 |
கட்டுரை
மௌனம் ஜெயபாஸ்கரன்
உனது
மௌனம் குறித்து
எனக்கு நானே
பேசிக் கொண்டிருக்கிறேன்
கடந்த மூன்று மாதங்களாக.
எழுபது நாளுக்கு
மேலாகி விட்டது
யோசித்துச் சொல்லுங்கள்
என்று சொல்லி
நீ கேட்டுவிட்டுப் போன
சில வினாக்களுக்கு
விடைகளை
யோசித்து வைத்து.
என்னைப் பற்றி
நீ சொன்னதும்
நினைத்ததும்
வேறு வேறு
என்கிறார்கள்
எனது புழுக்கத்தில்
இளைப்பாறி மகிழும்
என் நண்பர்கள்.
நம் இருவருக்குமாக
நடத்துனர் கொடுத்த
பயணச் சீட்டுகளில்
எது உன்னுடையது
என்று தெரியாமல்
என்னுடையதையும் சேர்த்து
பாதுகாத்து வருகிறேன்
உன்னிடம் காண்பித்து
தெரிந்து கொள்வதற்காக.
இன்னமும் எனக்கு
நம்பிக்கையிருக்கிறது
வருவேன் என்ற
உன் வார்த்தையின் மீது.
ஒரு வேளை நீ
வராமலே போய்விட்டால்
எப்படி நான்
கண்டுபிடிப்பது
நமக்கான
இரண்டு பயணச் சீட்டுகளில்
உனக்கான
ஒன்றை.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|