கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள்
ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!: தமிழ்நதி
தமிழ்நதி அவர்களுக்கு,
வணக்கம்.
நான் உங்களைப்போல புலியடிமையல்ல. அல்லது மொன்னையான புலி ஆதரவு/ எதிர்ப்பு அமைப்பு எதுவொன்றின் உறுப்பினனுமல்ல. எனவே இலங்கை/ ஈழம் சார்ந்து உணர்ச்சிப்பிழம்புகள் நடத்தும் எந்தவொரு விவாதத்திலும் குறுகிய ஆதாயங்களுக்காக பங்கேற்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. எனது வாசிப்பு மற்றும் தோழர்கள் நண்பர்களுடனான உரையாடல்கள் வழியே எட்டிய புரிதல்கள் வழியே நான் இலங்கைத் தமிழர் பிரச்னையை புரிந்துகொள்கிறேன். சிங்களப் பேரினவாதத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அரசின் பயங்கரவாதத்திற்கு ஆளாகிவிட்ட இலங்கைத் தமிழர்களை நான் வாழும் காலத்தின் மிகக்கொடிய துயரமாக கருதுகிறேன்.
அதேவேளையில் ஜனநாயக உரிமைகளுக்காவும் சுயமரியாதைக்காவும் இலங்கை மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை என்றென்றைக்குமாக மிகப்பெரும் பின்னடைவுக்குள் தள்ளிவிட்டவர்கள் என்ற முறையிலும் ஏகப்பிரதிநிதித்துவம் என்கிற தன்முனைப்பில் பிற இயக்கங்களையெல்லாம் அழித்தொழித்தவர்கள் என்பதற்காகவும் புலிகள் மீது எனக்கு கடும் விமர்சனங்களுண்டு. புலிகள் இயக்கத்தின் பாசிசத்தன்மை, இந்துத்துவ வெறி, இஸ்லாமிய எதிர்ப்பு, சாதியழிப்பு பேசியவர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் தலையெடுக்கவொட்டாமல் தீர்த்துக்கட்டியவர்கள் என்று அந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் இன்னும் நீள்கின்றன. ஆகவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது அக்கறை புலிகள் சார்ந்தது அல்ல, அது எளிய மக்கள் சார்ந்தது. இனவெறி ராணுவத்தின் இலக்காகவும் புலிகளின் கேடயமாகவும் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான மக்கள் குறித்தது. தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் கைதிகளைப் போல வதியும் ஏதிலிகள் பற்றியது. (இனவுணர்வின் மிகுதியில் எகிறிக் கொண்டிருக்கும் பல தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் எந்தளவிற்கு வாழத்தகுதியற்றதாய் இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததுதானே?)
தங்களது உட்சாதிப் பிரிவைக்கூட தாண்டி வெளியே வரத் துணியாத சாதிவெறியர்கள் இங்கே எழுப்பும் தமிழ் இனம் என்கிற முழக்கத்தின்பால் எனக்கு எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. தலித்துகள் தாக்கப்படும்போதெல்லாம் இவர்கள் தீண்டத்தக்க சாதியினராகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுகையில் சுத்த இந்துக்களாகவும் பெண்ணுரிமை குறித்த விவாதங்களில் உள்ளாடையை கழற்றிக் காட்டத் துணிகிற ஆண்களாகவுமே வெளிப்படுகின்றனர். இத்தகைய குறுகிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிற இனவுணர்வுத் திலகங்கள்தான் இன்று உங்களைப் போன்றவர்களின் கபடம் நிறைந்த பேச்சுக்கு கைதட்டும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிகாரப் பெருமிதமும் சாதிய சிறுமதியும் கொண்ட இவர்கள் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களை தம் சொந்த இனமாகவும், தமிழ்நாட்டிலிருந்து 150 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு பிடித்து செல்லப்பட்ட தமிழர்கள் குறித்து பாராமுகமாகவும் இருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் உள்ளடக்கியே புதுவிசை இதழின் தலையங்கங்கள், நேர்காணலில் எழுப்பப்படும் கேள்விகள் அமைந்துள்ளன. எனவே ஈழப்பிரச்னையில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உங்களை நான் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டதாக கருதவில்லை. உங்களது நிலைப்பாட்டைச் சொல்ல உங்களுக்கிருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு. ஆனால் அப்படியொரு ஜனநாயகப் பண்பை கடந்தகாலத்தைப் போலவே இனியும்கூட நீங்கள் எட்டப்போவதில்லை என்பதற்கு என்னைப் பற்றிய உங்கள் அவதூறான பதிவே நிரூபணம்.
