 |
கட்டுரை
தவம் ஜெயபாஸ்கரன்
நிறையவே எழுதப்பட்டு விட்டது
என்றாலும்
நானும் எழுதியாக வேண்டியிருக்கிறது
காத்திருப்பது குறித்த
என்னுடைய கவிதையை.
காத்துக் கிடப்பதென்பது
கசப்பான அனுபவமெனினும்
ஏதேனும் ஒன்றுக்காக
அவ்வப்போது
காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது
இயலாதவர்களும்
இல்லாதவர்களும்.
என்னைக் காத்திருக்கச் சொல்லி
சொன்ன இடத்துக்கு வந்தவர்கள்
சொன்ன நேரத்துக்கு வந்தவர்கள்
நான் காத்துக் கிடந்த வரலாற்றில்.
என்னைப்போல
காத்திருக்க வேண்டிய அவசியமற்று
எத்தனையோ முறை
நிதானமாக என்னைக் கடந்து
நடந்திருக்கின்றன மாடுகள்.
பரபரப்பாக ஓடியிருக்கின்றன
நாய்கள்.
காத்திருக்கச் சொன்னவர்களும்
காத்துக் கிடந்த இடங்களும்
காத்திருந்த காலங்களும்
வேறு வேறாக இருந்தாலும்
கால தாமதத்திற்கான
காரணங்கள் மட்டும்
ஒரே மாதிரியாகத்தான்
சொல்லித் தொலைக்கப்படுகின்றன,
சிரிப்பது போல மாற்றிக் கொள்ளப்பட்ட
என் முகத்திற்கு முன்பாக.
ஆறிலிருந்து ஆறரைக்குள்
என்று வரையறுத்தவனுக்காகவே
இப்போதும் காத்திருக்கிறேன்
ஏழு பதினைந்தையும் தாண்டி.
ஏழேமுக்கால் மணியளவில்
அவன் வந்து பாடக் கூடும்,
உங்களுக்காக எங்கெல்லாமோ
கேட்டுப் பார்த்து விட்டேன்
என்று தொடங்கும்
பழைய பல்லவியொன்றை.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|