முதல் பிரவேசம்
காப்பியடிக்காரி கே.வி.ஜெயஸ்ரீ
என் மகளும் சக மொழிபெயர்ப்பாளருமான சுகானா என்னைக் ‘காப்பியடிக்காரி’ என்றே அழைப்பாள். இறுதிவரை ஓரு நல்ல வாசகியாக மட்டுமே இருந்துவிட்டால் போதும் என்றிருந்த நான் ஏப்படி காப்பியடிக்காரியானேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
தாவர நெரிசலில் மண் மறையும் மலை, சதா கொட்டிக் கொண்டேயிருக்கும் மழை, வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை, ஒரு பக்க மலைச்சரிவில் அருவிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்படியான கேரளாவின் அடிமாலி நகரம் என்னை, என் தாய்மொழியின் வேர்களுக்குள் மீண்டும் கை பிடித்து இட்டுச் சென்றது.
அதற்கு முன்பே என் சகோதரி கே.வி. ஷைலஜா ‘நவீன மலையாள தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வரப்போகிறேன். நீ ஓரு கதையை மொழிபெயர்த்துக் கொடு’ என்றாள். டி.பத்மநாபனின் ‘ஓர் இந்தியக்கனவு’ என்ற கதையை மொழிபெயர்க்கத் தொடங்கி, அதன் சரடுகளில் பயணிக்க முடியாமல் பாதியிலேயே விட்டிருந்தேன்.
ஆனால் அடிமாலி நகரம் என் தாய்மொழியின் பரவசத்தை எனக்குள் மீண்டும் ஏற்றியிருந்த உணர்வில் சாரா ஜோசப்பின் ‘காலடிச் சுவடுகள்’, சி.வி.ஸ்ரீராமனின் ‘பொந்தன்மாடன்’, பால் சக்கரியாவின் ‘ஒரு நாளுக்கான வேலை’ என மூன்று கதைகளை ஒரே வேகத்தில் மொழிபெயர்த்து அந்தத் தொகுப்பிற்குத் தர முடிந்தது. அக்கதைகளுக்குக் கிடைத்த கவனிப்பு என்னை மேலும் இயங்க வைத்தது. பெண்களின் மனவுலகு சார்ந்த சக்கரியாவின் கதைகளுள் பன்னிரெண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கேரளாவில் இருந்தபடி ஓவ்வொரு கதையாக மொழிபெயர்த்து நான் ஷைலுபவாவிற்கு அனுப்புவேன். அவர்கள் அவற்றைப் பல சிறுபத்திரிகைகளுக்கும் அனுப்புவார்கள்.
அப்படி ஓரு நாள் பவாவின் போன் வந்தது. ‘இரண்டாம் குடியேற்றம்’ என்ற கதையை காலச்சுவடிற்கு அனுப்பினோம். சுந்தர ராமசாமி படித்து விட்டு, ‘இருபது அல்லது முப்பது வருட எழுத்துப் பரிச்சயம் உள்ள ஒரு கைதான் இப்படி ஒரு மொழி பெயர்ப்பைத் தர முடியும். அந்தப் பெண்ணை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். அதைக் கொண்டாடிப் பால்பாயசம் செய்து குடித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார் பவா.
‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ மூலம் என் வாசிப்புலகில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருந்த அந்த மூத்த படைப்பாளியின் வார்த்தைகள் இப்போதும் என் இயக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தன் படைப்புகளின் வழியாக எழுத்து, சமூகம், பெண்ணியம் ஆகியவற்றின்மீது ஒரு மாற்றுக் கருத்தை எனக்குள் உருவாக்கியிருந்த எழுத்தாளர் பிரபஞ்சனை சர்வ சாதாரணமாக ஒருநாள் பவா வீட்டில் சந்திக்க நேர்ந்தது. பல மணிநேர உரையாடலுக்குப் பிறகு எங்களிடமிருந்து அவர் விடைபெறும்போது, ஒரு நீள நோட்புக்கை என் கையில் கொடுத்து ‘அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது முழுவதுமாக நிரப்பப்பட்ட நோட்டாகத் திருப்பிக் கொடுங்க’ ஏன்றார்.