2.
‘ஓரளவுக்கு பதட்டம் தணிந்தால்கூடப் போதும், நான் ஊருக்குப் போய்விடுவேன்’ என்று கீற்று.காம் நேர்காணலில் தாங்கள் தாய்மண் பாசத்தோடு சொல்லியிருந்தபடியால் இந்நேரம் இலங்கைக்கு பறந்தோடிப்போய் மக்களோடு மக்களாகத்தான் இருப்பீர்கள் என்றெல்லாம் அதீதமாக நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை. ஆகவே மதுரை முகாமில் உங்களைப் பார்த்தபோது (அகதிகள் முகாமில் அல்ல- அங்கு போய் அவதியுற உங்களுக்கு தலையெழுத்தா என்ன?) எனக்கு சற்றும் அதிர்ச்சியில்லை. எனக்குத் தெரியும், இலங்கை முழுவதும் ஏ.சி.செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்ப மாட்டீர்கள் என்று. இலங்கை ராணுவத்தாலும் உங்களது பிரியத்திற்குரிய போராளிகளாலும் சுடுகாட்டுச் சாம்பல் கொண்டு நிரவப்பட்டுவிட்ட அந்த மண்ணுக்குத் திரும்புகிற அளவுக்கானதல்ல உங்களது தாய்நாட்டு பக்தி. ஏனென்றால் நீங்கள் நேசித்தது நாட்டையோ மக்களையோ அல்ல, புலிகளை. (உடனே ஆதவன் என்னை நாட்டை விட்டுப் போகச் செல்கிறான் என்று திரித்து அடுத்தப் பதிவு எழுதி மூக்கு சிந்த பதைக்காதீர்கள் தமிழ்நதி. அந்த மலிவான உத்தி எல்லா நேரத்திலும் கைகொடுக்காது.)
ஆனால் நான் ஆச்சர்யப்பட்ட விசயம் என்னவென்றால், ‘இந்த தேவேந்திர பூபதியிடமிருந்து எப்படி என்னை தற்காத்துக் கொள்வது என்பதுதான் தமிழ்நாட்டில் எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகிலாகவும் இருக்கிறது...’ என்று 2009 ஜனவரியில் அஞ்சி நடுங்கிய தமிழ்நதி இப்போது ஏன் அதே தேவேந்திரபூபதி நடத்துகிற முகாமுக்கு வலிய வந்திருக்கிறார் என்பதுதான். ஒருவேளை பூபதியைக் கையாளும் தற்காப்புக்கலையை அவர் பயின்றிருக்கவேண்டும் அல்லது சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதன் பிடரியை உலுக்குவது என்று தீர்மானித்து புறநானூற்று மறத்தமிழச்சியாக மனதளவில் மாறியிருக்கக்கூடும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
மதுரை கூடல் சங்கமத்தின் இறுதி அமர்வில் தாங்கள் பேசத்தொடங்கும் போது ‘எனக்கு கதைகள் அவ்வளவாக வராது, அவை எல்லாமே சோதனை முயற்சிகள்தான்’ என்று சொன்னீர்கள். 24 மணிநேர அவகாசம்கூட எடுத்துக்கொள்ளாமல் ரெடிமிக்ஸ் சாம்பார் செய்கிற அதிரடி வேகத்தில் ‘ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி’ என்ற தலைப்பில் பிரமாதமான ஒரு கதையை எழுதத் தெரிந்த நீங்களே இப்படி உங்களை மட்டம்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஒட்டுமொத்த நிகழ்விலிருந்தும் உங்களது நோக்கத்திற்கு இயைவான துணுக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்கள் கதை வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பது? நீங்கள் திரித்துச் சொன்ன கதையை உண்மையென நம்பி ஈழப்போராட்டத்தின் லேட்டஸ்ட் துரோகி ஆதவன்தான் என்று முத்திரைக் குத்துவதற்கு சிலர் கிளம்பியிருப்பதும்கூட உங்கள் கதைத்திறமைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுங்கள் தமிழ்நதி.
