நிகழ்வு
சென்னை கீற்று வாசகர் சந்திப்பு
- டிசம்பர் 7, 2008
பெருமழையின் சுவடுகளை மெல்ல மெல்ல துறந்துக் கொண்டிருந்த சென்னை மாநகரில், 2008 டிசம்பர் 7ம் தேதி, ஒரு இனிய ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலில், கீற்று வாசகர்களின் சந்திப்பு இனிதே நடந்தேறியது. கீற்றுவை முன்னெடுத்துச் செல்லும் அக்கறையுடன் வாசகர்கள் முன்வைத்த கருத்துக்களை, சந்திப்புக்கு வர இயலாமல் போன வாசகர்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
சந்திப்புக்கு வந்திருந்த வாசகர்களை, கீற்று ஆசிரியர் இரமேஷ் வரவேற்று, கீற்றுவின் நிறை குறைகளை வாசகர்கள் எந்தத் தயக்கமுமில்லாமல் பகிர்ந்து கொள்ளுமாறு கோரினார்.
எல்லாவிதத்திலும் கீற்று தனக்கு நிறைவையே தருகின்றதென்று தொடங்கிய பத்திரிகையாளர் கோவி.லெனின், தொடர்ந்து இயங்க வேண்டிய ஒரு இணையதளமாக கீற்று விளங்குகிறதென்றும், அதற்கு ஒரே தடையான பொருளாதரச் சிக்கலிலிருந்து மீள விளம்பரங்களில் நாம் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் இருக்கிறதென்றும் தன் கருத்தைப் பதிவு செய்தார்.
கோவி.லெனினின் கருத்துடன் தான் உடன்படுவதாகத் தெரிவித்த கவிஞர்.ஜெயபாஸ்கரன் பொருளாதரச் சிக்கலை தவிர்க்க ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கீற்று இணையதள வளர்ச்சியின் மீது அக்கறையுள்ள வாசகர்கள், ஆண்டுக்கு இந்திய ரூபாய். 500ஐ நன்கொடையாக அளிப்பார்கள். ஆண்டுக்கொருமுறை ரூ.500 என்பது வாசகர்களுக்கும் பெரும் பளுவாக இருக்காது, அதே சமயம் கீற்றின் ஆண்டுச் செலவை ஈடுகட்டும் தொகையாக மொத்த வாசகர்களின் பங்களிப்பு இருக்கும் என்றும் தன் கருத்தை தெரிவித்த கவிஞர், இத்திட்டத்தின் முதல் பங்கேற்பாளாராக, தானே ரூ.500ஐ தந்து சேருவதாகக் கூறி, அதற்கான பணத்தை அளித்தார்.

“கீற்றின் விழுதுகள்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் கீற்று இணையதளத்தைத் தாங்கும் ஒரு விழுதாக இருக்க நீங்களும் இருக்க விரும்பினால் இங்கே அழுத்தவும்
கீற்றின் மற்ற பகுதிகளை விட அரசியல் கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டிய தேவை இருக்கிறதென்று தன் கருத்தை வாசகர் வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.
தான் வாசிக்கும் தமிழ் இணையதளங்களில் எழுத்துரு பிரச்சனை இல்லாத தளமாக கீற்று விளங்குகிறதென்ற கூறிய கவிஞர் அகிலன், ஈழத்தில் தான் வசித்தபோது கீற்றுதான் தனது இலக்கிய ஆர்வத்திற்குத் தீனியாக இருந்தது என்றும் அன்றிலிருந்து இன்றுவரை கீற்றை தொடர்ந்து படித்துவருவதாகவும் கூறினார். அதே சமயம் சிறுபத்திரிகைகளுக்கு உள்ள ஒரு seriousness கீற்று இணையத்தளத்தில் இல்லாமல் இருப்பதாக தன் கருத்தைப் பதிவு செய்தார். கீற்றின் நேர்காணல்கள் முக்கியமானவை என்று சொன்ன அகிலன், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் ஒரு நேர்காணல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை கீற்றுவிற்கு அனுப்பும்போது, தங்கள் படைப்பு கிடைத்து, இதை விரைவில் பிரசுரிப்போம், அல்லது பிரசுரிக்க இயலாது போன்ற பதிலை எழுத்தாளர்களுக்கு கீற்று அனுப்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கீற்றுவில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும், வலைப்பூக்களில் ஏற்கனவே வெளியான படைப்புகளை கீற்றுவில் மீண்டும் ஓரிரு நாட்கள் கழித்து படிக்க நேரிடும்போது ஒருவித சலிப்பை உணர முடிகிறது எனவே கீற்று அவ்வாறான படைப்புகளை கவனமாக தவிர்க்க வேண்டும். அதேபோல் கீற்றின் கட்டுரைகளை மறுபதிப்பு செய்வோர், “நன்றி: கீற்று” என்று மட்டும் பிரசுரிப்பதோடு நில்லாமல், கீற்றின் இணைய பக்கத்திற்கான இணைப்பையும்(link) சேர்த்து பிரசுரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விருபா.காம் எனும் இணையதளத்தை நடத்திவரும், குமரேசன் தன் கருத்தைத் தெரிவிக்கையில், பிரபலங்களின் முகவரிகள் பகுதியில் உள்ள பல்வேறு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறியுள்ளதாகவும், இதில் வாசகர்களுக்குத் தவறான தகவல் தருவது போன்றதான அபாயங்கள் உள்ளதாகவும், அதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கீற்று வாசகர்கள் விவாதிக்க ஒரு விவாத களம் தேவை என்று பேசிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, வாசகர்களின் பங்கு கீற்று இணையத்தளத்தில் அதிகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டதுடன், சமீபமாக புதிய எழுத்தாளர்கள் யாருடைய படைப்பும் வராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

