தமிழகத்தில் அடையாள அரசியல் - நேற்று இன்று நாளை
விஜயன்
வர்க்கம் என்ற தளத்தை அடைந்தபோது பார்ப்பனரல்லாதோர் அரசியல் மற்றொரு குணாம்ச ரீதியான மாற்றம் அடைந்தது. முதல் மாற்றம் அது பார்ப்பனரல்லாத மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திலிருந்து நழுவிச் சென்று மற்ற சாதிப் பிரிவினரை அடைந்தது. அடுத்து புதிதாக உருவாகி வர்க்க உணர்வு பெற்றுவந்த தொழிலாளர்களை அடைந்தது. 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சியின் வீச்சினாலும் அதன் தாக்கத்தினால் எழுந்த கம்யூனிஸ்டு தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றோராலும் வர்க்க உணர்வு கூர்மையடைந்தது. இந்த காலகட்டத்தில்தான் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைக் கூடியது. 1920ல் 511 தொழிற்சங்கங்கள் இருந்தன. அடுத்த பத்தாண்டுகளுக்குள் எண்ணிக்கை 1661 ஆக உயர்தது.
நாகப்பட்டிணத்தில் நடந்த ரயில்வே தொழிலாளர் போராட்டத்திற்கு பெரியார் ஆதரவளித்தார். 1931 ஆம் ஆண்டில் சோஷலிஸக் கருத்துக்களைப் பறைசாற்றும் வகையில் பல கட்டுரைகள் குடி அரசு இதழில் பெரியார், சிங்காரவேலரால் எழுதப்பட்டன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் மொழிபெயர்ப்பு குடிஅரசில் தொடராக வந்தது. அதற்கு எழுதிய முன்னுரையில் பெரியார் ஏன் கம்யூனிஸக் கருத்துக்கள் இந்தியாவில் வேகமாகப் பரவவில்லை என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார். மற்ற நாடுகளில் ஏழை-பணக்காரன் என்ற இருசாரர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் நேரடியானது. இந்தியாவில் இந்த நேரடி முரண்பாட்டை மறைக்கும் வகையில் சாதிய அமைப்பு உள்ளது. பெரியார் அன்று கூறியபடி, வர்க்கத்தால் வேறுபட்டாலும் சாதியால் ஒன்றுபடுவதும் வர்க்க அடையாளத்தை சாதிய அடையாளத்திற்குள் மறைத்து நடக்கும் அரசியல் இன்றுவரை தொடர்கிறது.
ஒரேசாதிக்குள் வர்க்கரீதியாக மேல்நிலை அடைந்தவர்கள், தங்களுடைய வர்க்க அரசியல் நலனுக்காகவும் மற்ற சாதியிலேயே மேலெழுந்து வந்த பிரிவினருடன் பேரம் பேசுவதற்கும் சாதிய அடையாள அடிப்படையில் மக்களைத் திரட்டுவதையும் நாம் காண முடிகிறது. ஆனால் சிங்காரவேலரும், பெரியாரும் அன்று சுயமரியாதை, சமதர்மம் என்று எடுத்த நிலைப்பாடு பார்ப்பனரல்லாதோர் என்ற அடையாளத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. சோவியத் யூனியனுக்கு பெரியார் மேற்கொண்ட பயணம் சோஷலிஸ சிந்தனைகளின் தாக்கத்தினை அவர் மீது அதிகப்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் அவருடைய எழுத்துக்களிலும், உரைகளிலும் பார்ப்பனர்களை மட்டுமின்றி பணக்காரர்களையும் எதிரிகளாக அடையாளப்படுத்துகிறார்.
திராவிடன் அல்லது தமிழன் என்று அவரால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதன் பார்ப்பனல்லாதவன், பார்ப்பனரல்லாதோரில் கீழ் அடுக்கில் இருப்பவன், சாதியத்தை விடுத்து சாதிப்பெயர்களை நீக்கிக்கொண்டவன், மதம், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டவன், உழைத்துப் பிழைப்பவனேயன்றி மற்றவரின் அறிக்கையை முதலாக்காதவன், அறிவியலின் திறன்களையும், பயன்பாடுகளையும் உணர்ந்தவன், இவற்றிற்கெல்லாம் மேலாக, பெண்களை பிள்ளைபெறும் எந்திரங்களாகப் பார்க்காமல் சொத்தில் சம உரிமை கொடுப்பவன், பெண்களுக்கு விவாகரத்து உரிமையைக்கூடக் கொடுப்பவன்.