(ஷோபா சக்தி ராஜபக்ஷேவிடம் வாங்கியப் பணத்தில் ஒரு பகுதி ஆதவனிடம் இருப்பதாகவும் அந்தப் பணத்தில்தான் இப்படி மிடுக்காக திரிகிறார் என்றும், செருப்பால் அடிக்கவேண்டும் என்றும் வந்த பின்னூட்டங்களை மகிழ்ச்சியோடு பிரசுரித்துவிட்டு ‘‘ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து பின்னூட்டங்களை நான் வெளியிடவில்லை, எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு’’ என்று மற்றுமொரு சுவாரசியமான கதையை தொடங்கியிருக்கிறீர்கள். இப்படியெல்லாம் பேசுவதற்கு கூசவில்லையா உங்களுக்கு? பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவரும் மற்றும் அதை ‘நேர்மையோடு’ வெளியிட்ட தாங்களும் இந்த அவதூறுக்கான ஆதாரத்தை அவசியம் வெளியிட்டாக வேண்டும். அதுபோலவே செருப்பால் அடிக்கவிரும்புகிறவர் அநாமதேயம்போல் ஒளிந்துகொண்டிருக்காமல் நேருக்குநேர் என்னைச் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அவருடைய நண்பர் என்ற வகையில் தாங்கள்தான் செய்யவேண்டும். இவ்விரண்டு விசயத்திலும் உங்களிடம் ஒருபோதும் சமரசம் கிடையாது)
28.06.09 அன்று நடந்தவை எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு தாங்கள் எழுதியிருப்பதெல்லாம் உண்மையா என்று ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் நான் வற்புறுத்தமாட்டேன். அந்தளவிற்கு உங்களுக்கு அறிவு நாணயம் இருந்திருந்தால் இப்படியொரு கட்டுக்கதையை எழுதத் துணிந்திருக்கமாட்டீர்கள். எனவே நடந்ததை நானே ஒருமுறை உங்களுக்கு ரீவைண்ட் செய்து காட்டவேண்டியிருக்கிறது. உலகத்திலிருப்பவர்களெல்லாம் எங்களுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும், ஆனால் மற்றவருக்காக நாங்கள் ஒரு சொட்டு உப்புக்கண்ணீரைக்கூட சிந்தமாட்டோம் என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருக்கிற உங்களுக்காகவெல்லாம் எங்களது நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறதே என்ற ஆற்றாமையோடுதான் இதை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.
அந்த அமர்வில் என்முறை வந்தபோது, எழுதுவதில் நான் சந்திக்கும் இடர்ப்பாடுகள் குறித்து மட்டுமே பேசிவிட்டு அமர்ந்துவிட்டேன். எனக்கு அடுத்து நீங்கள் பேச வந்தீர்கள். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று நீங்கள் யாரையோ பார்த்து கேள்வி கேட்டிருந்தால் நான் என்பாட்டுக்கு இருந்திருப்பேன். ஆனால் ‘சமூக ஒடுக்குமுறைகளை காத்திரமாக எதிர்த்து எழுதுகிற ஆதவன் தீட்சண்யா ஏன் ஈழத்தமிழர் குறித்து எழுத மறுக்கிறார்’ என்று நீங்கள் மிக நேரடியாக என்னைக் கேட்டதை முன்னிட்டே நான் பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று என்பதையாவது மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நரியோ நதியோ இடமும் போகாமல் வலமும் போகாமல் என்மீதே குறிவைத்துப் பாய்ந்தநிலையில்தான் நான் பேச வேண்டியிருந்தது என்பதை ஒப்புக்கொள்ளவும்கூட உங்களுக்கு ஆதரவாக ஊளையிட்டவர்கள் தயாரில்லாத நிலையில்தான் இந்த தன்னிலை விளக்கம்.
3.
‘‘நான் ஏன் எழுதவில்லை என்று கேட்க தமிழ்நதிக்கு உரிமையிருப்பதைப் போலவே தமிழ்நதியிடம் கேட்பதற்கு சில கேள்விகளும் அதைக் கேட்பதற்கான உரிமையும் எனக்கிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ்நதி இங்கு நிகழும் எத்தனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்?
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக ஆடுமாடுகளைப்போல லட்சக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். அந்த அடிமைத்தனத்திலிருந்தும் கொடிய சுரண்டலிலிருந்தும் அட்டைக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தியப் போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேரின் கவிமனம் பதறித் துடித்திருக்கிறது? பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்? (இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசியதை படைப்பாளிகளின் கணக்கில் வரவி வைக்கத் துணிந்துவிடாதீர்கள்)
2005 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கு ஒன்றில் எழுத்தாளர் அந்தனி ஜீவா, ‘இன்றளவும்கூட இலங்கைத்தமிழருக்கும் இலங்கையிலுள்ள இந்தியத்தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டதை சமீபத்திய செங்கதிர் இதழ் மறுபிரசுரம் செய்துள்ளதே- அதை என்னவென்று புரிந்து கொள்வது? இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்? இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?
தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்? தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?
இதையெல்லாம் நீங்கள் செய்யவில்லை என்பதற்காக நாங்களும் எழுதவில்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக ‘டிட் ஃபார் டாட்’ என்று நான் சொல்வதாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கைத்தமிழர் மீது நிகழ்த்தப்படும் கொலைப்பாதகங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் இங்கு யாருமில்லை. அது குறித்த ஆழ்ந்த கவலைகள் எமக்குண்டு. ஆனால் அதற்காக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று காசி ஆனந்தனைப்போல அதிகாரத்துக்காக நான் எழுத முடியாது.
இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒரு கண்ணி அறுபட்டுக் கிடக்கிறது. ஒருவேளை கூட்டாக விவாதித்து அதை கண்டுபிடிப்போமானால் உடனடி நிகழ்வுகள் மீது படைப்புகள் வரலாம். அதுகுறித்து வேண்டுமானால் பேசலாம்...’’
4.
மேற்கண்டவை தான் அந்த அமர்வில் நான் பேசியவை. இவையெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கைவசமிருக்கும் வீடியோ பதிவில் இடம் பெற்றிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். அதை விடுத்து உங்கள் பதிவில் இட்டுக்கட்டி குறிப்பிட்டுள்ளவாறு ‘நாங்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசவேண்டுமென்று, குரல் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றோ ‘எங்களுக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன, உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும் எழுத வேண்டும்’ என்றோ நான் பேசவில்லை. பொய் சொல்லியாவது உங்கள் வலைப்பதிவின் வாசகர்களிடம் அப்ளாஷ் பெறுவது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களது பொய்யின் அளவு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் பேசி முடித்ததும் நீங்கள், ‘நாங்கள் அதையெல்லாம் செய்யவில்லை என்பதற்காக இப்போது எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்..?’ என்று கேட்டீர்கள். ஏட்டிக்குப் போட்டியில்லை என்றும் சமகாலப் பிரச்னைகளுக்கு முகம் கொடுப்பதில் தமிழகப்படைப்பாளிகளின் மனநிலை குறித்தும் நான் பேசியிருந்த நிலையில் நீங்கள் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்தாலும் பொறுப்புடன் பதில் சொல்ல நான் மீண்டும் எழுந்தேன். அவ்வாறு நான் எழுந்ததை ‘ஆதவன் என்னைத் தாக்க எழுந்தார்’ என்று பதிவில் தலைவிரிக்கோலமாக எழுதாமல் விட்ட உங்களது பெருந்தன்மைக்கு எப்படியாவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அப்படி நான் எழுந்தபோதுதான் யோக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான டி.கண்ணன் துள்ளியெழுந்து- வால் மட்டும் தெரிகிறது சார் என்று சொன்ன மாணவனைப்போல- ‘இது அயோக்கியத்தனம்’ என்று கத்தினார். எது அயோக்கியத்தனம் என்று நான் கேட்கும்போது, லேனாகுமார் ‘இது அவன் ஒருத்தனோட கருத்து. தமிழ்நாட்டு மக்களின் கருத்தல்ல...’ என்று கூறினார்.
ஒருவேளை என்னைத் தவிர்த்து மீதியுள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவரிடம் ஆதரவு கையெழுத்துப் போட்டு பிரமாணப்பத்திரம் எதுவும் கொடுத்திருக்கிறார்களோ என்னமோ என்று ஒருகணம் அசந்துதான் போனேன். அவர் சொன்னதும் ஒரு தனிமனிதனின் கருத்துதான் என்பதை மறந்துவிடுவதில்தான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம்? அப்போது ஒரு கும்பல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ‘ஆதரவாக பல குரல்கள் எழுந்தன’ என்று எழுதி உங்களை நீங்களே இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் தமிழ்நதி?
