்கம் கட்டப்படுகிறது. அதாவது இங்கே வர்க்க கட்டுமானங்கள் ஏற்கனவே இருந்த சாதி கட்டுமானங்கள் மேல்தான் உருவாகி இருக்கு. அதுதான் இன்றைய புரிதல். இந்தப் புரிதல் கருத்தியல் ரீதியா இன்னும் நிலைபெறணும். கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி செய்தது சாதிமறுப்புத் திருமணம். தமிழ்நாட்டுல சுயமரியாத திருமணம் அறிமுகப்படுது.

ஒரு மாடல் ஒரு மாற்றுப் பண்பாடு. உடை அணிதலிலிருந்து எல்லாத்திலயும் உருவாக்கறாங்க. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்கள் நடைமுறையில செஞ்சதுண்டு ஆனா கேள்விகளா வரும்போது அவங்க பெரியாரின் கருத்தியலை வெளிப்படுத்தாதனால ஏதோ அவங்க இந்த கேள்வியெல்லாம் கேட்காதவங்க இந்த விஷயத்துக்கெல்லாம் உடன்படாதவங்க என்கிற மாதிரி ஆயிடுது. உண்மையில் அன்றாட நடைமுறையில் அவங்க சாதியத்துக்கு எதிராகத்தான் இருந்தாங்க.இன்று மார்க்சிஸ்ட் கட்சியோட மத்திய குழுவின் கருத்தியல் ரீதியான நிலைபாடு, வழிகாட்டுதல், தலித்களுடைய அணிச்சேர்க்கை என்பது சாதிய ரீதியான அணிச்சேர்க்கை அல்ல என்கிறது. அதை ஒடுக்கப்பட்டவருடைய அணிச்சேர்க்கையாகத்தான் கட்சி பார்க்கிறது. அதேநேரத்தில் தலித் அணிதிரட்சி மூலமாக மட்டுமே தலித் விடுதலையை எய்திவிட முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.

இன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை என்பது வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெறுவதுதான். இதனால்தான் அயோத்திதாசர் பெரியார், ஜோதிராவ் பூலே, அம்பேத்கருடைய சமூகநீதிக் கருத்துக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான விடுதலை இயக்கம் உள்வாங்கி செயல்படவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல சங்பரிவாரங்களின் இந்துத்வ அணிதிரட்சிக்கு எதிரான கருத்தியலில் இவர்களது பங்களிப்பு முக்கியமானது.

ஆதவன்- சாதி மறுப்பாளர்களை ஏற்றுக்கொள்வதில் தலித்துகளுக்கு பெரிய மனத்தடை இருக்கு. சாதிய படிநிலையை உருவாக்கியது பார்யுப‎னர்கள்ன்னு சொன்னாலும் அதை இப்போ காப்பாற்றுகிறவர்கள் இடைநிலைசாதியர்களே என்கிறார்கள். அதனால் இடைநிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையிலிருக்கும் முரண்பாடே முக்கியமானதென்று வலியுறுத்தகிறார்கள். இடைநிலை சாதி ஆதிக்கத்தை எதிர்க்க தலித்துகளுக்கும் பார்ப்பனர்களுக்குமான கூட்டுதான் இன்றைக்கு தேவை- நேரடியான ஒடுக்குமுறையில் ஈடுபடாத பார்ப்பனர்களோடு கூட்டுசேர்வதில் தவறில்லை என்கிற கருத்தும் முன்வருகிறது. அதுக்கு வெளிப்படையான உதாரணம் உ.பி.யில் மாயாவதி நடத்தியிருக்கும் பார்யுப‎னமேளா. இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

பிரளயன்- பார்ப்பன தலித் கூட்டணியை சில தலித் கருத்தியலாளர்களும் மாயாவதியும் தான் முன்வைக்கிறார்களேயொழிய, உயர்சாதிக்கட்சியான பி.ஜே.பி அல்ல. இங்கு தமிழகத்தில் பி.ஜே.பி என்ன செய்ய நினைக்கிறது தெரியுமா? இடைநிலைச்சாதியினரை தனது கருத்தியல் வளையத்துக்குள் கொண்டுவருகிற முயற்சியை செய்கிறார்கள். சி.பி.ராதாகிருஷ்ணனும் திருநாவுக்கரசரும் பி.ஜே.பியின் முன்னணித் தலைவர்களானது தற்செயலான நிகழ்ச்சியல்ல. இடைநிலைச்சாதியினரை மேல்நிலையாக்கம் செய்வதன் மூலமும் அவர்களுக்கு கொம்பு சீவிவிடுவதன் மூலமும் இதைச் சாதிக்க முயல்கிறார்கள். சீவப்பட்ட இடைநிலைச்சாதியின் கொம்பு யாரைக் குத்தும்? ஏற்கனவே தென்மாவட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதில் எண்ணெய் ஊற்றி ‏குளிர் காய்கிற வேலைதா‎ன் நடக்கும்.

பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையி‎ன் நாயகர்கள் யார்? ‏ இந்த இடைநிலை சாதியி‎னர்தானே. 96லிருந்து ஒன்பது வருடமா இந்தப் பிரச்சினை இருக்கு. இது தமிழ்நாட்டுக்கே பெரிய அவமானம். வடஇந்தியாவில் இந்த மாதிரி கிராமங்கள் இருக்கலாம் அதெல்லாம் வெளிச்சத்துக்கு வரல. ஆனந்த விகடன் பேட்டியில தலித்துகள் அதிகாரத்துக்கு வந்தா குலதெய்வத்துக்கு ஆகாதுங்கறான். ஒரு ஐயர் வந்து பூஜை பண்ணிட்டு போறதை ஒத்துக்கிறான். அவங்க மனநிலை ரொம்ப அதிர்ச்சியூட்டறதா இருக்கு. தென்மாவட்டங்களில் அதிகம். இதுக்கான எதிர்ப்பு ஒருங்கிணைந்த முயற்சியில நடக்கனும். அதுக்கு இடதுசாரி இயக்கங்கள் தயாரா இருக்காங்க. தலித் இயக்கங்கள் அப்பறம் அங்க சிவிக் முவ்மெண்ட் ஏதாவது இருக்கான்னு பார்த்து அவங்கள எப்படி கையாள்வதுன்னு முயற்சி பண்ணணும். குறிப்பா குற்ற உணர்வே இல்லாத அந்த மக்களோடு மனநிலை ரொம்ப அதிர்ச்சியூட்டறதா இருக்கு. தென்மாவட்டங்களில் தலித் அல்லாத மக்கள், தேவையில்லாம இத பெருசு படுத்தறத்தா பேசிக்கிறாங்க. இந்த பேச்செல்லாம் அபாயச் சங்கு மாதிரி இருக்கு. ஆனா இங்க ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல. அந்த கிராமங்களுக்குள்ள போகனும். அந்த கிராமங்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற தலித் மக்களுடைய நிலைமை ரொம்ப சிக்கலானது. அதை நியாயப்படுத்தற மாதிரிதான் அவங்க பேசமுடியுது. இதை பெரிய சவாலாகத்தான் நாம எடுக்கனும்.

பார்த்திபராஜா- பெரியார் தெளிவா இந்திய தேசியத்தை நிராகரிச்சாரு அதுல அவருக்கு பெரும்பாலான பங்கு உண்டு. இடதுசாரிகள் பெரியாரை கையில் எடுக்கும்போது அந்த பிரச்சனைக்கான பதில் என்ன? அதைவிட்டுட்டு பெரியாரை பார்க்க முடியுமா?

பிரளயன்- பெரியாரை தேசிய இன விடுதலைக்கான ஆளா மட்டும் பார்க்க முடியாது. பெரியார் எப்படி இன்னைக்கு உத்தரபிரதேசத்துக்கு Relevent ஆகறாரு. அது முக்கியமான விசயமில்லையா? ரொம்ப விரிந்த இடத்துல அவர் பேசறார். அதவிட ரொம்ப முக்கியமா சமூக நீதிக்கான அடித்தளத்தைத்தான் வைக்கறாரு. அதை விட்டுட்டு பெரியாரை பார்க்க முடியாது. பெரியாருடைய சாராம்சத்தைத்தான் நாம பேசறோம். அதை வெளிப்படுத்துவதற்கான பல நடமுறைகள் இருக்கு. எல்லா நடைமுறைகளையுமே, அன்றைய காலத்துல அந்த கண்ணோட்டத்துல புரிஞ்சிக்கிறது தான் சரி. அதை இன்று நடக்கற விஷயங்களோடு யாந்திரீகமா பொறுத்திப் பார்ப்பது சரியா இருக்காது. அம்பேத்கர் ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகிறார். அதுக்கு நியாயமான காரணங்களை சொல்றார். இங்கிருக்கற சுதேசிகளைவிட அவங்களைத்தான் நம்பறார். ஏன்னா சுதேசிகள் உயர் சாதியினரா இருந்தாங்க.. அப்ப அம்பேத்கருடைய சாரம்சம் என்ன? அதெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு. அந்த வெளிப்பாடுகள் அந்தந்த சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுது. அதை அந்த contextல வைத்துப் பார்க்கணும். அதை de-contextualise செய்து பார்க்கக்கூடாது.

தெலுங்கானா போராட்டதில் கம்யூனிஸ்ட்கள் மக்களை திரட்டறப்ப- அதாவது தலித்கள், தலித் அல்லாதவர்களை ஒன்றிணைக்கும்போது- அவர்கள்மீது வச்ச பெரிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா? ‘கம்யூனிஸ்ட்கள் மாட்டுக்கறி திங்கறவங்க’ என்பதுதான். தலித் அல்லாத சாதியினரிடமிருந்து கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்த இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது. அன்றைக்கு இன்றிருப்பதுபோல பண்பாட்டு அரசியல் பற்றி- Cultural Ideology பற்றி Cultureக்கு இருக்கிற Ideological role பற்றி பெரிய புரிதல் எல்லாம் இல்லைனாகூட இந்த பிரச்னைகளை அவங்க அடையாளம் கண்டிருக்காங்க. இது கேரளாவில் நடந்திருக்கு, மேற்கு வங்கத்தில் நடந்திருக்கு. பல இடங்களில் இப்படி நடந்ததுனாலதான் இன்னிக்கு மக்கள் மத்தியில் அவங்க இருக்காங்க. எல்லோரிடமும் விடை காணமுடியாத கேள்விகள் இருக்கு. ஒரு அமைப்பு மட்டுமே எல்லாவற்றுக்கும் விடை காணமுடியாது. விடை காணுகிற முயற்சிகள் இருக்கு. சருக்கல்கள் தவறுகள் நடந்தாலும் அதை திருத்திக் கொள்கின்ற ஏற்பாடுகள் இருக்கு.

பார்த்திபராஜா- கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை திட்டம்தான் வழிகாட்டும் இல்லீங்களா, தத்துவம் வழிகாட்டும் திட்டம் செயல்முறைப்படுத்தும். தஞ்சைப்பகுதிகளிலோ சாதியப் பிரச்சனைக்கு செயல் திட்டத்துல வக்கலையே. அந்த பெரிய முரண்பாடு இருக்குல்ல. அதனாலதான் இன்னிக்கு இடதுசாரிகளோட பங்குபற்றி கேள்விகள் கேட்கப்படுது. திட்டத்துல இல்லாம களத்துல மட்டும் சின்னச் சின்ன வேலைகள் செய்யறங்க என்பதுபோல...

பிரளயன்- பீகார், உபி, அங்கெல்லாம் சமூக நீதிக்கான கேள்விகள் பிரச்சனைகள் மேலெழுந்திருக்கு. லல்லுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இவர்களது வளர்ச்சியை குறிப்பிட்ட சாதிப்பிரிவுகள் அதிகாரம் பெருகிற முயற்சியாகத்தான் பார்க்கணும். சாதீய கட்சியா மட்டும் பார்க்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினர் இன்னைக்கு வரைக்கும் சமூகத்துல பின்தங்கிய பிரிவினர் ஒரு அதிகாரம் பெருகிற முயற்சிக்கு வந்திருக்காங்க. ஒரு ஜனநாயக வழியில் வந்திருக்காங்க. இந்தக் கேள்விகள் எல்லாத்தையுமே Democratic Question -ஆகத்தான் பார்க்கறோம். சமூக மக்கள் தங்களை ஆற்றல்படுத்திக் கொள்கிற முயற்சி இது. ஒருவன் தன்னை சமூகமாக முதல்ல அடையாளம் காண்பது தான்சார்ந்த சாதிமூலமாகத்தான். அதன் மூலமா பேரம் பேசுகிற உரிமையை பெற முடியுமா ஆதாயம் பெற முடியுமா என்று பார்க்கின்றான். இதுதான் சாதி அமைப்புகளோட தோற்றம்.

100 வருடங்களுக்கு முன்பிருந்த சாதியின் தன்மைகள் வேறு. இன்று பேரம்பேசுவதற்காக அமைப்பாக திரண்டிருக்கும் சாதியின் தன்மைகள் வேறு. தலைமை தடம் புரண்டு போய்விடலாம். பின்னால அணிதிரண்ட மக்களுக்கு துரோகமிழைத்தவிட்டுக்கூட போய்விடலாம். ஆனாலும் அணிசேருகின்ற சூழல் என்ன? அதிகாரம் பெறுவதற்கான முயற்சி. ஜனநாயகத்துல இது நடக்குது. இதுதான் ஜனநாயகம் அடிமட்டம்வரை போறதுக்கான அடையாளம். ஜனநாயகம்னா தங்களுக்கான உரிமைகளை போராடிப் பெறுவதற்கோ அல்லது பேரம்பேசி பெறுவதற்குமான ஒரு முயற்சிதான். ஒரு Negotiable Terrain உள்ள இருந்து செயல்படுவதுதானே... அந்த மாதிரி புரிதல் எல்லாம் இன்னைக்கு இருக்குது. ஆனாலும் ‏‏இப்படி அணி திரள்கிற அந்த மக்கள் பகுதியினரி‎ன்‎ மு‎ன்னேற்றம் எல்லோரையும் உள்ளடக்குகிற ஒரு ஜ‎னநாயக இயக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியம். அதனால்தா‎ன் ஒரு குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவினரை மட்டும் அணி திரட்டியவர்கள் பிறகு பல சாதிப் பிரிவினரையும் உள்ளடக்கி திரட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி‎ன்ற‎னர். அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுக்கிறபோது ‏ இது நடக்கிறது.

ஆந்திராவில கத்தார் எடுத்துகிட்ட மாதிரி, அவங்க மரபு கலைவடிவங்களிடமிருந்து ஒரு தேசிய இனத்தினுடைய விஷயங்களை எடுத்துகிட்டா, அந்தப் பிரச்சினைக்கு வெளில இருக்கிறவங்க அதைப் பயன்படுத்த முடியாத ஒரு கட்டம் நடக்குமில்லையா... அந்த தேசிய இனத்துட கலை வடிவங்கள் இங்க பறையை பார்ப்பனர்கள் தொடமுடியாதுதானே... அப்படித்தானே இன்னிக்கு வரைக்கும் ஒரு நிலை இருக்கு... அது இல்லாம வேறு வடிவங்களுக்குப் போகும்போது அவங்களும் வந்து சேர்ந்துக்கிறது இருக்கு... அப்போ உலகமயம் ஒரு நெருக்குதலை ஏற்படுத்தும்போது இன்னும் கூடுதலா தேசிய இன அடையாளச் சிக்கல்கள் வரும்போது ஒரு தேசிய இனக் கலைவடிவத்தை ஆக்டிவிஸ்ட் முன்னெடுக்கறது அல்லது அதை முன்வைத்து ஒரு கலாச்சார சீரழிவை எதிர்கொள்வது அப்படிங்கறது இன்னும் கூடுதலான எதிர்ப்பாக இருக்குமா?

