Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
Thaagam Logo
டிசம்பர் 2006

இனமானத் தலைவர்களே சறுக்குகிறார்கள்; இளையராஜா எம்மாத்திரம்?
- வேலுபிரபாகரன்

தமிழ்த் திரையில் பெரியாரியலை ஆவேசமாக வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் வேலு பிரபாகரன். இவரது கடவுள், புரட்சிக்காரன் படங்களில் பெரியாரின் கருத்துக்கள் படம் நெடுக நிறைந்திருந்தன. தற்போது எடுத்துவரும் காதல் அரங்கம் படத்திலும் பெரியார் வேடத்தில் சில காட்சிகளில் தோன்றுகிறார் வேலு பிரபாகரன். இயக்குநர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துவரும் பெரியார் திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்க மறுத்தது தொடர்பான சர்ச்சைகள் குறித்து கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். உடனே நமக்கு இயக்குனர் வேலு பிரபாகரனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது பேட்டியிலிருந்து...

தாகம்- பெரியார் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார் என்ற சர்ச்சையில் பெரியாரிஸ்ட்டான நீங்கள் இளையராஜாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்களே?

வேலு பிரபாகரன்- பெரியாரைப் பரப்புவதா, பெரியாரியலைப் பரப்புவதா, எது நோக்கம் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். எங்கு பார்த்தாலும் பெரியார் பெயர், எல்லோருடைய வாயிலும் பெரியார் பெயர் என்று பரப்புவதைவிட எல்லாரிடமும் பெரியார் கொள்கையைப் பரப்புவதுதான் பெரியாருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. அந்த விதத்தில் பார்த்தால் கடவுள் திரைப்படம்தான், 75 வருட சினிமா வரலாற்றில் கடவுள் மறுப்புக் கொள்கையை வெகு நேரம் பிரச்சாரம் செய்த ஒரே படம். வரலாற்றுப் பார்வையுடன் இதைப்பார்க்கக்கூடிய நிருபர்களோ, தலைவர்களோ, மக்களோ இல்லாததால் இது மறைக்கப்படுகிறது. பெரியாரின் கொள்கைகள் படிப்படியாக வளர்ந்து கடைசியில் கடவுள் மறுப்புக் கொள்கையாகக் கனிகிறது. கனிதான் விதை. அதுதான் மூலாதாரம். நாத்திகம்தான் சமத்துவத்தின் திறவுகோல் என்று பெரியார் சொன்னார். அதைத்தான் கடவுள் படம் வலியுறுத்தியது. அப்படிப்பட்ட படத்திற்கே இளையராஜா இசையமைத்தார். அதனால், அவர் பெரியார் படத்தில் கடவுள் மறுப்பு கொள்கை இருப்பதால் இசையமைக்க மறுத்தார் என்று சொல்வது சரியானதல்ல.

தாகம்- பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் தன்னுடைய பேட்டியில், நாங்கள் முழுக்கதையையும் அவரிடம் கொடுத்தோம். ஆனால், கடவுள் இல்லை என்று சொன்னவரின் படத்துக்கு நான் இசையமைக்கமாட்டேன் என இளையராஜா சொல்லிவிட்டார் என்கிறார். இதை நாங்கள் ஏன் நம்புகிறோம் என்றால், சிம்பொனி இசையமைத்த முதல் ஆசியக் கலைஞர் என்ற பெருமை பெற்ற இளையராஜாவுக்குத் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் விழா எடுத்தபோது, அவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க மறுத்து விட்டார். அது போலத்தானே பெரியார் படத்துக்கும் இசையமைக்க மறுத்திருப்பார்?

வேலுபிரபாகரன்- நம்மைப் போன்ற பெரியாரிஸ்ட்டுகளிடம் இருக்குமளவுக்கு ஒரு கலைஞனிடம் அரசியல் பார்வையோ கொள்கைப் பார்வையோ இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு இயக்கத்தின் பிரதிநிதி போல ஏன் அவரைப் பார்க்க வேண்டும்? அவர் என்ன உணர்கிறாரோ அதனைத் தனது கலை மூலம் வெளிப்படுத்துகிறார். நான் எவ்வளவோ கொள்கை பேசுகிறேன். என் தம்பி குங்குமம் வைத்துக் கொள்கிறான் என்றால், அந்த வலியோடுதான் நான் இருக்கிறேன்.