இந்தக்கட்டத்தில்தான் அரசு நுழைந்தார். அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல. ‘ஆதவன் சொன்னதைப்போல இலங்கை வரலாற்றைப் பற்றி பேச இங்குள்ள பலரிடமும் ஏராளமான விசயங்கள் இருக்கு. அங்கு நிகழ்ந்த தவறுகள் ஏராளம். ஆனால் அதைப் பற்றி இப்போது பேசுவது உள்நோக்கம் கொண்டது. ஆதவன் நடத்தும் புதுவிசை என்ற பத்திரிகையில் (சிறுபத்திரிகை அரசியல் என்ற புத்தகத்தில் புதுவிசை என்ற பெயரை கவனமாக மறந்திருந்த அரசுவுக்கு இப்போது எப்படியோ ஞாபகம் வந்துவிட்டது பாருங்களேன்) சுரேந்திரன் என்பவருடைய பேட்டியை வெளியிட்டிருக்கிறார். (சுசீந்திரனைத்தான் சுரேந்திரன் என்கிறார்) அந்த சுரேந்திரன் புலிகளை கொச்சைப்படுத்தியிருக்கிறார். அதுவும் உள்நோக்கம் கொண்டது... ’ என்று நீட்டி முழக்கி ‘தவறான புரிதலோடு இருக்கிறீர்கள் என்று சொல்வதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் ஆதவன்...’ என்று ஆவேசமாக முடித்தார். (பலத்த கைத்தட்டல் என்று இவ்விடத்தில் ஒரு பிட்டை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் தமிழ்நதி?). நீங்கள்தான் தவறாகப் பேசியிருக்கிறீர்கள் அரசு. ஆகவே நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றேன்.
தாங்குமா அரசுவுக்கு? நான் சொன்ன வார்த்தையை வச்சிக்கிட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டுறியா... நான் தமிழ் வாத்தியான். என்கிட்ட வார்த்தை விளையாட்டுக் காட்டாதே... என்று எகிறினார். அவர் சலாமியா பாஷைக்குகூட வாத்தியாராக இருந்துவிட்டுப் போகட்டுமே, எனக்கென்ன அதைப்பற்றி? நான் அவரிடம் இலக்கணப்பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ஸ்கூல் பையனில்லையே? பின் எதற்கு இந்த எகிறாட்டம் என்று யோசிக்கும்போதே அடுத்த ரவுண்டுக்கு இறங்கினார் அரசு. ஈழத்தைப் பற்றி எனக்கொன்னும் சொல்லாதயா... போய்யா உன் வேலையப் பாத்துக்கிட்டு... என்றதும் ‘வாய்யா போய்யான்னு பேசறதுதான் ஒரு பேராசிரியருக்கு அழகா?’ என்று நான் கேட்டதும் சுதாரித்துக்கொண்ட நமது மாண்புமிகு பேராசிரியப் பெருமகனார், ‘வாய்யா போய்யாங்கறது தமிழ்ல மரியாதையான சொல்தான்’ என்று பதவுரை பொழிப்புரை பகன்றார். ‘அப்படியானால் உங்க மாணவர்களை இனிமேல் உங்களை வாய்யா போய்யான்னே கூப்பிடச்சொல்லய்யா..’. என்று நானும் மரியாதை கூட்டி மறுமொழி பகன்ற பின் ஓரிரு மணித்துளிகளில் முகாம் முடிந்துவிட்டது.
ஆனால் இவ்விடத்தைப் பற்றி எழுதும்போதுதான் உங்களது ‘செலக்டிவ் அம்னீசியா’ வேலை செய்கிறது தமிழ்நதி. ‘இருவரும் வாய்யா போய்யா’ என்ற அளவுக்கு இறங்கினார்கள் என்று பொத்தாம் பொதுவாக உங்கள் பதிவில் எழுதிக் கடக்கிறீர்கள். அரசுவின் வாய்த்துடுக்கை கண்டிக்கத் துப்பில்லையா அல்லது தங்களுக்கு ஆதரவாகப் பேசியதற்கு பிரதிக்கருணையா?
விக்கிரமாதித்யன் இரண்டு நாட்களாக எதெதற்கோ ஸ்பிரிங் போல துள்ளிக் குதித்து என்னவெல்லாமோ பேசினார். அதையெல்லாம் குறிப்பிடாமல் உங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டிக் காட்டுகிற இந்த எடிட்டிங் வேலையை எங்கே கற்றீர்கள்? அதற்குப் பிறகு பேருந்தில் மதுரை வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அதே விக்ரமாதித்யன் என்னிடம் சொன்னதையெல்லாம் இப்போது நான் எழுதினால் என்ன சொல்வீர்கள்?
