 |
வசந்ததீபன் கவிதைகள்
தனிமை
குகையிருளில்
மரங்களில்
மின்மினி பூத்திருந்தது.
நட்சத்திரங்களைத்
தேடிப்போன நிலாவும்
போன இடம் தெரியவில்லை.
அடைகாக்கும் நாகம்
உளுந்து பொரிக்கும் வாசனையை
காற்றில் கலந்து
வெளியெங்கும் விசிறியடித்தது.
பகலில் வறுபட்ட
மொட்டைப் பாறை
இரவின் குளுமையில்
சில்லிட்டது.
தாவரங்களின் சுவாசம்
சூழலை ஸ்பரிசித்து
இதமாக்கிக் கொண்டிருக்கிறது.
வெடித்து உயிர்குடிக்க
துளைகளுக்குள் பதுங்கியிருக்கும்
தோட்டாக்கள்
கொட்ட கொட்ட
விழித்திருக்கின்றன.
பசித்தலையும் கறுப்பு மிருகம்
வெடித்த வயல் பிளவுகளிலிருந்து
அது
வெளிப்பட்டது.
இருளடர்ந்த புகையாய்
உருவம் கொண்டு
ஈரத்தை நக்கிக் குடித்து
பச்சைகளைத் தின்று தீர்த்தது.
வெட்கை கமழும்
வெளிகளில்
வேட்கை கொண்டு வலம் வருகிறது.
கருவேலஞ்செடிகள்
கருகி நாறுகிறது...
வெறுமை சூடு பறக்க
மண்மேடுகள் பெருமூச்செறிகின்றன.
பறவைகளின் குரல்கள்
எங்கோ ஒளிந்து போயின.
பாம்புகளில் எலும்புக் கூடுகள்
பீ வண்டுகளின் றக்கைகள்
அடை அடையாய் சிதறிக் கிடக்கும்
அந்த மயான அமைதியில்
சருகுகள் வீரிட்டு கதறிச் செல்கின்றன.
உளுத்துப்போன உத்திரங்களும்
இற்றுப்போன கூரைகளும்
குப்புற சரிவதற்கு
கீறிச்சிட்டு கூக்குரலிடுகின்றன.
கோரைக் கிழங்குகள் தோண்டச்
சென்றவர்கள்
ஒருவேளை திரும்பலாம்
அல்லது
திரும்பாமல் போகலாம்.
அந்த மிருகம்
ஊளையிட்டுத் திரியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|