அவர் கட்டமைத்த அடையாளம் பன்முகத் தன்மை கொண்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் வகுத்த ஈரோட்டுத் திட்டம் சமூகத் தளைகளிலிருந்து விடுதலை பெற விரும்பிய தமிழர்களை அரசியல், பொருளாதாரத் தளைகளிலிருந்தும் விடுவிக்கும் திறன் கொண்டதாயிருந்தது. இத்திட்டத்தின் பிரதான அம்சங்களாவன, 1.பிரிட்டிஷ் மற்றும் பிற முதலாளித்துவ அரசுகளினின்றும் முழு விடுதலை. 2. எல்லாத் தேசியக் கடன்களும் ரத்து. 3. இரயில்வே, வங்கி, கப்பம் மற்றும் பிற போக்குவரத்துகள் மட்டுமின்றி நிலமும் நீர்வளமும் பொதுவுடமை. 4. விவசாய நிலங்கள், காடுகள் எவ்வித நஷ்டஈடுமின்றி பொதுவுடமையாக்கப்படும். 5.தொழிலாளர்களும், விவசாயிகளும் வாங்கிய கடன்கள் தள்ளுபடி. 6. எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைத்து தொழிலாளர்-விவசாயிகளின் ஆட்சியின் கீழுள்ள ஒரு கூட்டமைப்பு 7. வேலைநேரம், ஊதிய நிர்ணயம் வாயிலாக தொழிலாளர், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, வேலை கிடைக்காதோருக்கு உதவித்தொகை, தொழிலாளர் பயன்பெறும் வகையில் உடல்நல சுகாதார மையங்கள், இலவச நூலகங்கள் மற்றும் பல கலாச்சார அமைப்புகள். சுயமரியாதை-சமதர்மம் என்ற அரசியல் கோஷம் தமிழ் மனிதனின் விடுதலைக்குத் தடையாக இருக்கும் மற்றவை எல்லாவற்றையும் தெளிவாக அடையாளப்படுத்தியது. இங்கு ‘மற்றவையாக’ முன்னிறுத்தப்படுவன ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், பார்ப்பனியம், ஆணாதிக்கச் சிந்தனை ஆகும். இந்தக் கோஷமும், திட்டமும் இரு தரப்பினரை ஒரேசமயத்தில் கலவரப்படுத்தின. ஜஸ்டிஸ் மற்றும் சுயமரியாதை இயக்கங்களுக்குள்ளிருந்த நிலவுடமை வர்க்கங்கள் ஒருபுறம் கிலியுற மறுபுறத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் உஷாரானது. இக்காலக்கட்டத்தில் பெரியார் ஆற்றிய உரைகள் இவர்களை மேலும் உலுக்கியது.
மேற்கத்திய நாடுகளுடன் சோவியத் யூனியன் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பெரியாருக்கு சுயமரியாதை இயக்க இளைஞர்கள் ஈரோட்டில் அளித்த வரவேற்பில் பெரியார் எடுத்து வைத்த கருத்துக்களை பாருங்கள். ‘‘புரட்சி என்ற சொல்லைக் கண்டு அஞ்சாதீர்கள். ஒரு விஷயத்தை தலைகீழாய் புரட்டிப் போடுவதே புரட்சி. அரசன், கடவுள், மதங்கள் இவையாவும் பணக்காரர்களையும், பார்ப்பனர்களையும் பாதுகாப்பதற்கென்று உருவாக்கப்பட்டவை. எவையெல்லாம் சுயமரியாதை உணர்ச்சியை மறுதலிக்கின்றனவோ அவற்றையெல்லாம் மாற்ற வேண்டும். அரசு சிம்மாசனத்தில் பார்ப்பனரை அமரவைப்பதோ, பார்ப்பனனிருக்கும் இடத்தில் அரசனை வைப்பதோ ஒருபோதும் சுயமரியாதை ஆகாது. மாற்றத்தைக் கொண்டு வர சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. புரட்சியே இப்போதைய தேவை.’’
