Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

கொப்பேரனும் குறிஞ்சிக்கோட்டை விழாவும்
ஈரோடு.தி.தங்கவேல்
.

“குறிஞ்சி மலைதனிலே, குங்கிலியச் சோலையிலே
வில்பட்டி கிராமத்திலே, விதவிதமா வேடிக்கையாம்
தனனாத்தன்னா, தனனாத் தன்னானே”

பனிகவிழ்ந்த நள்ளிரவில், பெண்களின் கும்மிப்பாடல் அந்த ஊரின் முப்பக்கமும் சூழ்ந்த மலைமுகடுகளில் எதிரொலிக்கிறது. ஊரின் இருபுறமும் ஓடும் (பணிக்கர் ஆறு, சூரகர் ஆறு) ஆறுகளின் அருவிகளின் சத்தம், கும்மிப் பாடலுக்கு தாளநயம் கூட்டுகிறது. வானளாவிய மலை களும், அதில் வளர்ந்து நிற்கும் குங்கிலிய (யூகலிப்ட்ஸ்) மரங்களும், கிழக்குப் பக்கம் மிகப் பெரிய பள்ளத்தாக்கும் சூழ நடுவில் இருக்கிறது வில்பட்டி என்ற கிராமம். “மலையாட்டம்” எனப்படும் ஆண்களின் ஆட்டமும் குலவையும், அதற்கு துணை சேர்க்கும் புலையர்களின் கொட்டும் புல்லாங்குழலும், அருந்ததியர்களின் பறையும் நம்மை குதூகலத் தின் உச்சத்திற்கே கொண்டு செல்லுகிறது.

கொடைக்கானல் வட்டத்தின் மாதிரி கிராமமான வில்பட்டி ஐந்து தலைவாசல்களுக்குள் அமைந்துள்ளது. ஒரு புறம் இரண்டு தலைவாசல்களும், மற்ற மூன்று புறங்களிலும் தலா ஒரு தலைவாசலும் அமைந்துள்ளது ஊரின் அமைப்புச் சிறப்பாகும். இரண்டு தலைவாசல் உள்ள பக்கமே ஊருக்குள் நுழையமுடியும். நுழைந்து, ஒரு பர்லாங் சென்று மறுபடியும் மேல்தலைவாசல் நுழைந்தால் கீழ்மந்தையை அடையலாம். கீழ்மந்தையைச் (மைதானம்) சுற்றி டீக்கடைகளும், மளிகைக்கடைகளும் உள்ளன. பாதசாரிகளும், வாகனங்களும் இரு தலைவாசலையும் கடந்து கீழ்மந்தை வரை செல்ல முடியும்.

கீழ்மந்தையில் பேருந்துகளும், சரக்கு லாரிகளும் வந்து போகின்றன. கீழ்மந்தைக்கு மேலாக நான்கடி உயரத்தில் மேல்மந்தை, வட்டவடிவில், செம்மண் மைதானமாக காட்சியளிக்கிறது. இதைச்சுற்றி வட்டமாக உட்காருவதற்கு கல் போடப்பட்டுள்ளது. இங்குதான் கிராம பஞ்சாயத்து, சாமியாட்டம், மலையாட்டம், பெண்கள் கும்மி என்ற பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. மேல்மந்தை தெய்வம் உறைந்துள்ள புனிதபூமி என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.

மேல்தெரு, நடுத்தெரு, கீழ்தெரு என ஊர் மூன்று பெரும் பிரிவுகள்.மேல்தெருவில் ரெட்டியார்களும், நடுத்தெருவில் குன்னுவ மன்னாடியார்களும், கீழ்த்தெருவில் பிள்ளைமார்களும் வசிக்கின்றனர். இவர்களே ஆதியில் குடியேறியவர்கள். மற்ற சாதியினர் பிறகு புலம் பெயர்ந்து வந்து, எல்லா தெருக்களிலும் வசிக்கின்றனர். ஊரைச் சுற்றியும், இரண்டு ஆறுகளுக்கும் இடையே உள்ள பகுதி பெனம் (குறிஞ்சிப் புனம்) என்று அழைக்கப்படும் நஞ்சையும், ஆறுகளுக்கு அப்பாலுள்ள நிலங்கள் காடு (புஞ்சை) என்றும் அழைக்கப்படுகின்றன.

இங்கு அனைத்து சாதி மக்களின் ஊர்த்தெய்வம் ‘கொப்பேரன்’. காவல் தெய்வம் (கீழ்த்தலைவாசலில்) மண்டு. மண்டுவிற்கு மாசியிலும், கொப்பேரனுக்கு பங்குனியிலும் வருடாவருடம் ஏழுநாட்கள் விழா எடுக்கப் படுகிறது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி பூத்த வருடத்திற்கு மறுவருடம் குறிஞ்சிச்செடிகள் காய்ந்து கட்டையான பின்பு கொண்டாடும் விழாவிற்கு “கட்டை நோன்பு”எனப் பெயர். விழா 15 நாட்கள். குறிஞ்சி மலரோடு இயைந்த பண்பாட்டு நடவடிக்கை இயற்கை யோடு ஊடாடும் வாழ்க்கை முறைக்குச் சான்றாகும். அந்த விழாவின் உச்சக்கட்டத்தின் ஒருபகுதியையே முதல் பத்தியில் நாம் கண்டது.

கொப்பேரனுக்கு கோயில், சிலை, தீபாராதனை, பூசை எதுவுமில்லை. மேல்மந்தைக்கு அருகில் கருங்கல்லால் கட்டப்பட்டு, தகர ஓடு வேய்ந்த ஒரு சிறிய வீடு உள்ளது. இதன் பெயர் தேவர் வீடு. இங்கு தான் கொப்பேரன் உறைந்துள்ளான். மண்டு தலைவாசலில் உறைந்துள்ளான். சுனை, அருவி, மலைத்தொடர், பாறை, மரம், ஊர்மன்றம், ஊர்வாசல்கள் இவற்றில் தெய்வம் உறைந்திருக்கிறது என்ற நம்பிக்கை சங்க காலத்திற்கு உரியதாகும்.

