 |
கட்டுரை
அந்த 42 பேர் சுபவீ
150 ஆண்டுகளுக்கு முன்
மொரீசியஸ் நாட்டிற்கு
ஆப்பிரிக்கக் காட்டிற்கு
பிஜித் தீவுகளின்
கரும்புத் தோட்டத்திற்கு
இலங்கையின் மலையகப் பகுதிகளுக்குக்
கூலிகளாய்க் குடிபெயர்ந்தனர்
நம் மூதாதையர்.
அவர்கள் தம் வாழ்வை,
மாதம் ஒரு மரக்கால் நெல்லுக்கும்
முற்றிய தேங்காய்க்கும்
விற்றுக்கொண்டனர்.
கஞ்சி குடிப்பதற்கின்றி, அதன்
காரணம் இதுவெனும் தெளிவுமின்றி
வெள்ளையர் காட்டிய திசைகளில்
நடந்தன அவர்களின் கால்கள்
மடிந்தது அவர்தம் வாழ்வு.
இப்போது எல்லாம்
உள்நாட்டிலேயே!
கும்பகோணம் குழந்தைகளுக்கு நெருப்பு
கரையோர உறவுகளுக்குக் கடல்
சென்னை மக்களுக்கு
நெரிசலே போதுமென்றாகிவிட்டது.
எம் மக்களே
உம் உயிரின் விலை
வெறும்
இரண்டாயிரம் ரூபாய்தானா?
வெள்ளத்தில் கூடத்
தப்பிப் பிழைத்த உங்களை
வெள்ள நிவாரணம்
அடித்துச் சென்றுவிட்டதே!
கேள்வி கேட்பதற்கும்
இலஞ்சம் வாங்கும்
அரசியல்வாதிகள் ஒருபுறம்
கேள்வி கேட்க யாருமின்றி
அனாதைப் பிணங்களாய்
மக்கள் மறுபுறம்
துருவங்களில் வாழ்கிறது நம்தேசம்
மனம் கசிய
கண்ணீர் மல்க
இரங்கி நிற்கின்றோம்-
இறந்துபோன
உங்களுக்காக மட்டுமில்லை
அதே
இரண்டாயிரம் ரூபாய்க்காக
ரேசன்கடை வாசல்களில்
இன்றும் காத்துக் கிடக்கும்
ஏழைத் தமிழர்களுக்காகவும்.
- சனவரி 1 2006
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|