 |
தலையங்கம் கியூபாவிடம் கற்போம்
வெளியிடுபவர்
க.நாகராஜன்
ஆசிரியர்
இரா.நடராஜன்
ஆசிரியர் குழு:
ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன்,
அ.வெண்ணிலா, இரா.தெ.முத்து,
ஆதவன் தீட்சண்யா, சூரியசந்திரன்
ஜி.செல்வா, பா.ஜெய்கணேஷ்,
முத்தையா வெள்ளையன்
நிர்வாகப் பிரிவு
சிராஜுதீன்
முகவரி:
421, அண்ணாசாலை, சென்னை -18
[email protected]
தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.120
மாணவர்களுக்கு: ரூ.75
வெளிநாடுகளுக்கு ஆண்டு சந்தா: $15
|
“ஆஹாவென் றெழுந்தது பார்.... யுகப்புரட்சி’ சுப்பிரமணிய பாரதி
என்றென்றும் ஒளி மங்காத அந்தச் சிவப்பு நட்சத்திரத்திற்கு வயது ஐம்பது! இன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ‘முதல் கருப்பர்’ குடிபோக முடிந்திருக்கிறது என உலகே கொண்டாடுகிறது என்றால் அத்தகைய உலகளாவிய சமத்துவ மனநிலை ஏற்பட வரலாற்றில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒருவர். பொருளாதார பின்னடைவு என வெள்ளை ஏகாதிபத்தியம் கன்னத்தில் கை வைத்து கப்பல் கவிழ்ந்து போன துக்கத்தில் பீதியில் ‘மாற்றத்திற்கான’ ஓட்டு என வெள்ளை மாளிகையை ‘கருப்பாக்கி’யுள்ள உலகளாவிய ‘பொருளாதார வீழ்ச்சி’ புலம்பல் காலத்தில் ஜப்பானும், பிரான்சும் ஏன் பிரித்தானியமும் கூட ஆடிப்போன நிலையில் அதே நாட்களில் கியூபாவின் விவசாய உற்பத்தி ஆறுமடங்கு அதிகமாகியும், வாழ்க்கைத்தரம் அமெரிக்க சராசரி மனித வாழ்வைவிட இருமடங்கு வசதி மிக்கதாக ஆகி இருப்பதையும் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி கடந்த இரு ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகமாகி இருப்பதையும் காண்கிறோம்.
இப்புவியில் மனிதனது வாழ்நாள் சராசரி 62.3 ஆண்டுகள். கியூபர்களின் சராசரி வாழ்நாள் 76.4 ஆண்டுகள். ஆயிரம் குழந்தை பிறப்பிற்கு ஒரு மரணம் என வாழ்வுக்கு ‘சுயமரியாதை’ கண்ட ஒரே நாடு கியூபா. காரணம் மருத்துவசேவையில் தன்னிறைவு. உலகிலேயே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் விகிதாச்சாரம் பேணப்படும் ஒரே நாடு அது! அப்படி கல்விப் புரட்சி! கியூபாவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. ஒரு கோடி விவசாயிகளைத் தற்கொலைக்கு பலியாக்கிய உலகமயமாதலின் கொடிய தாண்டவத்தை முடிவுக்குக் கொண்டு வர முதலடியைக் கூட எடுத்து வைக்க முடியாத நாம்... கியூபாவில் விவசாயத்தை அந்தப் பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து பள்ளிக் கல்லூரி மாணவர்களும் மேற்கொள்கிறார்கள். பசுமைப் புரட்சி பயிர்களான கோதுமை அரிசி உற்பத்தி குறைத்து காய்கனிகளின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பேரிடர் மேலாண்மை உட்பட அனைத்து பிரச்சனைகளிலும் கியூப மக்கள் ஓர் இயக்கமாகச் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை நமது இயக்கத்திற்குள்ளாகவும், மக்களிடமும் எடுத்துச் செல்லவேண்டும்.
1,10,800 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்த அக்கினிக்குஞ்சின் வரலாறு மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்று. முதலில் 400 வருடங்கள் ஸ்பெயின் காலனியாக வறுமையும் பிணியுமாய் வாடிவதங்கிய வாழ்வு கியூபர்களுடையது. கியூபாவை கையில் வைத்திருப்பவர்கள்தான் மெஸ்கோ வளைகுடாவையும், புளோரிடா ஜலசந்தியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதால் (இப்போது அவை கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ளன) அந்த இடத்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா சூழ்ச்சிகள் பல செய்தது; செய்து வருகிறது. 1868களில் கியூப மக்கள் நடத்திய முதல் விடுதலைப் போருக்கு ‘ஆதரவாக’ களம் இறங்கி 1902 அமெரிக்கா அதை ஆக்கிரமித்ததோடு பல பொம்மை அரசுகள் மூலம் அதன் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தது. 1934ல் பத்தீஸ்தாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ‘வெள்ளை’ கம்பள வரவேற்பு கொடுத்ததும் அதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்.
உலகின் வரலாற்று செங்கனல் வரிகளைக் கியூப மக்கள் ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் 1959ல் எழுதினார்கள். அமெரிக்கா அலறியது. சீனமும் சோவியத்தும் அங்கீகரித்தன. இன்றுவரை 386 முறை காஸ்ட்ரோவைக் கொலை செய்ய அமெரிக்கா செய்த சூழ்ச்சிகள் வெளிவந்துள்ளன. வெளியே வராத சூழ்ச்சிகள் ஆயிரமுண்டு. 1992ல் முதலாம் புஷ் கொண்டு வந்த டாரிசெல்லி தடை மசோதாவை விடவா? கியூப மக்கள் அனைத்தையும் கடந்து செல்லும் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள்... “சர்வதேச தொழிலாளர் கீதம் பாடியபடி களை பறிக்கும் விவசாயக் கூலிகளையும் உளுந்து பயிறு நெறித்துக் கொண்டே கார்ஸியா மார்க்குவெஸ் நாவல்களை விமர்சனம் செய்து பேசிக் கொண்டு ஒரு புத்தக கூட்டமாகச் செயல்படும் மூதாட்டிகளையும் கியூபாவில்தான் பார்க்க முடியும்” என்று நோம் சோம்ஸ்கி 2006ல் எழுதினார்.
ஐம்பதாண்டு கால கியூபப் புரட்சியைக் கொண்டாடும் நாம்... அதை முன்னுதாரணமாக கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் தருணம் வந்துவிட்டது. கியூபாவிடம் கற்போம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|