கொப்பேரன், மருளாடி மேல் இறங்கி, வருடம் முழுதும் உடல்நலம், வேளாண்மை குறித்த துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கிறான். பாதிக்கப்பட்ட குடும்பம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, தேவர் வீட்டில் மருளாடி மூலம் இரவு முழுதும் வெறியாட்டம் ஆடி, உயிர்ப்பலி இடச் செய்து ஆறுதல் வழங்குவது இன்றும் நடைமுறை. சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்திலிருந்த இப்பண்பாட்டு மரபு இன்றும் தொடர்வது வியக்கத்தக்கதாகும். “மலைச்சாரலில் புனம் ஏற்படுத்தி அதில் ஐவனம், தினை முதலிய தானியங்களைப் பயிரிட்ட குன்றக் குறவர் குடியினர் மலை விவசாயத்திற்கு மழையைப் பெரிதும் நம்பி வாழ்ந்தனர். மலையில் உறைந்த தெய்வமாக அவர்கள் ‘முருகு’வை (முருகனை) வழிபட்டனர். உறையும் தெய்வமாகவே அன்று முருகு இருந்துள்ளது. இத் தெய்வத்திற்கு,

“மலைவான் (மழை) கொள்க என உயிர்பலிதூஉய
மாரி அன்று மழைமேக்கு உயர்க, எனக்
கடவுள் பேணிய.... (புறம்-143) - வழக்கத்தை புலவர் மரபு குறிப்பிடுகிறது. “உயிர்ப்பலி” என்பது இச்சூழலில் இரத்தப் பலியைக் குறிக்கிறது(ராஜ் கௌதமன்). மருளாடியை சங்க மரபு ‘முதுவாய்வேலன்’ என்கிறது. இக்கிராம மக்கள் ‘தேராடி’ என்றழைக்கின்றனர். காதல் வயப்பட்டு உடல் மெலிந்த பெண்ணுக்கு அணங்கு பற்றியதாகக் கருதி வேலன் வெறியாட்டு நடத்தியது குறித்தும் (அக - 242) சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. வேலன் வெறியாட்டு என்ற மரபு மருகி இக்கிராமத்தில் கொப்பேரன் வெறியாட்டம் நிகழ்த்தப்படுகிறது என்பது வியப்புக்குரியதாகும்.

விழாவில் கொப்பேரன் புனித பூமியான மேல்மந்தையில் ‘வெறியாட்டம்’ 5 மணி நேரம் ஆடுவான். கொப்பேரன் முதலிலும், தொடர்ச்சியாக பதினொரு தெய்வங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. எனவே இதற்கு ‘பன்னிரண்டு சாமி’ என்ற பெயரும் உண்டு. ஆதலால் இந்த விழாவை ‘பன்னிரண்டு நோன்பு’ என அழைக்கின்றனர். ஒவ்வொரு சாமியையும் மருளாடி தன்னுடலில் வரவழைக் கும் பொழுது, மூன்று பெரிய சாதியிலிருக்கும் சில குடும்பங்கள் வந்து காலில் விழுந்து வணங்குகின்றனர். சிலர் அழவும் செய்கிறார்கள். இந்தக் குடும்பங்களுக்கும், சாமிக்கும் உள்ள உறவு என்ன?

‘கொப்பேரன்’ ஆடும் மருளாடி குன்னுவ மன்னாடி சாதியைச் சார்ந்தவர். இவருக்கு துணையாக நின்று உதவி செய்பவர் சட்டப்பன். இவர் மலை ஆசாரி சாதியைச் சார்ந்தவர். விழாவன்று கொப்பேரன் ஆடும்பொழுது வலப்பக்கம் இன்னொரு மருளாடி மூலம் வேட்டக்காரன் என்ற சாமியும் துடிப்புடன் ஆடுகிறது. இந்த மருளாடியும் குன்னுவ மன்னாடியார். இடப்பக்கம் கருப்பணசாமி வேறொரு மருளாடி மூலம் இறங்கி ஆடுகிறது. இதை ஆடுபவர் ரெட்டியார். இவையன்றி இன்னும் சில மருளாடிகளும் அருள்வந்து ஆடுகிறார்கள்.

கானல்களிலும், சோலைகளிலும் வாழும் பழங்குடியரான புலையர்கள் இவ்விழாவிற்கு வந்து கொப்பேரனுக்கும், இதர சாமிகளுக்கும் இசைக்கருவியை வாசிக்க வேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு சாமியும் மருளாடி மூலம் வரும்பொழுது, மூன்று பெரிய சாதிகளின் சில குடும்ப உறுப்பினர்கள் காலில் விழுந்து வணங்கி அழுது நல்வாக்கு பெறுவதின் காரணம் என்ன? மலை ஆசாரியான சட்டப்பன் கொப்பேரன் என்ற ஊர்த் தெய்வத்திற்கு உதவியாளனாக நின்றுகொண்டு, அரைத்து வைத்த மஞ்சளையும் தண்ணீ ரையும் (பிரசாதம்) எடுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்வது எதனால்? சங்ககால தினைப்புனம் ‘பெனம்’ என்று மருவி நஞ்சை நிலங்களாகிப் போனது எவ்வாறு? ஊருக்கு கிழக்கேயுள்ள பள்ளத்தாக்குகளில் இன்றும் சிலர் செந்நெல் பயிரிடுகின்றனர். மருதநிலத்திற்கே உரித்தான நெல் சாகுபடி குறிஞ்சி நிலத்தில் குடியேறியது எப்படி?

“கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடுகல் ஒன்றிரண்டே காணப்படுகின்றன. கல்வெட்டும் போலூர், வில்பட்டியைத் தவிர அதிகம் காணப்பட வில்லை. கீழ்மலையான தாண்டிக்குடியில் தொல்பொருள் ஆய்வில் ஏராளமான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்டுள்ளன.” என தொல்பொருள் அறிஞர் பேரா.ராஜன் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் “கோடைப் பொருநன்” என்ற குறுநில மன்னன் வாழ்ந்ததாக புறநானூறு 205வது பாடல் தெரிவிக்கிறது.

‘கோடைப் பொருநன்’ என்ற சிற்றரரசனின் பெயர்தாங்கிய ‘கோடைக்கானல்’ என்ற பெயர் நிலவி வரக் காரணமாக உள்ளது என ஊகிக்க இடமுண்டு.

வில்பட்டி என்ற பெயர் வரக் காரணம் என்ன? “அர்ச்சுனன் தபசு” என்றொரு இடம் எதிர்ப்பக்க மலையில் உள்ளது. அர்ச்சுனன் தவம் செய்த இடம். அர்ச்சுனனின் ஆயுதம் வில். எனவே வில்பட்டி என்ற பெயர் வந்தது என்கிறார்கள் ஊரார். மூசு பூம்பரை நாச்சிமுத்து “அர்ச்சுனன், வில்லைப் பூட்டி (நாண்பூட்டி) இங்கு நின்றுதான் போர் தொடுத்தார். அதனால் வில்பூட்டி என்று பெயர் பெற்று, காலப் போக்கில் வில்பட்டியானது” என்றார்.

‘கொப்பேரன்’ பற்றி சொல்கையில், கொப்பு என்பது மாட்டின் கொம்புகளுக்கு போடும் கயிற்றாலான ஒரு உறை. எனவே மாட்டின் மேல் ஏறுபவன் என்ற பொருளில், அது சிவனைக் குறிக்கும் ஒருசொல். எனவே கொப்பேரன் சிவபெருமானாவார் என்றதோடு, இன்னும் விபரமாகத் தெரிய வேண்டுமானால் சட்டப்பனிடம் கேளுங்கள் என்றனர். ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாக, “இது திருட்டுச்சாமி” என்றார். வில்பட்டியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள “புத்தூர்” என்ற ஊரிலிருந்து எங்கள் முன்னோர்கள் திருடிக் கொண்டு வந்து இந்த தேவர் வீட்டில் உறையவைத்தனர் என்றார்கள். இது புதுச் செய்தி.