பிரளயன்- இது இப்போதைக்கில்ல.. நம்முடைய புதிய புரிதல், அதுவும் சங்கீத் நாடக அகாடமியோட வேர்களை தேடும் முயற்சி, அதுவும் மேற்கத்தியக் கண்களுக்காக உருவான நாடக முயற்சிகளில்தான் நாம் மரவை தேட ஆரம்பித்தோம்.. தலித் கேள்விகள், தேசிய இனக் கேள்விகள் வந்தபிறகு நாம் மரபைத் தேட ஆரம்பிக்கல. IPTA( Indian Peoples Theatre Association) வுடைய ஆவணங்களை பார்த்தீங்கன்னா, எல்லா நாட்டார் கலைகளுக்கும், நாட்டார் வழக்காறுகளுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.. மகாராஷ்டிராவில் இருக்கிற பல வடிவங்களில் ‘பாவாடா’ங்கற கதைசொல்லும் பாடல் வடிவம் உண்டு. குறிப்பாக மராட்டிய மன்னன் சிவாஜியப் பற்றியே எல்லா பாடல்களும் இருக்கும்- இங்க கட்டபொம்மன் கதைப்பாடல்கள் இருக்கிற மாதிரி...
அந்த வடிவத்தை தன்வயமாக்கி இப்டா சிறப்பா பயன்படுத்துது.. எல்லா வடிவங்களுக்கும், எல்லா கலைஞர்களுக்கும் இப்டாவில் ஒரு முக்கியத்துவம் இருந்திருக்கு... பாவாடல இருக்கிற மிகப்பெரிய கலைஞர் பொதுச்செயலாளர் பொறுப்புக்கெல்லாம் வந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.

கத்தார் கைக்கொண்டது தெலுங்கானா பகுதியில் ஆடுமேய்க்கிற மலைமக்களுடைய கலைவடிவம். குறிப்பாக ‘மக்கள் யுத்தக் குழுவினர்’ செல்வாக்கு பெற்ற பகுதியில் இருக்கிற மலைமக்களுடைய கலைவடிவம். அது ரொம்ப பெரிய பாதிப்பை ஏற்படுத்துது. இது தெலுங்கு தேசிய இனத்துக்கான அல்லது தெலுங்கானாவுக்கான கலைன்னு தெரியல. அங்கே எல்லா பகுதியிலும் பொதுவா இருக்கிற கலைவடிவம் வீதிநாடகம் அல்லது புர்ரகதா... அதுக்கு வரலாறுகளும் உண்டு. கிருஷ்ணதேவராயர் காலத்துல இந்து மறுமலர்ச்சி நடக்கறபோது இந்த வடிவங்கள் மூலமா எல்லாப் புராணங்களையும் மக்கள் மத்தியில பரப்புற முயற்சி நடக்குது. கத்தார் இந்த வடிவத்தை எடுக்கல. ஏனெனில் புராணக்கதைகளோடு அது அடையாளம் காணப்படுவதால அதை எடுக்கல. ஒடுக்கப்பட்ட மலைமக்களோட கலையைத்தான் அவர் எடுக்கிறார். தேசிய இனம் என்ற கேள்வியைக் கேட்டு, தேசிய இனத்திற்கான கலைவடிவத்தை தேடுவதற்காக முயற்சியை அவர் செய்யவே இல்லை. தமிழ்நாட்டில் கூத்தை தமிழ்அரங்கு என்று சிலர் சொன்னதைப்போல அவர் மலைமக்கள் வடிவத்தை தெலுங்கு அரங்கு என்று சொல்லவில்லை. இந்த பின்னணியை ரொம்ப முக்கியமா புரிஞ்சுக்கணும்.

ஆதவன்- தலித் இயக்கங்கள் பறையை விடுதலையின் அடையாளமா எடுக்கறாங்க இல்லையா... ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஒட்டுமொத்த அடையாளமாக அதைப் பார்க்க முடியுமா?

பிரளயன்- தலித் இயக்கத்துலயே இரண்டு அழுத்தங்கள் கொடுக்கறாங்க. இந்த கலைகளையெல்லாம் முன்னிறுத்தனும் என்று சிலரும் செய்யாதிங்கன்னு சிலரும் சொல்றாங்க. இப்பவும்கூட பறையடிப்பது ஒரு இழிவான செயலாகவும், பறை என்பது மேடையிலும், சபையிலும் நிகழ்த்தப்படும் கலையாக கருதப்படாதபோது... அதுக்கு எதிர்வினையாற்றுகிற வேலையைத்தான் இன்று பண்பாட்டு இயக்கங்கள் செய்கின்றன. ஒடுக்கப்பட்டோர் கலைகளை மேடையில் ஏற்றுவது அதனை மேடைக்கலையாகவே மதிப்பது என்பதைத்தான் கடந்த பத்தாண்டுகள்ல செய்தியிருக்கோம். கலைஇரவுகள் அதுக்கு பெரிய பங்கு வகிக்குது. எதிர்வினையாற்றணும்கிறது ஒரு உந்துதல்தானே தவிர , திட்டவட்டமான பெரிய அரசியல் புரிதல், பண்பாட்டு புரிதலோட நடக்கலங்கறதுதான் உண்மை.. புரிதலை நாம உருவாக்கணும். உருவாக்கத் தவறிவிட்டோம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்தமான ஒரு விஷயத்தை தமிழுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு பொதுவான கலையைச் சொல்லமுடியுமா?. அது கூத்துதான், பறைமட்டும்தான்னு சொன்னா கடுமையான எதிர்வினை வரும். இன்று ஒற்றைப் பரிமாணத்துல தமிழ்நாட்டை நாம புரிஞ்சுக்கவே முடியாது. பறைன்னு எடுத்துக்கிட்டாகூட இங்க அடிக்கற பறைவேற, சிவகங்கைல அடிக்கற பறை வேற. அவங்க செய்யற விதம் வேற, இவங்க செய்யற விதம் வேற. வட்டாரத்துக்கு வட்டாரம் மாறும். உள்ளூர் சார்ந்தது. வித்தியாசங்கள் இருக்கு. அந்த வித்தியாசங்களுக்கு இடம் கொடுக்கணும். நாம என்ன பன்றோம் புதிதா தமிழ்தேசியம் பேசும்போது, ஒரு தரப்படுத்துகிற தவறை அறியாது செய்யறோம். தமிழர்களுக்கெல்லாம் பொதுவானது என்று, பெரிய கேள்விகளையெல்லாம் மறந்துவிட்டு சுலபமாச் சொல்லிடறோம்.. சந்திக்க வேண்டிய கேள்விகள் பிரச்சினைகள் இருக்கு... தமிழனுக்கான இசை என்ன?. தமிழனுக்கான இசைன்னா எல்லாம்தான்... பாணர், விறலியர் காலத்துலருந்து வர்ற ஒரு இசையோட நீட்சியும் தொடர்ச்சியுமா இருக்கிற எல்லா வடிவங்களும்தான்

பெரியசாமி: இப்படியான இந்திய தமிழகச் சூழலில் உலகமயம் நிகழ்த்தும் குறுக்கீடு எப்படியானது?

பிரளயன்: பண்பாட்டைப் புரிஞ்சுக்கற தளமே உலகமயமாக்கல்தான். அவங்க எந்த ஒரு புதிய கண்ணோட்டங்களைக் கொண்டு வந்தாலும், அணுகுமுறையைக் கொண்டுவந்தாலும் அது ஒரு பழக்க வழக்கம் மூலமாகத்தான் வருது. இதில் எதை நாம தேர்வு செய்யறது எதை நாம விடறது எப்படி நிலைகொள்றது அப்படியெல்லாம் பாக்கறதோடு என்ன மாதிரி Resistenceஐ நாம கொடுக்கனுங்கறது முக்கியம். உலகமயமாக்கலுக்கு எதிர்வினையை- எதிர்ப்புணர்வுகளை-செயல்களை உருவாக்குவதில் நாம ரொம்ப பின்தங்கியிருக்கிறோம் எல்லாவற்றிலும் அது நம்மை விழுங்கிக்கொண்டே போகிறது.

ரொமிலா தாப்பர் Perceiving the Forest in ancient India தலைப்பில் சென்னையில் நிகழ்த்திய உரையில் ஆசிரமங்கள் தான் காட்டில் நடந்த முதல் அத்துமீறல் என்று சொன்னாங்க... பர்ணசாலைகளும், ஆசிரமங்களும் காட்டுக்குள்ள வந்தது மற்றமைக்குள்ள நடந்த முதல் அத்துமீறல்னு (Intrusion into the otherness) ன்னு சொன்னாங்க... பர்ணசாலைகளும், ஆசிரமங்களும் எப்படி அமையுது.. முனிவர்களாக இருக்கறவங்களுக்கு அரசன் தானம் கொடுத்துதான். ஏற்கனவே காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு இருப்பவனுக்கும் அங்க போறவனுக்குமான மோதல் உருவாகுது அப்ப நீதியை நிலைநாட்டுறேன்னு தன்னுடைய ஆதிக்கத்துக்குள் வராத பகுதியான வனங்களுக்கு அரசன் போறான். அத்துமீறல் தானே இது.

ஆசிரமம் என்ற பெயரில் காட்டுக்குள் இன்றும் ஆக்ரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிறுவாணி அணைக்கிட்ட வெள்ளியங்கிரி மலை ரொம்ப அமைதியான இடம். சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா? தெற்காசியாவில் மேற்குமலைத் தொடர்ச்சியின் கிழக்குபகுதியில ரொம்ப அபூர்வமான தாவர உயிரினங்கள்- பல்லுயிர் வளங்கள் இருக்கிற இடம் அது. அந்த இடத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் இருக்கு. இந்தப்பக்கம் பால்தினகரன் பெரிய இடத்தை பிடிச்சி கட்டி வச்சுருக்கார்... அமைதியான இடம்கிறதால இங்கே போவதில் நடுத்தர மக்களுக்கு பெரிய ஈர்ப்பிருக்கு இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய பாதகமாப் பார்க்கிறாங்க... எத்தனைப்பேருக்கு இது தெரியுது? வெள்ளியங்கிரில ஏற்கனவே இருக்கற கோயிலுக்கு ரோடு கிடையாது. ரெண்டு குச்சிய ஊனிக்கிட்டு கைடு துணையோடு நடந்து தான் போகணும். மனிதர்கள் அதிகமா புழங்காம இருப்பதால இயற்கை வளத்தை அழிக்காம, இயற்கையின் ஒரு பகுதியா அந்த கோயில் இருந்துட்டு வருது. ஆனால் ஈஷா சென்டர் வந்த பிறகு கார்ல குறிப்பிட்ட தூரம் போகலாம். அப்புறம் சுத்தி கட்டிடங்கள் வந்துக்கிட்டே இருக்கப்போகுது.. அதைச்சுத்தி வியபாரம் உருவாகப் போகுது. முக்கியமான பல்லுயிர் வளம், தாவரவளம் நிறைந்த, இயற்கைச்சூழல் மிகப்பெரும் அபாயத்திற்கு உள்ளாகியிருக்கு. ஆன்மிகம்-ஆத்மா- அமைதி- மனஅமைதி இதெல்லாம் இன்று சந்தைச்சரக்கு. நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாகத்தான் இதையும் பார்க்கவேண்டும். இதையெல்லாம் பற்றிய கேள்விகளை உருவாக்கி கொள்வதில்லை. நம்முடைய விசாரம் வேறாகவே இருக்கு.

உலகமயம் கடந்த பத்தாண்டுகளாக அதிவேகமாக முன்னேறி வருது. அதற்கு ஏதுவான தொழில்நுட்ப வளர்ச்சி, இன்டர்நெட் வழியா உடனடியாய் கிடைக்கிற புதியதகவல்கள்- தகவல் தொடர்பு, முன்பைவிட தொழில்நுட்பங்கள் உலகநாடுகளுக்கு உடனடியாக கிடைப்பது ஆகியவற்றையும் நாம் புரிந்து கொள்ளணும். ஆனால் உலகமயமாக்கலின் பண்பாட்டு முகமானது இந்தியாவிலும் பலநாடுகளிலும் எதிர்வினைகளை உருவாக்குது. அது ஒரு பண்பாட்டு தேசியத்தை கிளப்பி சிக்கலாக்குது. அதுவும் அமெரிக்காவிலேயே போய் வாழற பல இந்தியர்கள் - எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தங்களுக்கு ஒரு அடையாளம் வேணும்னு சொல்லி தங்களை இந்துவா அடையாளம் காணுகிற ஒரு தன்மை இருக்கு. இந்தச் சூழ்நிலையில் உலகமயப் பண்பாட்டக்கு எதிர்வினையாக பண்பாட்டு தேசியத்தை உருவாக்கும்போது பலவித அடையாளப் பிரச்னைகளை கிளப்பிவிடுது. பிரதேச அடையாளங்களுக்கு ஒரு புத்துருவாக்கம், சாதிய அடையாளங்கள் முன்னைவிட அதிகமா கூர்மையடையறது, குழு அடையாளங்கள், இனம் சார்ந்த அடையாளங்கள், எல்லாமே ஒரு எதிர்வினையா மேலெழும்புது. இதுதான் இன்னிக்கு பண்பாட்டு இயக்கத்தோட தலையாய பிரச்னையாயிருக்கு.

உலகமயமாக்கலுடைய இன்றைய நவீன நுகர்வியத்துக்கு ஒரு செக்யூலர் முகம் உண்டு. உலகமயமாக்கல் ‘நுகர்வாளர்’னு ஒரு தட்டில் எல்லாரையும் நிறுத்தினாலும் இந்தியச்சூழலில் வேறுவிதமா, மேல்நிலையாக்கத்துடைய உந்துசக்தியா வேலை செய்துக்கிட்டிருக்கு. இந்துத்துவ திரட்சிக்கு ஒரு விதத்துல உதவி செய்யுது. அன்னிய விசயங்கள் வரும்போது மக்கள் மத்தியில ஒரு பயம் ஏற்படுது. அதனால இயல்பாகவே ஒரு Resistence கொடுக்கனும்னு நினைக்கிறாங்க.. இந்துத்துவாவை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஒரு மாற்று தேசியத்தை- பண்பாட்டு தேசியத்தை, முன்வைக்கிறபோது மக்கள் அதை நோக்கி செல்றாங்க. அதுவும் நகர்மயமாக்கப்பட்ட- நுகர்வு கலாச்சாரம் அதிகமா இருக்கிற பகுதிகளில் மக்கள் இந்த பண்பாட்டுத் தேசியங்களுக்கு சாய்ந்து போகிறார்கள். .

