ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்தது தமிழகம்
தி.மு.க. வின் பொதுக்கூட்டம்
2008 அக்டோபர் 6 அன்று, சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் தி.மு.கழகம் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டித் தன் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தது. அக்கூட்டத்தில் நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் “சாகின்ற தமிழனைக் காப்பாற்றுகிற விஷயத்திலாவது நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருப்போம். நமக்குள்ளே சர்ச்சைகள் தேவையில்லை. எந்தக் கசப்பும், எந்த மன வேறுபாடும் இல்லாமல், தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில், ஒரே வடிவில், ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம்” என்று மிகுந்த பெருந்தன்மையுடன், அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கூட்டமும், அவருடைய உரையும் தமிழகத்தில் ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
“இந்திய அரசே! இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்யாதே” என்ற முழக்கத்தை முன்வைத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 29.09.2008, திங்கள் அன்று, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை, மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார். இயக்குனர் சீமான், விடுதலை ராசேந்திரன், மரு.எழிலன், தோழர் சுப.தங்கராசு, ஓவியர் புகழேந்தி, அன்புத் தென்னரசன், வழக்கறிஞர் புகழேந்தி, தோழர் வேலுமணி, அ.இல.சிந்தா, எழில்.இளங்கோவன், மாறன் உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சீமான் முக்கியமான மூன்று செய்திகளைத் தமிழர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, வங்கி மற்றும் இராணுவத்துடனும் ஓர் அரசாங்கம் அங்கே செவ்வனவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழீழம் என்ற நாடு உருவாக்கப்பட்டுவிட்டது. இனி அதற்கு உலக நாடுகளின் அங்கீகாரம்தான் தேவை. ஈழப் போராளிகள், தனியொரு சிங்கள அரசின் இராணுவத்தை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. போராளிகளின் விடுதலை வேட்கைக்குமுன் அது மிக மிகச் சாதாரணம். ஆனால், இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சிங்கள அரசிற்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன.
அத்தனை நாடுகளையும் எதிர்த்துத்தான் போராளிகள் போராடி வருகின்றனர். போர் நெறிகளுக்கு மாறான சிங்கள இராணுவத்தின் வெறித்தனமான தாக்குதல்களாலும், மனிதாபிமானமற்ற சிங்கள அரசின் நடவடிக்கைகளாலும், தமிழர் பகுதிகள் பட்டினியால் பாழ்பட்டு வருகின்றன. போராளிகள் பசியோடும், பட்டினியோடும்தான் களத்தில் நின்று போராடுகின்றனர்.
திராவிடர் கழக ரயில் மறியல்
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வீரமணி தலைமையில் சிங்கள இனவெறியர்களால் ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்து மத வெறியர்களால் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் தோழர் தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், டாக்டர் எஸ்.ஏ. சையத்சத்தார், எஸ்றா சற்குணம், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பங்குபெற்றார்கள். இதில் நமது வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் அன்புத்தென்னரசன் பேசுகின்றபோது, உலகத்தில் எத்தனையோ நாடுகளில் தேசிய இனப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பாலஸ்தீன போராட்டமாக இருந்தாலும், திபேத்திய போராட்டமாக இருந்தாலும் இந்தியா உதவி செய்கின்றது. ஈழ விடுதலை போராட்டத்திற்கு மட்டும் உதவி செய்ய மறுப்பது மட்டும் அல்லாமல் இடையூறும் செய்கின்றது. இது என்ன நியாயம் என்று கேட்டார்.
பொதுவுடைமைக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம்
சிங்கள அரசைக் கண்டித்தும், தமிழீழ மக்களை ஆதரித்தும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 2.10.2008 அன்று, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்தியது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஆதரவு அலையை அப்போராட்டம் ஏற்படுத்தியது. சென்னையில் து.ராஜா, தா.பாண்டியன், சி.மகேந்திரன் ஆகிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், புதிய தமிழகம் மருத்துவர் கிருஷ்ணசாமி முதலியோரும், இயக்குநர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், சீமான் ஆகிய கலை உலகத்தினரும் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவத்திற்கு உதவ இராணுவப் பொறியாளர்களை அனுப்பிய இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து 16.09.2008 அன்று சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பா.ம.க. வின் முற்றுகைப் போராட்டம்
தமிழீழ மக்களைப் படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
“இந்திய அரசே! சிங்கள அரசுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகள், படைப்பயிற்சிகளை நிறுத்து” என்ற கோரிக்கையினை முன்வைத்து, 22.09.2008 அன்று சென்னை விருந்தினர் மாளிகையின் முன், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் இன்குலாப், இயக்குநர் சீமான், நடிகர் சத்யராஜ், கவிக்கோ அப்துல்ரகுமான், ஓவியர் புகழேந்தி, கவிஞர் மு.மேத்தா, பொன் செல்வகணபதி, அன்புத் தென்னரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