சட்டப்பனும் கொப்பேரன், சிவன்தான் என்றார். 12சாமி குறித்துக் கேட்டதற்கு, 12 மாதங்களுக்கும் 12சாமிகள். வேளாண்மை துவங்கி வரிசையாக 12 மாதங்களுக்குமான பருவத்தைச் சொல்லி பொருத்திக் காட்டினார். மேலும் “இந்த சாமியை புத்தூரிலிருந்து எங்கள் முன்னோர் கொண்டு வந்தனர்” என்றார். “புத்தூர் என்ற மேல் மலை யில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவரெதிரே திடீரென புகை எழும்ப, அதற்குள் கொப்பு அணிந்த ஒருஜோடி மாட்டுக் கொம்புகள் தெரிந்ததாம். மாட்டுக்காரனிடம் “நீ ஊருக்குள் சென்று அனைவரையும் கூட்டி பொது இடத்தில் நிற்க வை. நேரில் காட்சிதருவேன்”என்றதாம். அவனும் அவ்வாறே செய்ய, மீண்டும் எழும்பிய புகை மூட்டத்தினூடே அனைவருக்கும் காளையின் கொம்புகளும் அதிலுள்ள கொப்பும் (உறைகள்) மட்டுமே தெரிந்ததாம். மாட்டுக் காரனுக்கு மட்டும் சிவபெருமான் காளை வாகனத்தில் அமர்ந்திருந்த காட்சி தெரிந்ததாம்” என்றார்.

இதைக் கேள்விப்பட்ட வில்பட்டியைச் சார்ந்த இருவர் புத்தூர் சென்றனர். புத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவைக் கண்ணுற்ற அவர்கள் இந்த சக்திவாய்ந்த சாமியை எங்கள் ஊருக்கு கொண்டு செல்ல வழி என்ன? என்று ஒரு பெரியவரிடம் கேட்டனர். அதற்கு அவர், “கொப்பேரன் உறைந்துள்ள இந்த தேவர் வீட்டு வாசலில் மண் எடுத்து துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் தேவர் வீட்டிலிருக்கிற சிறிய வெள்ளிமணி இரண்டையும், பித்தளையாலான சிறிய முரசையும் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களையும் கொண்டு செல்வீர்களேயானால், கொப்பேரன் உங்களுடன் உங்கள் ஊருக்கு வந்துவிடுவான்” என்று கூறினாராம்.

இந்த இருவரும் அன்றிரவே அவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர். வழியில் ‘பள்ளங்கி’ என்ற ஊரில் (வில்பட்டியிலிருந்து 5 கி.மீ) களைப்பாறி னார்கள். அச்சமயம் பித்தளை முரசு மட்டும் திடீரென குதித்து பள்ளங்கி மண்ணுக்குள் சென்றுவிட்டது. வெள்ளி மணிகளையும், தெய்வம் உறைந்துள்ள மண்ணையும் ஊருக்குள் கொண்டுவரும் பொழுது, வெள்ளிமணிகள் இரண்டும் குதித்து மேல்மந்தை மண்ணுக்குள் மறைந்து விட்டன. பின்பு மீதியுள்ள மண்ணை இந்த தேவர் வீடு இருக்கும் இடத்தில் கொட்டினார்கள். கொப்பேரன் இங்கு குடியேறிவிட்டான். எனவேதான் மேல்மந்தையும், தேவர் வீடும் புனித இடமாக கருதப்படுகிறது என்றார்.

இக்கதையானது, இவரது மூதாதையரின் புலப்பெயர்வைக் குறிக்கிறதோ?. எனில் புத்தூரிலும், பள்ளங்கியிலும் பன்னிரண்டு சாமி கொண்டாடப்படுகிறதா என்றோம். ஆமாம். ஆனால் வில்பட்டியில்தான் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். மறைந்துபோன பித்தளை முரசுக்கும், வெள்ளிமணிகளுக்கும் பதிலாக புதிதாக செய்து வழிவழியாக கொண்டாடுகிறோம் என்றார்.

“கொடைக்கானல் மலைக்கிராமங்களில் வசித்து வரும் குன்னுவ மன்னாடியர், கேரளத்தலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்றும், இன்றும் மூணாறு பகுதிகளில் குன்னுவ மன்னாடியார்கள் ஐந்து லட்சம் பேர்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள்” என்கிறார், பிரபல கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு. மேலும், “இன்னும் சில சாதியினர் கூட கோவை, ஈரோடு மாவட்டப் பகுதிகளில் இருந்தும் குடியேறியுள்ளனர் என்கிறார். எனவே வில்பட்டியின் இன்றைய மண்ணின் மைந்தர்கள் புலம் பெயர்ந்து வந்து குடியேறியவர்கள் என்பது புலப்படுகிறது.

சட்டப்பனிடம், “நீங்கள் எப்படி சட்டப்பன் ஆனீர்கள் என்று கேட்டோம். மருளாடும் சாமிக்கு உதவி செய்வதால் என் பெயர் சட்டப்பன்.இந்த விழாவில் எனக்கு சாமி வராது. ஆனால் இந்த நிகழ்ச்சி முழுவதையும் நான் தான் ஒருங்கிணைப்பேன். ஆடுகின்ற மருளாடிகளுக்கோ, மிராசு களுக்கோ (பாரம்பரியமாக விழாக்குழுவினர்) எதை எதை எப்படி செய்யவேண்டும் எனத் தெரியாது. நான்தான் முன்னின்று நடத்துகிறேன் என்றார்.

இதற்குமுன் மருளாடிகளாக, சட்டப்பன்களாக பணி செய்த 25 ஜோடிகளின் பெயர்களை வரிசையாக எழுதி வைத்திருந்தார். முதல்ஜோடி மாங்கியன் தேராடி, சோலை மன்னாடி சட்டப்பன் என வாசித்த எங்களை நிறுத்தி, மாங்கியன் என்பது எங்கள் குடும்பம். மலைஆசாரிகளான நாங்களே மருளாடியாக இருந்தோம். மன்னாடியார் சட்டப்பன் வேலை செய்து வந்தனர். அந்த முதல் தேராடி காலத்திலேயே, எங்களது ஆசாரி குடும்பங்கள் ஐம்பதை கொன்றுவிட்டு, மன்னாடிகள் மருளாடி பொறுப்பை கைப் பற்றிக்கொண்டு, எங்களை சட்டப்பன் ஆக்கிவிட்டனர் என்றார். முதல்ஜோடி மட்டும் ஆசாரி மருளாடியாகவும், சட்டப்பன் மன்னாடியாகவும் இருந்தது. மற்ற 24 ஜோடிகளும், தேராடி மன்னாடியார்களும், சட்டப்பன் ஆசாரிகளாகவும் இருந்தது.

