கட்டுரை
பள்ளிக் குழந்தைகளை பலிகேட்கும் பவர் ரேஞ்சர் பேய்! -தொலைக்காட்சி பயங்கரம்! கோவி. லெனின்
கால மாற்றங்களில் காட்சிகளும் மாறுகின்றன. நிலவைக் காட்டிச் சோறூட்டியும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்த்து, பூச்சாண்டிகிட்டே பிடித்துக் கொடுத்துவிடுவேன் என மிரட்டுவாள் அன்றைய தாய். இப்போதோ அம்மாவைப் பார்த்து, குழந்தை, எனக்கு நீ அந்தப் பொம்மை வாங்கித்தரலைன்னா பவர்ரேஞ்சர் மாதிரி நெருப்புக்குள்ளே குதிச்சிடுவேன் என்று மிரட்டும்.
பகவானைக் கும்பிடச் சொல்லி அம்மா கற்றுக் கொடுக்கிறாள். குழந்தையோ பவர்ரேஞ்சரே சகலமும் என்று தானாகவே கற்றுக்கொள்கிறது. பகவானை நேரில் பார்த்ததில்லை. வீட்டில் மாட்டியிருக்கும் படத்தையோ, கோயில் சிலையையோ காட்டி அந்த உருவத்தைக் குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டியிருக்கிறது. பவர்ரேஞ்சரையும் குழந்தைகள் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அந்த உருவத்தைப் பதிய வைக்கப், பகவானை பதிய வைக்கும் அளவுக்குச் சிரமம் எடுக்க வேண்டியதில்லை.
வீட்டுக் கூடத்தில் குந்தியிருக்கும் உயிரற்ற குடும்ப உறுப்பினரான தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால் போதும். ஜெடிக்ஸ் எனப்படும் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனலில் பவர்ரேஞ்சரைச் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் எனப் பல வண்ணங்களில் பார்த்து தங்கள் மனத்தில் பதிய வைத்துக் கொள்கின்றன குழந்தைகள். பகவானிலும் நீல நிற ராமர், கருமை நிறக் கண்ணன், சாம்பல் நிற சிவன் எனப் பல வண்ணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் பகவானைத் தாய் அடையாளங் காட்டினாலும் அதைவிட அதிகமாக பவர்ரேஞ்சர்களே குழந்தைகளின் மனத்தை ஆக்கிரமிக்கின்றன.
பகவான், கெட்டவர்களை அழிப்பார் என்று சொல்லிக் கொடுக்கிறாள் அம்மா. பவர்ரேஞ்சரும் கெட்ட சக்திகளை அழிக்கிறதே எனப் பதிலுக்கு கேட்கிறது அதிகப்பிரசங்கி குழந்தை. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் எல்லா இடத்திலும் பகவான் இருக்கிறார் என்கிறாள் தாய். பவர்ரேஞ்சரும் அப்படித்தாம்மா என அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறது குழந்தை. பகவானுக்கு அளவற்ற சக்தி இருக்கிறது, அவர் எதையும் செய்வார் என்கிறாள் பெற்றவள். பவர்ரேஞ்சரும் என்னுள் இருக்கிறது என்கிறது குழந்தை.
இப்படித்தான், பவர்ரேஞ்சர் எனும் சின்னத்திரையின் கற்பனைப் பிம்பம் தனக்குள்ளே இருப்பதாக நினைத்து, அதனைப் போலவே செயல்பட நினைத்த ஒரு சிறுவனின் வாழ்க்கை பரிதாபமாக முடிந்துபோனது. மதுரையைச் சேர்ந்த தியாகேஷ் என்ற 9ஆம் வகுப்பு பயின்ற சிறுவனுக்கு பவர்ரேஞ்சர் பாத்திரம் தோன்றும் ஜெடிக்ஸ் சேனலைப் பார்ப்பது என்றால் சோறு, தண்ணீர் எதுவும் வேண்டாம். அந்தக் கணினி வரைகலைச் சித்திரங்கள் செய்யும் சாகசங்களைப் போலத் தானும் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, தீயைக் கொளுத்தித் தாண்ட முயற்சிக்க, உடலில் தீப்பற்றிச் சிகிச்சை பலனின்றி இறந்தே போனான் குடும்பத்தின் ஒரே வாரிசான தியாகேஷ். அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தால் பவர்ரேஞ்சர் மீதான பிடிப்பு குழந்தைகளுக்குக் குறைந்து விட்டதா?.