விசயம் இத்தோடு முடியவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வரும்போது, ‘நீங்கள் வேறு ஏதோ கணிப்பில் என்னை டீல் செய்யறீங்க ஆதவன். தேவையில்லாமல் என்னை தமிழ் வாத்தியான் என்றெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்றார் அரசு. நானொரு தமிழ் வாத்தியானாக்கும் என்று முண்டா தட்டத் தொடங்கியவர் அவர்தான், நானில்லை என்று தெரிவித்துவிட்டு நகர்ந்தேன். நாம் மீண்டும் பேசுவோம் என்றார். ‘இப்படித்தான் பேசுவோம் என்றால் நாம் பேசி என்ன ஆகப்போகிறது’ என்றேன். கையைப் பிடித்து நிறுத்திய டி.கண்ணன் ‘நீ சொன்ன விசயமெல்லாம் சரிதாண்டா தம்பி. நேரம்தான் சரியல்ல’ என்றார். வெண்மணியில் இங்க எரியறப்பவும் அங்க அவங்க அநாதையாத்தாண்டா இருந்தாங்க என்று வரலாற்றை ஒரு தீட்டாக்கோணத்திற்கு திருப்பிவைத்தார் கண்ணன்.
இது பொருத்தமான நேரமல்ல, இந்த விசயத்தைப் பேச இதுவா நேரம்?, எப்ப எதைப் பேசணும்னு ஒரு கணக்கிருக்கில்ல என்ற வார்த்தைகள் ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. மாற்றுக்கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள திராணியற்று நேரப்பொருத்தம் வாய்க்கவில்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்கு தப்பித்துக்கொள்ள முடியும்? மாற்றுக்கருத்து எதுவொன்றையும் பேச இது தருணமல்ல என்ற அறிவிப்போடு நிகழ்த்தப்பட்ட கொலைகள் தான் எத்தனை? அழிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றா இரண்டா?
நேற்று பேச முயற்சித்தபோது, போராட்டக் களத்தில் இருக்கிறவர்களை விமர்சிக்கக்கூடாது என்று குரல்வளையைக் கவ்வினீர்கள். இன்று பேசும்போது அது இழவுவீடு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழ்மக்களின் வீடுகளில் தொடர்ந்து இழவு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. தியாகமென்றும் துரோகமென்றும் நானாவிதப் பெயர்களோடு மரணத்தை அவர்களுக்கு விநியோகித்தவர்கள் இப்போது கொல்லப்பட்ட நிலையில்தான் உங்களுக்கெல்லாம் இழப்பின் வலி உறைக்கிறது. ஆகவே இப்போதும் மௌனம் காக்கச் சொல்கிறீர்கள். இன்னும் நாலைந்து வருடம் கழித்துப் பேசினால், அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே இப்போது எதற்கந்தப் பேச்சு என்று அப்போதும் வாயடைக்கப் பார்ப்பீர்கள்.
நிகழ்ந்துவிட்ட இழப்புகளுக்கு சம பொறுப்பாளியாக இருந்தவர்களை அடையாளம் காட்டி அம்பலப்படுத்திவிடும் எந்தவொரு உரையாடலையும் மறுப்பதற்கே நேரப்பொருத்தம் என்ற வார்த்தைஜாலம் களமிறக்கப்படுகிறது. நேரம் கணிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பட்சத்தில் டி.கண்ணனும் தமிழாசிரியர் அரசுவும் ஒரு நன்முகூர்த்தத்திற்காக காத்திருக்கட்டும். ஆனால் அதை என்மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமையில்லை.
உங்களுக்கு மேலும் சில விசயங்கள் தமிழ்நதி-
தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது. அதுசரி, ‘கத்த புத்தி செத்தால்தான் போகும்’ என்பது மூத்தோர் வாக்கு. பெருமைக்கும் சிறுமைக்குமான துலாக்கோலை உங்களுக்கு வழங்கியது யார் அம்மணி? அல்லது பாம்பின் கால் பாம்பறிகிறதா? ஒரு மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளத் திராணியற்று பின்னூட்டம் என்ற பெயரில் வசைபொழிகிற பத்து அநாமதேயங்கள் இருக்கிற தைரியத்தில் நீங்கள் எதுவும் எழுதுவீர்களோ?
