ஒரு நூலிழையில்தான்
பார்கவன்
தேவதைகளைக் கொண்டாடுவதொன்றும்
பெரிய விஷயமேயில்லை
பிசாசுகளை மதித்து நடத்துவதுதான்
அரிய காரியமே
0
தேவதைகளுக்குக் கட்டுப்படுவதென்ன
ஆச்சரியம்
பிசாசுகளின் சொல்பேச்சுக் கேட்பதுதான்
அதிசயம்.
0
தேவதைகளை நேசிப்பது
சர்வசாதாரணம்
பிசாசுகளிடம் பிரியமாயிருப்பதே
அபூர்வம்
0
தேவதைகளை மறந்துபோனால்
தப்பில்லை
பிசாசுகளை மன்னிக்காதிருந்தால்
தவறுக்கும் தவறான தவறு
0
தேவதைகளை வழிபடுவது
சகஜம்
பிசாசுகளை வாழ்த்துவதுதான்
சிலாக்யம்
0
ஆனால் ஒன்று
எந்த நேரமும்
பிசாசுகள்
தேவதைகளாக வடிவெடுக்கலாம்
அதே போல தேவதைகளும்கூட
பிசாசுகளாக
உருமாறலாம்
ஏனெனில் எல்லாமே
ஒரு நூலிழையில்தான்
இருந்து வருகிறது பாப்பா.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|