சத்யராஜ் பேசும் போது, “இங்கே எனக்கு முன்னால் பேசிய அறிஞர் பெருமக்கள் எல்லாம் இங்கே கூட்டம் குறைவாக உள்ளது என்று வருத்தத்தோடு பேசினார்கள். இங்கே என்ன நடிகைகள் குஷ்புவும், நமீதாவுமா வந்திருக்கிறார்கள் கூட்டம் சேருவதற்கு, நான்கூட நடிகன் சத்யராஜாக வந்திருந்தேன் என்றால் கூட்டம் கூடியிருக்கும். ஆனால் நான் தமிழன் சத்யராஜாக வந்திருக்கிறேன்.தமிழன் என்றால் இங்கே கேட்க நாதியில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
நாங்கள் படப்பிடிப்பிற்காக ஊட்டி செல்கின்ற போது, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் படப்பிடிப்பிற்காக எங்களுக்குத் தருவார்கள். அங்கேதான் நாங்கள் எங்கள் படப்பிடிப்பை நடத்துவோம். ஆனால் இப்பொழுது அந்த இடத்திற்கு அனுமதி வழங்குவதில்லை. காரணம், மாலை 4 மணிவாக்கில் ஒரு வகையான குரங்குகள் அந்தப் பகுதியினைக் கடந்து செல்லுமாம். படப்பிடிப்பினால் ஏற்படும் சத்தம், கூச்சல் போன்றவை, அக்குரங்ககள் இனவிருத்தி செய்வதற்குத் தடையாக உள்ளதாம். ஆகவேதான் அங்கு படப்பிடிப்பு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று எங்கள் குடும்பத்தினர்களெல்லாம் வேட்டைக்குப் போகின்ற பழக்கமுண்டு. வேட்டைத் துப்பாக்கிகளுக்கு அனுமதி வழங்குகின்ற போது, மூன்று அடி உயரத்திற்கு மேல் கொம்புள்ள மான்களை மட்டுமே வேட்டையாடலாம். மான் கொம்புகளில் வெல்வெட் பருவம் என்று சொல்வார்கள். அந்த மான்கள் இளம் பருவமானவை. அவைகளை சுடக்கூடாது என்று உத்தரவிடுவார்கள். இந்த குரங்குகள் மீதும், மான்கள் மீதும் காட்டுகின்ற பரிவைக் கூடத் தமிழர்கள் மீது காட்டுவதில்லை. தமிழர்களைக் குழந்தைகள் என்றும், முதியோர்கள் என்றும், நோயாளிகள் என்றும் பாராமல், சிங்கள வெறியர்கள் கொன்று குவிப்பதும், இதற்கு இந்திய அரசு துணை போவதும் எந்த வகையில் நியாயம். அங்கே இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள், இங்கே இருப்பவர்கள் ஈனத்தமிழர்கள். இங்கே இருப்பவர்கள் வீரத்தமிழர்களாக மாறினால்தான் நிலைமைகள் மாறும்”.
(தமிழக மக்களும், தமிழகக் கட்சிகளும் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து ஒரு பகுதி)
தமிழக உடன்பிறப்புக்களுக்கு.....
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு குமுறிக்கொண்டிருக்கும் எமது அன்பிற்குரிய தமிழகத்து உடன்பிறப்புக்களே!
உயிர்காவத்துடிக்கும் குண்டுமழைக்கும் போர் வானூர்திகளுக்கும் நடுவே விடுதலைக்காக போராடும் உங்கள் ஈழத்தமிழ் உடன்பிறப்புக்களுக்காக குரல் கொடுத்திருப்பது எமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. ஈழத்தமிழினம் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப் போர் என்றும் இல்லாத வகையில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவலப்படும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ உயிர்கொடுக்கவோ உலகில் எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது சிங்கள இனவாத அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழினம் நாதியற்ற இனமல்ல. பூண்டோடு அழிப்பதற்கு விட்டில் பூச்சிகளுமல்ல..
தமிழர்க்கென்றொரு தனியரசை ஈழ மண்ணில் உருவாக்க உயிர்கொடுத்துப் போராடி வரும் உறவுகளுக்காகக் கடல்தாண்டிக் கரம் நீட்டும் தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வை நாம் நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம். தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று சிங்கள அரசு கற்பனையில் மூழ்கியிருந்த வேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து சிங்கள அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.
சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம். உலகத்தமிழரின் பண்பாட்டு மையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம். “தானாடா விட்டாலும் தன் தசையாடும்” என்பதுபோல ஈழத்தமிழர்கள் அல்லற்படும் போதெல்லாம் தமிழ்நாடு தன் உணர்வலைகளை வெளிப்படுத்துவது வழமை. ஈழத்தமிழர்களின் இன்னல்களை போக்க இந்திய மத்திய அரசு உதவவேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.
ஆனால், ஈழத்தமிழர்களோ தமது உரிமைக்காகக் கடந்த முப்பது ஆண்டு காலமாக அளப்பரிய தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புணர்வுடன் விடுதலைக்காகப் போராடுகின்றனர். ஈழத்தமிழரின் சுதந்திரப்போராட்டத்திற்கான ஆதரவையும் உதவிகளையும் எமது உடன்பிறப்புக்களான தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம்.
தொப்புள் கொடி உறவுகளுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவு தமிழீழ மக்கள் என்றென்றும் தலைநிமிர்ந்து வாழ வழிசமைக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக காட்டியுள்ள ஒருமித்த ஆதரவுகண்டு ஈழத்தமிழர்களும் எமது விடுதலை அமைப்பும் மகிழ்ச்சி அடைவதோடு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்நாட்டுத்தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெற வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|