 |
தலையங்கம் பைட்டோ... பைட்டோஜி... பாராளுமன்றம்
வெளியிடுபவர்
க.நாகராஜன்
ஆசிரியர்
இரா.நடராஜன்
ஆசிரியர் குழு:
ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன்,
அ.வெண்ணிலா, இரா.தெ.முத்து,
ஆதவன் தீட்சண்யா, சூரியசந்திரன்
ஜி.செல்வா, பா.ஜெய்கணேஷ்,
முத்தையா வெள்ளையன்
நிர்வாகப் பிரிவு
சிராஜுதீன்
முகவரி:
421, அண்ணாசாலை, சென்னை -18
[email protected]
தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.120
மாணவர்களுக்கு: ரூ.75
வெளிநாடுகளுக்கு ஆண்டு சந்தா: $15
|
நமது முதுகெலும்பில் சுரீரென்று ஒருவித வலியை ஏற்படுத்தும் இரண்டு செய்திகளை, முடிவுக்கு வரும் நாடாளுமன்றம் குறித்து சமீபத்தில் புள்ளி விபரமாக வெளியிட்டிருந்தார்கள். ஒன்று சராசரி வேலை நாட்கள் அளவுக்கு கூட அது கூட்டப்படவில்லை. இரண்டு அப்படியே கூட்டப்பட்ட நாட்களில் ஒருமுறை கூட எதற்காகவும் வாயை திறந்து எதுவுமே பேசாதவர்கள் கிட்டத்தட்ட 100 பேர்!. ஒரு நாட்டின் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவது என்பதைவிட பெருமைக்குரிய ஒரு கடமையை ஜனநாயக நாட்டின் பிரஜை, ஒருவரை நம்பி ஒப்படைத்து விட முடியாது என்பது நாம் அறிந்ததே. வீதிகளில் ஓட்டுக் கேட்டு மக்களிடம் சென்று பிரச்சனைகளை எடுத்துக் கூறி அவற்றைத் தீர்த்து வைப்பதாக வாக்குறுதி யளித்து வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லும் ஒருவர் தமது மக்களின் குரலை அவையிலே பிரதிநிதித்துவப்படுத்தத் தவறுவது உயர்ந்தபட்ச குற்றமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.
சமீபத்தில் தொலைக்காட்சிகளில் பாராளுமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை பார்க்கிறோம். சபாநாயகர் சோம்நாத் உட்கார்ந்திருந்து நாம் பார்த்திருக்கிறோமா? ஒரு காலத்தில் நேருவும், ஜெகஜீவன்ராமும், பி.ஆர். அம்பேத்கரும் நேரடியாக எதிர் எதிர் அணியில் நின்று விவாதித்த காரசாரமான சொற்போர் மறந்து விடக்கூடியதல்ல. தோழர் சுர்ஜீத்தும், இந்திராவும் புரிந்த நீண்ட விவாதங்கள் இன்றும் மனதில் நிற்கின்றன. ஆனால் “பைட்டோ.. பைட்டோஜி...” என்று சபாநாயகர் கெஞ்சுவதை தவிர வேறு எதுவுமே இன்று மக்கள் மனதில் இடம் பெறவில்லை என்பதே உண்மை.
சமீபத்தில் ராஜஸ்தானின் கிராமப்புறத்தில் குழந்தைகளுக்கான “பாராளுமன்றம்” நடத்தப்பட்ட போது பத்திரிகையாளர்கள் மிகவும் அதிர்ச்சியுற்ற ஒரு சம்பவம் நடைபெற்றது.
குழந்தைகள் நாடாளுமன்றம் குறித்து நாடகமாக நடித்துக் காட்டிய அந்த சிறு மேடையில் ஒரு எதிர்கட்சி “உறுப்பினர்” ஒரு பெட்டி நிறைய பணத்தை மேசையில் கொட்டிட அதை நோக்கி ஆளுங்கட்சி “உறுப்பினர்கள்” விழுந்தடித்து ஓடுவதை “நடித்த”போது நமது குழந்தைகள் மனதில் நமது நாடாளுமன்றம் எத்தகைய தன்மையைக் குறித்தச் செய்தியை பதித்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது. “பாராளுமன்றத்தில் ஒரே ஒரு முறை பேசியவர்கள்” என்று ஒரு புத்தகம் சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளது. ரயிலில் எப்போதும் அழுக்கு மனிதர்கள் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செல்வதையே விரும்பிய மகாத்மா காந்தியின் கட்சி என்று எப்போதும் மார் தட்டும் காங்கிரஸின் எம்.பி.யாக இருந்த வைஜெயந்திமாலா பாலி பேசியது ஒரே முறை; “இந்திய ரயில்களில் முதல் வகுப்பு, ஏ.சி. பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும்.” எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் பேசியதும் ஒரு வரி தான்: “இந்திய பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பையின் எடையைக் குறைக்க ஓர் அவசர சட்டம் தேவை.”“ இவை இரண்டுமே இரு துருவங்களின் பிரதிபலிப்பாக இருப்பதை பார்க்கிறோம்.
உயிருக்கு பயந்து நாடாளுமன்றத் தேர்தலை ஏதோ ஒரு தீண்டத்தகாத அசிங்கமாக பாவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஓடிப் போயிருக்கும் இந்திய கிரிக்கெட் வாதிகள் இந்தத் தேர்தலில் ஓட்டு கூடப் போடப் போவது இல்லை. இதை யாருமே கண்டிக்காதது யாரையுமே உறுத்தவில்லை என்பதையும் பதிவு செய்ய வேண்டி உள்ளது. “தேர்தல் சமயத்தில் இங்கே கிரிக்கெட் விளையாட வேண்டாமென முடிவெடுத்தது சரிதானே” என்று வழக்கம் போல பேசுபவர்கள் அங்கே தென் ஆப்பிரிக்காவில் இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடப்பதை பார்க்கத்தான் செய்கிறார்கள். தேர்தலில் வாக்களிப்பது நமது தார்மீக கடமை. அதே சமயம் அவ்விதம் வாக்குகள் பெற்று மக்கள் பிரதிநிதி ஆகி நாடாளுமன்றம் போகும் ஒருவர் அங்கே தன் தொகுதி மக்களின் உணர்வுகளை எழுந்து உரத்துப் பேசுவது அதைவிட உயர்ந்த தார்மீக கடமை இல்லையா என்பதுதான் கேள்வி. சென்ற நாடாளுமன்றத்தில் பேசாதவர்கள் 100 பேர் என்று அறிவித்த அதே புள்ளி விபர பட்டியலில் அதிக முறை பேசியவர்கள் என்று ஒரு பட்டியலும் உள்ளது.
அதில் பெரும்பாலோர்... இடதுசாரி எம்.பி.க்கள்தான்! வேறு யார்.. _ ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|