சீர்திருத்தவாதியை ஏகாதிபத்தியமும், நிலவுடமை வர்க்கமும் ஏற்றுக்கொள்ளும். புரட்சிக்காரனை அவை பொறுத்துக் கொள்ளாது. ‘‘வன்முறை கூடாது. நல்லெண்ணம் ஏற்பட்டுவிட்டாலே புரட்சி நிகழ்ந்துவிடும்’’ என்று பெரியார் கூறியபோதிலும் சுயமரியாதை இயக்கும் செல்லும் பாதை சரியில்லையென்று இயக்கத் தலைவர்களில் ஒருசாரார் பெரியாருக்கு நெருக்குதல் கொடுத்தனர். வளர்ந்துவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கொடூரமாகப் பாய்ந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பார்வை பெரியார் மீதும் திரும்பியது. அரசாங்கத்தின் தாக்குதலுக்குள்ளானால் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் அடைந்த ‘பலன்களை’ இழக்க நேரிடும் என்ற அச்சவுணர்வில் சம தர்மப் பாதையிலிருந்து மீண்டும் சீர்திருத்தப் பாதைக்கு பெரியார் திரும்பினார்.
தேசிய உணர்வுகளின் எழுச்சியினால் இந்தக் காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நிகழ்வினை, பார்ப்பனிய ஆதிக்கத்தின் எழுச்சியாகவே பெரியார் கண்டார். இந்தப் பார்வையினை வலுப்படுத்தும் விதமாக அப்போது முதல்வராகப் பொறுப்பேற்ற சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். பார்ப்பனரல்லாதோர் இயக்கம் இதனைத் தமிழின் மீது பார்ப்பனியம் தொடுத்தத் தாக்குதலாகவே கண்டது.
சமூக நீதி கோரி பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்து வந்த காலத்திலேயேதான், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் வளர்ந்து வந்தது. ஐரோப்பாவிலிருந்து வந்து கிஸிஸ்துவப் பாதிரியார்களான ஜி.யூ.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் எனப்படும் பெஸ்லி தமிழ்மொழியின் அரிய பொக்கிஷங்களையும் அதன் சிறப்புகளையும் வெளிக்கொணர்ந்த பணியினால் தமிழ் பேசும் மக்களிடையே மொழியுணர்வு உருவாகி இருந்தது. தம்மொழியைப் பற்றிய பெருமையுணர்வும் கல்வி கற்க முடிந்த, தமிழ் படித்து வளர்ந்த புதிய மத்திய தர வர்க்கத்தினரிடையே நிலவியது. இவர்கள் ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையினால் பயன்பெற்ற தலைமுறையினர் என்பதும் கவனிக்கத்தக்கது. மொழியுணர்வும், பார்ப்பனரல்லாதோருக்கான சமூக நீதி உணர்வும் கொண்டிருந்த இந்தப் பிரிவினரிடையே இந்தி மொழித் திணிப்பு பெரும் எதிர்ப்புணர்வாகக் கிளம்பியது. ஆரிய பார்ப்பன மொழியான இந்தியை பார்ப்பனரல்லாத தமிழ் பேசும் மக்களின் மீது காங்கிரஸ் திணிக்க முயல்வது பார்ப்பனியத்தின் சூழ்ச்சியாகவே அவர்களுக்குப் பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. இதனை ஒடுக்குவதற்கு இந்தியப் பாதுகாப்பு சட்ட விதிகள் என்ற கொடூரமான ஆயுதத்தை ராஜாஜி பிரயோகித்தார். தேசிய இயக்கத்தினை ஒடுக்குவதற்காக காங்கிரஸ் மீது ஏவப்பட்ட பிரிட்டிஷ் சட்டத்தை, மொழிப் போராளிகளுக்கு எதிராக ஏவியது காங்கிரஸ்.
சென்னை மாகாணத்தில் எழுந்த இந்தி எதிர்ப்பு உணர்வு கிழக்குக் கடற்கரை பகுதியில் சென்னையை நோக்கிய பேரணியாக உருவெடுத்தது. பேரணி சென்னையில் மெரீனா கடற்கரையில் சங்கமித்தது. ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்தான் ‘திராவிட நாடு’ என்ற பிரிவினை கோஷம் எழுந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியிலிருந்து நாடு விடுதலைப்பெற்றால், பார்ப்பனிய (காங்கிரஸ்) ஆட்சியின் கீழ் வந்துவிடும். சமூகநீதி மறுக்கப்படும். தமிழ் மொழிக்கு மதிப்பு இருக்காது என்பவைதான் திராவிட நாடு கேட்டவர்களின் வாதம். பெரியார், சிங்காரவேலர் தலைமையில் பன்முகத்தன்மை பெற்ற அடையாளம் மீண்டும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்று இரட்டை அடையாளமாகவும், பார்ப்பனரல்லாத, ஆரியரல்லாத தமிழன் என்ற ஒரு வலுப்பெற்ற பரிமாணத்துடன் புதிய வடிவம் பெற்றது. திராவிட இயக்கத்தின் வலுவான அஸ்திவாரமானது.
