கிறித்துவத்தை விசாரணை செய்யும் ஒரு வரலாற்று நூல்
கி.பார்த்திபராஜா
கிறித்து மறைந்த முதலாம் நூற்றாண்டிலேயே கிறித்துவம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது. இயேசு கிறித்துவின் சீடர்களில் ஒருவரான புனிதத் தோமையார் மயிலையில் தங்கிச் சமயப் பணியாற்றினார் என்று கூறப்படுவதுண்டு. எனவே தமிழ்நாட்டிற்கும் கிறித்துவத்துக்குமான உறவு என்பது இருபது நூற்றாண்டுகள் பழைமையுடையது என்பது தெளிவு.
கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாகக் கிறித்துவம் தமிழ்நாட்டில் வழங்கி வந்த வரலாற்றை ம.சோ.விக்டரின் தமிழ்நாட்டுக் கிறித்துவம் என்னும் நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
உண்மையில், நூற்றாண்டுக்கு ஒரு புத்தகமாகப் பதினெட்டு நூல்களாக வந்திருக்க வேண்டியவற்றைச் சுருக்கி ஒரே நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். தமிழர் வரலாறு, பண்பாடு, இலக்கியம், மெய்யியல் குறித்த விரிவான செய்திகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. தகவல்களை மிகுந்த சிரத்தையோடு சேகரித்திருக்கிறார்.
நூலாசிரியர் தனது நூலின் முன்னுரையில் ‘கிறித்துவ சமயம் சார்ந்த வரலாற்று நூல் தமிழில் இதுவரை வெளிவரவில்லை’ என்று குறிப்பிடுகிறார். கி. பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே கிறித்துவம் படர்ந்திருந்த தமிழ்நாட்டில், தமிழில் அச் சமயம் குறித்த வரலாற்று நூல் எழுதப்படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. திரு. விக்டர் தனது நூலில் குறிப்பிடுவதைப்போல, உரோம் நகருக்குக் கிறித்துவம் அறிமுகமாவதற்கு முன்னரே, கிறித்துவம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது. அவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாற்றினை உடைய தமிழ்நாட்டுக் கிறித்துவம் பற்றிய விரிவான வரலாற்று நூல் இதுவரையிலும் உருவாகவில்லை என்பது வியக்கத்தக்கச் செய்திதான்.
வரலாற்று நூல்கள், முதன்மையாகத் தரவுகளையும் தர்க்கத்தையும் வேண்டி நிற்பன. புனைவுகளை அவை புறந்தள்ளுகின்றன. எனவே வரலாற்று நூல் எழுதுவது மிகவும் கடினமான பணி. அவ்வாறான கடினமான பணியினைத் தன் சிரமேற்கொண்டு, ஊகங்களும் இயற்கைச் செய்திகளும் மட்டுமே மிகுதியும் கிடைக்கக்கூடிய சமயம் பற்றிய நூலை, தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கித் தந்திருக்கிறார்.
ஏன் தமிழில் கிறித்துவ சமய வரலாற்று நூல்கள் தோன்றவில்லை? என்ற கேள்வியை எழுப்பி, ‘சமயமும் வரலாறும் பல நேரங்களில் முரண்படுவதே’ அதற்குக் காரணம் என்று விடை கூறுகிறார். உண்மைதான். சமயத்தோடு வரலாறு மட்டுமல்ல. அறிவியலும் முரண்பட்டே வளருகிறது. வளர்ந்து வரும் அறிவியலோடு மெய்யியலும் இணைந்தே பயணப்பட வேண்டும். அறிவையும் அறிவாளிகளையும் அறிவியலையும் மதிக்க மதங்கள் கற்றுக்கொண்டிருக்கின்றன. வரலாற்றில் அச்சுவடுகளை நாம் காணமுடியும். மதங்களின் இருப்பிற்கு இம்மாற்றங்கள் அவசியமானவைகளாக இருக்கின்றன. எனவே மாற்றங்களை ஏற்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.
‘கிறித்துவ மதம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கொண்டிருக்கும் கொள்கைகள் பலவும் கி. பி. முதலாம் நூற்றாண்டில் இடம் பெற்றிருக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நூற்றாண்டிலும் கொடுக்கப்படும் விளக்கங்களும், சேர்க்கப்படும் நம்பிக்கைகளும் வளர்ந்துகொண்டே வந்துள்ளதை, கிறித்துவ வரலாற்றை ஆய்வு செய்யுங்கால் விளங்கும்’ என்று (பக்கம் 25) குறிப்பிடுகிறார். மாற்றங்களை மிகவும் எளிதில் அங்கீகரிக்காத, ஏற்றுக்கொள்ளாத மதங்களும் தனது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்தே வந்திருக்கின்றன என்பது மிகவும் உண்மை. இது தவிர்க்க முடியாத உலகின் இயக்கவிதி ஆகும்.