தாகம்- தனது அண்ணன் பாவலர் வரதராஜனோடு சேர்ந்து பொதுவுடைமைக் கொள்கைகளைப் பாட்டு மூலம் பரப்பிய இளையராஜாவுக்கு எப்படிக் கொள்கைப் பார்வை இல்லாமல் போக முடியும்?

வேலுபிரபாகரன்- கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தங்க மோதிரம் போட்ட தலைவர்களைப் பார்க்க முடிகிறது. அதனால், கலைஞனிடம் கொள்கைப் பார்வையை அந்தளவு எதிர்பார்க்கமுடியாது. அவனுக்கு அதைவிட கலைதான் பெரிதாக இருக்கிறது. எத்தனையோ கலைஞர்களை அவர் நம்பிய இயக்கங்கள் கைவிட்டிருக்கின்றன. அதுபோல, இளையராஜாவின் அண்ணன் கட்சிக்காகச் சிறை சென்றபோது, பெயிலில் எடுக்க 100 ரூபாய் தேவைப்பட்டபோது இயக்கம் உதவவில்லை. அதனால் அந்தக் குடும்பத்திற்கே இயக்கத்தின் மீது விரக்தி வந்துவிட்டது. அதனால்கூட இளையராஜாவிடம் கொள்கைப் பார்வையைவிடக் கலைப்பார்வை மேலோங்கி இருக்கலாம். இதற்காக அவரைக் கண்டிப்பதோ, ஏளனம் செய்வதோ சரியாக இருக்காது. பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுக்கிறார் என்ற செய்தி வந்ததும், பெரியாரை இழிவுபடுத்தினால் நான் உண்மையான தமிழனாக இருக்க முடியாது என்று அறிக்கை விட்டாரே... திராவிடர்களுக்காகத்தான் பெரியார் போராடினார். ஒரு திராவிடன் இந்தளவுக்குத் திறமையாகவும் புகழுடனும் இருக்கிறான் என்கிற அளவில்தான் இளையராஜாவைப் பார்க்க வேண்டும் என்பது எனது பார்வை.

தாகம்- ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவான ஒரு கலைஞன், தகுதியிலும் பொருளியில் ரீதியாகவும் உயர்ந்து நிற்கும் கலைஞன், அந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இருப்பதுடன், மேட்டுக்குடியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், அந்த மேட்டுக்குடி அந்த அங்கீகாரத்தைத் தந்திருக்கிறதா? திருவண்ணாமலை கோயில் திருப்பணிக் குழுவில் இளையராஜாவை முதலில் நியமித்தார்கள். பிறகு ஜெயலலிதா முதல்வராக வந்ததும் அவரை அந்தக் குழுவிலிருந்து நீக்கிவிட்டார். தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த நீக்கம். அவருக்கான அங்கீகாரத்தைத் தர விரும்பவில்லை.

வேலு பிரபாகரன்- அவருக்கான அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத்தர உங்களைப் போன்றவர்கள் என்ன செய்துவிட்டீர்கள்? திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் என்ன போராட்டம் நடத்திவிட்டன. அவருக்கு அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தர முடியாதபோது, அவரிடமிருந்து நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

தாகம்- இன்னமும் இளையராஜாவின் பண்ணைபுரத்தில் சரியாக உடுத்த துணியில்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இளையராஜா சிந்திக்க மறுக்கிறார். மார்க்ஸின் கொள்கைளையே கைவிட்டுவிட்டவர், பெரியாரின் கொள்கையையும் புரிந்து கொள்ளவில்லையே?

வேலு பிரபாகரன்- மார்க்ஸையும் பெரியாரையும் சரியாகப் புரிய வைக்கும் தலைவர்கள் இங்கே இல்லை என்றுதான் இதற்கு அர்த்தம். இதைத்தாண்டி இளையராஜாவை மட்டும் குறை சொல்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், அவர் தன்னை இவ்வளவு பெரிய ஆளாக நினைக்கவில்லை. எல்லோருடைய உணர்வுக்கும் ஏற்றபடி அவர் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை உணர்ந்து, நிச்சயமாக வட்டியும் முதலுமாக இளையராஜா செய்வார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com