இதே காலகட்டத்தில்தான் தேசிய இயக்கம் வலுப்பெற்று பெரும் எழுச்சியடைந்தது. வர்க்க அடிப்படையில் மக்களைத் திரட்டிய கம்யூனிஸ்டுகளும் வலுவடைந்து வந்தனர். தேசிய இயக்கத்தின் வீச்சினால் ஜஸ்டிஸ் கட்சியின் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு நிலை அடிவாங்கியது. நிலப்பிரபுத்துவ அரசியலின் செல்வாக்கு சரியத் துவங்கியது. இதைச் சரியாக உணர்ந்து கொண்டவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பார்ப்பனரல்லாதோர் இயக்கத்துக்கு வந்த சி.என். அண்ணாதுரை அவர்கள். பார்ப்பனரல்லாதோர் அரசியல் நிலைபெற வேண்டுமெனில் நிலப்பிரபுத்துவ சக்திகளிடமிருந்து அதனை மீட்க வேண்டுமென்று முடிவெடுத்த அவர் ‘‘பட்டுச் சட்டைகளையும், ஜரிகை வேட்டிகளையும்’’ சாடினார். பார்ப்பனரல்லாதோர் இயக்கத்துக்குள் நிகழ்ந்த இந்த முரண்பாட்டினை ‘‘நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும், தமிழ் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடு’’ என்று இலங்கைத் தமிழரிஞர் கா.சிவத்தம்பி கூறுவார். ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாக மாறியதற்கான பின்னணி இதுதான். தேசிய இயக்கத்தின் தொடர்ந்த எழுச்சியினால், அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை என்ற நிலை ஏற்பட்டபோதே, சுதந்திர இந்தியாவின் அரசியல் சாத்தியக் கூறுகளை உணர்ந்த அண்ணாதுரை பெரியாரின் பாதையிலிருந்து விலகத் தொடங்கினார். ஆகஸ்டு 15ஐ துக்கநாளாக பெரியார் அறிவிக்க, அரசியல் விடுதலையைக் கொண்டாட முற்பட்டார் அண்ணா. திராவிட நாடு என்ற பிரிவினை கோரிக்கை அப்போதே நீர்த்துப் போனது. பெரியார் எடுத்துச் சென்ற சமூக தளத்திலிருந்து இயக்கத்தை அரசியல் தளத்திற்கு கொண்டு செல்ல அண்ணா முற்பட்டபோது கடவுள் மறுப்புக் கொள்கை வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்பதை உணர்ந்து ‘‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்று புதிய பாதையில் சென்றார். இந்த முரண்பாடுகளின் விளைவாகப் பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் தளத்தில் தமிழ் அடையாளத்தை முன்வைத்து தி.மு.க அரங்கேற்றிய அரசியலில், அதுவரை ‘மற்றதாக’ இருந்த பார்ப்பனிய-ஆரிய அரசியல் ஆதிக்கம் வட இந்தியாவின் ஆதிக்கமாக மாறியது. காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்த முதலாளித்துவ வளர்ச்சி பாதையினால் ஏற்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சியால் நாட்டின் பல பகுதிகளில் மக்களின் அதிருப்திக்கு இட்டுச் சென்றது. இந்த எதிர்ப்புணர்வைத் தமிழகத்தில் அரசியலாக்குவதற்கு தமிழ் அடையாளம் பயன்பட்டது. சமச்சீரற்ற வளர்ச்சியால் எல்லாத் திசைகளிலுமுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தெற்கு மட்டும் தேய்வதாகக் காட்டி பார்ப்பன - ஆரிய - வட இந்திய ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ் மக்களை திரட்ட முடிந்தது.