ஒருஜோடிக்கு 30 ஆண்டுகள் எனக் கொண்டால்கூட இன்று வரையுள்ள 25 ஜோடிகளுக்குமான ஆண்டுகள் 750 வருடங்கள். அதாவது 750 வருடங்களுக்கு (சுமாராக) முன்பே மருளாடி பதவியை ஆசாரிகளிடமிருந்து குன்னுவ மன்னாடிகள் கைப்பற்றியுள்ளனர். ரத்தக்களரியில்தான் தேராடி பதவி கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் ஊருக்கு கெடுதல் ஏற்பட்டால், ஒவ்வொரு குடும்பமும், விழாவின் மூன்றாம்நாள் இரவு “சித்திர புத்திரன்” (எமனின் கணக்குப்பிள்ளை) கோயில் முன்பு கோழி பலியிடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார். மூன்றாம் நாள் நள்ளிரவு வீடு தவறாமல் சித்திரபுத்திரன் கோவிலில் வரிசையாக நின்று கோழியை பலி கொடுத்து சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

வில்பட்டி கீழ்த்தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் பிள்ளை (மிராசு) என்பவர், தாங்கள் கோவை பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றார். மிகவும் வசதி படைத்த “செட்டியார் வீடு” என்ற அடைமொழியுடன் மதிப்புடன் வாழும் இவரிடம் செட்டியார் வீடு என ஏன் பெயர் வந்தது, நீங்கள் பிள்ளை சாதியாயிற்றே? என்றோம். தெரியாது என்றார். சட்டப்பனிடம் கேட்டதற்கு, இவர்களின் முன்னோர் வியாபாரம் செய்ய வந்தவர்கள். இங்கு வந்து நிலங்கள் பெற்று வசதியானவுடன், பிள்ளை என வைத்துக்கொண்டார்கள். மருளாடி ஆடும் பொழுது, முதலில் வரும் கொப்பேரனை அடுத்து வருகிற பதினொரு தெய்வங்களில் ஒன்றான வீரகருவண்டராயன் என்ற சாமி தான் இவர்களின் சாதிக்கான தெய்வம் என்றார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில், மேற்குத் தொடர்ச்சி மஆலையடிவாரத்தில் கச்சகட்டி என்னுமிடத் தில் கருவண்டராயன் என்ற தெய்வம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள உப்பிலிய நாயக்கர் (கட்டிடம் கட்டுவோர்) என்ற சாதியினரின் தெய்வமாக கருவண்ட ராயன் உள்ளது. கொங்குநாட்டின் 24 நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள், வீட்டிலேயே உப்பைக் காய்ச்சி வியாபாரம் செய்துள்ளனர் என ஒரு ஆய்வில் தெரிய வந்தது. உப்புக் காய்ச்சும் சில கருவிகள்கூட இன்றும் சில குடும்பங்களில் கேட்பாரற்று கிடக்கிறது.

நீர்நிலைகளையொட்டி கிடைக்கும் உவர்மண்ணைக் கொண்டு சலவை உப்பு, வெடியுப்பு, உணவுக்கான உப்பு தயாரிக்கும் நுட்பத்தை இவர்கள் அறிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. பவானி சாகரில் இருக்கும் கருவண்டராயன்சாமி, கர்நாடகா வில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, முதலில் கச்சகட்டியில் உறைய வைக்கப்பட்டது என பலர் திரும்பத் திரும்ப கூறு கின்றனர். இது ஆய்வுக்குரியது. இவர்களில் சில குடும்பத்தினர் மலைப்பகுதிக்கு வணிகர்களாகச் சென்று, நிலம் பெற்று வசதியானதும் பிள்ளைமாராக மாறிப்போனார்கள். சங்ககால உமணர்களின் நீட்சியாகத் தெரிகிறது. இன்றும் இவர்கள் குடும்பங்களில் கருவண்டராயன் என்ற பெயர் தாங்கிய குழந்தைகள் பெரியவர்கள் உண்டு.

இனி,ரெட்டியார்கள் குறித்து அறிய விழாவின் மிராசுவாக இருக்கும் பெரியவர் வீட்டிற்கு சென்றோம். அவர் பெயர். பாணன் ரெட்டியார். பாணன்...? இது சங்க காலப் பெயரல்லவா? வெறியாட்டு, புனம், பாணன் இவையெல்லாம் சங்க கால கிராமந்தான் இந்த வில்பட்டி என உறுதிபட வைக்கிறது. இவரது தாத்தா பெயர் பெரிய பாணன் ரெட்டியார். சின்னத்தாத்தா சின்னபாணன் ரெட்டியார். பாணன் மன்னாடியார், சின்னபாணன் பிள்ளை என்ற பெயர்கள் இருப்பதாகவும், ஆறுபேர் பாணன் என்ற பெயரில் இருப்பதாகவும் கூறினார். 60 வயதான அந்தப் பெரியவர், தன் பேரக்குழந்தைகளின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை என்றார். கொப்பேரன் மருளாடியின் இடப்பக்கம் ஆடும் சாமி கருப்பணசாமி இவர்களின் சாதித் தெய்வம்.

தமிழ்நாடு முழுவதும் கருப்பணசாமி நீக்கமற நிறைந்துள்ளான். எனவே கீழ்நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்களே ரெட்டியார்கள் என்பது புலப்படுகிறது. பாணன் ரெட்டியார், “எங்களுடைய முன்னோர் இந்த ஊரையும், மாடுகளையும் காத்து நின்ற படை வீரர்கள். மாடுதிருட பக்கத்து கிராமங்களிலிருந்து வருபவர் களை எதிர்கொண்டு வெற்றியடைந்ததால் பன்னிரண்டு சாமி திருவிழாவின் துவக்க நாளன்று முதல் பொட்டை எனக்கு வைத்துவிட்டுத் தான் மற்றவர்களுக்கு வைக்கும்” என்றார். அதாவது சங்க கால கரந்தை, வெட்சிப் போர்களின் வீரர்களாக இருந்துள்ளனர் எனக் கொள்வது சாத்தியமே.

கொப்பேரன் ஆடும்பொழுது வலப்பக்கம் வேட்டகாரன் (வேட்டைக்காரன்) என்ற துடிப்புமிக்க சாமி ஆடுகிறது. கிராமத்தின் வலதுபுறம் ஓடும் சூரகர் ஆற்றின் கரையில் வேட்டக்காரனின் ஒரு சிறிய கோயில் கவனிப்பாரற்று கிடக்கிறது. முன்பு வேட்டைக்குச் செல்லும் கிராமத்தார் இக்கோயிலில் வணங்கிவிட்டுத்தான் செல்வார்களாம். இன்று வேட்டைக்குப் போவோரும் இல்லை. இந்தச் சாமியை வணங்குவாரும் இல்லை. எனினும் கொப்பேரன் அருகில் மிக வீரியமாக ஆடிக்கொண்டிருக்கிறது.

கொட்டு அடிக்கும் புலையர்கள் மத்தியில் அடிக்கடி சென்று ஆசி வழங்குவது இதன் தொடர்வேலை. சங்க இலக்கியத்தில் வேட்டைக்காரன், வேலன், முருகு, முருகன் என முதல் நிலை பெற்றிருந்த வெறியாட்டுக்குரிய வேலன் புலம் பெயர்ந்து வந்தவர்களால் மதிப்பிழந்து சிறுமைப்பட்டு கிடக்கிறதோ எனத் தோன்றுகிறது. அப்படியானால், சங்க கிராமம் சிதைக்கப்பட்டு, வேலன் சிறுமைப்படுத்தப் பட்டு, கொப்பேரன் முதல்நிலைத் தெய்வமாக மாறிப் போனதின் சமூகப் பொருளாதார காரணிகள்தான் என்ன?

