 |
கட்டுரை
காட்சியும் கானமும் பிச்சினிக்காடு இளங்கோ
தொலைக்காட்சி கண்விழித்தது
அதோ
சிறுத்தைகளையும் விரட்டும்
தந்திரத்தோடு
நரியும் குட்டிகளும்
சற்றே நீள்கிறது...
தவஞானி பாவனையில்
குள்ளநரிகள்
குள்ளநரி குட்டிகளின்
உல்லாச சடுகுடு
இன்னும் சற்று...
காட்டு எருமைக்கன்றைச்
சிறுத்தை
கையகப்படுத்துகையில்
கட்டுக்கடங்கா வெள்ளமாய்
கோபக்கொம்புகளால்
தூக்கிவீசிய காட்டெருமை
கண்திசைமாறும்போது...
இட்டமுட்டையை
குஞ்சுகளாக்கும் கரிசனத்தில்
நெருப்புக்கோழி
பார்வைநகரும்போது...
பூப்பறித்துத்தின்னும்
அணிலின் அப்பாவி
அழகு
மான்களுக்கிடையே
கொம்புச்சண்டை...
மோதிமோதி
எழும்பும் இடிகள்
காமப்புத்தியில்
வாலைச்சுழற்றி
மோகமொழியில்
சுத்திசுத்தி வரும்
ஆண்மான்
நாலுகாலும்
ஒரே துள்ளளாய்
செல்வந்தர் வீட்டுச்செல்லத்தில்
கூதூகலமாய் மான்குட்டிகள்
மானின் விழிகளும்
விடலைகளும்
மனதைக்கரைத்துக்கொண்டிருந்தபோது
கொட்டாவி விட்டுக்கொண்டு
சீட்டா சிறுத்தை...
குட்டியென்றும் பாராது
மான்குட்டியை ஓடவிரட்டித்
தன்குட்டிக்கு உணவாக்கும்போது
தாய்ப்பாசமே இல்லையா
தவித்தது பாழ்மனசு...!
பக்கமாய்
என்மனசருகில் வந்து
ஒரு புண்உறுமல்செய்து
தன் முகவரி
விலங்கென்றது சீட்டாசிறுத்தை.
சரியென்று
சமாதானம் அடையுமுன்
நெருங்கிவந்து தானமாய்....
சிக்கன் 65ம்
தந்தூரி சிக்கனும்
மைசூர் மட்டனும்
யார் நாக்கிற்கு?
யாகாவராயினும்
நாகாக்க...
அலட்சியமாய் அடி எடுத்துவைத்தது.
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|