லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
.
இருப்பு
கட்டுமரத்தில் கடலோடிச் சென்று
மீன்களை அள்ளும் முக்குவனைப்போல
பனை உச்சியில் ஏறி கள்ளிறக்கும் சாணானைப்போல
நானொரு கவிஞன்
பொறாமை கொள்ளுங்கள்
எனது வலைகளில் மீன்பாடு அதிகம்
எனது கலசங்களில் கள் நுரைத்துப் பொங்குகிறது
பருவ காலங்களுக்காகக் காத்திராமல்
இடம் பெயரும் எனது கவிதைகள்
உயரங்களுக்குத் துணிபவை
எனில் பசித்த வயிறோடு தொழில்படும்
நேர்ச்சை எனக்கில்லை
எனக்கான நியாயமான காலையுணவு
தவறும் பட்சத்தில்
ஒரு கலவரக் காட்சியைச்
செய்திகளில் பார்க்கிறேன்
மதியவுணவு தவறும்போது
தற்கொலைத் தாக்குதல் எனது கவனத்துக்குள்
வருகிறது
ரெண்டு நாள் பட்டினியெனில்
பிரபஞ்சம் பதற்றமுறும்
காக்கைகள் கருகும்
ஒரு குண்டு வைத்துத் தகர்ப்பு
முடிந்து விடுகிறது
அதில் நானும் நாங்களும் நீங்களும் கூட
பலியாக நேர்கிறது
நரபலிகள்.
நரபலியின் முடிவில் எஞ்சும்
சிதைந்த என் கைப்பேனாவில் துப்பாக்கிசெய்து
எனது எறும்புச் சாம்பலைத் தோட்டாவாக்கி
அடுத்த கவிதையை எழுதத் தொடங்குகிறான்
அடுத்த கவிஞன்
அவனே நானாகவுமிருந்தேன்
அவனே நானாகவுமிருக்கிறேன்
அவனே நானாகவுமிருப்பேன்
இப்போது நீங்கள் எந்தப் பக்கத்தில்
எந்தத் திசையிலிருக்கிறீர்கள்?
கொலைக் கைதிக்கான காலையுணவு
ஆடி மாதத்து இன்றைய சாரல்
தாவரங்கள் குதூகலமாய் அசைகின்றன.
வளாகத்து இளம்பிராய மாமரத்துக்குத்
தவக்கோலம்.
துளசி ஒரு துறவியை ஒப்ப
சாரலைப் பொருட்படுத்தாது
சுடு வெயிலின் இன்பத்தில் திளைக்கிறது
பக்கத்து வீட்டு மதிய மீனுணவு இடித்த
சில்வர் பாத்திரங்கள் ஒலியெழுப்புகின்றன.
விருந்தாளியாய் வந்து செல்லும்
மஞ்சள் பூனை
ஏக்கத்தில் என்னைப் பார்த்துவிட்டு
மீன் மணத் திசையில் இழுபட்டுச் செல்கிறது.
ஒரேயொரு காகம் மட்டும்
கொய்யாமரத்தில் அமர்ந்த வண்ணம்
எனது தனிமையிடம் காலையுணவை எடுக்கச் சொல்லி
ஈனக்குரல் பேச
வந்த தொலைபேசியில்
நண்பனின் அழுகுரல்
அழுகுரலின் எல்லா பக்கங்களையும்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறேன்
பிரித்தால் பல வெட்டுக் கத்திகளாய்
மாறிவிடும் அக்குரல்
இப்போது ஒரு புல்லாங்குழலின்
இசையைப் பாவனை செய்கிறது
வெகுதூரத்திலும் வெகுகாலத்திலும்
இருந்த வண்ணம்
அவனை ஒரு மதுக்கடைக்கழைத்துச் சென்று
குவளையில் தங்க வண்ணத்தை ஊற்றி நிரப்புகிறேன்
என் வீட்டு வளாகத்துக்குள்
சுற்றித்திரியும் பூனைகளை ஏவல் செய்து
அவனுக்கு மீனுணவு தருகிறேன்
புல்லாங்குழலோசை என் அறை முழுக்க பரவ
சாரல் கசப்புடன் இறுக
எனது காலையுணவைத் தூரமாய் விலக்குகிறேன்
ஏதேனும் ஒரு லாக்கப்பிலிருக்கும்
கொலைக் கைதிக்கு
எனது காலையுணவு சென்றடையட்டும்
என்கிற உயிர்ப் பிரயாசையில்.
ஆண் துறவி
பொழுது மாறிக் கூவித்திரியும்
செஞ்சேவல்
தனித்தனி வீடுகளுக்கு வெளியே
சுற்றியலைகிறது
சேவலின் கொழுப்பு வாசனையறியாப் பெட்டைகள்
தீனிகளில் துரிதப்படுவதை
காங்கரீட் வீடுகள் புரியாத மொழியில்
பேச முயல
போன்ஸாய்த் தாவரங்கள்
அதனை தடுக்கின்றன.
அணில்களின் துடிக்குரல்கள்
கொண்டாடுகின்றன
சேவலின் குரலில் சீண்டப்படும்
வீட்டுக் கன்னியரின் முன்
மூதாதைகளின் புகைப்படங்களும்
பராமரிப்புக் குரல்களின் பதற்றமும் சூழ
உயிருள் சுருளும் குலசாமிகள்
உடலுக்குள் ஒளிந்து கொள்ளும்
இடங்களைத் தேடியலைகின்றனர்.
சேவலின் குரலை அனைத்துக் கொண்டிருக்கும்
சடைமுனி முதிர்கன்னி
சுய இன்பம் தேடி
குளியலறைக் கதவடைத்துக்
கொள்கிறாள்.
கூவித்திரியும் செஞ்சேவலை
கல்லெடுத்தெறிந்து விரட்டிய
ஒரு பழங்கிழவி
வீட்டினுள் பேத்தியின் உள்ளாடை வாசனையை
சோதனை செய்கிறாள்.
அப்போது கனவிலிருந்து விழித்த
செஞ்சேவல்
இரை முடித்த பெட்டைகளை
நெருங்கிவிட்டது
மறுபொழுதில் சேவலின் குரல்
இயல்பாய் மாறவேண்டும் என்கிற
ஆசை வந்த திசையில்
ஓர் ஆண் துறவி
நகர்ந்து செல்கிறான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|