இலக்கியப் பரண்
மறையும் நூல்கள் வரிசை - 3
பா. ஆனந்தகுமார்
காத்த பெருமாள் பிள்ளை இயற்றிய
“திரு வெண்காட ரென்னும் பட்டினத்தார் அம்மானை”
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம்,
சென்னை, 1900
திரிசிரபுரம் வித்வானும் எஸ்.ஐ.ஆர். ஸ்டேஷன் மாஸ்டருமாகிய ம-ள-ள-ஸ்ரீ. தி. இராஜகாத்தபெருமாள் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு, விருதுபட்டி ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளால் பார்வையிடப்பட்டு, பால்வனம் - வித்வான் பெரிய சுப்பாரெட்டியார் அவர்களால் சென்னை - இட்டா பார்த்தசாரதிநாயுடு அவர்களது ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது என்கிற விபரங்கள் நூலின் முன் அட்டையில் பதிவாகியுள்ளன. திரிசிரபுரம் இப்போது திருச்சியாகிவிட்டது. எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்பட்ட சவுத் இண்டியன் ரயில்வே, இப்போது சதர்ன் இரயில்வே ஆகிவிட்டது. விருதுபட்டி விருதுநகருமாகிவிட்டது. நூலை இயற்றுவது ஒருவர் அதனைப் பார்வையிடுவது இன்னொருவர், அதனைப் பதிப்பித்து வெளியிடுவது மற்றொருவர் என்ற அன்றைய குஜிலிப் பதிப்பக வெளியீட்டின் நியதி, இந்த நூலிலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் இரயில்நிலைய மேலாளர் என்பதும் வியக்கத்தக்க தகவல், நூல், நாட்டார் கதைப்பாடல் வடிவில் அமைந்துள்ளது.
பல கதைப்பாடல்கள் அம்மானை என்ற பின்னொட்டுடன் அக்காலத்தில் வெளிவந்துள்ளன. பெரிய எழுத்து ஆமையார் அம்மானை அக்காலத்தில் வெளிவந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க புராணக்கதைப் பாடல் பெண்களாடும் ‘அம்மானை’ எனும் விளையாட்டுப் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திலும் கலம்பக இலக்கியத்திலும் ஓர் உறுப்பாக விளங்குவது. சொட்டாங் கல்லைப் போன்ற (கழங்கு/கழற்சி) மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பந்து வடிவிலான - அம்மானைக் காய்களைத் தூக்கியெறிந்து மகளிர் விளையாடிய காட்சிகளைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் வருணித்துள்ளன. நாட்டார் கதைப் பாடல்கள் ‘அம்மானை’ என்ற அடைமொழியுடன் அமைவதற்கு, மகளிர் அம்மானைப் பாடல்களின் ஓசைநயம் கொண்டு (சந்த விருத்தங்கள்) அவை விளங்கியிருத்தல் கூடும். ஆயின் இக்கதைப் பாடல்களுள் இடம்பெறும் பாடல்கள் பல, அம்மானை எனும் சொல்லிறுதியுடன் அமைவதைக் கவனிக்க முடிகின்றது.
“வல்ல சுவேதாரணியம் வந்தடைந்தாரம்மானை” / “பொன்னங்கிரியதனிற் போய்ப் புகுந்தாரம்மானை” /“அற்புதமாய்ப் பெண்ணொன்று அவதரித்தம்மானை”/ பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப்பிள்ளையார், சுவேதாரணியர், திருவெண்காடர், திருவெண்காட்டடிகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் தமிழ்ப்புலவர் / சித்தரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் விவரிக்கின்றது. பட்டினத்தார் என்ற பெயரில் மூவர் வாழ்ந்ததாக அறிஞர் மு. அருணாசலம் குறிப்பிடுவார். சைவத் திருமறைகளுள் பதினோராம் திருமுறையில் இடம்பெறும் கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர், மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது ஆகிய ஐந்துபிரபந்தங்களைப் பாடியவர், முதலாமவர். அவரது காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. கோயில் திருஅகவல், கச்சித்திரு அகவல் திருஏகம் பமாலை பல திருத்தலங்களைப் பற்றித் தனிப்பாடல்கள் பாடியவர் இரண்டாமவர்.
அவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. பட்டினத்தார் நானம், பட்டினத்தார் புலம்பல் பாடியவர் மூன்றாவமர்; இவரது காலம் 17 நூற்றாண்டு. ஆயின் பதினெண் சித்தர் பெரிய ஞானக்கோவையில் (பி. இரத்தினநாயகர் சன்ஸ், 1956) இரண்டாவது மூன்றாவது பட்டினத்தாரின் பாடல்கள் ஒரே பெயரில் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கிடையே பொருள், நடை பட்டினத்தார்களையும் ஒருவராகக் கருத இடம் இருக்கின்றது. பெயர் வேறுபாடுகளைப் பொறுத்தளவில் காவரிப்பூம்பட்டினத்தில் பிறந்ததால் அவர் பட்டினத்தாராகி யிருக்கிறார், சுவேதாரணியர் என்பது அவரது இயற்பெயர். அதனை அவர் தமிழ்ப்படுத்தி வெண்காடர் என அழைத்துக் கொண்டுள்ளார். திருவிடை மருதூர் மும் மணிக்கோவையில் இறுதிப் பாடலில் ‘வெண்காடன்’ எனத் தன்னைச் சுட்டுகின்றார்.
பட்டினத்தார் அம்மானை இயற்றிய காத்தபெருமாள் பிள்ளை பட்டினத்தாரை ஒருவராகவே கருதி, அவரது எல்லா நூற்களிலுமுள்ள பாடல்களை அவரது வாழ்வியற் நிகழ்வுக் கூறுகளுடன் இணைத்துக் கதைப்பாடலாக்கியுள்ளார். பட்டினத்தார் காவேரிப் பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகலை எனும் பெற்றோருக்கு நன்மகனாய்ப் பிறந்தார். வாணிகத்தில் ஈடுபட்டுப் பொருட்குவித்து சிவபூசைகளில் செலவழித்தார். சிவகலை எனும் பெண்ணை மணந்தார். குழந்தைப் பேறில்லாததால் திருவிடைமருதூரில் சிவசருமர் எனும் பிராமணர் கண்டெடுத்த குழந்தையை எடைக்குப் பொன் கொடுத்து ‘மருதவாணர்’ எனப் பெயரிட்டு வளர்த்தார். அக்குழந்தை வளர்ந்து வாலிபமான பிறகு - பதினாறுவயதில் - “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்று எழுதி வைத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் மெய்யுணர்வு பெற்று இருக்கின்ற பொருளை வாரிவழங்கி துறவு மேற்கொண்டு, பிச்சையேற்று, பலதலங்கள் சுற்றித்திரிந்து இறுதியில் திருவொற்றியூரில் முக்தி பெற்றார் என்பது அவரது சுருங்கிய வாழ்க்கைச் சரிதம்.
சிவபெருமானுடன் உலகைச் சுற்றி வந்து கொண்டிருந்த குபேரன், பூம்பட்டினம் மீது ஆசை கொள்ள, சிவன் அங்குப் பிறக்க வரம் கொடுத்துத்தானும் அவருக்கு மகனாக வந்து வாய்ப்பதாகவும் பட்டினத்தார் பிறப்பின் மீது ஒரு தெய்வீக உயர்நிலையாக்கக் கதை கூறும் உண்டு. மேலும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படும் ‘பத்திரகிரியார்’ அரசனாக இருந்து பட்டினத்தாரைத் தவறுதலாகத் தண்டிக்க முற்பட்டபோது நடந்த அதிசயத்தால் (கழுமரம் தீப்பற்றல்) அவரைச் சரணடைந்து மெய்யுணர்வு பெற்றார் என்ற கதையும் அபிதான சிந்தாமணியில் இடம் பெறுகின்றது.