எல்லாவற்றையும் விட இன்றைய மிகப்பெரிய சவால், மீடியாக்கள் வழியாக வீட்டின் வரவேற்பறையில் உலகமயம் முன்வைக்கும் மற்றமை (Otherness) குறித்த தாழ்வான கண்ணோட்டம்தான். மற்றமையை குறைத்து மதிப்பிடுவது, அப்புறம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது, தன்னையே பிரித்துக்கொள்வது, உயர்த்திக் கொள்வதுங்கிற மனோபாவத்தை அது உருவாக்குகிறது. இந்தியச்சூழலில் ஒவ்வொருவனும் தனது சாதிப்பெருமிதத்தை கூர்தீட்டிக் கொள்வதும் பிற சாதியை இழிவாக பார்ப்பதும் நமது பண்பாட்டில் இருந்துவருகிற ஒன்று . இது கெட்டிப்படுவதற்கு இந்த மனோபாவம் உதவுகிறது. உலகமயமாக்கல் எல்லைகளையெல்லாம் உடைக்குது. ஆனால் அது மக்களை ஒன்றிணைப்பதற்கோ தேசங்களை ஒன்றிணைப்பதற்கோ எல்லைகளை உடைக்கவில்லை. எல்லை வகுத்துக் கொள்கிற உரிமையை நம்மிடமிருந்து பறிப்பதற்காகவே அது எல்லைகளை உடைக்கிறது. தேசக்கோடுகளை உலகமயம் உடைக்குதுன்னா எல்லாத்தேசங்களையும் பன்னாட்டு மூலதனங்களின் franchiseயாக மாற்ற அது உடைக்கிறது. உலகமயம் வேறு, தேசங்கள் தாண்டி எல்லைகள் தாண்டி மனிதர்களுக்குள்ளே ஒரு நேசத்தை ஏற்படுத்துகின்ற சர்வதேசியம் வேறு.

Exclusionஐ முன்வைக்கிற பண்பாட்டு தேசியத்தையும் உலகமயமாக்கலின் பண்பாட்டு முகத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான் நமக்கு எதிரே உள்ள சவால். அது மிகவும் சுலபமான வழிமுறையாகவும் இல்லை. ஒவ்வொரு இடத்துக்கு இடம் மாறும். ஆனால் எதை நாம் அடிப்படையா வச்சிக்கினும்னா, தலித் கேள்விகளிலிருந்து- சிறுபான்மை இனம், சிறுபான்மை மொழி, சிறுபான்மை மதம், என எல்லாவற்றுக்கும் உரிய இடத்தை நிராகரிக்கிற - மனிதனை பிரிப்பதற்கு எதிரான ஒரு நிலைபாடுதான் நமது பண்பாட்டு வெளிப்பாடா இருக்கணும். அவங்க Exclusionஐ வச்சா நாம inclusionஐ வைக்கணும். அதாவது எல்லாவற்றையும் உள்ளடக்குவது. இந்த தேசம் எல்லாருக்குமான இடம்-எல்லோரும் சமமானவர்கள்-என்று எல்லோரையும் உள்ளடக்குவது. எந்த சாதியா இருந்தாலும், எந்த மதமா இருந்தாலும், எந்த இனமா இருந்தாலும், இந்த தேசம், பிரதேசம், ஊர், தெருவில் எல்லோருக்கும் அவரவருக்குரிய இடம் உண்டு. inclusion என்கிற இந்த கண்ணோட்டம்தான் நாம் உயர்த்திப்பிடிப்பதாய் இருக்கவேண்டும்.

அடுத்து, உலகமயமாக்கலுக்கான எதிர்ப்பு பண்பாட்டு ரீதியா வெடிக்காம, சிலநேரங்கள்ல வேறவேற ரூபங்களா வெடிக்குது. உதாரணமா, கேரளாவில் தேங்காயெண்ணெயை பாதுகாக்க பாமாயிலுக்கு எதிராக நடந்த போராட்டம், கர்நாடகாவில் பதனீர் தடைக்கெதிரான போராட்டம்- இதெல்லாம் பண்பாட்டு தளத்திலயும் பொருளாதார தளத்திலயும் சேர்ந்து வெடிக்கிற விசயம். உலகமயமாக்கலுக்கு எதிரானதையும் மேற்கத்திய பங்களிப்புகளுக்கு எதிரானதையும் இனங்காண தெரிய வேண்டும். நாம் வறட்டுத் தேசியவாதிகளல்ல. மேற்குநாடுகளிலிருந்து அறிவொளியுகம் கொடுத்த பல நவீன சிந்தனைகள் நம்மிடம் வந்திருக்கு. சமத்துவம்கிற கோட்பாடே பிரெஞ்ச் புரட்சியினுடைய ஒரு முழக்கம் தான். சமத்துவம்கிறதைத்தான் இன்னிக்கு பல விசயங்கள்ல பேசிக்கொண்டிருக்கிறோம். சமூகநீதியே சமத்துவத்திலிருந்து வருவதுதான். கடந்த காலத்தில ஏற்பட்ட இழப்புகளை இந்தக் காலத்துல ஈடுகட்டறதுக்கான முயற்சிகள்தான் சமூக நீதிக்கோரிக்கைகள், இடஒதுக்கீடு எல்லாம். இதை நமக்கு இனங்காணத் தெரியணும்... பண்பாட்டு தேசியத்துக்கு இவற்றை இனங்காணத் தெரியாது. எல்லாவற்றையும் அது நிராகரிக்குது.

இன்று நாம் எழுதும் சிறுகதை நாவல் எதார்த்தவாதம்னு கலை இலக்கியத்துக்கு மேற்கோட பங்களிப்பு நிறைய இருக்கு. உரைநடை, வசனக்கலை நம்மகிட்ட இருந்திருக்கு. ஆனா நம்ம கதை மாந்தர்கள் யாரா இருந்திருக்காங்க..? ரொம்ப உச்சபட்சமா போனா ராஜாவைத் தாண்டி கோவலன் மாதிரி ஒரு வணிகனாயிருப்பான். கோமானா இருப்பான். நம் இலக்கியத்துல பாடுபொருளாகவோ விசாரிப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லாத சாதாரண மனிதர்கள் கதைமாந்தர்களா இருப்பதும், அந்த சாமானியரின் பாடுகளை பாடுபொருளா சித்தரிப்பதும் ஐரோப்பாவில் தோன்றிய எதார்த்தவாதத்தின் கொடைதான். இதுமாதிரியான மேற்கின் பங்களிப்புகளை விமர்சனப்பூர்வமாக புரிந்து கொள்ளவேண்டும்.

சமூகங்களில் இருக்கிற- புராதன சமூகங்களில் இருக்கிற நல்ல அம்சங்களைக் கூட - அதாவது எல்லாவற்றையும் பொதுவாய் வைத்திருக்கிற நிலையை- ஒரு தனியாருக்கு மாற்றுகிறதுக்கான நியாயங்களை உலகமயம் வழங்குகிறது. மக்கள் சமூகம் பொதுவில் அனுபவிக்கிற எல்லா ஆதாரங்களையும் தனியார்மயமாக்குகிற முயற்சியைத்தான் உலகமயம் ஊக்குவிக்குது. நாம் ஒரு காலத்தில் தண்ணீர் என்பதை பொதுவாக அனபவித்து வந்தோம். அது சரக்காக விற்பனைப் பொருளாக மாறும்னு 15 வருசத்துக்கு முன்னாடி யாரும் கற்பனைகூட பண்ணினது கிடையாது. ஆனா இன்னிக்கு ஆயிருச்சு. எதுவாயிருந்தாலும் காசு கொடுத்துதான் பெறணும் என்பதை நியாயப்படுத்தி எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவதுதான் உலகமயத்தோட பொருளாதார இலக்கு. அதற்கான மனநிலையையும் அதற்கான பழக்கவழக்கங்களையும் அதற்கான சாத்தியப்பாடுகளையும் உருவாக்குவதுதான் அதனுடைய பண்பாட்டு முகம்.

உதாரணமா, கிரெடிட் கார்டு. எளிமையான வசதியான விசயமா தெரியுது. ஆனா அதுல ஒரு பெரிய பாலிடிக்ஸ் இருக்கு. எகானமி இருக்கு. ஒரு பொலிடிகல் எகானமியே இருக்கு. ஒரு பொருளை வாங்கறே, பணம் கொடுக்கிறே. பொருள் 180 ரூபாய்னா அதை கொடுக்கறே. அந்த தொகைக்கு வரி, சர்வீஸ் சார்ஜ் கட்டறே. வட்டி கொடுக்கறே. அப்புறம், ஒரு பொருளை தேவை அடிப்படையில வாங்கறதுன்னு இல்லாம, புதுசா வந்திருக்கு புது மோஸ்தர்ல வந்திருக்குங்கிறதுக்காக வாங்குகிற பழக்கமா மாறிடுது. நீங்க ஒரு டிவி வச்சிருந்தாலும் புதுமாடல்ல பிளாட் டிவி வந்த பிறகு ஒரு போதாமையை உணர்றீங்க. ஏற்கனவே நம்மகிட்ட இருக்கு. தேவையில்கூட மாற்றம் ஏற்படல. மற்றவங்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டறதுக்காக புதுசா வாங்கறது, வாங்கிக் குவிக்கிறது- இதுக்கெல்லாம் கிரெடிட் கார்டு உந்துசக்திய இருக்கு. முன்னயெல்லாம் பணமில்லன்னா எதையும் வாங்கமாட்டீங்க. கார்டு இருக்கறதால எப்பவும் வாங்கிடுறீங்க. கிரெடிட் கார்டும் மனிதனை தரம் பிரிக்கிறது. கிரெடிட் கார்டு யாருக்கு?. சம்பளக்காரனுக்குத்தான். ஒருகூலி விவசாயி ஏன் இந்த டார்கெட்டுக்குள் வரவேயில்ல?

வலுவான நுகர்வோன் (Volatile consumer) யாரோ அவங்களுக்குத்தான் அது. நாங்க வேறு வர்க்கம்... வேறு மனிதர்கள்... வேறு உலகம்.. என்று சொல்கிற ஒரு அடையாள அட்டை மாதிரி கிரெடிட் கார்டு ஒரு குறியீடாகவே இருக்கு. புதிய சந்தைப் பொருளாதாரத்துக்கான ஒரு முக்கியமான அறிகுறி இது. இதையெல்லாம் நாம் நிராகரிக்கணும். நாம் ஒருத்தர் நிராகரிச்சா ஒழிச்சிட முடியாது. உண்மைதான். உலகமயமாக்கலுக்கு எதிரா சந்தைப்பொருளாதாரத்துக்கு எதிரா அரசியல் பேசற நீங்க அந்த சந்தைப் பொருளாதாரத்தோட சின்னங்களை அணிந்திருக்கக்கூடாது. பண்பாட்டு ஊழியர்கள் மத்தியில் இதைப்பற்றியெல்லாம் புரிதல் இருக்கணும். இதை ஒரு நவீன தொழில்நுட்பம்னு நினைக்கிறாங்க. எங்கேயோ நீங்க வாங்கறதுக்கு எங்கேயோ எவனோ பணம் கொடுக்கிறான். உங்க கார்டை Read பண்றதில் உங்க கார்டை burn பண்ணும்போது உங்க கணக்கு நேர்செய்யப்படறதுல ஒரு தொழில்நுட்பம் இருக்கு தான். ஆனா அந்தத் தொழில்நுட்பம் எதுக்கு?

ஒரு காலத்தில் இம்மாதிரியான கார்டுகள் இருந்தது. அப்ப அதுக்கு அர்த்தம் வேறு. ஊர்ஊரா போறவங்க பாதுகாப்புக்காக- இன்னொரு இடத்துல பயன்படுத்தறதுக்காக அப்ப இருந்தது. ஆனா இப்ப முழுக்கமுழுக்க திட்டமிட்டு நீ காசு கொடுத்து எதையும் வாங்காதே... என் பொருள் விற்பனைக்கு வரும் போது உன்கிட்ட காசில்லேன்னாலும் பரவாயில்ல..என்று தூண்டுவது. இதனால், தேவை கருதி வாங்கும் நிலை மாறி வாங்கறது ஒரு அனிச்சை செயலாயிடுது. சரி, ஏன் இந்த கார்டு ஒருதரப்புக்கு மட்டும்.. கொடேன் எல்லாருக்கும்... விவசாயிகள் கிரெடிட் கார்டுலயே விவசாயம் பார்க்கட்டும்... கேட்கிறதுக்கு இது கேலியா இருக்கும். ஆனா Economic seclusion க்காக இதைப் பண்றாங்க. எப்பவுமே ஒரு சமூகத்துல இது நடக்கும். பொருளாதார ரீதியா வசதி படைச்சவங்க, தங்களோட வசதிக்கேற்ற மாதிரி தங்களுக்கான தனித்த ஒரு அடையாளத்தை பேணுவார்கள். மாதச்சம்பளக்காரர்களில் இருக்கும் middle income group, lower income group கூட இப்ப கிரெடிட் கார்டுக்குள்ள வந்துருச்சு. இதுக்கு மாற்றா, நாம இன்னொரு கிரெடிட் கார்டையா செய்யப்போறோம்? அது அல்ல. இது ஒரு மனநிலையை உருவாக்கிக்கிட்டே இருக்கு. ஒரு விசயத்தை- ஒரு மதிப்பீட்டை நியாயப்படுத்திக்கிட்டே இருக்குது. இந்த மதிப்பீடுகளுக்கு எதிரா நீங்க போராடும்போது இந்த மாதிரியான சின்னங்களையும் அடையாளங்களையும் கேள்விக்குள்ளாக்கணும். சிறிய அளவிலாவது இது நடக்கணும். அது ஒரு முக்கியமான விசயம்.

பண்பாட்டு தேசியமா வந்திருக்கிற இந்துத்வாவுக்கு 70, 80 வருட பின்னணி இருந்தாலுங்கூட இந்த 20 வருட வளர்ச்சி மிக முக்கியமானது. 1981 தேர்தல்ல 2 சீட் வாங்கின பி.ஜே.பி, 90 ல் 97 ஆகி, 96ல் 13 நாள் ஆட்சியில் இருந்து 98ல் ஆட்சியையே பிடிச்சிட்டுது. அவங்க என்ன செய்தாங்க? இந்து அடையாளத்தை முன்னிறுத்தி இந்துத்வ அணிதிரட்டலை ஆரம்பிக்கிறாங்க. இந்த அணிதிரட்சியை கேள்விக்குள்ளாக்குகிற எதிர் நிகழ்வாத்தான் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை கொண்டு வந்தார். இருந்தாலும் மத விசயமாக இதுவரையிலும் இல்லாத பிரச்னையை பெரிய அளவில் அரசியல்ரீதியா எதிர்கொள்ளும்போது அதுக்கான வலுவான தத்துவார்த்த ஆயுதம் நம்மிடம் இல்லை. எது வகுப்புவாத சொல்லாடல் , எது மதச்சார்பின்மைக்கான சொல்லாடல் என்று அடையாளம் காணமுடியாத குழப்பம் நம்மகிட்ட ரொம்பகாலமா இருக்கு. பி.ஜே.பி ஆட்சியில் செக்யூலர் என்ற வார்த்தை உச்சரிக்க முடியாதபடிக்கு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டது. அது ஒரு கெட்டவார்த்தை போல பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு அவங்களுக்கு கருத்துரீதியா செல்வாக்கிருந்தது. அரசியல்ரீதியா இப்ப பலவீனமடைஞ்சிருந்தாலும் இன்னிக்கும் பண்பாட்டுத்தளத்தில் அவங்க வலுவாகத்தான் இருக்காங்க. அவங்களை நாம குறைச்சு மதிப்பிட்டுடக் கூடாது. ரொம் எச்சரிக்கையா செயல்பட வேண்டிய காலகட்டம் இது.