குறிஞ்சியும், முல்லையும் வன்புலங்களாக (புன்செய்)வும், மருதம் மட்டுமே மென்புலமாக (நன்செய்)வும் இருந்ததாக சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுதலில் உணவுத் தேவை பூர்த்தியாவதில்லை. எனவே கரிபுனம் மயக்கி தினை, வரகு பயிரிட்டதோடு கிழங்ககழ்தல், தேனழித்தல் போன்ற வேலைகளையும் செய்து வந்தனர் என்பதை “தேனினர், கிழங்கினர், ஊனார் வட்டியர்” என மலைபடு கடாம் கூறுகிறது.

வில்பட்டியின் வேளாண் தொழில் குறித்துப் பார்க்கலாம். ஊரின் கிழக்கிலுள்ள பள்ளத்தாக்குகளில், 15 ஆண்டுகள் முன்புவரை செந்நெல் பயிரிடப்பட்டு வந்தது. செந்நெல் பத்துமாத மகசூல் என்பதாலும் கடும் உழைப்பை செலுத்த வேண்டியதாலும் இன்று ஓரிரு குடும்பங்கள் தவிர பிறர் பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். காப்பியும், வாழையும்கூட 20ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன.

இன்று உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட், முட்டைக் கோசு, பீட்ருட், நூல்கோல், பீன்ஸ் இவைகளே இன்று பெனங்களில் பயிரிடப்படுகின்றன. இவை மூன்றுமாத வெள்ளாமை. வெள்ளையர்கள், அழகிய ஏரியுடன் கூடிய ஒரு இடத்தைக் கண்டறிந்து கொடைக்கானல் என்ற பெயருடன் கூடிய உல்லாசத்திற்கு உகந்த நகரத்தை உருவாக்கி வாழத் துவங்கிய பின்பே, அவர்களின் தேவைகளுக்காக அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவையே இந்த வேளாண்பயிர்கள் ஆகும்.

கிராமத்தின் இருபுறமும் ஓடும் ஆறுகளின் தண்ணீரை வாய்க்கால்களின் மூலம் குளங்களில் நிரப்பி அங்கிருந்து பெனங்களில் பாயுமாறு உருவாக்கப்பட்ட பாசன வசதி இவ்வூர் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவுக்கு சான்றாக விளங்குகிறது. பண்டார குளம், கேளகுளம், அசத்துக்குளம், பெருவாரைக்குளம் என உருவாக்கப்பட்டு கோடையிலும் பயிர் செய்யத் தகுந்தவாறு உருவாக்கி இருப்பது அவர்களின் வரலாற்று வழிப்பட்ட உழைப்பிற்கு சான்றாகும். தண்ணீர் சரிவான பூமியில் நிற்காது. எனவே தண்ணீர் பெனங்களில் நின்று பாயுமாறு அடுக்கடுக்கான முறையில் தட்டுகளை அடுக்கி வைத்தாற்போல், ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்குமாறு நிலம் வெட்டி எடுத்து சமப்படுத் தப்பட்டுள்ளது. இதை இம்மக்கள் தட்டு என்கிறார்கள்.

அசன்தட்டு, நாசுவன் தட்டு, கோணிதட்டு என்று தட்டு சேர்த்தே கூறுவது அவர்களின் அனுபவத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சொற்களாகும். மருதநிலத்தில் ஒரு வயல் என்பது நான்கு வரப்பிற்குள் அமைவது. குறிஞ்சியில் அது தட்டு. ஒவ்வொரு தட்டிலும் மண்ணின் ஆழம் மூன்று அடி வரை பொதுபொதுவென்று அமைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகாலம் பண்படுத்தியதின் விளைவாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலத்தைப் பண்படுத்தியதும், பாசன வசதியை உருவாக்கவும் முன் நிபந்தனையாக இருந்து சமூக உருவாக்கம் குறித்த செயல்பாடு யாது?

சட்டப்பனின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டாம் நாள் இரவு நடைபெற்ற ஒரு மந்திரச் சடங்கை கண்ணுற்றோம். தண்ணீருக்காக, இரண்டு மருளாடிகளுக்கிடையே ஏற்படும் சண்டை பாத்தி வெட்டுவது போலவும், நீர்ப் பாய்ச்சுவது போலவும், தடுக்க முனைவதும், இவர்களுக்குள் ஏற்படும் போர், பின்பு இருவரும் உயரமான இடத்திலிருந்து (3அடி உயரம்) விழுவது போலவும் பின்பு கொப்பேரன் வான் நோக்கி ஆஆ... என்று கூக்குரலிட்டு, கட்டளை இடுவது மான மந்திரச் சடங்கினைச் செய்தனர். இதைக் கண்ணுற்ற மக்கள் வெகு குறைவானவர்கள். சட்டப்பன் கூறினார் “பல சடங்குகளை நாங்கள் நிறுத்தி விட்டோம். மாடு பிடிக்க வருவதும், அவர்களுடன் நடத்தும் சண்டை எனவும் ஒரு சடங்கும் முன்பு இருந்ததாம்.

இதேபோல் இன்னொரு சடங்கும் கவனத்தை கவர்ந்தது. விழாத்துவங்கும் 15 நாட்களுக்கு முன்பே நெல் குத்தி அரிசி எடுத்து பதப்படுத்தி மொடாக்களில் ஊற வைத்து கள் தயார் செய்கின்றனர். ஊறி நுரை தளும்பும் கள் விழாவின் மூன்றாம்நாள் மாலை எல்லா வீடுகளுக்கும் கொடுத்தனுப் பப்படுகிறது. அன்றிரவுதான் சித்திரபுத்திரன் கோயிலில் கோழி பலியிடல் நடைபெறுகிறது. பலியிடப்பட்ட கோழிக்கறி சமைத்து கள்ளையும் வைத்து ஒவ்வொரு வீட்டிலும் படையல் செய்கின்றனர். தேவர்வீட்டில் மருளாடிகளும், மிராசுகளும் (விழாக்குழுவினர்) படையல் செய்து இரவு 2 மணிக்கு சாப்பிடுகிறார்கள். நாங்களும் தேவர் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கும் கள்ளும், கறியும் பரிமாறப்பட்டன.

இவ்விழா 800 ஆண்டுகள் பழமையானது என தேராடி, சட்டப்பன் பட்டியலில் இருந்து தெரிகிறது. எனில் 11 அல்லது 12ம் நூற்றாண்டு முதல் இவ்விழா கொண்டாடப்படுகிறது எனக் கொள்வோமானால், அது சோழப் பேரரசு நிலைகொண்டு உச்சநிலைக்கு சென்ற காலம். கேரளம், கர் நாடகம், ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளிலும், தமிழ் நாடு முழுவதும் அவர்களின் ஆட்சி வியாபித்திருந்தது. பேரரசின் பொருளாதாரக் கட்டமைப்பும், அரசு நிர்வாகமும் நீடித்து நிலைபெற, அதிக உபரியை வழங்கும் நெல் சாகுபடி நோக்கமாக இருந்தது.