பட்டினத்தார் அம்மானையில் கதை ஆசிரியரால் நேராக விவரிக்கப்படவில்லை. மாறாகப் புனைவுச் சூழலில் ஆசிரியர் கதையை எடுத்துரைக்கின்றார். இமயமலை அருகே உள்ள ரிஷிகள் தவம் செய்யும் ‘நைமி சாரண்ணியம்’ எனும் வனப் பகுதிக்குச் சூதமுனிவர் வந்த போது, அங்கிருந்த முனிவர்கள் குபேரன் பட்டினத்தாராக அவதரித்த கதையை விவரிக்குமாறு வேண்டினர், சூத முனிவர் அவர்களுக்கு அக்கதையை எடுத்துரைப்பதாக இக்கதைப் பாடலின் கூற்றுமுறை அமைகின்றது. சிவபெருமானின் உலாவல், சோழநாட்டுச் சிறப்பு, காவேரிப்பூம்பட்டினச் சிறப்பு, திருவெண்காடர் திருஅவதாரம், கனவில் சிவாநுக்கிரகம் பெற்றது, குமரக் கடவுள் ஆசிரியராக வருவது, சிவதீட்சை பெறுதல், மகேசுர பூஜை செய்தல், பெண் விசாரித்தல், மணம் புரிதல், சிவசருமசரித்திரம், மருதவாணரைக் குழந்தையாகப் பெறுதல், மருதவாணர் கப்பலேறி வியாபாரத்திற்குச் செல்லுதல், மருதவாணர் தன்னகரம் வந்து காணாமற் போதல், பட்டினத்தார் துறவு பூண்டது, பட்டினத்தாரின் கணக்கர் சேந்தனார் சிறை சென்றது, தமக்கையார் நஞ்சிட ஊர் தீப்பற்றியெரிந்தது, தாயார் தகனக்கிரியை முடித்தது, திருவாரூரில் இறந்தவனை எழுப்பியது, கழுமரம் தீப்பற்றியெறிதல், பத்திரகிரியார் துறவு பூண்டது, பத்திரகிரியாரின் நாய்க்குட்டி காசிராஜனின் மகளாகப் பிறந்து முக்தி அடைதல், பட்டினத்தார் முக்தி பெறுதல் என அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் விடாது தொடுத்துக் கதையாய்ப் பின்னியுள்ளார். நூலாசிரியர் மக்கள் மத்தியில் வழங்கிய பல நாட்டார் கதை வழக்குகளையும்
நூலாசிரியர் நூலுள் இணைத்து வாழ்க்கைச் சரிதமாக்கியுள்ளார். மட்டுமல்லாது பட்டினத்தார் பல இடங்களில் சென்று பாடியுள்ள தனிப்பாடல்களை நூலில் பொருத்தமான வாழ்க்கை நிகழ்வுடன் இணைத்துச் சேர்த்துள்ளார். இரண்டாவது பட்டினத்தார் பாடியதாகக் கூறப்படும் சித்தர் பெரிய ஞானக்கோவையில் இடம் பெறும் திருவேகம்பமாலை, திருவொற்றியூர் தொகை, திருவெண்காட்டுத் திருவிசைப்பா ஆகியவற்றில் உள்ள புகழ்பெற்ற பாடல்களும் நூலில் பொருத்தமான இடங்களில் கையாளப்பெற்றுள்ளன. தாயாரைச் செவ்வாழை மட்டையில் வைத்துப் பஸ்மாக்கியபோது பாடிய
“முன்னை இட்ட தீ முப்புரத்திலே / பின்னே இட்ட தீ தென்இலங்கையில் / அன்னை இட்ட தீ அடிவயிற்றில் / யானும இட்ட தீ மூள்க மூள்கவே” / என்ற பிரசித்தமான பாடலும் இந்த அம்மானையில் இடம் பெற்றுள்ளது.
பட்டினத்தார் பெண் உடலைப் பழித்தல் பாடல்களை நூலாசிரியர் நூலுள் எங்கும் கையாளவில்லை. அவை பட்டினத்தாருக் குறைவு ஏற்படுத்தலாம் என்று நூலாசிரியர் கருதியிருக்கலாம். நூலாசிரியர் திருக்குறள், கம்பராமாயணம், பிள்ளைத் தமிழ் ஆகிய தமிழ் இலக்கிய நூல்களைக் கற்றுத்துறை போகியவராய் இருத்தல் வேண்டும். காவிரிப் பூம்பட்டினத்தை வருணிக்கும் கீழ்வரும் பாடல், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் வரும் “பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ? பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை, ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ” என்னும் பாடலை நினைவு படுத்துகின்றது.
“படிப்பது தேவாரம் பழகுவது நற்பூசை / குடிப்பதெல்லாம் பாலமுதங் கூடுவது ஞானசபை / பேசுவது சித்தாந்தம் பிறப்பறுக்கும் வேதாந்தம் / பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் அக்குமணி” / அம்மானையின் ஆசிரியர் சைவ சித்தாந்தத்தின் மீதும், வேதாந்தத்தின் மீதும் பற்றுள்ளவராய்த் திகழ்கின்றார். ‘பட்டினத்தார் கையிலுள்ள கரும்பு’ தமிழ் மக்கள் மனதில் நிற்கும் உருவகம். திருவொற்றியூரில் அவர் சமாதியான இடம், இன்றும் வழபடு தலம். வள்ளுவர், கம்பரைப்போல் மக்களிடத்துப் பட்டினத்தாரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தமையே, இத்தகைய அம்மானை உருவாவதற்கு அடித்தளம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|