மாற்றுக்கருத்து எல்லாவற்றுக்கும் ஷோபாசக்திதான் பிறப்பிடமா? அ.மார்க்ஸ் பேசினாலும் ஆதவன் பேசினாலும், நீலகண்டனோ அடையாளம் சாதிக்கோ புத்தகம் போட்டாலும் அவர்களை உடனே ஷோபாசக்தியின் சீடர்களாக்கிவிடுவதில் உங்களைப் போன்றவர்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியம்? மேய்ப்பனின் கீழ் உழன்ற மந்தை மனோபாவம் பிறரையும் அவ்வாறே பார்க்கப் பணிக்கிறதா? உங்களது குரலுக்கு எஜமானர்களாக யாரையும் வைத்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களின் குரல் சுதந்திரமானதாய் இருக்கக்கூடும் என்று நம்புவதற்கான பயிற்சியை இனியாவது கைக்கொள்ளுங்களேன். எனது குரல் பிரான்சிலிருந்து கேட்கிறதென்றால், உங்களது குரல் எங்கிருந்து ஒலிக்கிறது என்று கேட்பதும் சாத்தியம்தானே? தமிழ்நாட்டின் எந்தவொரு சமூக- அரசியல் பிரச்னையிலும் தலையிடாத சிலர் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் உரத்து முழங்கி உக்கிரவேஷம் போடுவதற்குப் பின்னால் வெறும் இனவுணர்வு மட்டும்தான் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எவ்வளவு நேரமாகும்? உங்களது சந்தேகத்தை திருப்பிப்போட்டு எதிர்மறையாக நீட்டித்தால், இலங்கைத் தமிழர்கள் செரிந்து வாழும் கனடாவை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் குடியேறியிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்றும்கூட ஒருவர் குதர்க்கமாக கேட்டுவிட முடியும்.
உங்களுக்கு நியாயம் கேட்கிற அவசரத்தில் ‘எங்கோ இருக்கிற குஜராத்’ என்கிறீர்கள். தமிழ்நாட்டானைப் பொறுத்தவரை குஜராத் எங்கோ இருக்கிறது என்ற தர்க்கத்தில் இறங்கினால், இலங்கையும் தமிழ்நாட்டானுக்கு எங்கோ இருக்கிற ஒன்றாகிவிடும் என்பதாவது தங்களுக்குப் புரிகிறதா? எங்கோ இருக்கிற இலங்கையில் நடக்கிற பிரச்னைகளுக்கு இங்கே ஏன் 14 தமிழர்கள் தம்முயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற கேள்வி எழும்பாதா? உங்களுக்கென்ன, வென்றால் ஈழம் தோற்றால் இலங்கை. ஆனால் உங்களுக்காக இறந்துபோன அந்த இந்தியத் தமிழர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் என்ன இருக்கிறது? அவர்கள் உங்களை எங்கோ இருக்கிற இலங்கைத்தமிழராக பார்க்கவில்லையே? ஆனால் இலங்கையில் இஸ்லாமியர்களைக் கொன்றும் எஞ்சியவர்களை இரவிரவாக விரட்டியடித்தும் பெருமிதம் கொண்ட இந்து மனோபாவத்தின் எச்சம் உங்களுக்குள்ளிருந்து, எங்கோ இருக்கிற குஜராத்தின் இஸ்லாமியருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களைப் பார்த்து எரிச்சலடைகிறதோ? அதெப்படி உங்களால் அப்படி சொல்ல முடிகிறது? இங்குள்ள தமிழர்கள் யாருக்காக துக்கப்பட வேண்டும் என்பதைக்கூட நீங்கள்தான் தீர்மானிப்பீர்களோ? ஒடுக்கப்படுகிற ஒரு சமூகம் உலகின் பலபாகங்களில் ஒடுக்கப்படுகிற பிற சமூகங்களோடு இயல்பாகவே ஒருமைப்பாடு கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கேன் இந்த வன்மம்? எனக்கொன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லை, முடிந்தால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.
