பீகார் சிறை உடைப்பு: ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போர்
சுப.வீ.
சென்ற மாதம் பீகாரில் இருபெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று, பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல். இன்னொன்று, ஜெகநாபாத் மாவட்டத் தலைமைச் சிறைக்கூடத் தகர்ப்பு. அரசையும், ஆட்சி அதிகாரத்தையும் யார் மேற்கொள்வது என்பதைத் தேர்தல் முடிவு செய்தது. அரசும் ஆட்சி அதிகாரமும் எவரிடம் இருந்தாலும், அவை பீகாரில் செயலற்றே கிடக்கின்றன என்பதைச் சிறைத் தகர்ப்பு வெளிப்படுத்தியது.
இந்துத்வ எதிர்ப்பாளரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவருமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சியும் பெரும் தோல்வியைத் தழுவி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் உடைந்து, எதிரிக்கு இடம் விட்டிருக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைத்தாண்டி வேறு காரணங்களும் உள்ளன.
அரசியலுக்குத் தொடர்பே இல்லாமலிருந்த ராப்ரிதேவியை முதல்வராக்கியதும், வன்முறை ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவர இடம் கொடுத்ததும் லாலுவின் தேர்தல் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. எனினும், பீகாரில் இன்று நிலவும் வன்முறை, இலஞ்சம், ஊழல் போன்ற சூழல்களுக்கு, லாலுவையோ, அரசியல்வாதிகள் சிலரையோ பொறுப்பாக்க முடியாது. அங்கு நிலவிவரும் மிக மோசமான சாதி ஆதிக்கமே அதற்கான அடித்தளம்.
சிறை தகர்க்கப்பட்ட இன்றைய நிகழ்வை வன்முறையின் அரங்கேற்றம் என்று வசைபாடும் பத்திரிகைகள் அதற்கான வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றன, அல்லது கவனிக்க மறுக்கின்றன.
நெடுங்காலமாகவே மேட்டுக்குடியினர் அங்கு வன்முறைக் கூலிப்படைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இராசபுத்திரர்கள், பூமிகார்கள், காயஸ்தர்கள் முதலான ஆதிக்க சாதியினர் ரண்வீர்சேனா, பீஷ்மர் சேனா, சன்லைட் சேனா போன்ற பல்வேறு கூலிப்படைகளின் மூலம், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் மீது வெறியாட்டத்தை ஏவிவிட்டபடி உள்ளனர். அதன் விளைவாகவே நக்சல்பாரிகள் எனும் பெயரில், ஆயுதம் தாங்கிய மக்கள் படை அங்கு உருவாகியுள்ளது.
மாவோயிய பொதுஉடைமை மையம் (எம்சிசி), மக்கள் யுத்தம் ஆகிய இரு குழுவினர் இணைந்தே செகநாபாத் சிறைத்தகர்ப்பை நிகழ்த்தி உள்ளனர். ஒலிபெருக்கி மூலம், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் வைத்துவிட்டு, நின்று நிதானமாகத் தங்கள் பணியை அவர்கள் முடித்துள்ளனர். ஏறத்தாழ 2 மணி நேரம், சிறை மட்டுமல்லாமல் அந்நகரமே அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்திருக்கிறது. சிறையிலிருந்த, அவர்களின் இயக்கத்தைச் சார்ந்த 341 பேரை விடுவித்ததோடு, ரண்வீர் சேனையைச் சேர்ந்த 20 பேரை அவர்கள் சிறைப்பிடித்தும் சென்றுள்ளனர். சிறைக்காவலர்கள் இருவரும், ரண்வீர் சேனையின் தலைவரும் அந்நிகழ்வில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சக்தியினர் கூலிப்படை வைத்துக் கொள்ளலாம் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ஆயுதப்படை வைத்துக் கொள்ளக் கூடாது என்னும் வினா பீகாரில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
சாதியும், வர்க்கமும் ஒன்றோடொன்று ஊடாடியும், பின்னிப் பிணைந்துமே உள்ளன என்பதற்குப் பீகார் ஒரு சரியான எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே அங்கு நடந்தது வெறும் சிறை உடைப்பு மட்டுமன்று, ஆதிக்க சாதிக்கும், மேல் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|