 |
தேவேந்திர பூபதி கவிதைகள்
இப்போதெல்லாம்
காதலை ஒழித்து கட்டுவது பற்றி
ஆலோசிக்கிறேன் இடையில்
தாமரையைப் புனைப்பெயராகக் கொண்ட
ஒருத்தி குறுக்கிடுகிறாள்
ஆண்களைக் காதலிப்பது மகா பாவம்
என அவள் ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்
அவள் தன் கணவனை விட்டு காதலுடன்
ஓடிப்போன சமயம்
எனக்கது ஒரு தகவலாகவும் சற்றே இரக்கமாகவும் இருந்தது
என் அலுவலகக் கோப்புகளில் தொடர்ந்து
விரல்கள் நோகும் வரை கையெழுத்திட்டுக் கொண்டே இருக்கிறேன்
தாமரை ஆரம்பத்தில் என்னைத்தான்
காதலித்தாள் எனச் சொல்வது இப்போதைக்குப் பொருத்தமானது
அவமானங்களின் நிழல்வெளியில்
எத்தனை காலம் மறைந்தழிந்தாளோ
எந்த பரிதாபத்தின் விழுப் பல் பட்டதோ
இடையில் அவள் இறந்தும் போய்விட்டாள்
தாமரை என்பது ஒரு பெண்ணின் புனைப்பெயர்
காதலுக்குரியது என்று
நான் வைத்திருந்த புனைவு ஒன்று அவளுடனேயே
இறந்து விட்டதால்
எனது நிஜப்பெயரை வைத்துத்தான்
இக் கவிதையை நான் எழுதவேண்டும்
துரதிர்ஷ்டம்.
2.
பெண்களைக் கவிதைகளாகவும்
மௌனங்களைப் பூக்களாகவும்
வைத்திருந்தவனின் வீட்டிற்கு
விருந்திற்குச் சென்றேன்
அவன் இரண்டு கவிதைகளை
வாசிக்கக் கொடுத்தான்
ஒவ்வொரு வார்த்தைகளும்
பிரபஞ்சத்தின் ஒளியை
இருளின் சப்தத்தை வெளிப்படுத்திய போது
கைகளில் மகரந்த வாசனை வீசியது
என்னை அவனது தோட்டத்திற்கு
அழைத்துச் சென்று
உதிராத மலர்களை பறித்துத் தரும்போது
அவை என் அன்னையின் நறுமணத்தை நினைவூட்டின
அப்போது 30 வினாடிகளையும் ஒரு புவி ஈர்ப்பு விசையையும்
தாவரங்களில் தொங்கும் நீர்த்துளிகள்
தாங்கிக் கொண்டிருந்தன.
--------------------------------------
இடம் மாறும் பறவைகள்
பறவைகள் இடம் மாறிப் பிழைப்பது போல
நான் ஒரு ஊழியனாகவும்
எனது சிறிய குடும்பத்தின் கூடு ஒன்றை
தோளில் தாங்கியவனாகவும் இருக்கிறேன்
என் அதிகாரத்தின் கடைசிக் கண்ணியில்
எனது சிறிய குழந்தையின் நடைக் காட்சிகள்
இரக்கமற்ற தொலைக்காட்சி அலைவரிசை போல
மாறிக் கொண்டிருப்பது ஒரு அறியப்பட முடியாத சோகம்
அவனறிந்த வெளி, பள்ளிகள்
சில நண்பர்கள், வாகன ஓட்டிகள்
என் அலுவலகம், பிறகு என் இலக்கியத் தோழர்கள்
கூடவே தோட்டத்து அணில்களோடு
அவனது பரிச்சியத்தை
வேரோடு அகற்றி நான் இடம் மாற்றும்போது
அவனது கனவுகளில்
உறைந்திருக்கும் ஓவியம் எவ்வாறு
வண்ணமழிந்து கசியும் என்பதுதான் திடுக்கிடலாய் இருக்கிறது
அவன் யாவற்றின் பெயர்களையும்
சலசலத்தபடி உதிர்த்துக் கொண்டே இருக்கிறான்
மிக இயல்பாக எனது வீட்டின் சாமான்கள்
அவனது உடையாத விளையாட்டுப் பொருட்களுடன்
மூட்டை கட்டப்படுகின்றன.
பற்றற்றவள் போல் என் மனைவி அதில் ஈடுபடுகிறாள் ஒரு குழந்தை அவள் கைகளுக்குள் வினோதமாய் ஒடுங்குகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|