 |
பா.வெங்கடேசன் கவிதைகள்
கொல்லப்படுவது குறித்த விசனம்
நிகழ்த்தவிருக்கும் கொலையின் சலனம்
சிறிது கூட அவன் முகத்தை
விகாரப்படுத்தியிருந்ததாய் நீங்கள் பார்க்கக் கூடவில்லை
நீங்கள் பார்த்ததெல்லாம்
ஒளிந்திருப்பதாய் பாவனை செய்யும்
கத்தியின் கூர்மை
உறைக்கு வெளியே சுடர்விடம் அதிசயத்தை
இறைஞ்சும் உங்கள் பார்வை
சில்லிட்ட பிம்பமாக அவனை நகரவிடாது
உறையச் செய்திருப்பதை
நீங்கள் பார்க்கிறீர்கள்
நீங்கள் பார்க்கிறீர்கள்
உங்கள் விழிகளின் ஒரு கண இமைப்பிற்காய்
பார்வையின் சுவர் உடைபடுவதற்காய்
அவன் நெடுநேரமாய்க்
காத்துக் கொண்டிருப்பதை
பிறகு நீங்கள் பார்த்துக் கொண்டேயிருக்கிறீர்கள்
தள்ளாடியபடி அவன் கால்கள்
திரும்ப நடந்து செல்வதை
இருக்கை விளிம்பின் புறத்தே
குருதி வடியுமவனுடல்
குப்புறத் துவண்டு வழிந்தோடியிருப்பதை.
போர்ப்பரணி
போர்குறித்த அற்புதமான கவிதையொன்று
எழுதப்படத்தான் வேண்டும்
மிக அபூர்வமான கவிதை நிகழ்வாக
இருக்கக்கூடும் அது
போர் நிர்பந்திக்கும் அதிமனித உடற்கூற்றியல்
போர் வேண்டும் உயிர்த் தியாகம்
போர் வளர்க்கும் உலோக நுண்கலைகள்
போர் போஷிக்கும் விளிம்புநிலை உயிர்கள்
போரின் அழகியல் பற்றின
விரிவான ஒரு கவிதையே
இப்போதைய தேவை
போர் மீதானவொரு
அதி முக்கியமான நாவலை நான் எழுதி முடித்தபோது
வார்த்தை நிலத்தின் குறுக்கே கடைசியில்
வெண்புறா ஒன்று
கடந்து சென்றதைக் கண்டதாக
நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்
பக்கங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட போரின்
குரூரமும் தந்திரங்களும் ஒவ்வாமையும்
சமாதானத்தின் மீதான காதலை
பலமடங்கு அதிகப்படுத்தி விட்டதாய்
பொய் சொன்னீர்கள்
போரை மட்டுமே விதந்தோதியது அது
போரை ஆதரிக்கும் எழுத்தென்று நீங்களோ
போர்ப் பிரகடனத்தைக் கூட ஏற்பதில்லையென்று
பிடிவாதம் பிடிக்கிறீர்கள்
சமாதானத்தின் நயவஞ்சகப் பிடிக்குள்
சிக்கித் திணறும் போரை விடுவிக்க
ஒரு கவிதை எழுதப்படத்தான் வேண்டும்
போரின் விஞ்ஞானத்தை மட்டுமே
அது பேசவேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|