 |
தலையங்கம்
வெளியிடுபவர்
க.நாகராஜன்
ஆசிரியர்
இரா.நடராஜன்
ஆசிரியர் குழு:
ச.தமிழ்ச்செல்வன், கமலாலயன்,
அ.வெண்ணிலா, இரா.தெ.முத்து,
ஆதவன் தீட்சண்யா, சூரியசந்திரன்
ஜி.செல்வா, பா.ஜெய்கணேஷ்,
முத்தையா வெள்ளையன்
நிர்வாகப் பிரிவு
சிராஜுதீன்
முகவரி:
421, அண்ணாசாலை, சென்னை -18
[email protected]
தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.120
மாணவர்களுக்கு: ரூ.75
வெளிநாடுகளுக்கு ஆண்டு சந்தா: $15
|
‘இது கணினி யுகம்’ என்கிறார்கள். எல்லா யுகங்களுமே புத்தக யுகங்கள்தான் என்கிறோம் நாங்கள். புத்தகங்கள் இடத்தை அடைக்கின்றன. புழுதியை சேர்க்கின்றன.... படித்து முடித்த புத்தகங்களை என்ன செய்வது? புத்தக தயாரிப்புக்கு காகிதம் தேவை. காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டுகிறோம். சுற்றுச்சூழலுக்கே ஒரு பெரிய அச்சுறுத்தல் புத்தகம். புத்தக பேப்பரை எரித்தால் காகிதப்புகை. கார்பன் புகை. அது புவி சூடேற்றத்திற்கு ஒரு காரணம் ஆகிறது. அது போடும் குப்பை அதை விட பெரிய அச்சுறுத்தல். இப்படிப்பட்ட புத்தகத்தை கைவிட்டு கணினியிடம் தாவலாமே என்று சிலர் கருத்து கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்று நமக்கு அதிர்ச்சிதரும் பல தகவல்களை சொல்கிறது.
1. ஒரு 60 வாட்ஸ் பல்பு ஏற்படுத்தும் வெப்பத்தை விட ஏழு மடங்கு வெப்பம் ஒரு மடிக் கணினியிலிருந்து ஒரு மணி நேரத்தில் வெளியேறுகிறது.
2. கணினிகளுக்கு புழுதியிலிருந்து பாதுகாப்பு என்கிற பெயரில் குளிர்சாதனப் பெட்டிகள் 1999ல் பயன்பாட்டில் இருந்ததை விட 2009ல் 17,000 முறை அதிகமாகி இதனால் அது வெளியேற்றும் வெப்பமும், சி.எஃப்.சியும் (குளோரோ ஃபுளோரோ கார்பனும்) அதீத அளவை எட்டி ஓசோன் படல பாதிப்பும் புவி வெப்பமேற்றமும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
3. ஒருமுறை கூகுலிலோ வேறு வலை தேடியிலோ புகுந்த ஒரு குறிப்பிட்ட செய்தியை _ தகவலை பெற செலவாகும் மின்சாரம் மற்றும் இதர சக்தி விரயம் என்பது விரைவில் சர்வதேச எரிபொருள் பிரச்சனைகளில் ஒன்றாக பூதாகரமாக உருவெடுக்க இருக்கிறது.
புத்தகம் இந்த அளவிற்கு ஒரு சர்ச்சை பொருளாக இருக்கவே முடியாது. மானுட வளர்ச்சியின் அங்கமாகி தகவல் பரவலின் அடையாளமாக விளங்கும் புத்தகம் மனித தேடலின் ஒரே தோழன்! கணினியில் ஓடும் டிஜிட்டல் வாசகங்களை போலல்லாமல் புத்தகத்தின் வார்த்தைகள் நமது மனதிற்கு மிக நெருக்கமாக உணர்வை தருகின்றன. புத்தகம் வாசிக்க மனிதசக்தி தவிர வேறு எந்தச் சக்தியும் தேவையில்லை. மனிதன் வாசிப்பின் மூலம் சக்தியை பெறுகிறான். செலவழிப்பதை விட பல மடங்காக மனித இன வரலாற்றின் மங்காத பேரொளியாக என்றென்றும் விளங்குபவை புத்தகங்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கூட ஒருவர் தனக்கு சொந்தமாக எத்தனைப் புத்தகங்கள் வைத்திருந்தார் என்பதை வைத்து அவர் செல்வந்தராக அறியப்பட்டார். எத்தனைப் புத்தகங்கள் எழுதினார் என்பதை வைத்து ஒருவர் அறிவு ஜீவியாக போற்றப்பட்டார். தத்துவஞானி வால்டேர் எழுதிய ஒரு புத்தகம் பிரஞ்சு புரட்சிக்கே வித்திட்டதையும் கார்ல்மார்க்சின் ‘மூலதனம்’ எனும் ஒருநூல் உலக அரசியலையே புரட்டிப் போட்டதையும் நாம் மறக்கலாமா? சார்லஸ் டார்வினின் ‘உயிரிகளின் தோற்றம்’ எனும் புத்தகம் மனித வரலாற்றில் நிகழ்த்திய அந்தப் பிரமாண்ட வளர்ச்சிக்கு முன் அப்புத்தகம் தயாரிக்க எத்தனை பேப்பர் தேவைப்பட்டது எவ்வளவு மரம் வெட்டினோம் என்பதை மட்டுமே ஒப்பிட முடியுமா?
மின்செலவு இன்றி மெழுகுவர்த்தி ஒளியில் கூட நாம் திருக்குறள் வாசிக்க முடிவதற்கு முன்... அனைத்து வகை மக்களின் எளிய கருவியான புத்தகத்திற்குமுன் கணினி வாசிப்பு எம்மாத்திரம்?
புத்தக வாசிப்பு என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானதான, அறிவு வளர்ச்சி அடைதலை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாகும். அது ஒன்றுதான் இந்தப் புவியின் ஆளுமை சக்தியாக மனிதனை மாற்றியது. மின் உபகரணங்களை காட்டிலும் பன்மடங்கு அதிகமாய் புத்தகங்களே மனிதனை பதப்படுத்தவும் பலமிக்கதாகவும் செய்தன என்பதை நாம் மறக்கலாமா?
புத்தகங்களை நேசிப்போம். இன்னும் அதிகம் வாசிப்போம்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி _ 2009 வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
_ ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|