 |
கட்டுரை
சிங்கமே! எங்குச் சென்றனை? தொ. சூசைமிக்கேல்
‘ஆண்டன்’எனும் சிங்கமே!நீ எங்குச் சென்றனை? - எமக்(கு)
ஆற்றொணாத துயரமொன்(று) எதற்குத் தந்தனை?
மாண்டனையோ? மறைந்தனையோ? என்ன வேதனை! - ஈழ
மண்டலத்து மாந்தருக்கேன் இந்தச் சோதனை?..
தலைநிமிர்ந்த தமிழனுக்கேன் கொடுமை நேர்ந்தது? - இந்தத்
தருணமதில் சரித்திரம் ஏன் தவறிழைத்தது?..
விலையுயர்ந்த தமிழனை ஏன் விதி அழைத்தது? - எங்கள்
வீரனை ஏன் மரணம் வந்து வழிமறித்தது?...
செந்தமிழர் இனத்திற்கோர் சிங்கமல்லவா? - ‘ஆண்டன்’
தேர்ந்தமதிச் சுடர்படைத்த தங்கமல்லவா?
சிந்தனை முழுக்கத் தமிழ் ஈழமல்லவா? - எங்கள்
சேனைகட்கு மத்தியில் ஓர் வேழமல்லவா?..
விம்மிநின்ற தோள்களுக்குத் தினவு தந்தனன் - எங்கள்
விடுதலைப் பசிக்கு நாளும் உணவு தந்தனன்!
கண்ணிறைந்த ஈழம்காணக் கனவு கண்டனன் - எங்கள்
கண்மணியைக் காலன் இதோ, காவு கொண்டனன்!..
சொல்வதற்கோ இல்லையடா, சோக வார்த்தைகள்! - நெஞ்சு
சுட்டதடா! யார்தருவார் எமக்கு ஆறுதல்?..
வெல்வதற்கு வியூகங்கள் தந்தவன் உடல் - இன்று
விதையாகி விட்டதடா! விழியிலே கடல்!!...
எமையீன்ற தமிழ்த்தாயே, என்ன சொல்கிறாய்? - உன்றன்
இணையற்ற மைந்தனை ஏன் எடுத்துச் செல்கிறாய்?..
சுமைதாங்கி சாய்வதற்கேன் சம்மதிக்கிறாய்? - எம்மைத்
துடிதுடிக்க வைப்பதில் ஏன் அமைதி காண்கிறாய்?..
சோதரனே! தூயவனே! பாலசிங்கமே! - ஒன்றும்
சொல்லாமல் போனதென்ன? சொக்கத் தங்கமே!
ஆதரவு நீயென்ப(து) அறிந்திருந்துமே - எம்மை
அழவைத்துப் பார்ப்பதென்ன? சொல்லு, தங்கமே!..
விட்டபணி தொடர்வதற்கே உயிர் தரிக்கிறோம் - இந்த
வேதனையின் வேளையிலும் விழித்திருக்கிறோம்!..
உத்தமன் உன் சுவடுகளை முத்தமிடுகிறோம் - அந்த
ஒத்தடங்கள் போதும்: மீண்டும் நடைபயில்கிறோம்!...
- தொ.சூசைமிக்கேல் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|