தமிழ் பேசச் சொல்வது வன்முறையாம்!
பா.ச.க. சொல்கிறது
சுபவீ
இல.கணேசனை ஆசிரியராகக் கொண்டு, சென்னையில் உள்ள பாரதிய சனதாக் கட்சி அலுவலகமான கமலாலயத்திலிருந்து வெளிவரும் மாதமிரு முறை ஏடு ‘ஒரே நாடு'. இவ்விதழின், பார்த்திப வருடம் புத்தாண்டுச் சிறப்பிதழில், ‘தக்கது மட்டுமே நிலைத்து நிற்கும்' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சாடுவதே கட்டுரையின் சாரம். ‘உலகமயமாதல் எங்கும் பரவிவரும் வேளையில், கடிகாரத்தைப் பின்னோக்கித் திருப்ப முற்படுபவர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டும்' என்கிறது கட்டுரை. உலகமயமாகி வரும் வேளையில், தமிழ் மொழியைக் காத்தல், காலத்தைப் பின்னோக்கித் திருப்புதல் என்று கூறும் பா.ச.க.வினர், உலகமயமாதலில் கலக்காமல், ஏன் இந்துத்வாவை மட்டும் ஏந்திப் பிடிக்கின்றனர் என்பது விளங்கவில்லை.
உலக மயமாதல் பற்றி நமக்குக் கடுமையான கருத்துகள் உள்ளன. எனினும், இன்றைய உலகம் அறிவியல் மேம்பாட்டினால் மிக நெருங்கி வருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களோ, சனநாயகத் தன்மையும், அறிவியல் போக்குமற்ற காட்டு விலங்காண்டிக் காலத்திற்கல்லவா நம்மை இந்துத்வா முலம் அழைத்துச் செல்ல முயல்கின்றனர். இவர்களா உலகமயமாதல் பற்றியும், அறிவியல் முன்னேற்றம் பற்றியும் பேசுவது?
"குறிப்பிட்ட வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது வன்முறையே என்பதில் துளியும் ஐயமில்லை. குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டாயப்படுத்துவதும் வன்முறையின் மறுபக்கமே'' என்று கட்டுரை குறிப்பிடுகிறது. அடடா, வள்ளலாருக்கு அடுத்த ‘அகிம்சாவாதிகள்' நம் பா.ச.க.வினர்தாம் போலிருக்கிறது.
அயோத்தியில் அத்தனை வன்முறைக்கும் காரணமாயிருந்தவர்கள், குசராத்தில் குருதி கொப்பளிக்க வன்முறை வெறியாட்டம் நடத்தியவர்கள், ஒரிசாவில் பாதிரியாரையும் அவரது சின்னஞ்சிறு மகன்கள் இருவரையும் தீக்கிரையாக்கியவர்கள், தமிழ்நாட்டில் தமிழ் வேண்டும் என்னும் கோரிக்கையை வன்முறை என்கிறார்கள். "தேன் என்றால்தான் எளிதில் புரியுமே தவிர, அதே அர்த்தமுடைய ‘கானக்குறத்தி முலைப் பால்' என்ற சொல் எளிதில் புரிந்து கொள்ளப்பட மாட்டாது'' என்று எழுதுகின்றனர். ‘தேன்' என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று யார் சொன்னார்கள்? கானக்குறத்தி முலைப்பால் என்று தான் எழுத வேண்டும் என ‘வன்முறை'யில் இறங்கியவர்கள் யார்? ஒரு வேளை இவர்கள் கானக்குறத்தி முலைப்பாலை மிகுதியும் பருகிய போதையில் உளறுகின்றனரோ என்று தோன்றுகின்றது.
எனினும், இக்கட்டுரைக்கு நாம் ஒருவிதத்தில் நன்றி சொல்ல வேண்டும். பா.ச.க.வினர், தமிழுக்கும், தமிழினத்திற்கும் என்றென்றும் எதிரிகளே என்பதை மீண்டுமொருமுறை மெய்ப்பித்திருப்பதற்காக!
- மே 1, 2005
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|