சிவகுமார்- சமயச்சார்பின்மைக்கான சொல்லாடல் எது வகுப்புவாதத்துக்கான சொல்லாடல் எதுன்னு விளக்கலாமே..

ஒரு ஒற்றை அடையாளத்தை வைத்து அதை முதன்மைப்படுத்தி அவர்களுக்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த அச்சுறுத்தலுக்கு காரணமா இன்னொரு அடையாளத்தை நிறுத்தவது. இன்னொருத்தனுக்கு ஒரு அடையாளத்தை வழங்கி அவனை குரோதமா பார்க்கிறது... மதக்குரோதம், சாதிக்குரோதமெல்லாம் நம்ம மனசிலயும் நடைமுறையிலும் சிந்தனையிலும் காலங்காலமா ஊறியிருக்கு. இதுநாள் வரைக்கும் அதை யாரும் அரசியல்படுத்தல. அதை அரசியல் அறுவடை பண்றதுக்குத்தான் இந்துத்வா முயற்சி செய்யுது. அதுக்காக, நம்ம மனசுக்குள்ள இருக்கிற விசயங்களை- ஒவ்வொரு மனிதனுடைய அகநிலையில இருக்கிற- Subjectivity -யை தொட ஆரம்பிக்கிறாங்க. இதனால என்ன ஆகுதுன்னா நான் என்னை என்னன்னு சொல்லிக்கறது என்கிற கேள்வி எழும்புது பலரிடமும். முக்கியமான முற்போக்கான ஓவியர் ஒருவர், ‘காஞ்சா அய்லய்யாவிலிருந்து ரொமிலா தாப்பர் வரை பலரும் இந்துங்கிற வார்த்தையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்...அப்ப நான் என்னை என்னன்னு சொல்லிக்கறது..’ ன்னு கேட்கிறார். என் மதத்துக்கு எவ்வளவு தப்பான பேர், என்னை என்னன்னு சொல்லிக்க முடியாத குழப்பத்தில ஆழ்த்திட்டாங்களேன்னு வருத்தப்படாம, ஏற்கனவே இருக்கிற பேரை பறிக்கிறீங்களேன்னு வருத்தப்படறார்.

பார்த்திபராஜா: ஒரு அடையாளத்துக்குத்தான் இங்கே முக்கியத்துவம். இது இல்லேன்னா வேற என்ன அடையாளம்?

நம்ம அடையாளத்தை யார் எடுத்திட்டுப் போயிட்டாங்கன்னு கோபம் வராம, இப்ப இருக்கிற அடையாளத்தை ஏன் பறிக்கிறீங்கன்னு கோபப்படறாங்க. மேலோட்டத்தில் சாதாரணமா தெரிஞ்சாலும் இது ரொம்ப ஆழமான பிரச்னை. உதாரணமா, நம்மூர்ல நம்ம சமூகத்துல ஒரு மனிதனை மதத்தால் அடையாளப்படுத்தறது இல்ல. ஒரு கிராம சமூகத்தில், நாங்கள்லாம் இந்துங்க- அவரு முஸ்லிம்னு சொல்றதில்ல. அவர் நாயக்கர்... அவர் முதலியார்... நாங்க வன்னியர்... இவர் மலையாளி... அவர் சாயபு.. அவர் கிறிஸ்துவர்.. என்று தான் அடையாளப்படுத்தப்படறாங்க. பிறமதங்களோ அல்லது இன்னொரு தேசிய இனமோ ஒரு சாதியத்தின் நீட்சியாகத்தான் பார்க்கப்படுது. இப்படி சொல்ற பழக்கந்தான் மிக வலுவா இருக்கு. இந்த அடையாளத்துக்குப் பதிலாகத்தான் இந்துங்குற அடையாளத்தை கொடுக்கறதுக்கு முயற்சி நடக்குது. அது பல இடத்துல எடுபடல. ஆனா அந்த ஆபத்து இருந்துகிட்டுத்தான் இருக்கு. இந்த அடையாளங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுது. தன்னை, இன்னொருவரை, அடையாளப்படுத்துவது சாதியா இருக்கலாம் அல்லது ஊர்க்காரனா பார்க்கலாம். இப்படியெல்லாம் அடையாளப்படுத்துற எந்த இடத்திலேயும் இந்துங்க-முஸ்லீம்ங்கறது வர்றதே இல்ல. அடிப்படையா இருக்கிற இதுலதான் இந்துத்துவாவாதிகள் Intrude பன்றாங்க. இதை எப்படி நீங்க எதிர்கொள்ளப்போறீங்க? ஒவ்வொரு மனிதனுக்கும் பல்விதமான அடையாளங்கள் (Multiple identities) உண்டு. ஒற்றை அடையாளம் மட்டுமே இருப்பதில்லை. இந்த பல்வித அடையாளங்கடள மாறிக் கொண்டுமிருக்கும்.

உள்ளூர் சமூகங்கள், வட்டார குணாம்சங்களை முன்னெடுக்கனும்னு நாம் சொல்றபோது அதை மீட்டுருவாக்கமா என்கின்றனர் சிலர். இது மீட்டுருவாக்கம் கிடையாது எதிர்ப்புணர்வுதான். இந்துத்துவம் பெருந்தேசியம் பேசும்போது வட்டார தேசியம் பேசவேண்டியிருக்கு. வட்டார தேசியம் பேசும் போதே சில நேரத்துல பெருந்தேசியம் பேசவேண்டியிருக்கும். ஏன்னா அதனுடைய நோக்கம் எல்லாரையும் உள்ளடக்குகிற தன்மையில் இல்லை. ஒருத்தர பிரிச்சி வைக்குற தன்மையில இருக்கு. இம்மாதிரியான சொல்லாடல்கள் பற்றி ஒரு ஆழமான பார்வை தேவை.

பி.ஜே.பி ங்கிற கட்சியை தனிமைப்படுத்த தெரிந்த அளவிற்கு இந்துத்துவ சொல்லாடலைத் தனிமைப்படுத்த தெரியல. பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் செய்யறத, ஒரு பார்யுப‎னன் அல்லது மேல்சாதிக்காரன் முன்னின்று செய்கிற விசயங்களை சந்தேகப்பட்டு அதை தனிமைப்படுத்த தெரிஞ்சிக்கிட்டிருக்கோம். ஆனால் இந்த அமைப்புகள் இல்லாம இந்துத்துவாவின் சொல்லாடல் ஊடுருவும்போது நாம அதை கண்டுக்காம விட்டுடறோம். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்றதும் பிரச்சினை இருக்குனும்னு சந்தேகத்தோட பார்க்கிறோம். ஆனால் இப்படியெல்லாம் பேர் வச்சிக்காம ஏதாவது ஒரு சொல்லாடல் வந்தா நம்மால அதை அடையாளங்கண்டுபிடிக்க முடியாம போயிடுது.

ஆதவன்- அப்படி ஒரு சொல்லாடலை குறிப்பா சொல்லுங்களேன்?

சாதி இல்ல, சாதி இல்லன்னு சொல்றாங்க, ஆனா பள்ளிக்கூடத்துக்கு போனாதான் சாதி கேக்கிறான். அதுக்கு முன்னாடி எனக்கு சாதியே தெரியாதுங்கங்கிற கருத்தை நாம் உள்பட நிறைய பேர் உள்வாங்கி பேசிக்கிட்டிருக்கோம். சாதி மறுப்புக்கான ஒரு நோக்கம் இந்த கருத்துல இருக்குற மாதிரி தெரியுது. இது இயல்பாக சாதி எதிர்ப்புல இருந்து எழும் கேள்வி அல்ல. குறிப்பாக சமூகத்துல சாதி இல்ல, பள்ளிக்கூடத்துலதான் சாதி கேக்கிறாங்கிறதுல திட்டவட்டமான ஒரு நோக்கம் இருக்கு. சாதிய வலியுறுத்துறதுக்கும் நியாயப்படுத்துறதுக்குமா பள்ளியில சாதி கேக்குறான்? நூற்றாண்டு காலமா நடந்த சமூகநீதி போராட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அடைந்த இடஓதுக்கீட்டை சலுகையை பெறுவதற்கு ஒருவன் தகுதி உடையவனா என்று சோதிக்கத்தான் பள்ளியில் சாதி கேட்கப்படுகிறது. நீ சாதியை மதத்தை சொல்லனுங்கிற கட்டாயம் இல்லை. Nationality நிச்சயம் சொல்லியாகனும் ஆனா யாருமே அப்படி சொல்றதில்லை.

மதத்தை கேக்குறாங்கன்னு மதத்தை சொல்லிடறாங்க. பள்ளிக்கூடத்துலத்தான் மதத்தை கேக்குறாங்க-அதுக்கு முன்னாடி மதம்னா என்னான்னு தெரியாம இருந்தேன் என்று ஏன் யாரும் பிரச்சினை பண்றதில்லை? இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்த ஆர்.எஸ்.எஸ் சிந்தனைப் பண்ணையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இக்கருத்தை எல்லோரும் உள்வாங்கி திருப்பி சொல்றாங்க. உண்மையை புரிஞ்சிக்காம இந்த கருத்துக்கள் யாருக்கு ஆதரவானவை என்று அடையாளம் காண தெரிவதில்லை. ஏதோ சாதிக்கு எதிரா பேசறதா நினைச்சிகிட்டு பள்ளிக்கூடத்துலதான் சாதி கேக்கிறான்னு நாமும் சொல்றோம். இம்மாதிரியான அகநிலை சார்ந்த விஷயங்களை அரசியலாக்கி செயல்படறவங்களுக்கு இருக்கிற தெளிவு, தலித்துகளுக்கு ஆதரவான அல்லது எதிரான கருத்துக்கள் என்பதில் தலித் இயக்கங்களுக்கு இருக்கிற தெளிவு, பெண்ணிய இயக்கத்தில் அவர்களுக்கு ஆதரவான- எதிரான சொல்லாடல்கள் பற்றி அவர்களுக்கு இருக்கிற தெளிவு, தலித்துகள் பெண்கள் ஒடுக்கப்பட்டோர் என எல்லோருக்குமான பொது இயக்கத்தின் ஊழியர்கள் மத்தியில் அந்த மாதிரி தெளிவுகள் இல்லை. ஏன்னா அகநிலை சார்ந்ததா இல்லாதவரைக்கும் இந்த தெளிவு வரப்போறதில்லை.

யோகா, ஆழ்நிலை தியானம் பற்றிய சொல்லாடலையும் இந்துத்துவாவின் சொல்லாடலாக பார்க்கலாமா?

யோகா என்பது உடல் பற்றிய ஒரு அறிவியல். Physical fitness, physical health -க்கான ஒரு முயற்சி. நாங்க நடிப்பு பயிற்சிக்காக காற்று பயிற்சி, முதுகெலும்பு பயிற்சி - வஜ்ராஸனத்திலிருந்து செய்யறோம். அப்ப காற்றையும் சுவாசத்தையும் சப்தத்தையும் சேர்க்கிற ஒரு சொல்லா ‘ஓம்’மை பயன்படுத்துவோம். ஓம்மை இந்துமத சொல்லாக கருதி சொல்லத் தயங்குபவர்களுக்கு ஹ¤... என்று சொல்லை பயன்படுத்த சொல்வோம். இரண்டுமே சரியான சப்தம்தான். ஹ¤ ங்கிறது இஸ்லாத்துல புனிதமான சொல் என்கிறார்கள். இஸ்லாம்ல தொழுகையின் போது உட்காருவது எழுந்திருப்பது கழுத்தைத் திருப்புவது எல்லாமே உடலைப் பேணும் பயிற்சிகள் தான். இந்த பயிற்சிகள் எல்லா மதத்திலயும் இருக்கு. இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமல்ல. ஆனா அவற்றுக்கு இந்து மதச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது. இந்து அணி திரட்சி முழுக்க முழுக்க பொய்யையும் புனை சுருட்டுகளையும் நம்பி இருப்பது. என்ன தான் இருந்தாலும் ஓரளவிற்கு மேல் அறிவியல் பூர்வமான ஒரு விசயத்தை தன்வயமாக்குவது அவர்களுக்கு சாத்தியமில்லை. யோகாவுக்கு பௌத்தத்தோட வேர் இருக்கு. தற்காப்புக்கலையின் (Martial Art) ஊற்றுக்கண் பௌத்தம்தான். வைதீக மரபா அவைதீக மரபா யார் இதையெல்லாம் கண்டுபிடித்தார்கள்? உடலை வருத்தி உழைக்காதவர்கள் எப்படி உடலுடைய நுட்பங்களை கண்டுபிடித்தார்கள்னு ஆழமாப்போனா பொருள்முதல்வாதமாகிடும். ஒரு Spiritual தளத்திலிருந்து அறிவு சார்ந்த தளத்திற்கு போய் நின்றிடும்.

புத்தகச்சந்தைகளில் அதிகமா விற்கப்படுகிற புத்தகம் சுகபோகானந்தாவுடைய மனசே ரிலாக்ஸ் பிளீஸ். அன்றாட ஜீவனத்துக்கு அல்லாட வேண்டியில்லாத பாதுகாப்பான சம்பளக்காரர்களாக உள்ள நடுத்தர - உயர் நடுத்தர வர்க்கத்துடைய பிரச்சினைகள் வேறாக இருக்கு. போட்டியில் ஏற்படும் இறுக்கங்கள் - அவற்றிலிருந்து தளர்ச்சியடைய வேண்டியிருக்கு. ஏதோவொரு நிம்மதியை தேடுறாங்க. உணவு உடை அதெல்லாம் முடிந்துபோய்விட்டது. பிளாட், கார் வாங்கியாச்சு அவர்களுக்கு இருப்பில் ஏற்படுகிற நெருக்கடி, வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுற முயற்சி, அர்த்தமற்று வாழ்கிறோமா என்கிற உளைச்சல் இதுதான் ஆன்மீக தேடலுக்கு வழிவகுக்குது. அப்படியானவர்களின் மனசை வருடிக்கொடுக்கிற மாதிரி, பிமீணீறீ பண்றமாதிரி பலபேர் பேசறாங்க, அப்படி பேசி ஆன்மிகத்தை கொடுக்கிறவங்கதான் இன்னைக்கி பெரிய சாமியார்கள்.