இந்தப் பணியில் சினிமா, பத்திரிக்கை போன்ற ஊடகங்களின் மூலமாக தமிழர்களின் பொதுப் புத்தியில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. சினிமா வசனங்களிலும், நாடகங்களிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும் தமிழ் என்ற அற்புத மொழியின் ஆற்றல் முழுவதையும் பிரயோகித்து மொழி அங்கிகாரம், சமூக நீதி என்ற பிரச்சினைகள் மட்டுமின்றி பணக்காரன் - ஏழை என்ற வர்க்கப் பிரச்சினைகளும் பொதுப்புத்தியைச் சென்றடையச் செய்தனர் அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள். ‘‘கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்றுக் கொடுத்தான் அந்த இறைவன்’’ என்றும் ‘‘கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது’’ என்று பராசக்தியில் குணசேகரனும் பேசும் உணர்ச்சிகரமான வசனங்கள் பல அரசியல், சமூக, பொருளாதார கலாச்சாரச் செய்திகளைத் தாங்கி வந்து தமிழர்களின் பொதுப்புத்தியைத் தாக்கின.
காங்கிரஸ் அரசின் அடக்குமுறை அரசியல், தத்துவார்த்தப் பிரச்சினைகளினால் கம்யூனிஸ்டு இயக்கம் நெருக்கடிக்குள்ளாகியிருந்த சூழலில், வர்க்கப் பிரச்சினைகளையும், பொதுவுடமை கருத்துக்களையும் அடுக்குத் தமிழில் பேசி, சமூக நீதி, மொழியுணர்வு என்று தமிழர்களிடையே உருவாக்கி வைத்திருந்த அடையாளத்திற்குப் பன்முக தன்மை அளித்ததுதான் தி.மு.க.வின் அடையாள அரசியலுக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தது. அது மக்களின் மனங்களை வெல்வதற்கான போட்டியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு இயக்கங்களை முந்திச் சென்றது.
திராவிட இயக்கம் கட்டமைத்த அடையாளத்தை மேலும் பலப்படுத்தும் வகையில்தான் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கைகளும் இருந்தன. சுதந்திர இந்தியாவைப் பற்றிய உழைக்கும் மக்களின் கனவுகள் தகர்ந்தபோது பல மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. 1937ல் ராஜாஜி செய்த அதே தவற்றை நேரு அரசாங்கமும் செய்தது. மீண்டும் இந்தி மொழி திணிப்பு நடந்தது. ஏற்கனவே தவறான முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையினால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளில் மற்ற மொழிப் பிரிவினரைப் போலவே பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு வடிகாலாக இருந்தது. பன்மொழிக் கலாச்சாரம் நிலவும் ஒரு நாட்டில்தான் தாய்மொழிக்கு அரசு அங்கீகாரம், ஆதரவு கேட்பதும், சாதீய ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் இட ஒதுக்கீடு கோருவதும் ஜனநாயகத்தன்மை கொண்ட கோரிக்கைகளாகும். இந்த ஜனநாயகக் கோரிக்கைகளைத் தமிழ் அடையாளத்தின் பேரில் திரட்டப்பட்ட மக்களுக்காகக் கேட்டு அதிகாரத்தைப் பிடித்ததுதான் திராவிட அரசியலின் வெற்றியாகும்.
தமிழ் அடையாளம் என்ற ஒன்றுக்குள் எல்லா வர்க்கங்களையும் திரட்டிய திராவிட இயக்கம் உண்மையில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபோது எந்த வர்க்கத்தைச் சேர்ந்த தமிழருக்கான அரசாங்கமாகச் செயல்பட்டது என்று பார்க்க வேண்டியுள்ளது.
பரந்துபட்ட ஒரு தமிழ் நடுத்தர வர்க்கம், இடைநிலைச் சாதியினரின் மேல்நோக்கிய எழுச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தி.மு.க. ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தபோது பிராந்திய முதலாளித்துவத்தின் ஆதரவையும் பெற்றது. தேசிய முதலாளித்துவத்துடன் போராடவும், பேரம் பேசவும் இது பயன்பட்டது. பிராந்திய முதலாளித்துவத்திற்கு அகில இந்திய சந்தையும் , நாட்டில் பரவிக் கிடக்கும் மூலப்பொருட்கள் ஆதாரமும், மேலெழுந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கு அகில இந்திய வேலைச் சந்தையின் வாய்ப்புகளும், அரசாங்கப் பதவிகளும், காத்திருக்கும்போது பிரிவினை கோருவது அர்த்தமுள்ளதாகாது. 1963இலேயே அக்கோரிக்கை கைவிடப்பட்டது.