இல்லை... பவர்ரேஞ்சர் முகமூடி, அந்த வரைகலைச் சித்திரம் தன் மணிக்கட்டில் அணிந்திருப்பது போன்ற ஒளிரும் மின்பட்டை இவையெல்லாம் வியாபாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. காலையில்தான் 100 கைப்பட்டை வாங்கிட்டு வந்தேன் மூன்றே மூன்றுதான் மிச்சமிருக்கிறது என்று சொன்னார் ஒரு பெட்டிக்கடைக்காரர். பெண்களைத் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் படாதபாடு படுத்திக் கொண்டிருப்பதுபோல் சிறுவர் சிறுமியரை பவர்ரேஞ்சர் ஆக்கிரமித்திருக்கிறது என்பதால், அவர்கள் கொறிப்பதற்கான வறுவல் வகைகளும் பவர்ரேஞ்சர் என்ற பெயரிலேயே விற்பனைக்கு வந்துவிட்டன. பகவான் காப்பாற்றுவார் என்பது பழமொழி. பவர்ரேஞ்சர் பிழைக்க வைக்கும் என்பது வணிகத்துறையில் புதுமொழியாகவும், பொது மொழியாகவும் ஆகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பவர்ரேஞ்சர் இடத்ததைப் பிடித்திருந்தது சக்திமான் எனும் கற்பனைக் கதாபாத்திரம். இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் தூர்தர்ஷன் சேனலில் இது வெளியானதால், சக்திமானைப் போலவே பறக்க முயற்சித்தும் தாவ முயற்சித்தும் உயரமான இடங்களிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவெங்கும் அதிகரித்தபடி இருந்தது. இதுகுறித்துப் பெற்றோரும், கல்வியாளர்களும் கவலைப்பட, சக்திமான் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்டெடுப்பதற்கு நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
இந்த கதாபாத்திரம் செய்வது போல் செய்து பார்க்காதீர்கள் என்ற எச்சரிக்கை வாசகம், ஒவ்வொரு ஒளிபரப்பின் தொடக்கத்திலும் வெளியிடப்பட்டது. மனநல மருத்துவர்கள், குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் ஆகியோர் இது குறித்த விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டனர். அதன் பிறகே சக்திமான் சங்கடம் சற்று குறையத் தொடங்கியது. இப்போது பவர்ரேஞ்சர் பயங்கரம் ஆரம்பமாகியிருக்கிறது.
படிப்பு, தேர்வு எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஜெடிக்ஸ் சேனல் முன் உட்கார்ந்து இமை கொட்டாமல் பவர்ரேஞ்சரைப் பார்க்கும் சிறுவர் - சிறுமியர் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படி டி.வி. முன்னாடியே உட்கார்ந்திருந்தால் கண்ணு கெட்டுப்போயிடும் என அம்மா சொல்ல, நீ மட்டும், நான் ஸ்கூலுக்குப் போனதிலிருந்து அப்பா ஆபீசிலிருந்து திரும்ப வருகிற வரைக்கும் சீரியல் பார்த்துக்கிட்டிருக்கியே.. உன் கண்ணு கெட்டுப் போகாதா? என்று திருப்பிக் கேட்டது 5 வயது குழந்தை.
குழந்தைகளுக்குத் தோழனாக இருந்து வழிநடத்த வேண்டிய பெற்றோரே, தொலைக்காட்சித் தொடர்களின் அடிமைகளாக இருந்தால், பிள்ளைகளுக்கு எப்படி நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியும்? நண்பர் ஒருவரின் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி அணைக்கப்படுகின்ற நேரம் எது தெரியுமா? செய்திகள் ஒளிபரப்பாகின்ற அரை மணி நேரம்தான். அந்த நேரத்தில் சமையல் செய்து, அடுத்த தொடர் ஆரம்பமாவதற்குள் பரிமாறிவிடுவார் நண்பரின் இல்லத்தரசி. அவர்கள் எப்படித் தங்கள் குழந்தையைக் தொலைக்காட்சி பூதத்திடமிருந்து மீட்பார்கள்?
