 |
கட்டுரை
கண்ணுறங்கு, கண்ணே! தொ. சூசைமிக்கேல்
தென்குமரிச் சீமையிலே
செந்தமிழன் காணியிலே
என்னுயிரே! இன்னமுதே!
ஏனழுதாய், கண்ணே!...
பாடுகடல் சூழ்ந்திருக்க,
பட்டுமணல் பாய்விரிக்க,
ஏடுகொள்ளும் என்தமிழே!
ஏனழுதாய், கண்ணே!...
தேன் ஈயும் தேனீயும்
தேனடையில் தூங்கையிலே
யானீன்ற யாழிசையே,
யாரடித்தார், கண்ணே!...
மான்விழியும் மீன்விழியும்
மண்டியிடும் மலர்விழியே!
யான்விழையும் மாமழையே,
யாரடித்தார், கண்ணே!...
வேண்டியதோர் பிள்ளைவரம்
விண்ணவனார் கனிந்தருளத்
தோன்றியதோர் பொன்திரளே!
தூங்கலையோ? கண்ணே!...
ஏழிசையின் பண்முழங்கும்
எம்குடிலின் வாழிசையே!
தோளில் உனை நான் சுமந்தேன்:
தூங்கலையோ? கண்ணே!...
தூயகுலம் பெற்றெடுத்த
தும்பையிதழ்ப் பூவனமே!
நீயழுதால் யார்துயில்வார்?
நித்திரை கொள், கண்ணே!...
உத்தமனார் சுற்றமெலாம்
உன்பொருட்டால் புகழ் விளைய,
நித்தமுனை நான் வளர்ப்பேன்:
நித்திரை கொள், கண்ணே!...
தெள்ளுதமிழ்ச் சித்திரமே!
தேன்மழலைப் பாசுரமே!
அள்ளியுனை நானணைத்தேன்:
ஆரிரரோ, கண்ணே!...
செந்தமிழார் சிந்தைதனைச்
செப்பனிடும் சேய்வடிவே!
அந்தமிலாப் பொன்னழகே!
ஆரிரரோ, கண்ணே!...
நான்முகனார் வள்ளுவனின்
நல்லதமிழ் நாஞ்சிலிலே
வான்மதிபோல் வந்துதித்தாய்,
வாழிய, நீ கண்ணே!...
பூமணக்கும் பொன்முகமே!
புன்னகையின் போர்க்களமே!
வாய்மணக்கும் பால்மணமே!
வாழிய, நீ கண்ணே!...
உச்சிமுதல் பாதம்வரை
உன்னழகோ தீர்த்தக் கரை!
கச்சிதமாய் என்மடியில்
கண்ணுறங்கு, கண்ணே!...
ஞாலமெங்கும் நல்லவர்கள்
நாளையுன்னைப் போற்றி நிற்கும்
காலம் ஒன்றே என் கனவு:
கண்ணுறங்கு, கண்ணே!...
- தொ.சூசைமிக்கேல் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|