அவர் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஆறே மாதங்கள் போதுமானதாக இருந்தது. பால் சக்கரியாவின் பெண் மனம் சார்ந்த கதைகள் பனிரெண்டும், ‘இதுதான் என் பெயர்’ என்ற குறுநாவல் ஓன்றுமாக மொழிபெயர்த்து எழுதி வைத்திருந்த நோட்டை என்னிடமிருந்து அவர் வாங்கிக் கொண்டு போனது மட்டுமே நான் அறிவேன். மிகச் சரியாகப் பதினைந்தாம் நாள் கவிதா வெளியீடாக ‘இதுதான் என் பெயர். பால் சக்கரியா. தமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ’ என அச்சிடப்பட்டிருந்த அட்டைப் படத்தோடு என் கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன.
அந்தப் புத்தகத்திற்குப் பிரபஞ்சனே முன்னுரை எழுதியிருந்தார். அட்டை வடிவமைத்தது, புத்தகமாக்கியது யார் என எதுவும் புரியாமல் என் பெயர் பதிந்த அந்த வரிகளையே தடவியபடி நான் உறைந்திருந்தேன். மற்றவர்களுடைய பெயரில் வந்த புத்தகங்களையே படித்து வந்த என்னை, என் பெயரிலேயே வந்த அந்தப் புத்தகம் பரவசத்தில் ஆழ்த்தியது. என் மீதான நம்பிக்கையை எனக்குள்ளே விதைத்தது.
அடுத்த அழைப்பு ஷைலுவிடமிருந்து, ‘நீயும் உத்ராவும் உடனே புறப்பட்டு வாங்க’ என்று. என்ன ஏது என்று எதுவும் புரியாமலேயே இருபது மணி நேரம் பயணித்து அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த என்னை அதே ஆட்டோவில் ஏற்றிச் சென்ற ஷைலு திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளில் ஒன்றான தேரடி வீதியில் நிறுத்தினாள்.
ஆட்டோவிலிருந்து இறங்கிய என் முன்னே நின்ற அந்த பிரம்மாண்டமான பேனரில் ‘இதுதான் என் பெயர் வெளியீட்டு விழா’ என எழுதப்பட்டிருந்ததைப் பார்க்க முடியாதபடி என் கண்கள் திரையிடப் பட்டிருந்தது.
பத்து பதினைந்து வருடங்கள் திருவண்ணாமலையின் இலக்கிய இரவுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தமுஏச பேனர்களின் கலையழகைக் கண்டு வளர்ந்த எனக்கு, அதே பேனரில் என் பெயர் கொட்டை எழுத்துகளில். இப்படி ஒருநாள் வரும் ஏன்று நான் கனவிலும் நினைத்ததில்லை. திருவண்ணாமலை தமுஏச நடத்திய பிரம்மாண்டமான புத்தக வெளியீட்டு விழாக்களில் என் புத்தக வெளியீட்டு விழாவும் ஒன்று. இத்தருணங்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
என் ஞாபக அடுக்குகளில் உறைந்திருந்த அத்தனை நட்பினையும் உறவினையும் விட்டுப் போகாமல் அழைப்பு விடுத்தேன். டேனிஷ் மிஷன் பள்ளியின் திறந்தவெளி மைதானம் நிரம்பி வழிந்த நிகழ்வது. நிகழ்வில் எழுத்தாளர் திலகவதி புத்தகத்தை வெளியிட, என் அம்மா மாதவி கண்ணீர் மல்க முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு தன் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நெகிழ்வான நிமிடங்கள் அது. எஸ். ராமகிருஷ்ணன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சக்கரியாவின் கதையுலகு குறித்தும் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் நீண்ட உரையாற்றினார். தொடர்ந்து ஏற்புரையாக நான் எதுவும் பேச முடியாமல் தழுதழுத்து நின்றது, கூட்டத்தை மேலும் மௌனமாக்கியது.
தொடர்ந்த அந்த நீண்ட இரவில் என் மொழிபெயர்ப்பு பற்றி எஸ். ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டேயிருந்தது நாலைந்து தொகுப்புகளுக்குப் பிறகும் என்னை உயிர்ப்போடும், மேலும் எழுதத் தூண்டும் உணர்வோடும் வைத்திருப்பதாக உணர்கிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|