Spirituality Shop. Spirituality Departmental store, Spirutuality Super market என்று பல கடைகள் இருக்கு. அங்கு Spirituality ஒரு விற்பனை சரக்காயிடுச்சி. வீட்டுக்குள்ளேயே எல்லாம் தேட முடியாது. ஒரு நல்ல கடையை- விற்பனையாளனைத் தேடுகிறான். சாமியார்கள் சைக்ரியாடிஸ்ட் வேலையை செய்யறாங்க. உதாரணத்துக்கு ஜக்கி வாசுதேவ் சொல்றது - நீங்க எப்பவுமே ரிலாக்ஸ் பண்ணனும், அது உங்க உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும். ரிலாக்ஸ் பண்ண நீங்க கத்துக்கணும். ரிலாக்ஸ் பண்றத்துக்கு நேரம் காலம் கிடையாது. கர்மங்களை செய்துகொண்டிருக்கும் போதே யோக நிலைக்கு போவதெப்படி (கர்மயோகம் வேறு) , வேலை செய்துகொண்டிருக்கும்போதே எப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கிறது என்றெல்லாம் பேசுகிறார். இது, ஒரு அசைவு-ஆசுவாசங் கொள்ள ஒரு எதிர் அசைவு இருக்கின்ற எங்க நாடக வேலையோட தொடர்புடையதுதான். கூத்துலயும் இது இருக்கு. Clockwiseல வேகமா சுத்தி முடிச்சதுக்கப்பறம் Anti Clockwise ஓடுவாங்க. அந்த Movement ரிலாக்ஸ் பண்ணத்தான். இது நேரடியாக ஆளுமை வளர்ச்சியோடு தொடர்புடையது. இறுக்கம் சூழ்ந்த போட்டி உலகத்திலிருந்து விலகி அமைதியை உணரும்போது சந்தோசம் கிடைக்கும். அதுக்கான விஷயங்கள், சூழல்கள் இந்த Spirituality Shopகளில் அவர்களுக்கு கிடைக்கிறது.

இதெல்லாம் வெகுஜனங்களுக்கு தேவைப்படுவதில்லை. வேலையை முடிச்சிட்டு மரத்தடியில-சாவடியில சப்தம் போட்டு பேசுவது, அரட்டை அடிக்கிறது கூட அவங்களுக்கு ரிலாக்ஸேஸன்தான். முன்பெல்லாம் பஞ்சமா பாதகத்தில் ஒன்றென கருதப்பட்ட மது இப்பொதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் வீடுகளிலேயே புழங்குவதும் அதை வீட்டில் உள்ளோர் அனுமதிப்பதுமாக வாழ்க்கைமுறை மாறிக்கிட்டு வருது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான ரிலாக்ஸேஸன். ரொம்ப வசதியா இருந்தா ரஜினிகாந்த் மாதிரி இமயமலைக்கு போய் ஆன்மீகத்தை பெறலாம். இல்லாதவங்க ஈஷா சென்டருக்கு போகலாம். நாளைக்கி அடுத்த வேளை உணவுக்கு வழியில்லைன்னா, அவங்க கவனம் வேறாக இருக்கும். ஒரு தொழிற்சாலையில் ஆட்குறைப்பு, அல்லது கதவடைப்பு வரும்போது அவனுக்கு ஆன்மீகம் தோணாது. அவன் உடனே தொழிற்சங்கத்தைத்தான் தேடுவான். சுகபோகானந்தாவை தேடமாட்டான். சாதாரண மக்களுடைய பிரச்சினை வேறு. நடுத்தர-உயர் நடுத்தர மக்கள் பிரச்சினை வேறு. இவங்களெல்லாம் நல்லா தின்னு கொழுத்தவங்க... இவங்க இப்படித்தான் இருப்பாங்க என்றெல்லாம் பாக்கமுடியாது.

சமூகமாக இருக்கிற மனிதனை தனித்தனி துகள்களாக மாற்றுவது- அது ஒரு சீரியஸ் டிரெண்ட். சந்தைப் பொருளாதாரத்தோட வளர்ச்சிக்கு இந்த Atomisation of the society ரொம்ப முக்கியம். துகள் துகள்களாக மனிதனை மாற்றி தனித்தனி மனிதனாக பார்ப்பது மற்ற மனிதனோடு தன்னை ஒப்பிட்டு ஒவ்வொரு சக உயிரையும் தனக்கு போட்டியாக நினைப்பது. தன்னுடைய மேம்பாடு இன்னொருவனுடையதைவிட உயர்வானது, தன்னுடைய இலக்கு இன்னொருத்தனைவிட தாழ்ந்திருக்கிறது என்பதை வைத்து தீர்மானிக்கிற பண்பாடு. அதேபோல சந்தைப் பொருளாதாரத்தோட இன்னொரு தீவிரமான வெளிப்பாடுதான் காசிருந்தால் உன்னால் உலகத்தில் எதையும் பெறமுடியும் வாங்கமுடியும் என்கிற சிந்தனையும். சந்தைப்பொருளாதாரம், சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்வதோடு அதற்கான தேவையையும் உற்பத்தி செய்கிறது.

பெரும்பாலான தேவைகள் காரணகாரியத்தோடு தொடர்புடையவை அல்ல. சந்தையில் விற்கிறது- புது மோஸ்தர்ல வந்திருக்கு- வாங்கனும். புது மோஸ்தர் வந்ததும் பழையது Irrelevent ஆயிடும். தேவைகளை, ஆசைகளை உற்பத்தி செய்யறதே இப்போ பெரிய தொழில். வாழ்க்கையில முன்னேறுகிற போட்டி அல்லது பொருளை வாங்கிக் குவிக்கிற போட்டி அல்லது அந்தஸ்துகளை சேர்க்கிற போட்டி எல்லாரும் கலந்துக்கலாம் எல்லாரும் ஜெயிக்கலாம் என்கிற கருத்து தனிமனிதனுக்கிருக்கு. ஆனா எல்லாருமே எப்பவுமே ஜெயிக்க முடியாதுங்கிறதுதான் உண்மை. நீ சோர்ந்து போனா உன் தோல்வியை ஒத்துக்கொண்டு மத்தவங்க உன் மீது குதிரை ஏற அனுமதிக்கனும். சமூகத்தின் வளர்ச்சி என்பது இப்படி தனிமனிதனுடைய வெற்றி தோல்வியா குறுகிவிடுது.

விவசாயநாடான இந்தியாவில் அதற்கான உள்கட்டமைப்பெல்லாம் நவீனப்படுத்தப்படவேயில்ல. நவீனம்னா, புதிய தொழில்நுட்பங்களை புகுத்தறது அல்ல. கால வளர்ச்சிக்கேற்ப, மனிதனுடைய தேவைக்கேற்ப மாற்றங்களை உருவாக்கி உழைப்பை லகுவாக்குகிற எந்த முயற்சியும் நடக்கல. அப்படியே நடந்திருந்தாலும் அரைகுறை முயற்சிகள். பின் தங்கிய நிலையில்தான் விவசாயம் நடக்குது. மேலைநாடுகள்ல விவசாயம் மிகப்பெரிய தொழில். ஆனா விளைபொருளுக்கு விலை கிடைக்கிறதில்லை. விலையைத் தீர்மானிக்கிறதெல்லாம் தொழிற்துறை சார்ந்த பொருளாதாரம். எது உலக மார்க்கெட்ல செல்வாக்கு பெற்றிருக்கிற பண்டமோ அதுக்குத்தான் விலை லாபம் இருக்கும். அதனால தொழில் உற்பத்திக்காக, தொழில் வளர்ச்சிக்காக விவசாயம் தன்னை ஒப்புக்கொடுக்குது.

இயல்பாகவே ஒரு தொழிற்சமூகத்தோட ஆதரவில் விவசாயம் இயங்க வேண்டியிருக்கு. சரி, விவசாயமே வேணாம்னு விட்டுட்டானா அடிப்படையான உணவுத்தானியங்கள் இல்லாமலாயிடும். அதையெல்லாம் தொழிற்சாலையில் உற்பத்தி பண்ணமுடியாது. அதனாலதான் மேலை தொழிற்சமூகத்தில் விவசாயத்திற்கு மானியம் தர்றாங்க. ஆனா நாம விவசாயத்துக்கு மானியம் தருவதை மகாபாவம் போல பேசறோம். மானியமில்லேன்னா நாம நம்ம உணவு தானியங்களுக்காக நம் வருமானத்தில் கணிசமா செலவழிக்க வேண்டியிருக்கும்கிறதையும் கூட யோசிக்காம பேசறோம். இலவச மின்சாரம் பெருஞ்சுமையா இருக்குங்கிறார் மன்மோகன்சிங். ஆயிரம் ஏக்கர் உள்ளவனுக்கும் இலவசம்கிறது கேலிதான். ஆனா எல்லாரும் அப்படியில்லையே. சிறு, இடைநிலை விவசாயிகள் இருக்காங்களே... மானியத்தை நிறுத்தினா என்னவார்கள்?

இது ஒரு சந்தையோட சூழ்ச்சி. சந்தைப்பொருளாதாரம் ஒரு திறந்த ஜனநாயகத்துக்கான கோட்பாடு மாதிரி சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இல்லை. எல்லாத்தையும் அவன் சந்தையில் விற்பான். நீ வாங்கணும். நீ எதையும் உற்பத்தி பண்ணக்கூடாது. எதையும் தயாரிக்கக்கூடாது. இட்லிமாவைக் கூட இனிமேல் புளிக்கவைக்காதே. வீட்டுக்குள்ள இதுநாள்வரைக்கும் தயாரிச்சிக்கிட்டதைக்கூட இப்ப சந்தையில் வாங்குறோம். தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இதுலதான் அதிக கவனம் செலுத்துது. மத்தவங்க சந்தைக்குப் போய் வாங்கின உப்பு புளி மிளகாய் அரிசி பருப்பு இத்யாதியில் பாதி விவசாயிக்கு நிலத்திலிருந்தே கிடைச்சுடும். ஆனா இப்ப நம்மோட உணவுப்பழக்கங்கள் மாறியிருக்கிறதால எல்லாருமே உணவுப்பொருட்களை கடையில் வாங்குகிறவங்களா மாறியிருக்கோம். இங்கே சந்தைப் பொருளாதாரமும் உலகமயமாக்கப் பண்பாடும் பின்னிப் பிணைந்திருக்கு. தன்னிறைவுங்கறதே இல்லாமப் போச்சு.

ஆதவன்- ஒரு ஒற்றைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதில் உலகமயமும் இந்துத்வாவும் ஒன்றுபடுகிறதே...

Culture Industry னு வால்டர் பெஞ்சமின் சொல்றார். பண்பாட்டை உற்பத்தி செய்யறாங்க. தேவைகள், ஆசைகள், ஆசாபாசங்கள், மதிப்பீடுகள், எது சிறந்த வாழ்க்கை, எவன் சிறந்த மனிதன், எது சிறந்தது- இப்படி எல்லா மதிப்பீடுகளையும் சமூகத்துல செலுத்தறாங்க. பண்பாட்டை விற்கிறாங்க. அதை நாம் காசு கொடுத்து வாங்கறதில்ல. அந்த மதிப்பீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமா இரையாகி அந்தத் தேவைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கறோம்.

அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் காதலர் தினம் வர்றபோது பல விசயங்கள் நடக்குது. மேற்குலகம் கண்டுபிடிக்காத பல புதிய மாடல்களை பிரத்யேக சூழலுள்ள இந்தியா கண்டுபிடிக்குது. குறிப்பா அக்ஷய திருதியை. அன்னிக்கு நகை வாங்கலேன்னா கேவலம்கிற மாதிரியான எண்ணத்துல க்யூவில் நின்னு வாங்குறாங்க. இதை பார்யுப‎னீயத்தோட சூழ்ச்சின்னுல்லாம் சொல்ல முடியாது. ஏதோவொரு ஜோசியக்காரன் என்னவோ சொல்லி அக்ஷய திருதியைக்கு ஒரு பொருளியல் மதிப்பு உண்டாயிருக்கு. முழுப்பக்க விளம்பரம் தந்து பிரச்சாரம் பண்றாங்க. தங்கத்தில் முதலீடு செய்த பணம் எதுக்கு பயன்படுது? ஒரு மானிடரி வேல்யூவுக்காக தங்கத்துக்கு செயற்கையா மதிப்பை உருவாக்கி வச்சிருக்காங்க. எதிர்காலத்தில் தங்கமெல்லாம் கக்கூஸ் கல்லாகத்தான் பயன்படப்போகுதுன்னு மார்க்ஸ் சொல்றார். உலகத்தில் எந்த நாட்டிலேயும் இல்லாத தங்கம் இந்தியாவுல இருக்கு. அரசாங்கத்திடமில்லை.... மக்களிடம் இருக்கு. இதையே வளர்ந்த நாட்டுக்கான அடையாளமா சொல்லிக்கிறாங்க.

இந்தியச் சூழல்ல செக்யூலர் கேரக்டர் எப்படி கேள்விக்குள்ளாகுதுன்னு பார்க்க இன்னோரு உதாரணம் வாஸ்து சாஸ்திரம். அதோட அடிப்படை ஒரு புராணக்கதை. வாஸ்து புருசன் பூமியில் வெட்டி எறியப்படறான். தலை ஒரு இடத்தில், கால் ஒரு இடத்தில், உடம்பு ஒரு இடத்தில்.... தலை விழுந்த இடம் புனிதமாகவும் கால் விழுந்த இடம் கீழானதாகவும் ஒரு எட்டு பாகமா நிலத்தைப் பிரிச்சு ஒரு இடம் உயர்ந்ததென்றும் மற்றதை தாழ்ந்ததென்றும் சொல்றதுதான் வாஸ்து சாஸ்திரம். இதில் எந்த விஞ்ஞான அணுகுமுறையும் இல்ல. மேற்கு பார்த்த வாசல்னா மத்தியானத்தில் வெயில் உள்ளே விழும்- கிழக்கு பார்த்த வீடுன்னா காலையில் வெயில் விழும்- வடக்கு பக்கம் ஜன்னல் வச்சா வாடைக்காத்தடிக்கும்னு தட்பவெப்பம் பற்றிய அறிவோடு கட்டிடங்கள் குடிசைகள் எல்லாமே கட்டப்பட்டது அப்போது. அதிலொரு நியாயம் அறிவியல் அணுகுமுறை இருந்தது. ஆனால் நாம் வாழ்கிற இடத்திலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கிறது வாஸ்து.

சந்தைக் கலாச்சாரம் ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவனையே பொறுப்பாக்குகிறது. அந்த தனிமனிதன் நவீன விஞ்ஞான உலகத்துல இருக்கான். கம்ப்யூட்டர் மாதிரியான விஞ்ஞானத்தோட எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கறான். அதேசமயம் முயற்சியே இல்லாம முன்னேறிடலாம்னு விஞ்ஞானத்துக்கு உதவாத கருத்துகளை பின்பற்றுகிறான். அதுக்காக வாசலை இடிச்சுக் கட்டுறான் இல்லேன்னா ஒரு பிரமிடை, வாட்டர் பவுண்டனை வாங்கி தொங்கவிடறான். ஒரு இடத்துல சிலையை வைக்கிறான், ஒரு இடத்துல செடியை வைக்கிறான், ஒரு இடத்துல பூவை வைக்கிறான். அதை இந்து முஸ்லிம் கிறிஸ்தவன்னு எல்லாரும் செய்யறான். ஓரியண்டல் கல்சர்ல- சீனாவில் ஜப்பானில் வாஸ்து எப்படி இருந்துச்சுன்னு புதுசு புதுசா நிறைய புத்தகங்கள் வருது. அதைப்பற்றிய புத்தகங்களை வாங்குறான். பிறகு, தானும் தன்னோட கிளார்க்கும் ஒரே இடத்துல வாஸ்து பார்க்கிறதாங்குற Economic seclusionஐ தக்கவைக்கணும்னு நினைக்கிறான். அதனால தாஜ் ஹோட்டல்ல தங்கியிருக்குற பெரிய ஜப்பான் வாஸ்து நிபுணரைப் போய் பார்க்கிறான். இப்ப இதுவொரு வியாபாரம்.