இலங்கையின் ஒரு பகுதிக்குள்ளேயே இருக்கிற இந்தியத் தமிழர்களை ஒதுக்கிவைத்திருக்கிறீர்கள். ‘இந்தியத் தமிழர்களைத் தங்களுடன் அரவணைத்துக் கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்கள் நினைத்தும் பார்க்கவில்லை’ என்கிறார் அந்தனி ஜீவா ( செங்கதிர்- மே 2009 பக்கம்- 10). ஆனால் நீங்கள் இங்கேயுள்ள அவர்களது சொந்தங்களான எங்களிடம் வந்து துளியும் உறுத்தலின்றி ‘‘எங்களுக்காக குரல் கொடுங்கள்’’ என்று கேட்கிறீர்கள். ‘ஆடு பகை குட்டி உறவு’ என்று எங்களூரில் சொல்லப்படும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதுகுறித்து நாங்கள் எதுவும் கேள்வி எழுப்பினால் சிறுமைப் புத்தி உள்ளவர்கள் என்று பதிவு எழுதக் கிளம்பி விடுகிறீர்கள். சரி, எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று உங்களுக்கு வெகு அருகாமையில் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாணத்து தமிழனிடமாவது உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? அவர்கள் ஏன் உங்களிடமிருந்து பிரிந்து போனார்கள்? அவர்களில் ஒருவரும் ஏன் உங்களுக்காக தீக்குளிக்கவில்லை? உண்ணாவிரதம் ஊர்வலம் என்று ஒரு சுக்கும் நடக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் கருணாவையும் பிள்ளையானையும் காரணமாக்கிவிட முடியுமா?
உங்கள் தேவைக்காக தமிழினம் என்று குரல் கொடுத்துக்கொண்டே உடனிருக்கும் தமிழர்களை அண்டவிடாமல் ஒதுக்கிவைத்தீர்கள், ஒழித்துக்கட்டினீர்கள். இந்த சூதுக்கள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் மாற்றுக்கருத்து தெரிவிப்போரை துரோகிகளாக சித்தரிக்கும் இழிவான செயல்களை கைக்கொள்கிறீர். உங்களையழிக்கும் துரோகிகள் வெளியிலிருந்துதானா வரவேண்டும்? புலிகளின் துரோகிகள் புலிகள்தான் என்ற உண்மையை எப்போது படிக்கப்போகிறீர்கள்?
மாற்றுக்கருத்துக்கு செவிமடுக்கும் ஜனநாயகப்பண்பும் சகிப்புத்தன்மையும் அற்ற புலிகளின் அராஜகப் போக்கு தமிழ்நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் போக்குக்கு இரையானவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தாங்கள் அறிந்திருப்பதே இறுதி உண்மை என்று நிறுவப்பார்க்கிறார்கள். அடுத்தவர் கருத்தை பொறுமையற்று கேட்கிறார்கள். அல்லது கேட்க மறுத்து காதையும் மனதையும் மூடிக் கொள்கிறார்கள். தாங்கள் வைத்திருக்கும் பலவீனமான நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள மேலும் மேலும் அவர்கள் குறுங்குழு வாதங்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் இருந்த துரோகி முத்திரையை இப்போது யார் முதுகில் குத்தலாம் என்று ஏந்தி அலைகிறார்கள். ‘புலிகள் ஈழத்தில் இருக்கமாட்டார்கள், ஆனால் புகலிடத்தில் இருப்பார்கள்’ என்றார் சுசீந்திரன். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியானவர்களுக்கு ஒரு சாமர்த்தியமான- கற்பனை வளம்மிக்க- கதை ஜோடிக்கத் தெரிந்த ஒரு தலைவி தேவைப்படலாம். எனவே இங்கேயே இருங்கள். வீம்புக்காகவோ ரோஷத்திலோ ஊருக்குப் போறேன்னு கிளம்பிவிட வேண்டாம்.
மற்றபடி படைப்பாளியின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும் இலக்கணமெல்லாம் சரிதான். ஆனால் அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும் முன் ஒருமுறையாவது அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் இதிலுள்ள அக்கப்போர். அதற்காக குறைந்தபட்சம் இப்போதாவது ஒரு மட்டக்களப்பானை, ஒரு இஸ்லாமியனை, ஒரு மலையகத்தமிழனை, முடிந்தால் ஒரு சிங்களனையும்கூட உங்களைப்போலவே அவர்களும் மனிதர்கள்தான் என்று நினைக்கப் பழகுங்கள்.
பார்த்துப் பழகிய ஆதவனை இனி பார்க்க முடியாது, பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது என்று எழுதியிருக்கிறீர்கள். தனக்கு உவப்பான கருத்தைச் சொல்லாதவன் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற இந்த நினைப்புதான் சகிப்பின்மையாக உருவெடுத்து சகோதரப் படுகொலைகளை நிகழ்த்த உங்கள் தலைமையை இட்டுச் சென்றது. ஆனால் நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|