 |
கட்டுரை
அம்மி ஜெயபாஸ்கரன்
அம்மாவும்
குழந்தையும் போல,
இன்றும் எனது கிராமத்தில்
உயர்ந்தியங்குகின்றன,
அம்மிகளும் அதன் குழவிகளும்.
என் வீட்டு அம்மியின் மார்பில்
இன்னமும் மணக்கக்கூடும்,
எங்கள் பாட்டி அரைத்த
பச்சிலை மூலிகைகள்.
என் பாட்டிக்கு முன்னதாகவே
வீட்டுக்கு வந்த பெருமை உண்டாம்
என்வீட்டு அம்மிக்கு.
இல்லாமைகளையும் இயலாமைகளையும்
என் அப்பாவிடம் சொல்வதை விட
அம்மியிடம் சொல்லி அரைப்பதுதான்
ஆறுதலாக இருந்தது
என் அம்மாவுக்கு.
அசையாச் சொத்தாக
அம்மியைத்தான்
பதித்திருக்கிறார்கள்
இந்திய கிராமங்களின்
ஏராளமான வீடுகளில்.
ஒரு வர்க்கத்தின்
அடையாளமாகவும்
இயக்கப்படுகின்றன
அம்மிகள்.
வர்க்கங்கள்
ஒழிந்து பின்னரும்
வாழக்கூடும்
அம்மியும் குழவியும்.
சிற்பங்களோடு
ஒப்பிட்டு
அம்மிகளை
மட்டந்தட்டக் கூடாது,
அம்மியுடன் தொடர்புடைய
அனைவரும்.
சமீப காலமாக
ஆங்காங்கே கேட்கிறது
'அம்மி கொத்த சிற்பி எதற்கு?'
என்றொரு கேள்வி.
தயங்காமல்
திருப்பிக் கேளுங்கள்
'அம்மி கொத்தாத சிற்பி எதற்கு?'
எனும் மற்றொரு கேள்வியை.
- ஜெயபாஸ்கரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|