சித்ரா பேசுகையில், சினிமா, சமையல் குறிப்பு போன்றவை அலுப்பை தருவதாகவும், அவற்றைச் செய்ய வேறு தளங்கள் இருக்கும்போது கீற்றும் அதையே ஏன் செய்யவேண்டும் என்றும் வினவினார். சர்தார்ஜி ஜோக் போன்றவற்றையும் கீற்றிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று தன் கருத்தை தெரிவித்த அவர், அவற்றிற்குப் பதிலாக புத்தக விமர்சனம், புத்தக அறிமுகம் போன்ற பகுதிகளில் கீற்று கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்தார்ஜி ஜோக்குகளுடன், பெண்களை கொச்சைப்படுத்தும் ஒரு சில தரமற்ற ஜோக்குகளும் தளத்தில் ஊடுருவியிருப்பதை சுட்டிக்காட்டினார் தென்செய்தி துணையாசிரியர் பூங்குழலி. கீற்று மேலும் விரிவடையும்போது எல்லா ஜோக்குகளையும் தணிக்கை செய்து கொண்டிருக்க முடியாமல் போகலாம் எனவே ஜோக்குகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை கீற்று எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் பேசினார். மேலும் சிற்றிதழ்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியின் மூலம் மாற்று கருத்துக்கான தளமாக தன் முகத்தை தக்கவைத்துள்ள கீற்று, மேலும் பல தளங்களுக்கு தன்னை விரிவுபடுத்த வேண்டும். பெரிதும் அறியப்படாத சமூக அறிஞர்கள் மற்றும் களப் போராளிகளை நேர்காணல் செய்ய வேண்டிய பணி கீற்றுவிற்கு இருப்பதாக வலியுறுத்தினார்.
பாண்டியன் தன் கருத்தாக, கீற்று ஒரு இணைய இதழ் என்ற அளவோடு நின்றுவிடாமல் சமூக மாற்றத்திற்கான ஒரு இயக்கமாக மாறவேண்டும் என்றும் அதற்காக வாசகர்களை தயார்படுத்த வேண்டும் என்றும் பதிவு செய்தார்.
மாற்று சினிமாவுக்கு கீற்று தரவேண்டிய முக்கியத்துவம் குறித்து தன் கருத்தை வாசகர் முரளிக் குமார் பகிர்ந்து கொண்டார்..
சமையல் குறிப்புப் பகுதிகள் தொடர்ந்து கீற்று இணையத்தளத்தில் இருக்க வேண்டும் என்று சொன்ன ஷக்தி அபிராமி, சமையல் குறிப்பு பார்ப்பதற்காக கீற்று இணையத்தளத்தில் நுழைந்த தன் தோழி இப்போது கீற்றின் எல்லாப் பகுதிகளையும் தொடர்ந்து படிப்பதாகவும் தெரிவித்தார். கீற்று இணையதளத்தில் தான் மீண்டும் மீண்டும் படிக்கும் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் நாவல் இருப்பதாக அவர் சிலாகித்தார்.

பத்திரிகையாளர் அருள் எழிலன் பேசும்போது, வாசகர்கள் செய்திகளை வாசிக்கும் ஒரு தளமாகவும் கீற்று விளங்க வேண்டும், எனவே செய்திகளை உடனுக்குடன் வலையேற்றும் முயற்சியை கீற்று தொடங்கலாம் என்பதை வலியுறுத்தினார். பத்திரிகைகளும், மீடியாக்களும் செய்யும் அரசியலைப் பற்றியும், அவர்களின் போலியான முகத்திரைகளை கிழிக்கும்படியான ஒரு தொடர் கீற்று இணையதளத்தில் வெளிவர வேண்டும் என்றும் அவர் கோரினார். அகிலனின் blogல் தான் நிறைய சினிமா விமர்சங்களை படிக்க நேரிட்டதாக சொன்ன அருள் எழிலன், சினிமா விமர்சனங்களை கீற்று இணையத்தளத்தில் எழுதுமாறு அகிலனிடம் கேட்டுக்கொண்டார்.
கீற்றுவின் வளர்ச்சி குறித்து மிகுந்த அக்கறையோடு பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்ட வாசகர்களுக்கு கீற்று ஆசிரியர் குழுவின் சார்பாக, ஆசிரியர் இரமேஷ் நன்றி தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பயனுள்ள ஆலோசனைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
சந்திப்புக்கு பல்வேறு காரணங்களில் வர இயலாமல் போன வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம், அல்லது தங்கள் கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து கீற்றுவின் வளர்ச்சிக்கு துணை நிற்கலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|