படிக்கிற நேரம் போக, ஓடியாடி விளையாடி உடல் நலத்தைப் பேண நேரம் ஒதுக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். எங்கேயோ போய் விளையாடுவதைவிட, வீட்டிலேயே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்து விடட்டும் எனப் பெற்றோர் பலர் நினைப்பதும், பவர்ரேஞ்சரின் ஆக்கிரமிப்புக்குக் காரணமாகிவிடுகிறது. அத்துடன், பவர் ரேஞ்சரின் பரவலான தாக்கத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
சிறார்கள் ரசிப்பதற்காக போகோ என்ற தொலைக்காட்சி சேனலும் இருக்கிறது. அவற்றில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சிகளில் வேடிக்கை இருக்கும், கேளிக்கை இருக்கும், விளையாட்டு இருக்கும், பயனுள்ள செயல்பாடுகள் இருக்கும். பயங்கரம் இருக்காது. ஆனால், இந்த போகோ நிகழ்ச்சிகள் இந்தியில் ஒளிபரப்பாவதால் சரிவரப் புரிவதில்லை. அவர்கள் போகோவைப் பார்க்கும் நேரம் குறைவாகிவிட்டது.
பவர்ரேஞ்சர் ஒளிபரப்பாகும் ஜெடிக்ஸ் சேனல், கார்ட்டூன் சித்திரங்களின் தந்தையான வால்ட் டிஸ்னியின் டூன் டிஸ்னி நிறுவனத்திற்குச் சொந்தமானது. அவர்கள் பெரும்பாலும் அந்தந்த மாநில மொழிகளில் ஜெடிக்ஸ் சேனலை ஒளிபரப்புகிறார்கள். அதனால் அனைத்து மாநில சிறார்களும் இதனை விரும்பிப் பார்க்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் நடத்தும் கான்வென்ட் பள்ளிகளில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கின்ற சிறார்கள் மட்டுமின்றி அரசால் நடத்தப்படும் மாநகராட்சிநகராட்சி நிர்வாகப் பள்ளிகளில் படிக்கின்ற சிறார்களும் பவர்ரேஞ்சரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறார்கள். பணக்கார வீட்டு ரமேசும் சுரேசும், ஏழை வீட்டு குப்பனும் சுப்பனும் வர்க்க பேதமின்றிப் பவர்ரேஞ்சரை ரசிக்கிறார்கள்.
நல்ல கல்வியை, திறமையான கலைகளைத் தாய்மொழியில் கற்றுக்கொடுங்கள் என்றால் அது புரியாது என்றும், பயன்படாது என்றும் புறக்கணிக்கின்ற மேட்டுக்குடி மக்கள், தங்கள் பிள்ளைகளை அதே தாய்மொழியில் பயங்கரமான ஒரு கார்ட்டூன் தொடரைப் பார்க்க வைத்து, பின்னர் பதறுகிறார்கள். தாய்மொழி என்பது குழந்தைகளின் பிஞ்சு மூளையில் எளிதில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது என்பதை நல்ல கல்வி மூலம் நம்மால் உணர்த்த முடியாமல் போனதை, பயங்கரமான பவர்ரேஞ்சர் அதே பெற்றோர்க்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. படிப்பனுபவத்தைவிட பட்டறிவு அனுபவமே சிறந்தது. பவர்ரேஞ்சர் மூலமாகப் பட்டறிவு பெற்றிருக்கும் பெற்றோர், இனியாவது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து பிள்ளைகளை மீட்டு, தாய்மொழியில் அடிப்படை கல்வியும் அதன்பின் பிறமொழிகளில் பயிற்சியும் பெறும் வகையில் படிக்க வைப்பார்களா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|