இந்தி அறிஞர் ரெவரெண்ட் பாதர் காமில் புல்கே
எம்.சேஷன்
இந்திய மொழி - இலக்கியத்தில் ஈடுபாடும் அக்கறையும் கொண்டு அத்துறையில் மிகச்சிறந்த பணியாற்றிய அயல்நாட்டு அறிஞர்களுள் ரெவரெண்டு ஃபாதர் காமில்புல்கே அவர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. பல அயல்நாட்டு அறிஞர்கள் ஐரோப்பாவில் இருந்து கொண்டே இந்திய இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்தது போல் அல்லாமல் பெல்ஜியம் நாட்டிலிருந்து நம்நாடு வந்து இம்மண்ணில் வாழ்ந்து இந்திய மக்களுடன் கலந்து உறவாடி அவர்களது கலாசாரம் - பண்பாட்டில் ஈடுபாடு கொண்டு இந்நாட்டைத் தாய்நாடாக ஏற்று இந்திய இலக்கியத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டார். வடமொழி மற்றும் இந்தி மொழிபால் அவருக்கு அளவு கடந்த அன்பு ஏற்பட்டது. அவர் ஆற்றிய இலக்கியப் பணிகளுள் குறிப்பிடத்தக்கவை ஆங்கில - இந்தி மொழி அகராதி தயாரித்தது, பைபிளை, குறிப்பாக நியூடெஸ்டமெண்டை எளிய இந்தி மொழியில் மொழி பெயர்த்தது என்பவையாகும். இவை அனைத்தினும் மேலாக ஆழ்ந்த புலமையுடன் இராமாயணக் கதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி மிகச் சிறந்ததொரு ஆய்வு நூல் படைத்தது அவரது பணிகளுள் தலையானது என அறிஞர்களால் கருதப்படுகிறது.
இந்நூல் அலகாபாத் பல்கலைக் கழக இந்தித் துறையில் டிஃபில் என்னும் ஆய்வுப் பட்டத்திற்காக இந்தி மொழியில் எழுதப்பட்ட புலமை மிக்க நூலாகும். இந்நூல் பற்றி அவரது ஆசிரியரும் இந்தி இலக்கியத்தின் வல்லுநருமாகிய டாக்டர் தீரேந்திர வர்மா அவர்கள் கூறியதை இங்குக் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
“இந்தி மொழியில் மட்டுமல்லாது வேறு இந்திய மொழிகளிலோ அல்லது ஐரோப்பிய மொழிகளிலோ இம்மாதிரியானதொரு சிறந்த ஆய்வு நூல் இதுவரை வெளிவந்ததில்லை.”
1950ம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழக இந்தித்துறை இந்நூலை வெளியிட்டுத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது. இது வரை இந்நூல் 5 பதிப்புகளாக வெளிவந்து இந்தி அறிஞர்களின் பெருமதிப்பையும் பாராட்டுதலையும் வெகுவாகப் பெற்றுள்ளது. இந்நூலை 1978ல் கேரள கிரந்த அகாதமி மலையாள மொழியில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த கான்பெர்ரா பல்கலைக் கழகத்தின் இந்தி - உருதுத்துறைத் தலைவர் டாக்டர் ரிச்சர்டு பார்ஜ் (Richard Barg) என்னும் அறிஞர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
காமில் புல்கே அவர்களுக்கு இந்தியின் தலை சிறந்த கவிஞர் துளசிதாசரின் ‘ராமசரித மானஸ்’ எனப்படும் இந்தி மொழி இராமாயணத்தின் பால் அளவற்ற பக்தியும் ஈடுபாடும் ஏற்பட்டது. பல இந்திக் கவிஞர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பிரபல இந்திக் கவிஞர் திருமதி. மகாதேவிவர்மா அவர்கள் புல்கேயைத் தனது சகோதரனாகப் பாவித்து அன்பு செலுத்தினார். ராஞ்சி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் சுமார் 30 ஆண்டுகளாக இந்தித் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றார். அவரது இலக்கியப் பணி மிகவும் விரிவானது. சிறப்பு மிக்கதும் கூட. சுமார் 30 நூல்கள் படைத்துள்ளார். 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பற்பல நூல்களுக்காக அவர் எழுதிய கட்டுரைகள் 100க்கு மேலிருக்கும்.
1974ல் இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1975ல் முதலாவது உலக இந்தி மாநாட்டிலும் அவர் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார். பாட்னாவிலுள்ள பிஹார் ராஷ்டிரபாஷா பரிஷத்தும், ராஞ்சியிலுள்ள ராதாகிருஷ்ணா டிரஸ்டும் அவரைப் பாராட்டி கௌரவித்தது.
ஃபாதர் காமில் புல்கே சிறந்த மனம் படைத்தவர், சாதனையாளர், சிறந்த ஆய்வாளர், பொருளாசையோ, புகழாசையோ அற்ற உண்மையான துறவு உள்ளம் கொண்ட கிறிஸ்துவத் துறவி, ஒழுக்கசீலர், பண்பாளர். இடைவிடாது அயராது உழைக்கும் அவரது அற்புதசக்தியை அனைவரும் மெச்சிப் பாராட்டியுள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் மண்ணையே தம் தாய் நாடாகக் கருதி ஏற்று அதன் பண்பு நலங்களால் ஈர்க்கப்பட்டு இந்நாட்டு மக்கள், அவர்தம் இலக்கியம், பண்பாட்டிற்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு அவர்களிடையே சிறந்த தொண்டாற்றிய தகையாளர்.