பொதுவாகவே எல்லா மதங்களுமே தங்களுடைய பழைய நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் கூட, அறிவியல் அடிப்படையில் விளக்கமளிக்க முயலுகின்றன என்பது நம் காலத்து வரலாறு. அவ்வாறான விளக்கங்கள் மிகுதியும் ‘போலி அறிவியலாக’வே அமைகின்றன.
மகாபாரதத்தின் ஒருபகுதியாக அடையாளப்படுத்தப் பட்ட பகவத்கீதை பிற்காலத்தில் வடிவம் பெற்று இந்தியச் சமய வரலாற்றில் மட்டுமல்லாமல் அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற வரலாற்றைச் சுவைபட விளக்குகிறது. ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்னும் நூல். அதைப் போலவே, கிறித்துவ தத்துவ, மெய்யியல் வளர்ந்து வந்த வரலாற்றை மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துக் கூறுகிறது தமிழ்நாட்டுக் கிறித்துவம் என்னும் இந்நூல். ஆழமான சமயப்பற்று மிக்கவராக இருந்தும்கூட துணிச்சலோடு பல்வேறு விமர்சனக் கருத்துக்களை நூலில் முன்வைத்திருக்கிறார்.
‘கிறித்துவம் தனது சமயத்துக்காக உயிர்துறந்தவர்களைப் புனிதர்கள் எனப் போற்றுகிறது. உலகெங்கும் கிறித்துவத்துக்காக உயிர் துறந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஆவர். இப்புனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கிறித்துவம் கொன்று குவித்த அறிவியலாரின் எண்ணிக்கை கூடுதலானது என்பது ஆய்வாளர்களின் முடிபுகளாகும். உலகின் எந்தச் சமயமும், இவ்வளவு எண்ணிக்கையிலான அறிவியல் அறிஞர்களைக் கொன்று குவிக்கவில்லை என்பது, மாந்த நேய அடிப்படையில் தொடங்கப்பட்ட கிறித்துவத்துக்கு ஒரு கரும்புள்ளியேயாகும்’ (பக். 62) என்று எழுதுகிறார்.
இவ்வாறு சுயவிமர்சனத்தைக் கிறித்துவ சமயமும் முன்வைத்துத் தனது வரலாற்றைத் திரும்பிப் பார்த்து மதிப் பிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அறிவியலுடன் கைகுலுக்காத மதம் வரலாற்றில் பின்தங்கிவிடும் என்பது உலகியல் உண்மை. வரலாற்றிலிருந்து, கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வரலாற்றை முன்னோக்கி நகர்த்திச் செல்லவேண்டிய கடமை மெய்யியலாளர்களுக்கு இருக்கிறது. அதனை மிகவும் நயமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
கிறித்துவத்தை யூத சமயக்கூறுகளிலிருந்து பிறந்த மதம் என்றே இதுவரை அறிந்திருக்கிறோம். ஆனால், கிறித்துவத்தில் உள்ள தொன்மையான தமிழ்ச்சமயத்தின் கூறுகளை எடுத்துக்காட்டி, தமிழுக்குக் கிறித்துவத்தை நெருக்கமாக்குகிறார். தமிழகத்தில் பிற்காலத்தில் நிலைபெற்றுவிட்ட ஆரிய சமயம் அல்லது பிராமண சமயங்களுக்கு முன்னர் வழங்கிவந்த தொன்மைத் தமிழ்ச்சமயத்தோடு கிறித்துவத்தை அவர் தொடர்பு படுத்துவது மிக முக்கியமான சிந்தனை முறை. அதை ஆய்வு உலகம் ஒப்புக் கொள்ளுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால் தர்க்க ரீதியாக அக்கருத்தை அவர் முன்வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கிறித்துவம் யூத சமயத்தின் தொடர்ச்சி என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. யூதசமயம் என்பது, சுமேரியச் சமயத்தினின்றும் கிளைத்ததாகவே அறியப்படுகின்றது. சுமேரியச் சமயம் சிந்துவெளிச் சமயமே என்பதும், சிந்துவெளிச் சமயம் தமிழ்ச் சமயமே என்றும் அறியக்கிடக்கின்றது. கிறித்துவ சமயத்தின் வேர், தமிழகத்திலேயே உள்ளதை பெருகிவரும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன’ (பக்.26,27) என்கிறார்.
