 |
தலையங்கம்
.
ஊர் விழிக்கும் முன்பாக ஊரையே கூட்டி சுத்தம் செய்கிற துப்புரவுத் தொழிலாளர்கள் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை’ நிறைவேற்றியதாக ஒருநாளும் கொண்டாடப் படவில்லை. அது அவர்களின் கடமை என்று வக்கணை பேசுமளவுக்கு நாக்கும் சாதிக்கொழுப்பும் தடித்திருக்கிறது நமக்கு. ஆனால் கொழுத்த சம்பளமும் சலுகைகளும் பெற்றுக்கொண்டு வழக்குகளின்மீது தீர்ப்பை வழங்க வேண்டிய மிக அடிப்படையான வேலையை நீதிமன்றம் செய்து முடித்தால் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க செயலாக’ கொண்டாடுமளவுக்கு மழுங்கிக் கிடக்கிறோம். உயர்கல்வியில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பைத்தான் வழங்கியிருக்கிறதேயொழிய நீதியை அல்ல.
இடஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பைத் திணிப்பதானது, ஏதோ வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி போல திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இன்றளவும் நீடிக்கிற சாதியடுக்குமுறையே பின்தங்கியதற்கான காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் முற்பட்ட சாதியினரின் உளவியல் இந்தப் போக்கிற்கு அடிப்படையாக இருக்கிறது.
உயர்கல்வி நிலையங்களில் இடம் பிடிக்கத் தேவையான குறைந்தபட்ச தகவலறிவும் பொருளாதார வலுவும், முன்தயாரிப்புக்கான சாத்தியங்களும் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஓரளவுக்கு வருமானமுள்ள பகுதியினருக்கே வாய்த்துள்ளது. அவர்களையும் கிரீமிலேயர் என்று ஒதுக்கிவைத்துவிட்டு, இடஒதுக்கீட்டை யாருக்கு வழங்கப் போகிறது அரசு? இப்படியான படிப்புகள் பற்றியே அறியாத, முன்தயாரிப்புக்கான பொருளாதார பலம் இல்லாத எளியவர்களும் விண்ணப்பிக்காத நிலையில், ‘கொடுத்தோம் கொள்வாரில்லை, என் செய்வோம்’ என்று மாய்மாலக் கண்ணீர் வடித்துக் கொண்டே காலியிடங்களை கபளீகரம் செய்கிற ஆதிக்க சாதியினரின் தந்திரத்திற்கே இத்தீர்ப்பு உதவி செய்யும். இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களாக இருந்துகொண்டே, இடஒதுக்கீட்டின் பலன் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஏழைபாழைகளுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று ஆதரவுக்குரலெழுப்புவதுமாகிய இரட்டை நாக்கில் இந்த தந்திரமே துருத்திக் கொண்டுள்ளது.
ஆன்மீகத்தைப் பயன்படுத்தியே டபுள் டிரிபிள் கிரீமிலேயர்களாக மாறிவிடும் சாத்தியங்கள் கொண்ட இச்சமூகத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சுருட்டுவது எளிதானதே. அதனால்தான் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களையும் கிரீமிலேயராக இத்தீர்ப்பு மாற்றியிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஆனால் கட்சியின் சார்பாக சட்டமன்றத்தில் பணியாற்ற வந்துள்ளதால் ஊதியத்தை கட்சி செயல்பாட்டுக்குத் தந்துவிட்டு முழுநேர ஊழியருக்கான படித்தொகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்களைப் பற்றி இந்த நீதிமான்கள் அறிவார்களா?
தொடர்ந்து இரண்டாவது முறையாக மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தோழர். என்.நன்மாறன், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கிரீமிலேயர். முதுகலை விஞ்ஞானப் பட்டம் பெற்ற நிலையிலும் திருப்பூரில் இரண்டாயிரம் ரூபாய் கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அவரது மகன் கிரீமி லேயரா? கிரீமி லோயரா?
இதற்கு இப்போதே தீர்ப்பை எழுத வேண்டியவர்கள் மக்கள்.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|