தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்
- சாமி.சிதம்பரனார்
"அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப்போல் இல்லாமல், மனத்தில் பட்டதைத் தைரியமாய்ப் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்."
இது ஈ.வெ.ரா. அச்சமயம் கூறியது. இவரது அச்சுக்கூடத்திற்கும் உண்மை விளக்கம் பிரஸ் என்று பெயரிட்டார். பத்திரிகையை ஆரம்பித்து வைக்குமாறு ஞானியார் சுவாமிகளைக் கேட்டுக் கொண்டபோது, இவ்வாறு உரைத்தார். ‘குடி அரசின்’ முதல் வெளியீட்டில் அதன் நோக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் கீழே தருகிறோம்.
‘ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். இதை அறவே விடுத்து வெறும் ‘தேசம்’, ‘தேசம்’ என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று.
மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.
உயர்வு, தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்."
‘குடி அரசு’ப் பத்திரிகை தோன்றிய அன்று முதல் இன்று வரையில் இந்நோக்கத்தில் மாறுதல் இன்றிப் பின்பற்றி வந்துகொண்டிருக்கிறது. இதைக் ‘குடி அரசி’ன் தொடர்ந்த வாசகர்கள் அறிவார்கள். அவரது கொள்கைகளைத் திரட்டிய பாடலாகிய "அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி..." என்ற செய்யுளைக் ‘குடி அரசு’ப் பத்திரிகையின் தலையங்கத்திற்கு மேல் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வந்தார். எனவே அப்பாடலை இந்நூலின் ஆரம்பத்தில் சேர்த்துள்ளோம். ‘குடி அரசை’ ஆரம்பித்து வைத்த போது திரு. ஞானியார் சுவாமிகள் கூறிய மொழிகள் இவை.
"நமது நாட்டில் உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கின்றது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும். ‘குடி அரசு’வின் கருத்தும் அதுவேயென அறிந்து கொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை ‘குடி அரசி’ன் முதல் கொள்கையாய் விளங்க வேண்டும். இப்பத்திரிகையில் ஷ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு."
இக்காலத்தில் குருகுலப் போராட்டம் தொடங்கிற்று. "தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற பெயருடன் வ.வெ.சுப்ரமணி அய்யர் அவர்களால் சேரன் மாதேவியில் ஒரு தேசீய நிலையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்குப் பெயர் குருகுலம். அதற்குப் பண உதவி செய்தவர்கள் தமிழ் மக்கள். காங்கிரசிலிருந்தும் பத்து ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதன் வளர்ச்சிக்காக ஈ.வெ.ரா., டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு. வி. கலியாணசுந்தர முதலியார், கானாடுகாத்தான் வயி.சு. சண்முகம் செட்டியார் முதலியவர்கள் உழைத்தனர். ஆனால், குருகுலத்தில் உண்மையாய் நடந்தது என்ன? பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு, பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு, வேறு வேறு இடம், வேறு வேறு பிரார்த்தனை. இதன் மூலம் ஜாதிப்பிரிவுக்கு ஆக்கம். இவை குருகுலத்தில் நடைபெற்றன. ‘இப்பிரிவினை தவறு, குருகுல நோக்கத்துக்கு மாறுபட்டது, தேசீய ஒற்றுமைக்கு ஏற்றதன்று, சமபந்தி உணவே அளிக்கப்பட வேண்டும்" என்று ஈ.வெ.ரா. கூறினார். அப்போது ஈ.வெ.ரா. காங்கிரஸ் காரியதரிசி. காங்கிரசில் குருகுலத்துக்கு 10,000 ரூபாய் கொடுக்க இசைந்து, ரூ. 5,000 முதலில் கொடுத்ததால் மீதி 5,000 ரூபாயை வ.வெ.சு. அய்யர் கேட்டார். குருகுலத்தில் ஜாதி பேதம் இருப்பதால் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
அய்யர் ஈ.வெ.ராவின் கூட்டுக் காரியதரிசியாய் இருந்த ஒரு பார்ப்பனரிடம் ‘செக்’ வாங்கிக் கொண்டு போய்விட்டார். இதை ஈ.வெ.ரா. அறிந்ததும் குருகுலத்தோடு போர் தொடுத்தார். இதற்கு டாக்டர் நாயுடு ஆதரவளித்தார். திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் ஆதரவளித்தார். இப்போது மந்திரியாயிருக்கும் திரு. எஸ்.ராம நாதன் அவர்கள் வீட்டில்தான் முதன் முதல் குருகுலத்தை எதிர்த்து, அதை ஒழித்துவிட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. அப்போது கூடி ஏற்பாடு செய்தவர்கள் திரு.ராமநாதன், ஈ.வெ.ரா., திரு. வி.கலியாணசுந்தர முதலியார். என்.தண்டபாணிப் பிள்ளை ஆகியவர்கள். டாக்டர் நாயுடுவைத் தலைவராக வைத்துக்கொண்டு பார்ப்பனிய வளர்ச்சிக்காக இருந்த இக்குருகுலத்தை அடியோடு ஒழித்து விடக் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். வ.வெ.சு. அய்யர் இக்கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. அய்யரின் கொள்கை நாடெங்கும் கண்டிக்கப்பட்டது. நாயுடுவும், நாயக்கரும் இதைப்பற்றி நாடெங்கும் சென்று கண்டித்துப் பேசினர். இக்கிளர்ச்சியை அடக்கக் காந்தியாரும் தலையிட்டார். "குருகுலத்தில் ஜாதிப் பிரிவினைக்கு இடந்தருதல் கூடாது. சமபந்தி உணவுதான் அளிக்க வேண்டும்" என்ற காந்தியாரின் கருத்தையும் அய்யர் ஏற்கவில்லை. "பார்ப்பனப் பிள்ளைகளும் அல்லாத பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதற்கு நான் ஒருப்பட முடியாது. அப்படிச் செய்தால் குருகுலம் கெட்டுவிடும்" என்று அய்யர் கூறி விட்டார். இது ஈ.வெ.ராவுக்குப் பார்ப்பனர்களையும், காங்கிரசையும் தாக்குவதற்குச் சாதனமாக்கிற்று.
இக்குருகுலப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரும் பரபரப்பு உண்டாயிற்று. "பார்ப்பனர்கள் தீண்டாமையைப் பற்றிப் பேசுவது வெறும் பேச்சு, அவர்கள் தேசீயத்தைப் பற்றிப் பேசுவது வீண், ஒற்றுமையைப்பற்றிப் பேசுவதற்குப் பொருள் இல்லை" என்ற நிரந்தரமான உண்மையை உணர்ந்து கொண்டனர். தமிழக மக்கள் குருகுலத்துக்குப் பண உதவி செய்து வந்த பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் உதவியை நிறுத்திக் கொண்டனர். உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதன் பொருட்டுச் சேர்க்கப்பட்ட தொகைகள், நாயுடு, ஈ.வெ.ரா., திரு.வி.க. இவர்களின் முயற்சியால் ஆங்காங்கே நின்றுவிட்டன. எரிவதை இழுத்துவிட்டால் கொதிப்பது எங்கே? குருகுலம் ஒழிந்தது
-தொடரும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|