 |
தலையங்கம் ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’
வெளியிடுபவர்
க.நாகராஜன்
ஆசிரியர்
இரா.நடராஜன்
ஆசிரியர் குழு:
ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன்,
அ.வெண்ணிலா, இரா.தெ.முத்து,
ஆதவன் தீட்சண்யா, சூரியசந்திரன்
ஜி.செல்வா, பா.ஜெய்கணேஷ்,
முத்தையா வெள்ளையன்
நிர்வாகப் பிரிவு
சிராஜுதீன்
முகவரி:
421, அண்ணாசாலை, சென்னை -18
[email protected]
தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.120
மாணவர்களுக்கு: ரூ.75
வெளிநாடுகளுக்கு ஆண்டு சந்தா: $15
|
‘உங்களை அழித்துவிட்டு அவர்கள்தான் வரலாற்றின் பக்கமெங்கும் மாண்டுபோய் கிடக்கிறார்கள்’
‘பிரபாகரனின் முடிவு தங்களது தோல்வி என்று தமிழர்கள் கருதக்கூடாது’ என்று தமிழ் மக்களை அழித்து ஓர் இறுதி உத்தரவு போல இட்டிருக்கிறார் ராஜபக்ஷே. யாழ்ப்பாணத்தில் தமிழர் தம் கபாலஓடுகளை அப்புறப்படுத்திவிட்டு சிங்களவர்களை குடியமர்த்துவ-தானால்... அங்கே ஆலகால பூசைகள் செய்யப்படவேண்டுமென... சிங்கள புத்த பிட்சுகள் நாள் குறித்துள்ளார்கள்... முப்பதாண்டு கால விடுதலைப் பிளிறல் குரலாகவும் மாறி பின் சாவு கூக்குரலாகவும் கதறலாகவும் கேட்டபோதும் ஒரு செவிடனாக இருந்தது இந்தியா. இவர்கள் இன்று அடைந்துள்ளது வெற்றி என்றால் அது உலக அளவில் மனித நேயத்திற்-கும் உயிர்காப்பு பொது உலக சட்டங்களுக்கும் மனித உரிமைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும்... உலக சமாதானம் பேசுகிற இன்னும் மிச்சமிருக்கிற அனைத்து வகை மானுட நேச சக்திகளுக்கும் கிடைத்த படுதோல்வியாகும். ஓர் உறுப்பு நாடு தன் சொந்த பிரஜைகளாக தான் கூறிக் கொள்ளும் மக்கள் திறளை இனத்தின் பெயரால் திட்டமிட்டு தனது பாசிசத்திற்கு துணை நிற்கும் _ நேச நாடுகளான _ நாச நாடுகளின் உதவியோடு முற்றிலும் அழித்து பெண்களை கருகலைப்பு செய்தும் குழந்தைகளை விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லவும் செய்ததை ஊடகங்கள் பதறியபடி வெளியிட்டும்... நேரில் சென்றுதான் அப்படி நடந்துள்ளதா என ஊர்ஜிதம் செய்ய வேண்டிய அவசியம் ஒரு ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலாளருக்கு இருக்கிறது எனில் அது செத்த அமைப்பு என்று கூறுவதில் தப்பில்லை. இன்று எஃப். எம் வானொலி கேட்டுக் கொண்டும் தன் அபிமான நடிகனுக்கு போஸ்டர் ஒட்டி ரசிகர் மன்றம் நடத்தி கவர்ச்சி அரசியல்வாதிக்கு கை கொடுத்தும் நடிகைகளின் அங்கஅடையாள பாடி_கெமிஸ்ட்ரியில் தன்னையே பறிகொடுத்தும் நிற்கும் இந்தியத் தமிழனிடம் இதற்கு மேலும் என்ன எதிர்பார்க்க முடியும் என்றே எழுதத் தோன்றுகிறது.
ஜார்ஜிய மொழி பேசும், எழுதும் ஒரே மாணவர் மாஸ்கோவின் பிரதான பல்கலைகழகத்தில் மேல்படிப்பு படிக்க விண்ணப்பித்தபோதும் அதை அப்பல்கலைகழகம் நிராகரித்த போதும் கொதித்தெழுந்த தோழர் லெனின், ஓர் இனத்தின் ஒரு மொழியின் பிரதிநிதித்துவம் என்பது யாராலும் மறுக்க முடியாத உறுதிப்பாடு கொண்டது என்றும் அந்த ஒரு மாணவருக்கு அவரது சொந்த மொழியில் கல்வியளிக்க முடியாவிட்டால் பல்கலைகழகத்தை கலைத்து விடுங்கள் என்று அறிவித்ததும் தேசியஇனப் பிரச்சினையில் லெனின் எடுத்திருந்த பிடிவாதமான நிலைப்பாட்டிற்கு சான்று. அத்தகைய மக்கள் நலம் பேணும் அரசு ஒன்றுதான் உலகின் எத்தகைய இன விடுதலையையும் சாதிக்கவும் நியாயமான உரிமைகளை நிலைநாட்டவும் முடியும். அதற்கான வழி என்பது ஈழத் தமிழனின் இன்றைய நிலையிலிருந்து கட்டாயம் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக கிளர்ந்து எழும். இலங்கை தமிழர்களின் இன்றைய மவுனம் உலக அளவிலான அனைத்து வகை கோஷங்களையும்விட வீரியமிக்கது... அதனோடு தோள் கொடுப்போம் தோழமை கொள்வோம். போராட்டம் இன்னும் தொடரும்.
மக்கள் விடுதலை எழுச்சி என்பதும்... உழைக்கும் மக்களின் போராட்டம் என்பதும் தேசிய இன சுயநிர்ணய உரிமைப்போர் என்பதும் அதிகார வர்க்கமும் சர்வாதிகாரிகளும் நினைப்பதுபோல அரசு பயங்கரவாதத்தால் முடித்து வைக்கப்படுவதில்லை.
அனைத்துவகை போர் குற்றங்களையும் புரிந்து இலங்கை தமிழர்களை அழித்த சிங்கள பேரினவாதிகள் இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை... அது நடக்கும் வரை யாழ் நூலகத்தில் தொடங்கி அனைத்து விதத்திலும் யாழை பாழக்கியவர்களுக்கு எதிரானபோரின் வீர முழக்கம் வெவ்வேறு வடிவங்களிலும் தொடரும்.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|