“சோழ நாடு சோறுடைத்து” என்ற சிறப்புத்தன்மைக்கு இணங்க அரசின் நிர்வாகம் நெல் சாகுபடியை மருதநிலம் மட்டுமில்லாமல், முல்லை நிலத்திலும் விஸ்தரிக்கத் துவங்கி, முல்லை நிலங்களில் பாய்ந்து வரும் அமராவதி, நொய்யல், பவானி ஆறுகள் செல்லும் வழியெல்லாம் நெல் சாகுபடிக்கான நிலங்களாக மாற்றியமைத்தது என்பதை அறிவோம். நிலமானிய முறையும், அதற்கான நிலங்களைத் தேடலும் என்ற வகை யில் நெல் சாகுபடிக்கான பரப்பளவை மேலும் மேலும் விரிவாக்கத் தொடங்கியது. முல்லை நிலம் மட்டுமின்றி சாத்தியப்பட்ட குறிஞ்சி நிலங்களிலும் கூட செந்நெல் பயிரிட முயற்சி செய்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

மருதநிலத்தில் நெல் பயிரிடும் நுட்பமறிந்தவர்களில் மிகச் சிறந்தோர் முல்லை நிலத்தில் பயிரிடுவதற்காக அனுப்பப்பட்டனர். தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டையிலிருந்தும் பல குடும்பங்கள் நொய்யல் பகுதியான பழைய கோட்டை, அமராவதி பகுதியான தாராபுரம், கொழுமம், குமரலிங்கம் மற்றும் பவானி பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். (கொங்கு நாட்டு வரலாறு - முனைவர் வீ. மாணிக்கம்.) பவானி ஆற்றிலிருந்து நீரைப் பிரித்தெடுத்து சாகுபடி செய்ய காளிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டதும் 12ம் நூற்றாண்டாகும். மருதநிலச் சாகுபடியாளர்கள் முல்லை நிலத்தில் சாகுபடி செய்ய இயலும். ஆனால் குறிஞ்சி நிலத்தில் சாகுபடி செய்ய இயலாது. ஆனால் குறிஞ்சி மலைப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்தவர்கள்தான் குறிஞ்சியிலும் சாகுபடி செய்ய இயலும்.

அன்றைய நிலையில், சோழநாட்டிற்கு உட்பட்டிருந்த மூணாறு போன்ற மலைப்பகுதி மக்களிடமே இந்த தொழில்நுட்பம் இருந்தது. அன்றைக்கு நெல் சாகுபடி செய்து வந்தவர்களே குன்னுவ மன்னாடியார். மலைப்பிர தேசங்களில் நெல் சாகுபடி செய்யும் முறையை அறிந்தவர் களும் அவர்களே. நெல் அதிக உபரியை வழங்கும் பயிர் என சமூகம் ஏற்றுக்கொண்ட பின்பு, நெல் சாகுபடிக்கான நிலத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் அவர்களை நிர்பந்தித்தது. இவர்களின் தேவையே, பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பின் தேவையாகவும் இருந்தது.

குன்னுவ மன்னாடியாரது புலப்பெயர்வு (படையெடுப்பு) இவ்வாறு துவங்கியிருக்கிறது. வில்பட்டி சட்டப்பனின் கூற்றுப்படி, இவர்கள் புத்தூரிலிருந்து (35கி.மீ) பள்ளங்கி, வழியாக வில்பட்டிக்கு புலம் பெயர்ந்து வந்தது 800 ஆண்டுகள் என்று கணக்கில் கொண்டால் மூணாறு எல்லை யில் இருக்கும் எட்டூர், கிளாவரை, போலூர் (கல்வெட்டு உள்ள இடம்) மன்னவனூர், கவுஞ்சி, கீழானவயல் (பெயரைக் கவனிக்கவும்) பூம்பாறை, கூக்கால் போன்ற ஊர்களை கையகப்படுத்திக் கொண்டுதான் புத்தூர் வந்தி ருக்க இயலும். புத்தூரிலிருந்து பள்ளங்கி வழியாக வில்பட்டி வந்தது 800 ஆண்டுகள் என்றால், அதற்கும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பணி துவங்கிவிட்டது எனக் கொள்ள இடமுண்டு.

வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பேத்துப்பாறை, பெருமாள் மலை, அடுக்கம் மற்றும் கோடைக்கானல் நகரம் உள்ளபகுதிகளில் தான் “கோடைப்பொருநன்” என்ற சீறூர் மன்னன் வாழ்ந்து வந்தான் என்கிறார் பேரா.ராஜன். இது சங்க காலத்துச் செய்தியாகும் என்றாலும், உற்பத்தி முறையிலோ, உணவுப் பங்கீட்டு முறையிலோ போர் முறையிலோ, களவு, கற்பு ஒழுக்கமுறையிலோ பெரிய மாற்றம் (சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்) ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு ஜனநாயகக் குடியரசின் நீட்சியாக தொடர்ந்து நீடித்து வந்திருக்க வேண்டும்.

புலையர்களும் பனியர்களும் (வேடர்கள்) வேட்டையாடுதல், தினை, வரகு பயிரிடுதல், கிழங்ககழ்தல், தேனழித்தல் போன்ற உற்பத்தி முறையே நீடித்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் எச்சங்களை இக்கிராமத்தில் பார்க்க முடிகிறது. போர்க்கருவிகளின் தன்மை, 1200 ஆண்டுகளுக்கு முன்பி ருந்த அளவில் இருந்தது எனக் கொள்ளமுடியாது.மற்ற கருவிகளைவிட வில் அச்சமூகத்தின் நவீன கருவியாக செயல்பட்டிருக்க வேண்டும். சங்க காலத்தில் எயினர்களின் வில் பயிற்சியும், வில்லாற்றலும் உணவுக்காக விலங்கு களை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

வேட்டைக் கான வில்பயிற்சி என்பது போருக்கான வில்பயிற்சி என்ற நிர்பந்தம் முன் வந்திருக்க வேண்டும். குன்னுவ மன்னாடிகளின் வருகை, தொடர்ந்து பல கிராமங்களை வீழ்த்தி அவர்கள் பெற்ற வெற்றியின் செய்திகள் இவர்களை வந்து சேர்ந்திருக்க வேண்டும். எனவே எதிரிகளை எதிர்கொள்ள மேம்படுத்தப்பட்ட வில்லையும், அதற்கான பயிற்சி தரும் பட்டியையும் (மைதானம்) உடைய இடமாக இது இருந் திருக்க வாய்ப்புள்ளது. இக்காரணங்களைக் கொண்டதாக இருந்ததால் இது வில்பட்டி என்ற பெயரைப் பெற்றிருக் கிறது. சுற்றுக் கிராமத்திலிருந்து போர்ப்பயிற்சி பெற வந்துபோகத் தோதான இடமாக இருந்திருக்க வேண்டும். (இன்றும் அதன் சமூக பொருளாதார நடவடிக்கை மையமாக திகழ்கிறது)