ஆய்வு நூல் நான்கு பகுதிகளாக விரிவடைகிறது. முதற்பகுதியில் ‘முற்கால இலக்கியத்தில் ராமகாதை’ பற்றி ஆராயப்படுகிறது. ராமகாதையின் தோற்றுவாய், தற்கால ராமகாதை பற்றிய கண்ணோட்டம், ராமகாதையின் வளர்ச்சி ஆகியவை ஆராயப்படுகின்றன. இரண்டாம் பகுதி ராமாயணத்தின் தோற்றம் பற்றியது. ராமகாதையின் மூலத்தை ஆராய முற்பட்ட அவர் பல்வேறு மூலநூல்களை ஆராய்ந்த பின்னர் முடிவாக அவர் ராமாயண நூலின் மூலக்கதைக்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன என்ற இந்நாட்டுப் பல்வேறு அறிஞர்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் தம் முடிவைத் தெரிவித்துள்ளார். ராமாயணத்தில் வரும் வானரங்கள், கரடி, ராட்சதர்கள் விந்தியமலை அல்லது மத்தியப் பிரதேச ஆதிவாசிகளாகிய ஆரியரல்லாத இனத்தவர்கள் என்பதே புல்கேயின் கருத்தாகும். வால்மீகி முனிவர் தெற்குப் பகுதி மற்றும் இந்தியாவின் மத்தியப் பகுதியின் பூகோளம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதும் அவரது துணிவு. ராமாயணத்தின் இடைச்செருகல்கள் பற்றிய அம்சங்களை உறுதி செய்யும் முயற்சியிலும் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார்.
பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வுகள் இந்நூலில் அடங்கியுள்ளன. தற்கால இந்திய மொழிகளிலுள்ள ராமாயணம் பற்றிய விபரங்களும் இதில் அடங்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் ராமாயணம் பற்றிய பல விபரங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆதிவாசிகள் கதைகளில் காணப்படும் ராமாயண கதை சம்பந்தப்பட்ட வேற்றுமைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாகப் பல்வேறு மொழிகளிலுள்ள ராமாயண நூல்கள் பற்றிய ரசமான விபரங்கள் பல இந்நூலின் சிறப்பம்சமாகும். வெளிநாடுகளில் ராமாயணம் என்னும் அத்யாயத்தில் திபெத் மொழி ராமாயணம், கேதானி ராமாயணம், இந்தோனேஷிய மொழி ராமாயணம், ஜாவா, இந்தோசைனா, சியாம், பிரம்மதேசம், பர்மா ஆகிய பல கிழக்காசிய நாடுகளிலுள்ள ராமாயண நூல்கள் பற்றிய அநேக செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. நூல் முழுவதிலும் டாக்டர் புல்கேயின் பரந்த நூலறிவு, சீரியசிந்தனை, ஆழ்ந்த புலமை மற்றும் பகுத்துக் கூறும் தன்மை ஆகிய பல்வேறு குணநலங்களின் சிறப்பம்சங்களை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
பல்வேறு ராமாயணங்களிடையே காணப்படும் அடிப்படை ஒற்றுமையும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ராமகாதை சரித்திர பூர்வமான சம்பவங்களின் அடிப்படையில் அமையப் பெற்ற மாகாவியம் என்ற முடிவே இந்நூலாசிரியரின் துணிந்த முடிவாகும். வழிவழிவந்த இக்கதைக் காப்பியத்தை ஆதாரமாகக் கொண்டே வால்மீகி முனிவர் தமது வடமொழி நூலை இயற்றினார். அவ்வப்போது பல்வேறு மதங்களின் தாக்கத்தின் பயனாக ராமாயணத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டு வந்தன. இதில் எவ்வகையில் இடைச்செருகல்கள் சேர்ந்து கொண்டே வந்தன என்பன போன்ற பல உண்மை விபரங்களும் நமக்குத் தெரியவந்தன. சுமார் 20 ஆண்டுகளின் உழைப்பின் பயனாக இந்நூல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதன் சிறந்த வாழ்க்கைக்கு ராமாயணம் ஓர் ஆதரிச நூல் என புல்கே கருதினார். “ஆஸ்திகனாயினும் சரி, நாஸ்தி கனாயினும் சரி, துளசிதாஸரிடம் ஊக்கம் பெற்று அவரது வழிகாட்டுதலை மனத்தில் கொண்டு நடப்பின் இவ்வுலகிலேயே சுவர்க்கத்தைக் காண இயலும்” எனப் புல்கே தம் நூலில் உறுதியாகக் கூறுகிறார். துளசிதாசரிடம் அவருக்கு அளவற்ற பக்தியும் மதிப்பும் இருந்தன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|