இந்த நூலின் மிக முக்கியமான வரலாற்றுப் பங்களிப்பு என்பது, செவிவழிச் செய்திகளாகவும் புனைவுகளாகவும் மட்டுமே கிடைக்கின்ற புனிதத் தோமையார் பற்றிய செய்தி களை அரிதின் முயன்று தேடித் தொகுத்துத் தந்திருப்பதாகும். தோமையார் இந்தியாவுக்கு வந்தாரா? என்ற கேள்வியை எழுப்பி, ஆதாரங்களுடன் அவர் வருகையை உறுதி செய்திருக்கிறார்.
கிறித்துவம் தமிழோடு கொண்டிருந்த உணர்வுப் பூர்வமான தொடர்பை, கிறித்துவர்களின் தமிழுக்கான பங்களிப்பைப் பலர் இதற்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்கள் என்றாலும், தேவநேயப் பாவாணரின் வழித்தடத்தைப் பின்பற்றி நிற்கின்ற ஆசிரியர், இன்னும் கூடுதலான தகவல்களைத் தந்திருக்கின்றார். அவற்றை அவர் எழுதிச்செல்லும் நடை, தமிழ்நாட்டுக் கிறித்துவம் என்ற அவருடைய நூலின் தலைப்புக்குப் புதிய அழுத்தத்தைக் கொடுக்கிறது.
இராபர் டி நொபிலி, ஜான் டி பிரிட்டோ, ஜோசப் கான்ஸ்டண்டைன் பெஸ்கி, ஹென்றிக் பாதிரியார் ஆகியோரின் சமயப் பணிகளைக்குறித்து நூலின் பிற்பகுதி விரிவாகப் பேசுகிறது. ஐரோப்பியர்களின் தமிழ்ப் பணியைக் குறித்தும் மிகவும் ஆழமாகவும் அந்தப் பணிகளின் குறித்து நெகிழ்வாகவும் இறுதிப் பகுதி விளக்கிச் செல்கிறது.
பிராமண மெய்யியல், ஆசீவகம் முதலானவற்றைக் குறித்து மிகவும் விரிவாக எழுதிச் செல்லுகிறார். புத்தரைக் குறித்து அவர் எழுதியுள்ள பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை. புத்தரால் வெறுக்கப்பட்ட பிராமண சமயம் பிற்காலத்தில் புத்தரையும் உள்ளிழுத்துக் கொண்ட வரலாற்றைச் சுவைபட விளக்குகிறார்.
பிராமணர்களின் வழமைகளில் ஒன்றான கடல் கடவாமை குறித்துப் புதிய விளக்கங்களை அளிக்கிறார். பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை என்ற அவர்களின் மேதாவித்தனம், உலகத்தின் போக்கை அவர்கள் புரிந்து கொள்ளவும் தங்களது சமயத்தைத் தகவமைத்துக் கொள்ளவும் புனரமைத்துக் கொள்ளவும் தடையாக இருந்தமையைப் பற்றி எழுதுகிறார். தமிழ்நாட்டிற்கும் கிறித்துவத்திற்குமான வரலாற்றுத் தொடர்பை விளக்க முனையும் இந்த நூல் தவிர்க்க இயலாமல், தமிழ்நாட்டுச் சமயங்களின் தத்துவங்களை விசாரணை செய்யும் நூலாகவும் விரிந்திருக்கிறது என்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் ஆய்வுநிறுவனங்களும் பல்கலைக் கழகங்களின் ஆய்வுத் துறைகளும் மட்டுமே செய்ய முடிகின்ற ஒரு அரிய பணியை தனியொரு மனிதராக நின்று ஆற்றியிருக்கிறார். தமிழை இப்படி உலகம் முழுவதுமாக விரித்துப் பார்க்கின்ற பார்வைகள் தேவையானது. ஆசிரியர் முன்வைக்கும் கருது கோள்கள் ஆய்வு உலகத்திற்கு அதிர்ச்சியைத் தரவல்லனவாக இருக்கின்றன. அவற்றை ஆய்வறிஞர்கள் ஏற்றுக்கொள்ளுவது என்பது சாதாரணமான ஒன்றாக இருக்காது. ஆனாலும் கருத்துக்களுக்கு மறுப்பெழவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அது எளிதான பணியாக இருக்காது. அதை மறுப்பதற்குக் கூட, மறுப்பாளர் மிகவும் உழைக்க வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டுக் கிறித்துவம்
(கி.பி 52 முதல் கி.பி 1747 வரை)
ஆசிரியர் : ம. சோ.விக்டர், விலை: ரூ. 480, வெளியீடு : தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை,
சென்னை -14.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|