சமூகநீதி: அமர்த்தியாசென் எழுப்பும் கேள்வி
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், முற்போக்கு சிந்தனை கொண்டவர். சமுக நீதி பற்றி ஆழமான பார்வை அவருக்கு உண்டு. பார்ப்பனக் கோட்டையான சென்னை அய்.அய்.டி. விழாவில் பேசும்போது, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசி, பார்ப்பன வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
கடந்த வாரம் லண்டனில் இலக்கிய விழா நிகழ்ச்சி ஒன்றில் அவர், எது சரியான நீதி என்பது குறித்து, சில ஆழமான சிந்தனைகளை முன் வைத்துள்ளார். அண்மையில் அவர் வெளியிட்ட நூலில், இது பற்றிய மாற்று சிந்தனையை விவாதப்படுத்தியுள்ளார். நீதியை வழங்குவதற்கு கடந்த காலங்களை நாம் புரட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறும் அமர்த்தியா சென், “இப்போது எங்கே நிற்கிறோம்? இதிலிருந்து எதை நோக்கி போகிறோம் என்பதையே, நிதிக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். ஆனாலும், இப்போது ‘எங்கே நிற்கிறோம்’ என்பதை ஆய்வுக்குள்ளாகும்போது, பின் தங்கிய இடத்தில் நிற்கக் கூடியவர்கள், அதற்கான சமூக அரசியல் காரணிகளை கடந்தகால சமூக வரலாறுகளில்தான் தேட வேண்டியிருக்கிறது. தவறு எங்கே நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்து, அதை அகற்றும்போது தானே நீதி கிடைக்க முடியும்? அதே நேரத்தில்,
சமூக நீதிக்கு ஒற்றைத் தீர்வை முன் வைத்து விட முடியாது என்று அமர்த்தியா சென் கூறும் கருத்தில் நியாயம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒற்றைத் தீர்வையே முன் வைக்கும் கருத்தோட்டம், இப்போது மறுபரிசீலனைக்கு உள்ளாகிவிட்டது என்பது உண்மைதான். பல்வேறு பரிமாணங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனாலும் எது சரியான நீதி என்பதை எப்படி தீர்மானிப்பது?
இந்தக் கேள்விக்கு ஒரு கதையை முன் வைத்து அமர்த்தியா சென் விளக்குகிறார். ஒரு புல்லாங் குழலுக்கு மூன்று குழந்தைகள் சண்டை போடு கின்றனர். “மூன்று பேரில் எனக்கு மட்டுமே அதை வாசிக்கத் தெரியும், எனவே எனக்கே சொந்தம்” என்கிறது ஒரு குழந்தை. மற்றொரு குழந்தையோ, “எங்க அம்மா அப்பா ஏழை, என்னிடம் வேறு பொம்மை ஏதும் இல்லை. எனக்கு இது கிடைத்தால் தான் உண்டு” என்கிறது இரண்டாவது குழந்தை. “இதை செய்ததே நான்தான்; இது என்னுடையது; எனவே எனக்கே வேண்டும்” என்கிறது மூன்றாவது குழந்தை. இப்படி உரிமை கோரும் மூன்று குழந்தை களும், அவரவர் நியாயங்களை முன் வைத்துள்ளார்களே தவிர, ஒருவர் நியாயத்தை மற்றவர் மறுக்க வில்லை. இந்த மூன்று குழந்தைகள் முன் வைக்கும் கோரிக்கைகளில் எது சரியானது என்பதை எப்படித் தீர்மானிப்பது? இது பற்றி தனது நூலில் 400 பக்கங்களில் விரிவாக அலசுகிறார். சரியான நீதி இதுவே என்று, எந்த நீதியையும் வரையறுக்க முடியாது என்று கூறும் அவர், ஒரு குறிப்பிட்ட சூழலில், அந்த சூழலோடு தொடர்பு படுத்தியே நீதியைத் தீர்மானிக்க வேண்டும் என்கிறார். மோசமாக வெளிப்படும் அநீதிகளை பெருமளவுக்கு அகற்றுவதற்கான நடவடிக்கைகளே நீதியாக இருக்க முடியும் என்று கூறும் அமார்த்தியாசென், இதற்கு மக்களின் எதார்த்தமான வாழ்க்கையோடு ஒப்பிடு களைச் செய்ய வேண்டுமே தவிர, அமைப்புகளில் போய் ஆராய்ச்சி நடத்துவதில் பயன் இல்லை என்கிறார். அமர்த்தியா சென் முன் வைக்கும் இந்த வாதம் - மார்க்சியம் கூறும் அரசு, வர்க்கம், குடும்பம் என்று ‘சுரண்டும்’ நிறுவனங்களே சமூக அநீதிக்கு ஊற்றுக் கண்களாக திகழ்கின்றன என்ற பார்வையை கேள்விக்குள்ளாக்குகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|