 |
தலையங்கம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்தபோது தேர்தல் நிதியாக டாடா நிறுவனம் கொடுக்க முன்வந்த 19 லட்சரூபாயை திருப்பிவீசிவிட்டு, நாங்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் பங்களிப்பில் செயல்படுகிறவர்கள் என்று நெஞ்சுயர்த்தி சொன்ன கட்சிக்கு இன்று முதலாளிகளின் ஏவலாளென்ற அவப்பெயரை சூட்டுவதில் அலாதி விருப்பம் கொண்டிருக்கின்றன ஊடகங்கள்.
விவசாயிகள் தொழிலாளர்கள் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கின்ற, அவர்களது போராட்டங்களை அங்கீகரிக்கின்ற இந்த ஆட்சி நீடிக்கும் வரை இங்கு தொழில் தொடங்கும் தைரியம் எந்த முதலாளிக்கும் வராது. இந்த மாநிலத்தில் தொழில்ளர்ச்சி ஏற்பட்டு முன்னேற வேண்டுமானால் இங்கிருக்கும் ஆட்சியை வங்கக்கடலில் தூக்கி வீசுங்கள் என்று முதலாளிகள் வளர்ச்சிக்காக முழங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திடீரென விவசாயிகளின் பாதுகாவலர்களாக புது அவதாரம் எடுத்துள்ளனர்.
நாட்டில் போராடும் மக்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் எங்களுக்கு ஆதரவாக ஒரு அரசாங்கம் அங்கே இருக்கிறது... அது எக்காரணம் கொண்டும் போராடும் மக்களுக்கு எதிராக போலிசை பயன்படுத்தாது என்று ஆறுதல் பட்டுக் கொண்டிருந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் நந்திகிராம் துப்பாக்கிச்சூட்டினால் நிலைகுலைந்துதான் போயுள்ளனர். என்ன சமாதானங்கள் வியாக்கியானங்கள் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது. கூடாது.
நந்திகிராம் பிரச்னையை முன்வைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றிய விவாதங்கள் மேலெழுகின்றன. அவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை பரதரப்புகளிலிருந்தும் எழுவது வரவேற்க்கூடியதே.
இடஒதுக்கீட்டிற்கு எதிரான இன்னுமொரு தீர்ப்பை வழங்கி உச்சநீதிமன்றம் தனது நீதியை ‘வலுவாக’ நிலைநாட்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் யாரென்ற கணக்கெடுப்பு தான் இப்போது நீதிமன்றத்துக்குள்ள ஒரே பிரச்னை என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படி கணக்கெடுத்துவிட்டால் அப்போதும் மறுப்பதற்கு நீதிமன்றத்திடம் வேறுசில காரணங்கள் கைவசம் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள். தொடர்ந்து தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் எதிராளியை சோர்வடைய வைக்கும் உத்திதான் இது. கணக்கெடுப்பில் ஒருசதவீதம் தான் பிற்பட்டவர்கள் என்று வருமானால் அதையும் ஏற்கமாட்டோம் என்பது தான் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் நிலை.
நமக்கு ஒரே கேள்விதான்- பொதுப்பட்டியலுக்கு 50 சதம் ஒதுக்கியிருக்கும் உச்சநீதிமன்றம் அதற்காக என்ன விஞ்ஞானப்பூர்வமான கணக்எகடுப்பை கொண்டிருக்கிறது? பெரியாராயிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்- ஒரு வெங்காயமுமில்லே.
மடத்தின் குருவானவர் தனக்கு அடுத்த இளைய சந்நிதானத்தை நியமிப்பதுபோல தனக்கு அடுத்து யார் என அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு இல்லை. ஆனாலும் நாட்டின் உயரிய பொறுப்பிலிருக்கும் அப்துல் கலாம் அவர்கள் தனக்கடுத்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி வந்தால் மகிழ்ச்சியடைவேன் என ஒரு விழாவில் கருத்து தெரிவித்திருக்கிறார். சமூகநீதிக் கோட்பாட்டை மூர்க்கமாய் எதிர்க்கிற, தனது நிறுவனத்திற்கு வரும் வெளிநாட்டினருக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் அங்கு தேசியகீதம் பாடப்படுவதில்லை என்கிற நாராயணமூர்த்தியை குடியரசுத்தலைவராக்கும் யோசனை கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|