வில்பட்டியில் நிலைகொண்ட குன்னுவ மன்னாடிகளே, ஆற்றுப் பாசனத்திற்கும், நெல் விளையும் நிலங்களை உரு வாக்கவும் காரணமாயினர். தோற்று வனங்களுக்கு ஓடிப் போன புலையர்களின் (வேடர்கள், எயினர்கள்) வேலன் வெறியாட்டு பண்பாடும், இவர்களின் பண்பாடும் கலந்த புதிய பண்பாட்டு உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. இதுவே பன்னிரண்டு சாமி கலாச்சாரம். எனவேதான் புலையர் களின் கொட்டும், புல்லாங்குழலும் கொப்பேரன் ஆட்டத் திற்கு துணை சேர்க்கின்றன. குறிஞ்சி நிலத்தின் முதற்பெரும் தெய்வமாக இருந்த வேட்டைக்காரன் (வேலன், முருகு) வேட்டக்காரன் ஆகி அதிகாரமிழந்தவனாக புனங்கள் எல்லாம் செந்நெல் விளையும் வயல்களாகி பெனம் என்று அழைக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயர் வரவிற்குப் பின் பெனம் நஞ்சை என்ற கருத்தாக்கம் பெற்று இன்றும் நீடிக்கிறது. செந்நெல் ஊருக்கு வெளியே பயிரிடத் துவங்கும் பொழுது அது வயல் என்ற உண்மைப் பெயரை தாங்கி நிற்கிறது.

செந்நெல் விளைச்சலும், செழிப்பும் வணிகர்களை ஈர்த்தது. கொங்குப்பகுதியில் இருந்த வணிகச்சாத்து இங்கு வந்து சென்றது. காலப்போக்கில் வணிகர்களும் (செட்டியார்) நிலங்களை வாங்கி (சோழப்பேரரசில் நிலங்களை விற்பனை செய்யும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது) நிலச் சொந்தக்காரர்களாகி, வேளாண் வகுப்பினரான பின் பிள்ளை என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டனர். வீரகருவண்டராயன் என்ற சாதித் தெய்வம் கொப்பேரனின் துணைத்தெய்வமாக ஆகிப்போனான். குன்னுவ மன்னாடி களின் பயணம், இன்னும் முடியவில்லை.

sவில்பட்டிக்கு கீழிருக்கும் வடகவூஞ்சி, பூலத்தூர், பூதமலை, பாய்ச்சலூர், தாண்டிக்குடி, மங்களங்கொம்பு வரை நீட்டிக்க வேண்டி யிருந்தது. எனவே, ஊரை, விளைச்சலை, கால்நடைகளைப் பாதுகாக்க, காவலர் துணை வேண்டி இருந்தது. கீழ்நாடுகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட, அல்லது தொழில் நாடி வந்தவர்களை அமர்த்த வேண்டிய தேவை இருந்தது. இவர்களே புதிய கரந்தை, வெட்சிப் போர்களை நடத்துபவர்களாகவும் இருந்தனர். இவர்களே செட்டியார் என்று தங்களை அடையாளப்படுத்தினர். இவர்களின் காவல் தெய்வமான கருப்பணசாமி துணைச் சாமியாக ஆடிவருகிறது.

நோன்பு துவக்கத்தில் கொப்பேர னிடம் முதல்பொட்டு பெறுபவர்களாகிவிட்டனர். வேலன் வெறியாட்டு, பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளை செரித்து, பன்னிரண்டு சாமி என்ற புதிய பண்பாட்டு வடிவத்தை எட்டியது. வில்பட்டி வெற்றிக்கு முன் இவர்களின் முன்னோர் கடந்த பாதைகளில் கிடைத்த வெற்றியின் அடையாளமாக, கொப்பேரன் ஆட்டத்தில், கவுந்தி பூதம், மன்னவனூர் பூதம், கிளாவரை பூதம் என பல்வேறு பூதங்களை அழைப்பதும், அதுபோல் வில்பட்டியிலிருந்து புறப்பட்டு, பின்னால் அவர்களுக்கு கிடைத்த வெற்றியின் பண்பாட்டு அடையாளமாக பாய்ச்சலூர் பூதம் என்று வரிசையாக கூப்பிட்டு வரவழைப்பதுமான பண்பாட்டு நிகழ்வும் இந்த ஆட்டத்தில் காணமுடிகிறது.

மட்டுமல்ல, கடந்தகால தேராடிகள், சட்டப்பன்களை ஆவியாக வரவழைத்து வணங்குவதையும் காணமுடிகிறது. என்றோ ஒருநாள், ஏழு சகோதரர்கள் வயலில் உழுதுகொண்டு இருக்கும் பொழுது, ஏதோ காரணத்தால் (ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள்) ஏழு சகோதரர்களும், ஒரு தங்கையும், ஏழு ஏர்மாடுகளையும் (14) அருவியில் தள்ளி விட்டு இவர்களும் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் ஆவியும் மருளாடியின் மூலம் மக்களுடன் பேசுகிறது. அதுமட்டுமல்ல அந்த காளைமாடுகளும் பெயர் சொல்லி வரவழைக்கப்படுகின்றன.

இதுபோல தொன்று தொட்டு இறந்துபோன, முக்கியமானவர்களின் ஆவிகளும் வரவழைக்கப்படுகின்றன. “பாப்பாரப்புள்ளே... என ஒருமுறை கூவி அழைத்துவிட்டு, மருள்காய் நாரினால் செய்யப்பட்ட பூணூலை அணிந்துகொண்டு ஆடுகிறது. இங்கு பார்ப்பனர்களின் குடியிருப்பும் இருந்துள்ளது (50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிராம முனிசீப் பிராமணர் என்பது தெரிந்தது). பார்ப்பனப் பெண்ணின் ஆவியும் வரவழைக்கப்படுகிறது. பல்வேறு பண்பாட்டுக் கலவையின் ஒட்டுமொத்தமாக கொப்பேரன் காட்சியளிக்கிறான்.

தாண்டிக்குடியில் தொல்பொருள் ஆய்வில், ஏராளமான முதுமக்கள் தாழியும், மண்பாண்டங்களும் கண்டெடுக்கப் பட்டன. சங்ககாலத்தில் அங்குள்ள மக்களுக்கும் அதிகாரி களுக்கும் ஏதோ தாவா ஏற்பட்டு இரண்டு வருடங்கள் நீடித்தது எனவும், பாண்டிய மன்னனே அவ்வூர் வந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்ததாகவும் கூறுகிறார் பேரா.ராஜன். குன்னுவ மன்னாடிகளின் வருகையின் போது சங்ககால பண்பாட்டு அடையாளங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டிருக்கின்றன. அந்த கதி நடுகற்களுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

வில்பட்டியின் மீது அதாவது சங்ககால இனக்குழு சமூகத்தின் மீது குன்னுவ மன்னாடிகளும், அரசும் வெற்றி கொண்டு ஒரு புதிய உற்பத்தி முறையை தோற்றுவித்ததின் அடையாளமாக வில்பட்டியின் எதிரில், ஆற்றுக்கு மறு பக்கம், மைதானம் போன்ற இடத்தில் முருகனுக்கு கோயில் கட்டி வெற்றிவேலப்பர் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதன் தக்கார்களாக சவுக்கு வீட்டு மன்னாடி, சோலை மன்னாடி, சாந்த மன்னாடி ஆகியோரை நியமித்த கல்வெட்டு ஒன்று கோயிலில் இருக்கிறது. பார்ப்பனர் பூசாரியாக பணியாற்றுகிறார். சங்க கால வேடன் (வேலன், முருகு) ஒருபுறம் மேல்நிலையாக்கம் பெற்று புதிய உற்பத்தி முறைக்கு சாட்சியாக கோயில் கொண்டுள்ளான். மறுபுறம் அதே கீழ்நிலையாக்கம் செய்து கொப்பேரனுக்கு கீழ்நிலைப்பட்டவனாக வேலன், வேட்டக்காரனாக அழிந்து போன வேட்டைச் சமூகத்தின் சாட்சியாக ஆடிக் கொண்டிருக்கிறான்.