இப்படியான மதிப்பீடுகளை சந்தைக் கலாச்சாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறபோது நாம் அதற்கு இரையாகிவிடாமல் பகுத்தறியும் ஒரு நிலைபாட்டையே (Radical position) மேற்கொள்ளவேண்டும். நாமும் அக்ஷய திருதியைக்கு ஒருகிராமாவது தங்கம் வாங்கணும்னு வரிசையில் நின்னுடக்கூடாது.

உலகமயம்தான் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் எல்லோருக்குமானதா கொடுத்திருக்குன்னு கொண்டாடுறாங்களே...?

நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றிய ஒரு விமர்சனப்பூர்வமான அணுகுமுறை தேவை. அறிவியல், தொழில்நுட்பம்னு ஒரு மாற்றம் வரும்போது அதை நல்லதுக்குத்தான்னு எடுத்துக்கற மனநிலை மக்களிடம் இருக்கு. நாமும் கூட, எப்படி ஒரு அறிவியலுக்கோ தொழில்நுட்பத்துக்கோ எதிரானவர்களா இருக்கமுடியும்னு நினைப்போம். அப்படியெல்லாம் இல்லை. அறிவியல், தொழில்நுட்பம் தன்னுடைய நடுநிலைத்தன்மையை இழந்துருச்சு.

அறிவு, தொழில்நுட்பமா மாறுது. புதிய அறிவு கண்டுபிடிக்கப்படுது- அதை மனிதகுலம் கண்டுபிடித்துக் கொண்டேதானிருக்கும். ஆனால் அறிவு, தொழில்நுட்பமா மாறும்போது மனிதகுலத்தோட வளர்ச்சி, இயற்கைப் பாதுகாப்பு எல்லாத்தையும் கவனத்துல எடுத்துக்கணும். ஒரு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்போது அது நடுநிலையாகவா இருக்கு? அணுகுண்டு என்ன செய்யுது... அடாமிக் சயின்ஸ்ங்கிறது வேற- அது அறிவு. அதுவே டெக்னாலஜியாகி உயிர்களைக் கொல்கிற, இயற்கைச் சூழலை அழிக்கிற அணுகுண்டா வரும்போது அது நடுநிலை வாய்ந்ததா? அப்ப அது Technology Biased தானே? E=mc2ங்கிறது அறிவு. அணுகுண்டுங்கிறது அழிவு.

இந்த விழிப்புணர்வு நம்மகிட்ட வரணும். ஒரு காலத்தில் மளிகைக்கடைக்குப் போய் 50- 60 பொருள் வாங்குவோம். கடைக்காரன் மஞ்சள், சோம்பு, சீரகம்னு- முதல்ல மஞ்சளைத்தான் எழுதுவான்- வரிசையா எழுதி தொகையைச் சொல்லுவான். நாம் அந்த லிஸ்டை வாங்கி ஏழெட்டு தடவை கூட்டிப்பார்த்துட்டு அப்புறந்தான் பணத்தை கொடுப்போம். ஆனா இப்ப கம்ப்யூட்டர் பில்லிங் வந்தப்புறம் சந்தேகப்படறதேயில்லை. இரண்டு என்ட்ரி போடறதுக்கும் வாய்ப்பிருக்கு, கம்ப்யூட்டரும் தப்பு பண்ணலாம். ஆனா நாம Digital Display - வைப் பார்த்ததும் பணத்தைக் கொடுத்துடறோம். சயின்ஸ் மேல நமக்கு அவ்வளவு நம்பிக்கை. சந்தைக் கலாச்சாரத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் எல்லாத்தையும் நியாயப்படுத்தக்கூடிய கருவியாகப் பயன்படுது. அறிவியல் தொழில்நுட்பம்னா அதை விமர்சனப்பூர்வமா பார்க்காம அப்படியே சரணடையறது- கடவுள் நம்பிக்கை இருக்கிற மாதிரி 'விஞ்ஞான நம்பிக்கை'.

வித்தியாசமான தேர்ச்சிகள், வித்தியாசமான விஷயங்களை மார்க்கெட் ஊக்குவிக்குது. தேசியம் பற்றிய கேள்வி, தேசிய உணர்வு எல்லாவற்றையும் மார்க்கெட் தன்வயமாக்கி உடன் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுது. உதாரணமாக இப்போ பெண்களுக்கான உடை நாகரிகத்தில் Ethnic Fashion ரொம்ப ஈர்க்கிறதாக இருக்கிறது. மற்ற உடைகளை விட இது ரொம்ப விலை உயர்ந்தது. Ethnic என்கிற வார்த்தை இனக்கூற்றை சொல்கிறதா, தேசிய இன வரையறையா, என்பதிலெல்லாம் குழப்பம் இருக்கு. அது ரொம்ப தப்பா புரிந்து கொள்ளப்படுகிற வார்த்தை. இலங்கையில சிங்களருக்கும் தமிழருக்கும் இனக்கூற்றுல பலவித ஒற்றுமைகள் இருக்கு- உணவு பழக்கத்தில், உடலமைப்பு, தோற்றங்கள், நிறத்தின் அடிப்படையில்... ஆனா பண்பாடு வித்தியாசப்படுது. கிராமப்புறத்தில் ஏற்கனவே நாம புழங்கிக்கிட்டிருந்த பழமையான விசயங்கள நவீனப்படுத்தி சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவது.

உதாரணமாக நம்ம பாட்டிங்க பயன்படுத்திக்கிட்டிருந்த சுருக்குப்பையை விலையுயர்ந்த துணியில கண்ணாடி பதிச்சி நூறு நூத்தம்பது ரூவாய்க்கு சென்னையில விக்கிறாங்க. மரப்பாச்சி பொம்மைங்க, மரச்சொப்புக...மத்த Ancient Traditional Toys இதெல்லாம் நாம நெருங்கவே முடியாத விலையில் விக்கிறாங்க. அயல் நாடுகளிலிருந்து வர்றவங்க வாங்கிக்கிட்டு போறாங்க. அவங்களுக்கு இருக்கிற அடையாளப் பிரச்சினையில இதெல்லாம் வாங்குறாங்க. எல்லார்கிட்டயும் பரவலா புழக்கத்தில் இருந்தது இன்னிக்கி ஒரு Exclusive மார்க்கெட்டா மாறிடிச்சி. இங்க பிளாஸ்டிக் வந்துடிச்சி. காரணகாரியமே இல்லாம நம்மகிட்ட இருந்த நல்ல விசயத்தெல்லாம் இழந்துட்டோம். இதை நாம தடுத்து நிறுத்த முடியாம கைகட்டி நின்னு மௌனம் சாதிச்சி வேடிக்கை பாக்கிறவங்களா மாறிட்டோம்கிறதுதான் வருத்தமான உண்மை.

நம்மைச் சுற்றி பல விஷயங்கள் நடக்குது, எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமா நடந்து கொண்டே இருக்குது, நம்முடைய ஒப்புதல் இல்லாம நாம வெறும் பார்வையாளனாக நின்னு பார்த்துக்கிட்டே இருக்கிறமாதிரி... இன்றைய காலம், சூழல் அவ்வளவு சிக்கலாக இருக்கு. தெளிவான செயல்பாட்டுக்கான சிந்தனையில இன்று ஒரு தனிமனிதன் ஈடுபடறதுங்கறது ரொம்ப அபூர்வம். சுதந்திர போராட்ட காலத்தில நாடு முழுக்க மக்கள் அணி திரண்டாங்க. எதிரியை திட்டவட்டமா அடையாளம் காட்டியாச்சி... அன்னிக்கிருந்த ஒட்டுமொத்தமான சமூகச் சூழல்ல வேலைய விட்டுட்டு.. படிப்ப விட்டுட்டு... வந்தான். வரமுடிஞ்சது. இன்னிக்கி அப்படி ஒரு சுலபமான சூழ்நிலை கிடையாது. நிறைய அலைக்கழிப்புகள் இழுத்துக்கிட்டு போவுது. மாயமா, சொரணையற்று கனவுலக போதையில அமிழ்த்துது. அதையெல்லாம் மீறி செயல்பாட்டுக்கு வர்றதுன்னா பெரிய விஷயம்... இன்னிக்குள்ள அலைக்கழிப்பான சூழல்ல சரியா யோசிக்கிறது சரியா செயல்படுவது சாதாரண விஷயமில்ல. அவ்வளவு சவால் மிக்கதாக இந்த காலகட்டத்தை புரிஞ்சிக்கணும். மக்கள் இயக்கங்களுக்கு, அரசியல் இயக்கங்களுக்கெல்லாம் பெரிய சவால் இருக்கு.

கடந்த இருபதாண்டு கால வேலை மூலமா சங்பரிவார் அமைப்புகள் அடைந்த ஆதாயம் எதுன்னா, படித்த- நடுத்தரவர்க்க- Saleried Class மத்தியில் அவர்களோட அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுதான். ஒரு இந்தியக் குடிமகனின் கலாச்சார அடையாளத்தை எதைவைத்து தீர்மானிக்கிறது? மதத்தையா? மொழியையா? இனத்தையா? சாதியையா? ஊரையா? பிரதேசத்தையா? அதில் அவங்க மதத்தை முன்னிறுத்தினாங்க. ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ஓரளவுக்கு ஆதாயமும் அடைஞ்சாங்க. இதை 'கவுன்டர்' பண்ணத்தான் மண்டல். மண்டல் வந்த பிறகு வேறுமாதிரியான அடையாளங்கள் வந்தன. அதே மாதிரி தலித் எழுச்சி. மகாராஷ்ட்ரா, கர்நாடகா, உ.பி, பீகார்னு இன்னிக்கு எல்லா இடங்களிலும் நடக்கிற தலித் அணிதிரட்சி, சங்பரிவாரத்தோட அணிதிரட்டலுக்கு எதிர்செயல்பாடுதான்.

இந்து என்கிற மதரீதியான அணிதிரட்டலை, இழந்துவரும் தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கான உயர்சாதிகளின் முயற்சியாக முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், இப்ப நிலைமை வேறு. அவங்க அந்த போர்த்தந்திரத்திலேயே இல்ல. ரொம்ப கவனமா இருக்காங்க. ஆர்.எஸ்.எஸ்,சில் உயர் சாதியைத் தவிர வேறுயாரும் மிகப்பெரிய பொறுப்புல இருக்கமுடியாது. ஆனா பிற சங்பரிவார் அமைப்புகளில் மற்றவங்களை முன்னிறுத்த ஆரம்பிக்கிறாங்க. அவங்களும் கூட்டணியில் வர்றாங்க. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியையெல்லாம், நீ மேம்பட்டவன்- மேலானவன்- நீ இந்து- ங்கிற அடையாளத்தைக் கொடுத்து அவங்களுக்கு கொம்பு சீவறது..... அதேமாதிரி நாட்டார் தெய்வ வழிபாடுகளில் குறுக்கிடுவது. பல மேல்நாட்டு அறிஞர்கள்- கோசாம்பி கூட திராவிட பண்பாட்டின் மூலமாதிரியெல்லாம் இந்த சிறுதெய்வ வழிபாட்டில்தான் இருக்குன்னு சொல்றாங்க. இந்தமாதிரி தனித்தன்மை தென்னிந்தியாவில்தான் வலுவா இருக்கு. வடஇந்தியாவில் பலவிதமான இடப்பெயர்ச்சிகள் மாற்றங்கள் நடந்துப்போச்சு.

Pralayan's drama நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 18 புராணம், 28 ஆகமத்துல இந்த வழிபாடே வரல. அப்ப அது புராணங்களையெல்லாம் உள்ளடக்கல. பத்து அவதாரங்களை எடுத்துக்கிட்டாலும் அவை ஒவ்வொரு இனக்குழுவோட தெய்வம்கிறதுக்கான மிச்சசொச்சத்தை இப்பவும் பார்க்கலாம். நரசிம்மன்- செஞ்சு லட்சுமி ஆந்திர தலித்துகளின் தெய்வம். பன்றி அவதாரம்- ஒரிசா. வாமன அவதாரம்- கேரளா. பரசுராமனும் கேரளா. பல இனக்குழுக்களுடைய குலதெய்வங்களை தன்வயமாக்குறது ரொம்பகாலமா நடக்குது. அதுக்குள் வராத, நடுகல் வழிபாடுடைய, மிச்சசொச்சமா இருக்கிற குலதெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வ வழிபாடு- இதையெல்லாம் மிகப்பெரிய அச்சுறுத்தலா இப்பத்தான் உணர ஆரம்பிச்சிருக்காங்க. கடந்த ஆறேழு வருசத்தில் நிறைய கோவில்கள்ல கும்பாபிஷேகம் நடந்துச்சு. கருமாரிய, கிருஷ்ணமாரின்னு பெயர் மாத்தறாங்க.

நடுகல் வச்சு, சின்ன சூலங்கள் வச்சு ஏதோ முகம் மட்டும் தெரிகிற ஒரு Abstract- ஆன உருவத்தை வழிபட்டுக்கிட்டு இருக்காறாங்கில்லயா, அதைச் சுத்தி கோவிலைக்கட்டி, அதுக்கு அஷ்டபந்தன- ஸ்வர்ணபந்தன- ஜீரணோத்தாரண- மகாகும்பாபிஷேகமெல்லாம் செய்து ஒருவாரம் பந்தல் போட்டு யாகங்கள் நடத்தறது... இப்ப தென்மாவட்டங்கள்ல நிறைய நடக்குது. இப்படி நடக்கிறபோது, பக்கத்திலேயே முத்துராமலிங்கத்தேவர் சிலை ஒண்ணையும் வச்சிடுவாங்க. அவங்க ஊர்ல சமஸ்கிருத கோஷங்கள் கேட்கும்போது மக்களே என்ன நினைக்கிறாங்க... ஊரே மேன்மையடைஞ்சிட்ட மாதிரி ஒரு சந்தோஷம். அவங்க ஊர்க்காரர் பூசாரியா இருக்கிறதைவிட ஒரு ஐயர் பூஜை பண்ணும்போது- தன் சாமி உயர்ந்திட்டதா நினைக்கிறாங்க. தன் சாமிக்குக் கிடைச்ச மரியாதையை தனக்கு கிடைச்ச மரியாதையா அவன் நினைக்கிறான். இது ரொம்ப நுட்பமான தளம். இங்க அவங்க செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. மனிதனை மட்டுமில்ல கடவுளையும் மேல்நிலையாக்கம் பண்றாங்க.

ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு தெய்வத்துக்கான கதைகள் இருக்கு. இந்தமாதிரி கதைகளெல்லாம் பதினெட்டுப் புராணங்கள்லயும் இல்ல. இந்த கதைகளையெல்லாம் மேல்நிலைப்படுத்தறது, கான்ஷியசா சங்கரமடத்திலேயிருந்து ஆளனுப்பி இதையெல்லாம் செய்யறதில்ல. இந்த மனநிலையை கீழேயே உருவாக்கிடறாங்க. வெளிப்பூசாரி வந்து பத்து அவதாரத்தில் ஒண்ணுன்னா நல்லதுதானே. அதனுடைய செல்வாக்கின் வீச்சுக்குள் தாக்குப்பிடிக்க முடியாம அவங்களே செஞ்சுக்கறாங்க. .இதுதான் Hegemony என்பது. மக்கள் ஒப்புதலோடு அதிகாரம் செலுத்துவது.

வங்காள நாட்டுப்புற இலக்கியத்தில் இருக்கிற மேகநாத புராணம்தான் அங்கே ரொம்ப செல்வாக்குடையது. மேகநாதன் யார்? இந்திரஜித். ராவணனுடைய மகனான அவன்தான் அவங்களுக்கு நாயகன். பீகார், வங்காளத்தில் அவைதீகத்தோட அடித்தளம் ரொம்ப வலுவாயிருக்கிறதுதான் அதுக்குக் காரணம்னு சொல்றாங்க. அங்கே கிராமப்புறங்களில் உலவுகிற கதைகள் மேகநாதனை மையப்படுத்தியவை தான். இந்திரஜித் முக்கியமான ஒருவனாக கருதப்படுகிறான். இந்த தனித்தன்மையையெல்லாம் நாம் திரும்பவும் வலியுறுத்தணும்.

‘இந்து’ ங்கற வார்த்தையை ரொம்ப கடுமையாப் பாக்கணும். அவங்க ராமாயணத்தையும் - மகாபாரதத்தையும் வச்சுத்தான் ஒரு விவாதத்தை உருவாக்கினாங்க. அவங்க பண்ண ராமாயணம் துளசி ராமாயணம்தான். பதினாறாம் நூற்றாண்டுல எழுதப்பட்டது, ‘‘ராம சரித மனஸ்’’. உதாரணத்துக்கு வால்மீகியோட ஒரிஜினல் ராமாயணத்தைப் படிச்சாலே மக்கள் தெளிவுக்கு வருவாங்க. யாகத்துல மிருகங்களப் பலியிடறதப் பத்தியெல்லாம் வால்மீகி தெளிவா விவரிக்கிறார். அக்னிஹோத்ரம் வரதாச்சாரியார் நக்கீரன்ல எழுதுகிறாரே- ஒரு முக்கியமான கட்டுரை. ஒரு ஐயங்கார் எப்படி இப்படி எழுதறார்னு சந்தேகமா இருக்கும் - எப்படி முடிப்பாரோன்னுல்லாம் தெரியல.. இருந்தாலும், வால்மீகி Versionல சொல்வது என்னன்னா, தசரதன் ராஜசூய யாகம் பண்றான்.. ஒரு குதிரையை கௌசல்யா வெட்றா. அன்றிரவு குதிரையோட வெட்டப்பட்ட உடலோட படுத்து தூங்குறா - அப்படி ஒரு சடங்கு அது. குதிரையோட முக்கியமான மாமிசப் பாகங்களை முனிவர்களுக்கு, பார்யுப‎னர்களுக்கு தானம் பன்றா. இதெல்லாம் வால்மீகில இருக்கு.

சீதை ராமனை பஞ்சவடில கேக்குறா ‘எதுக்கு உன் கையில் கோதண்டம்.. எதுக்கு இங்கயும் தூக்கிக்கிட்டு வந்த.. எதுக்கு அனாவசியமா காட்டுக்குள்ள வந்து மிருகங்களையும் அரக்கர்களையும் கொன்னுட்டு இருக்க... எதுக்கு தேவையில்லாம கொல்லனும்’. இதுக்கு ராமன் சொல்றான்... ‘இது எங்க சத்திரியரோட கடமை. முனிவர்களை நாங்க இங்க இருங்கன்னு இடம் கொடுத்தோம். அவங்கள பாதுகாக்க வேண்டியது எங்க பொறுப்புதான். அதை நான் செய்யத்தான் செய்வேன்.’ வால்மீகியில இது இருக்கு. இன்னிக்கி இவங்க இட்டுக்கட்டினதும் இல்லாததை சொல்றதும் இல்லாம அது அது அதனதன் அளவிலேயே இருந்தா அதன் நெகிழ்ச்சியினாலும் பன்முகத்தன்மையினாலும் ஒரு சமூக வரலாறையே புரிந்துகொள்ளலாம். ராமசரித மனஸ்லிருந்து எல்லாத்துலயும் கிருமிநீக்கம் செய்யறாங்க. எல்லாத்தையும் வெஜிட்டேரியனா மாத்தறாங்க... யாகம் எதுக்கு? வெறும் நெய்யா விடறதுக்கா... சுட்டுத்தின்ன... நெருப்புல மிருகங்கள போட்டு சுட்டுத் தின்பான். தந்தூரி சாப்பாடு... அதை யாகமுன்னுட்டான். யாக குண்டங்கள் எல்லாம் தந்தூரி அடுப்புகள்தான். புத்தஜாதகக் கதையில் இருக்கிற ராமாயணத்துலயும் மற்ற பல வேறு ராமாயணங்களில் இருந்தும் அன்றைக்கு இருந்த சமூகவியல் வாழ்க்கையை புரிஞ்சிக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டுகளில்தான் ராமர் பிரதானமா மாறுவது நடக்குது. ‘ராம்’ங்கிற சொல் ராமரை மட்டும் குறிப்பதல்ல. அடிப்படையில அது ஒரு மூலமந்திரம். அந்த மூலமந்திரத்திற்குரிய சொல்லை ராமனுக்கு பெயரா வச்சிட்டாங்க.‘மராமராமராம’ என்கிற சொல்லோட திரிபுதான் அது. வேதத்துல அந்த மூலச் சொல்லெல்லாம் இருக்கு. அந்த மூலச் சொல்லுடைய பேரை வச்சிருக்கிற இதிகாச நாயகன்தான் ராமன். இதை புதுசா மறுநிர்மாணம் பண்ணுகிற வேலையில பி.ஜே.பி வெற்றியடையுது. தேசிய ஒளிபரப்புங்கிற தொழில்நுட்பம் அவங்கள அறியாம அவங்களுக்கு சாதகமா இருந்தது. ராமாயணம், மகாபாரத தொலைக்காட்சி தொடர்களெல்லாம் வந்தபிறகு புது ராமர், புது அர்த்தங்கள்லாம் உருவாக்கப்படுது. காங்கிரக்கும் அதைப் பயன்படுத்துற நோக்கம் இருந்துச்சு. காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் அடிப்படையில் பண்பாட்டுக் கொள்கையில் பெரிய வித்தியாசமே இல்ல. அப்போ இந்த உணர்வுகளை ஸிமீவீஸீயீஷீக்ஷ£நீமீ பண்றது, கொம்பு சீவறது இதெல்லாம் பண்ணிகிட்டே இருந்தாங்க. அப்படி பண்ணும்போது எதுக்கு கொம்பு சீவறான் யார்மேல குத்தப்போறான்னு யோசிக்க வேணாமா? இந்துக்களுக்கு ஒரு பாரம்பரியத்தை உருவாக்குறாங்க. ரொம்ப மேன்மையா இருந்ததா சொல்றாங்க. அப்பறமா தாழ்ந்து போனதா சொல்றாங்க.

தாழ்ந்து போனதுக்கு காரணமா ஒரு எதிரியை கட்டமைக்கிறாங்க. இஸ்லாம் படையெடுப்பு தான் காரணம்னு வரலாற்றை திரிக்கிறாங்க. வரலாற்றுல கஜினி முகமதுக்கு முன்னாலேயே சோமநாதபுரத்துல இஸ்லாமியர்கள் இருந்தாங்க. மசூதி இருந்தது. கஜினி முகம்மது படையில் வந்த முக்கியமான தளகர்த்தர் முஸ்லீம் அல்ல. திலக் என்கிற இந்து. இவங்க ராமரை ஒரு லட்சியப் புருசனாக ஆக கட்டமைக்கிறாங்க. அதுவும் வாளை ஓங்கின ராமர். எப்பவுமே ராமரை நாம பார்த்த ரவிவர்மா படம் ஒரு கையில வில் வைச்சிகிட்டு, மறுகையை அபயம்தான் காட்டும். இவங்க உருவாக்குற ராமர் வில்லை எடுத்து அம்பை எடுத்து குறி பார்க்கிறார். குலசாமி வழிபாட்டுலதான் ஆயுதத்தோட நாக்கை வெளியில தள்ளிக்கிட்டு இருக்கும். வெஜிட்டேரியனிசத்துக்குள்ள - ஒரு பெரும் தெய்வ வழிபாட்டுக்குள்ள வரும்போது அதையெல்லாம் கிருமி நீக்கம் செய்துதான் கொண்டுவந்தாங்க. சாந்த சொருபியா- அபய ஹஸ்தம் தூக்கறதாத்தான் எல்லாக் கடவுளையும் சித்தரிச்சாங்க.

மதங்கள் புனரமைக்கப்படும்போது பௌத்தத்தையும் சமணத்தையும் எதிர்கொள்வதற்காக, எல்லாக் கடவுளையும் சாந்த சொருபியாகத்தான் சித்தரிச்சாங்க. இப்போ அம்பை எடுத்து எய்வதுமாதிரி, ஆஞ்சநேயர் கதாயுதத்தை ஓங்குறமாதிரி, பிள்ளையார் சைக்கிள் செயின், சோடாபாட்டில், ஆசிட் பல்பு, ஆர்.டி.எக்ஸ், ஏ.கே.47.னெல்லாம் வச்சிருக்கிற மாதிரி சித்தரிப்பது- ஒரு ஆக்ரோச பிம்பத்தை கடவுளுக்கு கொடுத்து அதை இந்து மனநிலையில் ஆழமாக பதிக்கிறார்கள். இதைத் திரும்ப திரும்ப செய்கிறார்கள். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுல உடைப்பை ஏற்படுத்த முடியல. அதனால அரசியல் கட்சியா மற்றவர்களோடு சேர்ந்து செயல்படும் ஒரு இணக்கத்துக்கு வர்றாங்க.

இப்போ மலைவாழ் மக்கள் மத்தியில அதிகமா கவனம் செலுத்தறாங்க. அந்த மக்களை அணிதிரட்டுகிற மாதிரி பல விஷயங்களை செய்யறாங்க. ஆனா அங்க ஏற்கனவே கிருஸ்துவ மிஷனரிகள் இருக்கறதால மெதுவாகத்தான் செய்ய முடியுது. கிருஸ்தவத்துக்கு மாறாத மலைவாழ் மக்களை கிருஸ்துவத்துக்கு மாறின மக்களுக்கு எதிராக திருப்புவது என்பது நடக்குது.

அதேபோல பிற்படுத்தப்பட்டோருக்கு மத்தியிலயும் வேலை செய்யறாங்க. இதுக்கெல்லாம் மாற்றா என்ன செய்யணும்னா, நாட்டார் தெய்வ வழிபாடு, ஊர் அடையாளத்தை மேம்படுத்துவது, மதத்தை ஒருவனது அடையாளமாக கருதுவதற்கு பதிலாக வேவ்வேறு விஷயங்களை அடையாளமாக முன்னிருத்துவதுதான். தனிமனிதனுடைய அடையாளத்தைத் தீர்மானிக்கிற இறுதிக் காரணியாக மதத்தை நிறுத்துகிற போது எத்தனையோ யதார்த்தத்துல வெவ்வேறு காரணங்கள்தான் மாற்றாக முன்நிற்கும்... அது சாதியாகக்கூட இருக்கலாம், தப்பே கிடையாது... ஊராக இருக்கலாம், மொழியாக இருக்கலாம், அல்லது பிரதேசமாக இருக்கலாம். இந்த அடையாளங்களை முன்னிருத்தனும். பன்முக அடையாளம் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கு. அப்படி பன்முக அடையாளங்கள் கொஞ்சங் கொஞ்சமா மேலெழ வேண்டியிருக்கு. உறுதிப்பட வேண்டியிருக்கு. இதுதான் இன்று பண்பாட்டு இயக்கத்துக்கு முன்னால் இருக்கிற சவால். இது எல்லோருக்குமான இடம், எல்லோருக்குமான வெளி என்பதை உறுதி செய்ய வேண்டும். பருப்பு சாம்பார் சாப்பிடறவனுக்கு ஒரு இடம் உண்டுன்னா, மாட்டுக்கறி சாப்பிடறவனுக்கும் ஒரு இடம் உண்டு. பன்றிகறி சாப்பிடறவனுக்கு ஒரு இடம் உண்டு.

மக்களோட அன்றாட வாழ்வில் இருக்கிற விஷயங்களோடு இணைந்து செயல்படனும். அவர்களுக்கிருக்கிற அடிப்படையான தேவைகள், பிரச்சனைகளோட இணையனும், பெரிய சவால்தான் இது. என்ன இருந்தாலும் இந்திய சமூகத்துல இயல்பாகவே இருக்கிற அந்த நெருப்பை அவன் வயித்துல கட்டிக்கிட்டு இருக்கான். அது கனன்று கிட்டேத்தான் இருக்குது. சாதிய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற ஏற்பாடுதான் அந்த நெருப்பு. அதை அணைச்சிட்டு நீ இந்துன்னோ பொந்துன்னோ சொல்லிக்கோ... பிரச்சினையே இல்லை. ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற சாதிய படிமுறைகளுக்கு மிகப்பெரிய நியாயம் கற்பிக்கிற தத்துவம், எழுத்து இந்து மதத்தை தவிர வேற எதுலயுமே இல்லை என்பதை நீ புரிந்து கொள்ளணும்.

லங்கேஸ்வரன்ங்கிற நாடகம் ஆர்.எஸ். மனோகரன் பல வருசங்களுக்கு முன்னாலயே இங்க செய்தார். அது புத்த ஜாதகக் கதையில வர்ற ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்புறம் அனந்த ராமாயணம்னு ஒண்ணு உண்டு. அனந்தம்னா..முடிவற்ற-எல்லையற்றதுன்னு பொருள். கதையில் இராவணன் மையமான மனுஷன்...நாடகத்தோட நாயகன். அதில், இராவணன் சீதையை மகள் போலப் பார்ப்பான். குழந்தையாக இருந்தபோது தவறவிட்ட தன்னுடைய மகளைக் கொண்டுவருவதற்கான முயற்சியாக யுத்தமெல்லாம் வரும். இராவணனுக்கு ஒன்பது தலைங்கிறது ராவணன் கழுத்துல இருக்கிற நவரத்தினங்கள்... அதில ஜொலிக்கிற பிம்பமாத் தெரியற முகங்கள்.. அதுதான் பத்துதலை இருக்கறதா ஒரு கற்பனை. இதுதான் முதல் கற்பனை. புத்த ஜாதகத்துல இருக்கிற கற்பனை. பின்னால ராவணனை Demonise பண்ண ஆரம்பிச்சுடறாங்க.. நான்ஸி.ஷி.மனோகரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ‘தமிழ்நாட்டுல இந்த லங்கேஸ்வரன் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு. ஹைதராபாத்ல நடத்தினோம். வரவேற்பே இல்ல’ன்னு சொன்னாரு...

