வாசித்ததும் யோசித்தது
வகுப்பறையுள் வன்முறை
பையன்னூர் குஞ்ஹிராமன்
மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
பக்: 25 விலை : ரூ10/
எந்தக் குழந்தையும் குதூகலத்துடன் பள்ளிக்கூடம் போவது கிடையாது. காரணம் என்ன? வகுப்பறை ஒரு வன்முறைச் சாலையாகவும் பள்ளிக்கூடம் ஒரு பலிக்கூடமாக இருப்பதும் தான். அங்கு நிலவும் வாய்பொத்திய அமைதி யுத்தகால ரத்தஅமைதியை தான் நியாபகப்படுத்துகிறது. பல மணிநேரம் மண்டியிட்டு முட்டி பெயர்ந்து போன சென்னை மாணவர், இரு கண்களும் பிடுங்கப்பட்ட சேலம் மாணவி உலகெங்கும் வரிக்குதிரை மாதிரி சூடு வைக்கப்பட்ட மதுரை மாணவர்கள். மொட்டை அடிக்கப்பட்ட திருவண்ணாமலை குழந்தை... இப்படி தொடரும் கொடிய வன்முறைக்கு நாம் வைத்திருக்கும் பெயர் கல்வி ஒழுங்கு கட்டுப்பாடு. இதற்கு மேலும் நடக்கும் பாலியல் பலாத்காரங்கள், மன உளைச்சல், அவமானம்.... எல்லாம் சென்று முறையிட ஓர் இடம் கிடையாது. கேட்க ஒரு நாதி கிடையாது. இருக்கிறோம்.... இதோ.... என்று முன் வந்துள்ளது மக்கள் கண்காணிப்பகம்!
நாளும் அரங்கேறும் உரிமை மீறல்களைப் பதிவு செய்து தட்டிக் கேட்கும் அந்த அமைப்பு, விருது நகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் வெம்பக்கோட்டை ரிஸிஜிகி என்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் தனக்கு தங்கை முறையான ஒரு மாணவியிடம் பேசிய ‘குற்றத்திற்காக’ தலைமை ஆசிரியரால் பிரேயரில் அவமானப்படுத்தப்பட்டு மனவலி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக் என்ற 12ஆம் வகுப்பு மாணவரின் கதையை விவரிக்கும் இந்தச் சிறிய வெளியீடு... கல்விமுறை எனும் அந்த ஈவு இரக்கம் உணர்ச்சி எதுவுமே இல்லாத இயந்திரத்தின் பல்சக்கரம் எத்தனைக் குழந்தைகளின் ரத்தத்தால் தோய்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு பதம். மக்கள் கண்காணிப்பகத்தின் இரண்டாவது மிக முக்கிய வெளியீடு இது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|