கொப்பேரன் சிவபெருமான்தான் என்ற கருத்தை முழுமையாக நிராகரிக்க இயலாது. காளையின் கொம்பு அதன்மீது போடப்படும் உறை (கொப்பு) இவற்றை குறியீட்டாகக் கொண்டு கொப்பேரன் கட்டமைக்கப்பட்டுள்ளான். சங்க கால இனக்குழு சமூகத்தில் காளைக்கு வேலை இல்லை. புதிய உற்பத்தி முறையின் அடையாளமாக காளையும், அதன் கொம்புகளும் கட்டமைக்கப்படுகின்றன. காளை சிவனின் வாகனம். சிவன் சைவ சித்தாந்தத்தின் குறியீட்டுத் தெய்வம். சைவ சித்தாந்தமும், அதன் அடிப்படைக் கட்டமைப்பான உற்பத்திமுறைகளும் தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி பாய்ந்து பரவின. அதன் ஒருபகுதியாக கொப்பேரன் கட்டமைக்கப்பட்டுள்ளான்.

கொப்பேரன் கடந்தகால நினைவுகளையும், நிகழ் கால வெற்றிகளையும், இந்த 800 ஆண்டுகால அனுபவங்களையும் உள்ளடக்கிய அடையாளமாக காட்சியளிக்கிறான். எனவேதான் சைவ மதத்திற்கு எதிரான கள்ளும், கறியும் மக்கள் மட்டுமல்ல, சாமிகளும் சாப்பிடுவது பண்பாட்டின் கலவையைக் குறிக்கிறது. தேவர் வீட்டில் நாய்க்கரும், மருளாடிகளும் சாப்பிடும் போது, வீட்டுச் சுவரில் வரையப்பட்ட சிவன் சிரித்துக் கொண்டு ஆசி வழங்குகிறான்.

வெற்றி வேலப்பன் கோயிலுக்கு ரெட்டியார்களும், புதிதாக குடியேறிய மற்றசாதியினரும் போய்வருகிறார்கள். குன்னுவ மன்னாடிகளும், பிள்ளைமார்களும் இக்கோயிலுக்கு சிரத்தை காட்டுவதில்லை. கோயில் பொறுப்பாளர்கள் என்றவகையில்தான் அவர்கள் தொடர்பு உள்ளது. அவர்களின் மக்கள் தொகையும், வசதியும் குறைந்துவிட்டன. பலர் புலம்பெயர்ந்து திருப்பூர், கோவை பக்கம் சென்று வேலையில் அமர்ந்துவிட்டனர். ரெட்டி யார், பிள்ளைகளின் இன்றைய தலைமுறைகள் கீழ்நாடுகளில் (மதுரை, திண்டுக்கல், தேனி) பெண் கொடுத்து, எடுத்து புதிய உறவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சி பெட்டி உலகத்தையே அவர்களிடம் தினமும் அறிமுகம் செய்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு 2, 3 வீடுகளைத் தவிர மற்றவை நாட்டார் பயன்சார் பொருள்களாலான அல்லாக்கு (மூங்கில் குடும்பம்) என்ற குச்சியாலும் செம்மண்ணாலும் கட்டப்பட்ட சுவரும், போதைப் புல்லால் வேய்ந்த கூரையும் கொண்டிருந்தன. இன்று இரண்டு வீடுகள் தவிர மீதி அனைத்தும் செங்கல்லால் கட்டப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டுள்ளன.வருமானம் பெருகி இதைக் கட்டவில்லை. மாறாக நிலங்களை விற்று கட்டியுள்ளனர். குழந்தைகள் பேருந்து மூலம் கொடைக் கானலில் ஆங்கிலக் கல்விக்கு சென்று வருகிறார்கள்.

அனைத்துவீடுகளிலும் எரிவாயு அடுப்பு இணைக்கப்பட்டுள்ளது. மேல்மந்தையில் அனைத்துக்கட்சிக் கொடிகளும் பறந்து கொண்டிருக்கின்றன. மேல்தலைவாசலில் அருந்ததியர் குடியிருப்பு உள்ளது. இவர்களின் பறையும், மலையாட்டத்தில் புலையர்களின் கொட்டோடு சேர்ந்து ஒலிக்கிறது. எல்லோருக்கும் நெற்றியைப் பிடித்து மஞ்சளில் பொட்டு வைத்து தீர்த்தம் தரும் கொப்பேரன் இவர் களுக்கு மட்டும் தூர நின்று, மஞ்சள் சாந்தை தூக்கி எறிய, ஒதுக்குப்புறமாக நின்று பெற்றுக் கொள்கிறார்கள். தீர்த்தத்தை எல்லோருக்கும் தூர இருந்தே தெளித்து விடுகிறார்.அம்மன்கோவிலும், கருப்பணசாமி கோவிலும், மதுரை வீரன் கோவிலும் ஒதுக்குப்புறமாக இருக்கின்றன. அவைகளும் அதற்கான நேரத்தில் கவனிக்கப்படுகின்றன.

கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வில்பட்டி வரை குடில்களையும், ஐந்து நட்சத்திர விடுதிகளையும் கட்டி, உலகமயத்தின், நவீன நாகரிகத்தின் கோரப்பற்கள் இக்கிராமத்தையும் கவ்விக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது. விதவிதமான கார்களின் வருகையும், செல்வந்தர்களின் காலடியும் பட்டு, கிராமம் தனது சுயத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது. கந்துவட்டிக்காரர்களும், ரியல் எஸ்டேட் தரகர்களும் கபடமில்லாத அம்மக்களின் மனங்களில் கனவுகளை விதைத்து அவர்களின் நிலங்களை அறுவடை (அபகரிக்க) செய்யக் காத்துக்கிடக்கின்றனர்.

இன்றைய இளைஞர்கள் இந்த நோன்பு குறித்து மாறுபட்ட சிந்தனை கொண்டிருக்கிறார்கள். மருளாடிகளும், விழா மிராசுகளும் இந்த நோன்பு எவ்வளவுநாள் நீடிக்கும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனினும் கொப்பேரன் என்ற வழக்காறு, அத்தனை மக்களின் ஒற்றுமையைக் கட்டவும், துன்பத்தை எதிர்த்துப் போராடும் மன உறுதியை வழங்கவும் இன்றும் காரணமாக நீடித்து வருகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com