தமிழ்நாட்டுல பெரியார், முன்னாடி இருந்த அயோத்திதாச பண்டிதர் பலகேள்விகளை எழுப்பினதால இயல்பாகவே இதையெல்லாம் ஏற்றுக்கொண்டது. ஆனால் வேங்கடமலை தாண்டினா, இந்த மாதிரியான ஏற்பாடுகளே கிடையாது. உண்மையில நம்மகிட்ட இருக்கிற ராமாயணம்தானே அனந்த ராமாயணம், புத்த ஜாதகக் கதையெல்லாம்... ஏன் நம்புறதில்ல..? ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு 13,14ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதுதான் ராமசரித மனஸ். அதாவது துளசி ராமாயணம். இது மேல்நிலையாக்கம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட (Sterilised version) ராமாயணம். இது ஹிந்துஸ்தானி பேச்சு மொழியில எழுதப்பட்டது ராமசரிதமனஸ். மக்கள் மொழியில எழுதினதாலதான் அதுக்கு ஒரு பெரிய அந்தஸ்து கிடைச்சது. பண்டித மொழியைவிட சாதாரண மக்கள் பேசுற மொழியில எழுதினாத்தான் சாதாரண மக்கள்கிட்ட போகும்னு பண்ணியிருக்காங்க அப்படி பண்ணும்போது அவங்கள அறியாம சாதாரண மக்கள் பேசுற மொழியை வளர்த்தெடுக்கற முயற்சியும், அதுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கற முயற்சியும் நடந்துச்சு.

ஆதவன் - இந்துக்களை ஒருங்கிணைச்சி வகுப்புவாதத்துக்கான வேலை நடக்கிறப்போ அதுக்கு எதிரான போராட்டத்தை இடதுசாரி இயக்கங்களும் இடதுசாரி அறிவுஜீவிகளும் சேர்ந்துதான் நடத்தவேண்டிய சூழல் இருக்கு. அந்த சூழலை அரசியல் இயக்கங்கிற பேர்ல இடதுசாரி இயக்கங்களைவிட, வகுப்புவாதம் தொடங்குகிற ஆரம்ப புள்ளியிலேயே கருத்தியல்ரீதியில் கேள்வி எழுப்பவேண்டிய இடத்துல இடதுசாரி அறிவுஜீவிகள் தான் வலுவா செயல்படுனும்னு நினைக்கிறீங்களா?

பிரளயன்-உண்மை அதுதான். அதாவது இடதுசாரி இயக்கத்துல இந்த பிரச்சினையை கையிலெடுக்கிறப்ப அவங்களுக்கு செல்வாக்கு பொருந்திய இடங்களில் இந்த பிரச்சினையே பெரி அளவில் மேலெழாமல் பார்த்துக்கிறாங்க-மேற்குவங்காளத்துலயும் கேரளாவிலும்... ஆனால் அங்கயும் இந்த கருத்துக்கள் ஊடுருவுது. அதை எதிர் கொள்கிறார்கள். அகில இந்திய அளவில் டெல்லியில் இருந்து செயல்படுகிற சஹமத் (SAHMAT- Safdar Hashmi Memorial Trust) என்கிற அமைப்பு 89லிருந்து ரொம்ப வலுவா ஒரு சமயச்சார்பற்ற சொல்லாடலுக்காக திட்டவட்டமான தொடர் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.பலவித தொன்மங்களை கட்டுடைப்பது- பல கருத்தியல் உண்மைகளை வெளிப்படுத்தி பல அறிவாயுதங்களை வழங்குவது- கே.என். பணிக்கர், ரொமிலா தாப்பர் போன்ற பல வரலாற்று அறிஞர்களுடைய ஆய்வு முயற்சிகளை வெளிக்கொணர்வது, புத்தகமாக வெளியிடுவது என்பதை ரொம்ப வலுவா செய்து வருகிறது சஹமத். இதைப்போல இன்று பல அமைப்புகள் உள்ளன.

Communalism combat - மும்பையில இருக்கு. சஹமத்துடைய பங்களிப்பும் இடதுசாரி அறிவுஜீவிகளுடைய பங்களிப்பும் முக்கியமானது. இப்ப இடதுசாரி அரசியல் இயக்கங்களால் கூட அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற தன்மைக்கு பெரிய ஆதரவை உருவாக்க முடியல. மேலும் அவங்க கூட்டணிகட்சிகளிடம் கூட பெரிய அளவில் கொண்டுபோக முடியல. லல்லுபிரசாத் யாதவ் மட்டும்தான் பி.ஜே.பியை வேறமாதிரி கையாளுகிறார். மற்ற கட்சிகள் பி.ஜே.பியை அரசியல் ரீதியாத்தான் எதிர்க்கிறாங்க. கருத்தியல் ரீதியா பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியல. உதாரணத்துக்கு மத்திய பிரதேசத்துல அரசு அலுவலகங்களில் வந்தே மாதரம் பாடலை எல்லோரும் பாடனும்னு கொண்டு வந்தாங்க. அந்த பாடலை ஏன் நாம கேள்வி கேட்கிறோம்னா இந்தியாவில வேறுவேறு மத நம்பிக்கை உள்ளவங்க எல்லாரும் இருக்காங்க. இந்திய தேசத்தை இந்து அடையாளத்தோடையே பார்க்கிற ஒரு பிரச்சினை உள்ள பாடலை மறுபடியும் தேசிய கீதமா மாத்தறத்துக்காக இதல்லாம் நடக்குது. ஒரு பெரிய அரசியல் ரீதியான விவாதத்துக்கு பிறகு எல்லோரும் ஒத்துக்கொண்ட பாடலா ஜனகனமன இருக்கு. அதை ஏன் மாத்த முயற்சிக்கிறாங்க. இதில் முலாயம் சிங்கோட நிலைஎன்ன? மாயாவதி என்ன சொல்றாங்கன்னு பாக்கணும்.

ஆதவன்- அம்பேத்கர் ஒரு இடத்துல குழந்தை பிறந்தா அதுக்கு பேர் வைக்கிறதிலிருந்து இறந்தா தகனம் பண்றவரைக்கும் மதத்தினுடைய குறுக்கிடும் வழிகாட்டுதலின் பேரிலும்தான் ஒருத்தன் செயல்பட முடியும்னு சொல்றாரில்லையா, அதை கடந்து வர்றதுக்கு இந்த போராட்டம் உதவியிருக்கா?

பிரளயன்- மதத்தினுடைய குறுக்கிடு இருந்தாக்கூட அது ஒவ்வொரு இடத்திலயும் வேறுபடுது. சடங்குகள், நீத்தார் சடங்குகள் இதெல்லாம் மதத்தோட தொடர்புப்படுத்தறதே பிரச்சினை. ஒவ்வொரு பிரதேசத்திலயும் வாழுகிற சாதிக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கம் இருக்கு. குழந்தை பிறந்தா, ஒருத்தன் செத்துப்போனா, கல்யாணம் பண்ணா, நடக்கிற விசயங்கள் எல்லாமே மாறுபடுது. அந்த மாறுபாட்டுக்கு பின்னணியில் நம்பிக்கைகள் இருக்கு. பிணத்தை எரிக்கிறதே ஒரு சில மேல்சாதியினர் தான் செய்யறாங்க. பெரும்பாலான மக்கள் புதைக்கறாங்க. தலைச்சன் பிள்ளையத்தான் எரிப்பாங்க.சமஸ்கிருதத்துல இருக்கிற சடங்குகள், அனுஷ்டானங்கள், புனஸ்காரங்கள் எல்லாமே தகனம் பண்றதுக்குத்தான் இருக்கு. புதைக்கிறதுக்கு இருக்காது. இப்ப நிறைய பேர் நல்லதுன்னு சொல்லி, இடம் இல்லைன்னு சொல்லி எரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா புதைக்கிறதுதான் ஆரோக்கியமானது. பிணத்தை எரித்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியில் நிறைத்து காற்றை சூழலை மாசுபடுத்தாம புதைக்கிறது நல்லது. அறிவியல் பூர்வமா ஒத்துக்கொள்ளப்பட்டது. மதத்தோட நீட்சியா இதை பார்க்கமுடியாது.

ஆதவன்: இடதுசாரிகள் ஆசிரியர்களுக்கு சங்கம் வைத்திருக்கிறார்கள், மாணவர்களுக்கு சங்கம் வைத்திருக்கிறார்கள்... கல்விக்கு எதுவும் அவர்களிடம் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

கல்வியிலதான் நாம தீவிரமா மதிப்பிடனும்.. கல்வியப்பத்தி அதிகமா யோசிச்ச அரசியல் தலைவர்கள்ன்னு பார்த்தா ஜோதிபா பூலே, அம்பேத்கர், காந்தி, அப்புறமா பெரிய தனிநபர்கள் ஜிஜ ¨பாய் பகாகே, ஜே. கிருஷ்ணமூர்த்தி, இவங்கள்லாம் நம்முடைய கல்விமுறையையும், கல்வியுடைய நோக்கு, போதனாமுறை இதைபத்தியெல்லாம் அதிகமா யோசிச்சாங்க. மெக்காலேவின் திட்டம் ஆரம்பத்துல கல்விய Democratise பண்ணுச்சி. கல்விய ஜனநாயகப்படுத்துகிற தன்மை மதராஸாக்கள், சமணப்பள்ளிகள் வரலாற்றுக்கு முன்னால இருந்தாக்கூட மறுபடியும் நவீன காலகட்டத்துல, கல்விய ஜனநாயகப்படுத்தறது மெக்காலேவுடைய கல்வித்திட்டம்.

ஏன் ஜனநாயகப்படுத்தியதா சொல்றேன் என்றால் அது சாதி பார்க்காமல் எல்லாரையும் கல்வி புகட்ட முயன்றது. ஆனால், காலனிய சூழலுக்கேற்ற மாதிரியான ஒரு பாடபுத்தகத்தை மையமாகக் கொண்டது. பாடப்புத்தகம்தான் அறிவினுடைய மூலமாகவும், அதிலிருந்து கிரகித்துக் கொள்வதாகவும், எவ்வளவு தூரம் கிரகித்துக்கொள்கிறோம் என்பதை தீர்மானிக்கிற அளவுகோலா பரிட்சைகள் இருக்கு.. தேர்வு வினாத்தாள்கள் மூலமாகவும் ஒரு மாணவனை மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு திட்டத்துக்குள்ள போய் நாம மாட்டிட்டுருக்கிறோம். அது ரொம்பவும் அதிவேகமா மீண்டும் மீண்டும் உறுதிப்பட்டுகிட்டே வருது. இன்னிக்கு தொழில்நுட்ப வாய்ப்பு வசதிகள் வளர்ந்துருந்தாலும் இது தொடரத்தான் செய்கிறது. அவன் தேடிக் கண்டடையக்கூடய மனோபாவத்தைத் தூண்டுகிற கல்வியாக இல்லை. அப்படி தேடிக் கண்டடையற மனோபாவம் இருக்கிறவன்லாம் அந்தச் சூழ்நிலைல செல்லாக்காசுகளா மாற்றப்படக்கூடிய அபாயம் இருக்கு. இது ஒரு பெரிய கேள்வி.

இடதுசாரி இயக்கத்துல ணிவிஷி அதிகமா யோசிச்சார். ஜே.கிருஷ்ணமூர்த்தியோட அமைப்பு நிர்வகிக்கிற மாற்றுக் கல்வித்திட்டம் கொண்ட பள்ளிகள் பத்து, பதினைந்து இருக்கு. காந்திய அணுகுமுறையில் சில கல்வி நிறுவனங்கள், ஏகலைவா போன்ற அமைப்புகள், அறிவியல் இயக்கத்தால் நிர்வகிக்கப்படுகிற சில பள்ளிகள், இப்போது கார்ப்பரேஷன் பள்ளிகளின் பாலர் வகுப்புகள், ஆகியவற்றில் மாற்று போதனா முறையாக மாணவர்கள் பங்கேற்கும் கல்வியை (Participative Learning) செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆரம்பக்கல்வியையும், பள்ளிக்கல்வியையும் தீவிரமான ஒரு மாறுதலுக்கு உட்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தைகளோட நாடகம் போடும்போது அவங்களுக்கு ரிதம்
சென்ஸ்க்காக சில சொற்கட்டுக்களை திரும்பத் திரும்பத் சொல்வது, தாளத்திற்கு தகுந்தாற்போல் கால்களை எடுத்து வைப்பது என்பதாக சில பயிற்சிகளை கொடுக்கிறோம். நாடகத்துக்காக இதை பண்ணாலும் அறிவியல் பூர்வமாகவே தாளத்தோடு நாம் இயங்கும் போது இடது மூளை வேலை செய்யும். அதுதான் கணக்கு போடுகிற அறிவியல் தொடர்பான விஷயங்களை புரிஞ்சிக்க உதவுகிற பகுதி. டி.வி.எஸ் கல்வி நிறுவனத்தில் ‘கொன்னக்கோலை’ பாடமா வச்சிருக்காங்க... கொன்னக்கோல்னா மிருதங்கத்தோட தாளக்கட்டு, ஜதிகளை- திம்தா திமக்குதிமக்குதின - என்று வாயால சொல்றது. இது முன்பெல்லாம் கச்சேரியில ஒரு பகுதியா இருக்கும்.

இப்ப தியேட்டர் இன் எஜூகேசன் என்கிற புதிய முறையில் குழந்தைகளுடைய ஆளுமையை, தேடிக்கண்டடையும் திறனை, வளர்த்தெடுக்கிற முயற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பான துறை டெல்லியில் இயங்குறதால டெல்லி சார்ந்ததாகவே ஆயிடுது. பிராந்திய அளவில் நடக்கிறபோது இன்னும் பெரிய அளவில் அது வீச்சோடு வளரும் வாய்ப்பிருக்கு. ஒரு பாடத்தை நாடகமா பண்ணும்போது அதை இன்னும் ஆழமா புரிஞ்சிக்கமுடியுது. மேலும் ஏற்கனவே சொன்னமாதிரி நாடகப் பயிற்சி ஆளுமை வளர்ச்சிக்கு, கூட்டாக சேர்ந்து ஒரு பிரச்சினையின் தீர்வை கண்டடையும் வழிமுறையை கத்துக்கிறதுக்கு வாய்ப்பா இருக்கு. அது மட்டும் இல்லாம இன்னொருவருடைய இடத்தில் நின்னு அவருடைய பார்வையில பார்க்கும் அணுகுமுறையையும், சகமனிதன், சகஜீவி மேல ஒரு பற்றுதலை ஏற்படுத்துகிற விஷயமாவும் இது இருக்கும். டி.வி.எஸ். கல்வி நிறுவனம் நடத்துற சில பள்ளிகளில் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தியேட்டர் இன் எஜூக்கேசனில் நானும் பங்கேற்றிருக்கிறேன். சென்னையில் கார்ப்பரேஷன் பள்ளிகளில் லிட்டில் தியேட்டர் அமைப்போடு பணிபுரிகிறோம்.

முற்றும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com