 |
கவிதை
க.ஆனந்த் கவிதைகள்
தொலைத்தவை
கணக்கில்
வைத்துக் கொண்டதில்லை
குழந்தைகள்
தொலைத்து விட்டு வரும்
பென்சில்களையும்
இரப்பர்களையும்.
கணக்கெடுத்தால்
கலக்கம் வரும்
உறவிடமும்
நட்பிடமும்
கொடுத்து வராததை.
இருப்பதை விட
அதிகமாய்
இழந்தது அதிகம்
ஆசையில்.
எதையும்
தொலைக்காதவரென்று
எவருமில்லையென்ற
நியாயப்படுத்துதல்
போதுமானதாகிவிடுகிறது
தொலைத்த ஞாபகத்தை
தொலைக்க.
எல்லைகள்
உனக்கான எல்லைகளை
எப்போதும்
பாதுகாத்துக் கொள்கிறாய்
மீற நினைப்பவன்
நானல்ல என
நன்றாகத் தெரிந்தும்.
எப்போதும் எனக்குண்டு
உன் எல்லைகளை
தாண்டக் கூடாதென்ற
எச்சரிக்கை உணர்வு
என் எல்லைகளை
எப்போதோ
உன்
ஆக்ரமிப்பிற்கு
அனுமதித்து விட்ட போதிலும்.
அனுபவம்
மகனின்
முதல் சம்பளத்தில் பாதி
அப்பாவின்
கடைசி சம்பளம்.
பார்த்துப் பார்த்து
செலவழித்த அனுபவமும்
கணக்கு பாராமல்
செலவழிக்கும் வாய்ப்பும்
ஒரே வீட்டில்.
தானே செய்து
பணம் சேமித்த
தத்துவம் தோற்றது
எல்லாவற்றிற்கும்
ஆள் வைத்துக் கொள்ளும்
வசதியிடம்.
வீடுகளில்
இன்னமும்
வீற்றிருக்கின்றன
விலையுயர்ந்த
பொருட்களும்
விலை மதிப்பற்ற
அனுபவங்களும்
யாருக்கும் பயன்படாமல்.
- க.ஆனந்த்
([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|