 |
கவிதை
இசையாய் மிதக்கும் பூனைக்குரல்
சித்தாந்தன்
சிறகுகளற்ற வெளியில் உரையாடிக் கொண்டிருந்தோம்
வீட்டின் வரைபடம் மறந்துபோன
அந்த இளமாலையில்
எமக்கிடையில் சரிந்துகிடந்த சிலுவையில்
எங்கள் கபாலங்கள் அறையப்பட்டுக் கிடந்தன
நாம் பரிமாறாத சொற்கள்
மதுக்குவளைகளில் பனிக்கட்டிகளாய் மிதந்தன
நீ உள்ளிளுத்து ஊதிய சிகரட் புகையில்
கருகிப்போன இதயத்தின் நாற்றமடித்தது
நீ கூச்சலிட்டாய்
சூரியன் பல்லாயிரம் துண்டுகளாய் உடைந்தது
அவசரங்களைக்களைந்து நாம் வந்திருந்த
அந்தப்பொழுதை நான் மௌனத்தால் அடைத்தேன்
நீ சொல்லிக்கொண்டிருந்தாய்
நடு வீட்டின் மையத்தில் தனித்தழும்
குழந்தையின் பூனைக்குரல்
எமது இசைப்பாடல்களில் வழிந்தொழுகுவதாய்
மதுவருந்திக் கழித்த அந்தமாலை
அடர்த்தியான கருமை கொண்டது
ஆயினும்
வானம் நிர்வாணமாகவேயிருந்தது
எமது துயரிசையிலிருந்து இறங்கிய பூனை
எஞ்சிய மதுவையும் பருகிப் பாடத் தொடங்கியபோது
நாம் குழந்தைகளாயினோம்
துயரிசையின் உச்ச நொடியில்
ஒரு மாலையின் நிலவுருவை
வெறுமையாகிய மதுக்குவளைகளினடியில் கண்டடோம்
அக்கணம்
சூரியனுக்குக் கீழே நாங்களிருக்கவில்லை
எம் நிழல்கள்தான் நீண்டுகிடந்தன
- சித்தாந்தன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|