வடக்கு வாழ்கிறது என்று சுட்டிக்காட்டி மத்தியை எதிரியாகப் பார்த்தவர்களுக்கு, தேசிய அரசியலில் காங்கிரஸ் ஆதிக்கம் வீழ்ந்து கூட்டணி ஆட்சிமுறை எதார்த்தமாகிப் போன நிலையில் மத்திய அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதை முதலில் பயன்படுத்திக் கொண்டவர் அ.தி.மு.க நிறுவனத் தலைவரும், காலச்சார அரசியலின் மற்றொரு பெரும் பயனாளியுமான எம்.ஜி.ஆர்.
தமிழ் அடையாளத்தை வைத்து நடந்த அரசியலில் மாநில ஆட்சி அதிகாரமும், மத்திய அதிகாரத்தில் பங்கும் ஏற்பட்ட பின்னரும் தமிழ் தொழிலாளியும், தமிழ் விவசாயிகளும், தமிழ் விவசாயத் தொழிலாளியும் ஏன் பின்னடைந்தே இருக்கின்றனர்? சாதிய, வர்க்க முரண்பாடுகளைத் தாண்டி ஒரு தமிழ் அடையாளம் உண்டென்றால் ஏன் இன்று வன்னிய அடையாளம், தலித் அடையாளம் என்று பிற அடையாளங்கள் எழுகின்றன?
தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்ட தமிழ் அடையாள அரசியல், வர்க்க ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான முழுமையான விடுதலைக்கான ஒரு அரசியல் திட்டத்தை வரையறுத்து செயல்பட்டுள்ளதா? அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தால் இங்கு நிலச் சீர்திருத்தம் ஏற்பட்டு தமிழ் விவசாயிகளும், தமிழ் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோராய் இருக்கும் தலித்துகளும் ஓரளவுக்காவது முன்னேறியிருக்க வேண்டுமே, நாற்பது ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிக்கு பின்னும், கல்வியிலும் அரசாங்க வேலைகளிலும் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரம்பாமலே இருக்கின்றனவே? தமிழ் அடையாள அரசியலினால் மேலெழுந்த வர்க்கங்களும், சாதிகளுக்குள் இருக்கும் வர்க்கங்களும் ஒரு கட்டத்தில் இந்தியமயமானதைப் போல இப்போது உலகமயமாகிக் கொண்டிருக்கின்றனவா?
தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நின்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும்போதும் ஏன் கூலி உயர்வு கேட்டு ஊர்வலங்கள்? வேலை கேட்டு உண்ணாவிரதங்கள்? இருக்கும் வேலையைப் பாதுகாக்கவும், போராடிப் பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் தக்கவைத்துக் கொள்ளவும் ஏன் பேரணிகள்? ஏன் தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர்?
1916ல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியான போது, பார்ப்பனரல்லாதாருக்குள்ளேயே எந்த வர்க்கத்தின் நலன்களை அது முன்னெடுத்துச் செல்லப்போகிறது எஙனற கேள்வி எழுந்தது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலத்தில்- தமிழ் அடையாளத்தை முன்வைத்து அவ்வியக்கம் நாற்பதாண்டுகாலம் ஆண்ட பிறகும் இதே கேள்வி தொடர்கிறது. இததான் திராவிட இயக்கத்தின் தீர்க்கப்படாத முரண்பாடு. இது தீர்க்கப்படாத ஒரே காரணத்தால்தான் அதற்குள்ளிருந்து பல்வேறு புதிய அடையாளங்களை முன்வைத்து தமிழ்நாட்டில் பல அரசியல் இயக்கங்கள் தோன்றியுள்ளன. இவ்வடையாளங்கள் அவற்றுக்கு உள்ளேயிருக்கும் முரண்பாடுகளை தீர்த்து முன்னேறுமா அல்லது அடையாளமற்றுப் போய்விடுமா என்பதே கேள்வி.
தொடரும்.
சென்னையிலிருக்கும் ராஜா முத்தையா ஆய்வு நூலகம் சென்ற ஆண்டு நடத்திய கருத்தரங்கம் மற்றும் டோன்போஸ்கோ விவாதஅரங்கம் சென்றமாதம் நடத்திய விவாதம் ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாளின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|